ஆன்மீக சாதனா செய்யும்போது அணிவதற்குப் பொருத்தமான துணிகளைப் பற்றியும், அப்போது உடலில் உலோகங்களைத் தவிர்ப்பது பற்றியும் இப்பதிவில் சத்குரு விளக்குகிறார்.

சத்குரு:

நான் இளம்வயதில் ஹடயோகா செய்தபோது, நாங்கள் அணிந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது ஒரு கோவணத்துணி மட்டுமே. தடைகளை குறைந்தபட்சமாக்குவதே இதன் நோக்கம். இந்தியாவில் பாரம்பரியமாகவே மக்கள் தைக்கப்பட்ட துணிகளை அணியவில்லை. ஆண்கள் அணிந்த வேட்டியும் பெண்கள் அணிந்த சேலையும் தைக்கப்படாத துணிகளாகவே இருந்தன. துணியைத் தைக்கும்போது, சக்தியின் ஓட்டம் சற்று தடைபடுகிறது. ஆன்மீகப் பயிற்சிகள் செய்யும்போது இதை நாம் குறைக்க விரும்புகிறோம். அப்படியானால் நீங்களும் கோவணம் அணியத் துவங்கவேண்டும் என்று அர்த்தமில்லை, ஆனால் யோகப் பயிற்சிகள் செய்பவர்கள் விளையாட்டு வீரர்கள் அணிவதுபோல செயற்கையான (synthetic) துணி வகைகளை அணியக்கூடாது. உங்கள் துணிகள் இயற்கையாக இருப்பதே சிறந்தது. அதாவது பருத்தி அல்லது மூலப்பட்டுத் துணியாக இருக்கவேண்டும். இயற்கையான மூலப்பட்டு விலைமதிப்பானதாகவும், கிடைப்பதற்கு அரிதாகவும் இருப்பதால், இயற்கையான பருத்தித்துணியே சிறந்ததாக இருக்கும். கம்பளித் துணியையும் பயன்படுத்தலாம்.

உங்கள் சாதனாவை துவங்கும்முன், உங்கள் உடலில் இருக்கும் வேறு பொருட்களை, குறிப்பாக உலோகப் பொருட்களை அகற்றிவிட வேண்டும்.

உங்கள் சாதனாவை துவங்கும்முன், உங்கள் உடலில் இருக்கும் வேறு பொருட்களை, குறிப்பாக உலோகப் பொருட்களை அகற்றிவிட வேண்டும். உங்கள் மின்காந்த அலைகளின் புகைப்படம் ஒன்றை எடுத்தால், ஒரு சிறிய பொருள்கூட அதைச் சுற்றி ஒரு மின்காந்த அலையின் ஓட்டத்தை உருவாக்குவதை கவனிப்பீர்கள். எந்த ஒரு பொருளையும் உங்கள் உடல்மீது அணிந்துகொண்டால், சக்தி சுலபமாக நகர்வதற்கு அது தொந்தரவாக இருக்கும். சக்திநிலையில் செயலற்ற நிலையிலிருக்கும் காதுமடல்களைப் போன்ற உடலின் சில பாகங்களைத் தவிர, மற்ற இடங்களில் இருக்கும் எல்லா உலோகங்களையும் எடுத்துவிட வேண்டும். மூக்குத்தியும் கூட இருக்கக்கூடாது. உங்கள் ருத்ராக்ஷத்தையும் பாம்பு மோதிரத்தையும் நீங்கள் அணிந்துகொள்லலாம். ருத்ராக்ஷம், உங்கள் சக்தியின் ஒரு கவசத்தை உருவாக்கி, அருளுக்கு உங்களைப் பாத்திரமாக்கி, உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. பாம்பு மோதிரம், நீங்கள் குறிப்பிட்ட சில ஆன்மீகப் பயிற்சிகள் செய்யும்போது உயிர் உடலைவிட்டு நழுவுவதற்கான கோடியில் ஒரு வாய்ப்பைத் தடுக்கிறது. பெண்கள் முதுகுத்தண்டில் உலோகத்தாலான கொக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது. உடலில் சக்தி ஓட்டத்தைத் தடுக்காமல் இருக்கும் பொருள் எதுவென்று பார்த்தால், பிளாஸ்டிக் உலோகத்தைவிட சிறந்தது.

பயிற்சிகள் செய்யும்போது கண் கண்ணாடியை கழற்றிவிட வேண்டும். சரியான யோகா செய்து பலர் தங்கள் கண்ணாடிகளைக் கைவிட்டுள்ளார்கள். உங்கள் பார்வை தன்னைத் தானே சரிசெய்வதற்கு, நீங்கள் கண்ணாடியையும் காண்டாக்ட் லென்ஸையும் சிறிது காலம் தவிர்ப்பது சிறந்தது. கண்ணாடியும் காண்டாக்ட் லென்ஸும் இல்லாமல் உங்களால் சமாளிக்க முடியுமென்றால், அதை முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு தலைவலி வந்தால் கண்மூடி அதிகநேரம் செலவிடுங்கள். நீங்கள் காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துபவராக இருந்தால், காலை யோகப் பயிற்சிகளையாவது அவை இல்லாமல் செய்யுங்கள். இப்படிச் செய்வதன்மூலம் சின்னச்சின்ன பார்வைக் கோளாறுகளை காலப்போக்கில் குணமாக்கமுடியும்.

ஆசிரியர்: ஈஷா ஹட யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சத்குரு பேசியதிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது. ஈஷா ஹட யோகா பள்ளி 21-நாள் ஹட யோகா வகுப்புகளையும் 21-வார ஹட யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்புகளையும் வழங்குகிறது. மேலும் தகவல்களுக்கு, www.ishahatayoga.com இணையதளத்தைப் பார்க்கவும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.