கேள்வி: சத்குரு, நாம் தூக்கத்தில் எப்படி தியானம் செய்வது?

சத்குரு: ஓ, நீங்கள் தியானம் செய்யும்போது இருவேலைகளை ஒரே சமயத்தில் செய்ய நினைக்கிறீர்கள் போல! நீங்கள் தியானத்தில் தூங்க நினைக்கிறீர்களா அல்லது தூக்கத்திலும் தியானம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் - தூங்கும்போது எப்படி தியானம் செய்வது என்றா அல்லது தூக்கத்திலும் தியானம் செய்வது எப்படி என்றா?

தவறான கேள்வியைக் கேட்பது

சூஃபி மாஸ்டரான இப்ராஹிமின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அழகான கதை உள்ளது. அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். ஒரு அழகிய சூரிய அஸ்தமன நேரத்தில் நிகழ்ந்த அவரின் சத்சங்கத்தில் இரண்டு இளைஞர்கள் மட்டும் பரிதாபமாக அமர்ந்திருந்தனர்.

அவர்கள் இருவரும் புகைப்பிடிக்கும் பழக்கத்துடன் போராடிக் கொண்டிருந்தார்கள். “நாம் புகைப் பிடிக்கலாமா கூடாதா என்று ஏன் குருவிடமே கேட்கக்கூடாது? அவர் மிகவும் வேடிக்கையானவர், அதை சரி என்று கூட சொல்ல வாய்ப்பிருக்கிறது அல்லது புகையிலையை விட வேறு எதையாவது நமக்கு வழங்கக்கூடும்” என்று பேசிக்கொண்டனர்.

கடைசியில் இருவரும் தனித்தனியாக சென்று அவரிடம் இதைப் பற்றி கேட்க முடிவு செய்து கொண்டனர். மறுநாள் மாலை, மற்றுமொரு அழகிய சூரிய அஸ்தமனத்தில் அவர்களில் ஒருவர் மட்டும் வழக்கம்போல் பரிதாபமாக அங்கே உட்கார்ந்திருந்தார், மற்றவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். இந்த பரிதாபகரமானவர் மற்றொருவரைப் பார்த்து, “நீ எப்படி புகைக்கிறாய்? நீ குருவின் வார்த்தையை மீறிவிட்டாயா?” என்றார்.

அதற்கு மற்றவர், “இல்லை” என்றார்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பரிதாபகரமான சீடன், “நான் நேற்று அவரிடம் கேட்டதற்கு, அவர் என்னை புகைப்பிடிக்கக் கூடாது’ என்று கூறினாரே..

"நீ அவரிடம் என்ன கேட்டாய்?"

முதல் சீடன், “நான் தியானிக்கும்போது புகைப்பிடிக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் கூடாது என்றார்.

உடனே அடுத்த சீடர், “அதுதான் நீ செய்த தவறு. நான் அவரிடம், ‘நான் புகைபிடிக்கும் போது தியானிக்கலாமா?’ என்று கேட்டேன், அவர் சரி என்று கூறினார்.

வெறுமனே தூக்கம்

 

இப்போது, "நான் தூங்கும்போது தியானிக்க முடியுமா?" என்று கேட்கிறீர்கள். கிரகத்தில் உள்ள ஏராளமான மக்கள் விழித்திருக்கும்போது கூட தியானிப்பதில் சிக்கல் உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு, அவர்களின் உள்தன்மைக்கென போதுமான வேலையைச் செய்யாவிட்டால், அவர்கள் ஒரு மணி நேரம் தியானம் செய்ய உட்கார்ந்தால், அதில் மூன்று நிமிடங்கள் மட்டுமே தியானத் தன்மையில் இருந்திருப்பார். ஒவ்வொரு கணமும் மனம் அலைப்பாய்ந்துகொண்டே இருக்கிறது.

உங்கள் தூக்கத்தில் ஆன்மீகத்தை கொண்டு வர முயற்சிக்காதீர்கள். நீங்கள் இறந்துவிட்டதைப் போல தூங்குங்கள், அதுவே நல்லது.

