சமூகத்திற்கும் கர்மா உள்ளதா? எப்படி வேலை செய்கிறது?
தனிமனிதனின் கர்மாவைத் தாண்டி, குடும்பங்கள், சமூகங்கள், நாடுகள் மற்றும் மனிதகுலம் முழுவதும் பகிரப்படும் கூட்டுக் கர்ம நினைவுகள் உள்ளன என்கிறார் சத்குரு. இருப்பினும், அது எப்படி இருந்தாலும், நாம் நமது வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறோம் என்பது இன்னும் நம்மால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
கேள்வி:
பிரணாம் சத்குரு. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு முக்கியமான சம்பவமும் கர்மாவால் நடப்பதா அல்லது சூழ்நிலையால் நடப்பதா?
சத்குரு:தனிப்பட்ட கர்மா ஒன்று இருக்கிறது, கூட்டுக் கர்மாவும் இருக்கிறது. ஒரு குடும்பமாக, ஒரு சமூகமாக, ஒரு நாடாக, மனிதகுலமாக, நாம் கர்ம நினைவுகளை நமக்குள் பகிர்ந்துகொள்கிறோம். ஒருவேளை தனிப்பட்ட முறையில் நாம் எதுவும் செய்திருக்க மாட்டோம். ஆனால் நமது சமூகம் சில காரியங்களைச் செய்கிறது. அதனால், விளைவுகள் இருக்கும்.
Subscribe
கர்மா என்றால்...
கர்மாவை வெகுமதியாகவும் தண்டனையாகவும் புரிந்துகொள்ள வேண்டாம். அது அப்படி இல்லை. அது வெறுமனே வாழ்க்கையின் அடிப்படை. நினைவுகள் இல்லாமல் உயிர்கள் இல்லை. நினைவுகள் இல்லாமல் அமீபாவையோ அல்லது மனிதனையோ உருவாக்க முடியாது. உயிர் தன்னை நகலெடுத்துக்கொள்ள வேண்டுமெனில், அதற்கு நினைவு தேவை. கர்மா என்பது உயிரின் நினைவு. ஒற்றை செல் உயிரினத்திலிருந்து மற்ற அனைத்து வடிவங்கள் வரை உடல் கட்டமைக்கப்படுவது உயிரின் நினைவு இருப்பதால்தான்.
உலகத்திற்கும் ஞாபகப் பதிவுகள்
உங்களைச் சுற்றி நடக்கும் எல்லா செயல்களும் உங்களிடம் தாக்கம் ஏற்படுத்துகிறது. சமூக யதார்த்தங்களாலோ உலக யதார்த்தங்களாலோ சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்படலாம். தாங்கள் செய்யாத ஏதோ ஒன்றிற்காக ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படும் சூழ்நிலைகள் உள்ளன. தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமலேயே பல மக்கள் பல்வேறு துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் - அதுதான் அவர்களின் கர்மா.
நீங்கள் கர்மாவை இப்படி பார்க்கிறீர்கள்- "இது என் தவறா? நான் இதை செய்யவில்லையே. இது ஏன் எனக்கு நடந்தது?" கர்மா அப்படி இல்லை. கர்மா என்பது வெறுமனே ஒரு நினைவக அமைப்பு. இந்த நினைவகம் இல்லையென்றால், எந்தவிதமான கட்டமைப்பும் இருக்க முடியாது. அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டவை, குறிப்பாக உயிரின் கட்டமைப்புகள் மீண்டும் மீண்டும் உருவாகி முடிவதற்கு காரணம், ஒவ்வொரு உயிரிலும் பாதுகாப்பான நினைவக சேமிப்பு இருப்பதால்தான். உதாரணமாக, எனக்கு ஏதோ ஒன்று நடந்தது, அதற்கான நினைவு எனக்கு இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால், உங்களைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு நினைவு இருக்கிறது, அந்த சூழ்நிலைகள் நடக்கின்றன. உலகத்திற்கு நினைவு இருக்கிறது, அந்த சூழ்நிலைகள் நடக்கின்றன. மேலும் உங்களைச் சுற்றி நடைபெறும் எந்தவொரு செயலும் உங்களிடம் தாக்கம் ஏற்படுத்தும்.
கூட்டுக் கர்மா சில வெளிப்புற விளைவுகளை உருவாக்கலாம், ஆனால் நீங்கள் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பது இப்போது உங்களால் தீர்மானிக்கப்படுகிறது.
இப்போது, நியூயார்க் நகரத்தில் மாசு உள்ளது. நான் எதையும் செய்யவில்லை, ஆனால் நானும் நச்சை சுவாசிப்பேன். இங்கே, நான் கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கிறேன் - ஒருவேளை மோனாக்சைடு கூட இருக்கலாம். நான் எந்த கர்மாவும் செய்யவில்லை. நான் நிறைய மரங்களை நட்டேன். என்ன செய்வது? நீங்கள் நியூயார்க் நகரத்திற்கு வந்துவிட்டால், இதை சுவாசிக்கத்தான் வேண்டும். அப்படியானால், விலை கொடுக்க வேண்டுமா? நிச்சயமாக, நான் இங்கே போதுமான காலம் தங்கினால், ஒரு விலை இருக்கும்.
கூட்டுக் கர்மாவிற்கு தீர்வு என்ன?
உங்களின் தனிப்பட்ட கர்மா எதுவாக இருந்தாலும், ஒரு கூட்டுக் கர்மா இருக்கிறது. உங்கள் கர்மா என்பது அடிப்படையில் நீங்கள் உலகை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது, நீங்கள் உலகில் எங்கிருக்கிறீர்கள் அல்லது என்ன செய்கிறீர்கள் என்பதை தீர்மானிப்பதில்லை. நீங்கள் அரண்மனையில் பிறந்திருக்கலாம் ஆனால் உங்கள் கர்மா நீங்கள் துன்பப்படும் விதமாக இருக்கலாம். நீங்கள் தெருவில் பிறந்திருக்கலாம் ஆனால் உங்கள் கர்மா நீங்கள் மகிழ்ச்சியான மனிதராக இருக்கும் விதமாக இருக்கலாம். கடந்தகால கர்மா ஒரு குறிப்பிட்ட வெளிப்புற விளைவு அல்லது சூழ்நிலையை உருவாக்கியுள்ளது, அதை உடனடியாக நூறு சதவீதம் மாற்ற முடியாது. அதற்காக வேலை செய்ய வேண்டும். ஒரு சூழ்நிலையில் நீங்கள் மட்டுமல்லாமல் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஆனால் உங்கள் கர்மாவை உடனடியாக மாற்ற முடியும்.
உங்கள் கர்மாவை இப்போதே நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும், அதாவது நீங்கள் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பதை இப்போதே மாற்றிக்கொள்ள முடியும். இதில் நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதால், நீங்கள் விரும்பினால் இதை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் நீங்களும் நானும் விரும்பினாலும், உலகம் இப்போது மாற விரும்பாமல் இருக்கலாம். எனவே கூட்டுக் கர்மா சில வெளிப்புற விளைவுகளை உருவாக்கலாம். ஆனால் நீங்கள் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பது இப்போதும் உங்களால் தீர்மானிக்கப்படுகிறது.
குறிப்பு: சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.