உங்களையே தனிமைப்படுத்திக்கொள்வது
இந்த பூமிக்கிரகம் இல்லாமல் நீங்கள் வாழமுடியாது, ஆனால் இப்போதே உங்களை பூமியில் புதைத்தால், அதனுடன் நீங்கள் சிக்கிய கணமே, உங்களுக்கு ஆதாரமாக இருப்பது என்னவோ அது உங்கள் எதிரியாகிறது. அதன் மீது உங்களால் நடக்கமுடிந்தால், அது அழகானது. அதனுடன் நீங்கள் சிக்கிவிட்டால், அது வேறு. இதுதான் உடலுக்கும் பொருந்துகிறது. இந்த உடலில் உங்களால் வாழமுடிந்தால், அது அற்புதமானது. அதனுடன் நீங்கள் சிக்கிவிட்டால், அது வேறொரு நிலை. உங்கள் மனதுடன் நீங்கள் சிக்கியிருந்தால், உண்மையாகவே அது ஒரு “பிரச்சனை” தான்.நிர்வாண ஷடகத்துக்கு மிக ஆழமான ஒரு அர்த்தம் உண்டு. எளிமையாக கூறவேண்டுமென்றால், “நான் இதுவும் அல்ல, அதுவும் அல்ல”, என்பதுதான் அதன் அர்த்தம். நிர்வாணா என்றால், உருவமில்லாமல் இருப்பது, ஏறக்குறைய இல்லாதிருப்பதைப் போன்றது. ஏனென்றால் இருத்தலின் உங்கள் கருத்து, பௌதீகரீதியானது அல்லது பருப்பொருளானது. பருப்பொருளாக இருக்கும் அனைத்துக்கும் ஒரு வடிவம், உருவம் மற்றும் அளவு இருக்கிறது. அதைத்தான் நீங்கள் படைப்பு என்று அழைக்கிறீர்கள். அது நீங்களாகவோ, ஒரு மரம், கிரகம், சூரியன், சந்திரன் அல்லது பால்வீதிகளாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நீங்கள் படைப்பின் தூசிகளைத்தான் பார்க்கிறீர்கள். படைக்கப்படாதது எதுவோ, அதனை நீங்கள் பார்ப்பதில்லை.உங்களது புரிதலில், ஒரு பௌதீக வடிவம் இல்லாதது படைப்பு அல்ல. ஆகவே, நிர்வாணா என்றால் இதையும், அதையும் கடந்து இருப்பது. இது ஒரு எதிர்மறையான சொல்லாக்கம். நிர்வாணா எப்போதும் பாரம்பரியத்தில் இருந்தது, ஆனால் கௌதம புத்தர்தான் அதை அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.
நிர்வாணா, முக்தி, மோட்சம் – அனைத்தும் ஒன்றேதானா?
கிழக்கத்திய யோகிகள் பொதுவாக அதிகமாக நேர்மறையான சொற்களையே பயன்படுத்தினர். அவர்கள் அதனை முக்தி, மோட்சம் என்று அழைத்தனர் – அதாவது சுதந்திரம், விடுதலை என்பது அதன் பொருள். அடிப்படையில் அது ஒரே விஷயம்தான். நீங்கள் விரும்புவது இல்லாமையா அல்லது விடுதலையா?
பிரபலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, அவர்கள் முக்தி பற்றி பேசினார்கள். மக்கள் உற்சாகத்துடன் வந்தபோது, “நாங்கள் உங்களை விடுதலை செய்வோம்” என்று அவர்கள் கூறினர். கௌதமர், “நாங்கள் உங்களை அழித்துவிடுவோம்” என்று தொடங்கினார், என்றாலும் அவர் கூறியது எதிர்மறையான வழியில் அல்ல. உங்களது எல்லா எல்லைகளையும் நீக்கிவிட்டால், நீங்கள் அங்கே இருக்கிறீர்கள், ஆனால் அங்கு இல்லை.
உங்களுக்கும், உடலுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி மற்றும் உங்களுக்கும், மனதுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகி, அது பொருளற்றதை உணரக்கூடிய சாத்தியத்தை வெளிப்படுத்தும்.
அது ஒரு தியானம் போன்றது, அல்லது தியானத்தின் அத்தகைய ஆழமான அனுபவம் உங்களுக்கு இல்லையென்றால், குறைந்தபட்சம் நீங்கள் உறங்கும்பொழுது, நீங்கள் அங்கே இருக்கிறீர்கள், ஆனால் அங்கே இல்லை. தினமும் நீங்கள் அந்த நிலைக்குச் செல்கின்ற காரணத்தால், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள். இரண்டு நாட்களுக்கு நீங்கள் உறங்கவில்லை என்றால், மூன்றாவது நாள், நீங்கள் அழுத்தம் காரணமாக முழுவதுமாக பாதிக்கப்படுவீர்கள்.
இதுவும் இல்லை அதுவும் இல்லை
ஆகவே, நிர்வாணா – இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் இங்கே வாழ்ந்திருப்பது - மிக மிக முக்கியமானது.
உங்களில் சிலருக்கு இது சாத்தியமில்லாததாகத் தோன்றக்கூடும், ஆனால் நீங்கள் உச்சாடனத்தைக் கற்றுக்கொள்ள முடியும். எல்லாவற்றையும்விட மேலாக, அந்த ஒலிகள் எப்படிப்பட்டது என்றால், நிர்வாண ஷடகத்தை இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பதால், அது மெல்லமெல்ல உங்களுக்கும், உடல்தன்மைக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளியை உருவாக்கும். உங்களைப் பற்றிய உடல்தன்மையான அனைத்தும் சேகரிக்கப்பட்டது, சேர்க்கப்பட்டதுதான். உங்களுக்கும், உடலுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி மற்றும் உங்களுக்கும், மனதுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகி, அது பொருளற்றதை உணரக்கூடிய சாத்தியத்தை வெளிப்படுத்தும்.
நீங்கள் பொருளற்றதைத் தொட்டுவிட்டால், பிறகு நீங்கள் யார் என்பதற்கு ஒரு எல்லையில்லாத உணர்வு ஏற்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் இதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பமும், என் ஆசியுமாக இருக்கிறது. இந்த மனித வடிவத்தில் இங்கு வந்திருக்கும் நிலையில், பொருள்தன்மையான சேகரிக்கப்பட்ட குவியலைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாமல் நீங்கள் செல்லக்கூடாது.