நீங்கள் எவ்வளவு நேரம் தியானத்தில் இருக்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல, குறைவான நேரமாக இருந்தாலும் அதன் தரத்தை உயர்த்துவதுதான் சிறந்த வழியே தவிர, தூக்கத்திலும் தியானம் செய்வது எப்படி என்று பார்ப்பது அல்ல. குறைந்தபட்சம் தூக்கத்திலாவது உங்களின் சிந்தனைகளால் நீங்கள் குழம்பாமல் இருக்க வேண்டும். அனைத்தையும் துறந்தது போல தூங்குங்கள். “மரக்கட்டையைப் போல தூங்கு” என்று கூற கேட்டிருப்பீர்கள். நீங்கள் ஒரு மரக்கட்டைப் போல் தூங்க முடியாவிட்டால்கூட, குறைந்தபட்சம் பூனை அல்லது நாய் போல தூங்க வேண்டும். உங்கள் தூக்கத்தில் ஆன்மீகத்தை கொண்டு வர முயற்சிக்காதீர்கள். நீங்கள் இறந்துவிட்டதைப் போல தூங்குங்கள், அதுவே நல்லது.

அனைத்தையும் துறந்தது போல உறங்குதல்

இறந்தவர்கள் உடலளவில் விறைப்பானவர்களாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் அனைத்தையும் கைவிட்ட கடைசி நிலையில் உள்ளனர். நாம் எப்படி இருக்கிறோம் என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. எனவே இதேபோல், நீங்கள் தூங்கும்போது, உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று கவலைப்படக்கூடாது. அமெரிக்காவில் இதை நான் பார்ப்பதுண்டு, காலையில் நீங்கள் மக்களைச் சந்திக்கும்போது, முதலில் அவர்கள் கேட்பது, “நீங்கள் நன்றாக தூங்கினீர்களா?” என்றுதான். இந்தக் கேள்வியே எப்படி வருகிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் என்ன பிரச்சனை இருக்கிறது? ஆனால் நிறைய பேருக்கு இதில் ஒரு பிரச்சனை இருப்பதை நான் உணர்ந்தேன். உங்கள் தூக்கத்தில் நீங்கள் தியானிக்க முயற்சித்தால், அது நிச்சயமாக ஒரு பிரச்சனையை உருவாக்கும். உங்கள் தூக்கம் அனைத்தையும் கைவிட்டுவிட்டதாக இருக்கட்டும். நீங்கள் இறந்ததைப் போல தூங்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் ஒரு குழந்தையைப் போல தூங்குங்கள். அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் இதைப் பற்றி மிகவும் அழகாக கூறினார். ஒபாமாவிற்கு எதிரான தேர்தலில் அவர் தோல்வியடைந்த பின்னர், அவரிடம், "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு அவர், “நான் ஒரு குழந்தையைப் போல தூங்குகிறேன். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் நான் எழுந்திருக்கிறேன், அழுவேன், மீண்டும் தூங்குகிறேன்.” அது அந்த மனிதனுக்கு அருமையாக இருந்தது. தோல்வியில், நீங்கள் நகைச்சுவையாக இருக்க முடிந்தால், அது உங்களுக்கு மிகவும் நல்லது.

தியானத்தின் தரம்

நீங்கள் தியானத்தில் இருக்கலாம் அல்லது நீங்கள் தியானமாக மாறலாம், ஆனால் நீங்கள் தியானம் செய்ய முடியாது.

தியானம் என்பது ஒரு செயல் அல்ல; அது ஒரு தன்மை. நீங்கள் வாழும் விதத்தில் வெளிப்படும் ஒரு நறுமணம். நீங்கள் இதை ஒரு செயலாக செய்தால் அது நிகழாது - உங்கள் உடல், மனம், ஆற்றல்கள் மற்றும் உணர்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட அளவு முதிர்ச்சி நிலைக்கு வளர்த்துக் கொண்டால், நீங்கள் தியான நிலைக்கு தயாராகலாம். நீங்கள் தியானத்தில் இருக்கலாம் அல்லது நீங்கள் தியானமாக மாறலாம், ஆனால் நீங்கள் தியானம் செய்ய முடியாது. இந்த குணத்தை உங்களிடம் கொண்டு வந்தால், நீங்கள் தூங்கும்போது கூட அது உங்களை விடாது. தியானம் உங்களுக்கு ஒரு வாழ்க்கை செயல்முறையாக மாறியவுடன், உடல் விழித்திருந்தாலும் சரி, தூங்கினாலும், தியான செயல்முறை தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் தூக்கத்தின்போது தியானிக்க முயற்சித்தால், நீங்கள் தூக்கத்தை தொலைப்பதை விட வேறு ஒன்றும் அங்கு நிகழாது.

ஆசிரியர் குறிப்பு: தூக்கத்தைப் பற்றி சத்குரு என்ன கூறுகிறார் என்பதைப் பற்றி மேலும் வாசிக்க.

iyo-mid-banner