காசி ராமேஸ்வரம் - மகத்துவம் என்ன?

சத்குரு: ஒரு காலத்தில் நம் நாட்டில் அறிவிற்கு தலைநகரம் என்றால் காசி. எந்தவொன்றையும் புரிந்துக்கொள்வதற்கும், எல்லாவிதமான கலைகளும் ஒரு இடத்தில் சேர்ந்த இடம் என்றாலும் அது காசியாகத்தான் இருந்தது. இதனால் வாழ்க்கையில் ஒரு முறையாவது அங்கு சென்றே ஆகவேண்டும், அந்த தன்மையை உணர்ந்து வரவேண்டும். நமக்கு ஆன்மீகப் பக்குவம் வரவேண்டும் என்றால் நாம் நம் வாழ்க்கையில் அந்தவிதமான ஒரு இடத்துக்கு சென்று நமக்கு தேவையானதை புரிந்துக்கொண்டு வரவேண்டும். வெறும் பிழைப்பு நோக்கத்தில் நம் வாழ்க்கையை முடித்துக்கொள்ளக்கூடாது என்ற நோக்கத்தில் காசிக்கு போகவேண்டும் என்று சொன்னார்கள்.

இப்போது நீங்கள் தமிழ்நாட்டில் பார்த்தீர்கள் என்றால் சிவகாசி, தென்காசி இருக்கிறது. எதற்கென்றால் காசிக்கு செல்ல முடியாதவர்களுக்கு இங்கேயே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வம்.

ராமேஸ்வரம் என்பது மிகவும் ஒரு சக்திவாய்ந்த ஒரு லிங்க ரூபமாக அங்கு உருவாக்கி வைத்தார்கள். தென் இந்தியாவில் இருந்துக்கொண்டு ராமேஸ்வரத்திற்கு போகாமல் எப்படி வாழ்வது? எதனால் இப்படி என்றால், அவ்வளவு பெரிய மகத்தான ஒரு கோவில் கட்டினார்கள். இப்போதும் கூட உலகிலேயே மிக நீண்ட பிரகாரம் கொண்ட கோவிலாக ராமேஸ்வரம் கோவில் இருக்கிறது.


அவ்வளவு மகத்தான ஒரு கோவிலை அங்கு கட்டியிருக்கும்போது, நீங்கள் இப்போது இருக்கின்ற கட்டிடங்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஒரு ஆயிரம் வருடத்துக்கு முன்பு, கொஞ்சம் யோசித்து பாருங்கள், அந்த ஒரு கட்டிடத்தை அவ்விதமாக மனிதன் மனதில் கற்பனை செய்து பார்க்கமுடியாது. அவ்விதமான ஒரு பிரமாண்டமான கோவிலைக் கட்டினார்கள். அதைப் பார்க்காமல் எப்படி வாழ்வது? அதனால் வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்றுபார்த்து வரவேண்டும் என்ற ஒரு தன்மை வந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆன்மீக நோக்கத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு தூண்டுதல் இல்லாமல் அவன் வளரமாட்டான். அதனால், அந்த தூண்டுதல் நடந்தே ஆகவேண்டும். ஒருமுறை காசிக்கு, ஒருமுறை ராமேஸ்வரத்திற்கு சென்றால், இந்த ஆன்மீக தூண்டுதலிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. வாழ்க்கை முடிவதற்குள் ஒருமுறை சென்று வரவேண்டும். அவ்வாறு நீங்கள் வாழ்க்கையில் செல்ல முடியவில்லை என்றால் கடைசி நேரத்திலாவது காசிக்கு நீங்கள் செல்லவேண்டும். அங்கு சென்று நீங்கள் உயிரை விடும்விதமாகவாவது செய்துகொள்ளவேண்டும் என்று கூறியது ஏனென்றால், அந்த ஆன்மீக தூண்டுதலுக்கு தேவையான சூழ்நிலை, தேவையான உதவி, அதற்கு உறுதுணையாக இருக்கிற மக்கள், குருக்கள் என அனைத்தும் ஒரு இடத்தில் இருந்ததினால் அங்கு போகாமல் வாழக்கூடாது, அப்படி வாழ்ந்துவிட்டால் கடைசி நேரத்திலாவது அங்கு சென்றே ஆகவேண்டும் என்று சொன்னார்கள்.

கட்டாயமாக அங்கு செல்வது நன்றாக இருக்கும். எதனால் என்றால், இந்த இரண்டு இடங்களுமே ஒரு அதிசயமான இடங்கள்தான். இந்தியாவில் பிறந்து காசி, ராமேஸ்வரம், கேதார்நாத், கைலாஷ் இந்த தென்கைலாயமான நம் வெள்ளியங்கிரி மலை இவற்றை பார்க்கமல் தரிசிக்காமல் இருப்பது தவறுதான். எதனால் அப்படியென்றால், நம் நாட்டில் பிறந்த நமக்கு விசா தேவையில்லை பாஸ்போர்ட் தேவையில்லை. நம்முடைய கால்கள் உறுதியாக இருக்கும்போதே சென்று பார்த்து வந்துவிடவேண்டும்.

ராமேஸ்வரம் உருவான வரலாறு

ராமேஸ்வரத்தைப் பற்றி பேசும்போது, இதில் முக்கியமானது, ராமேஸ்வரம் எதற்காக உருவாக்கப்பட்டது என்றால், ராமர், ஸ்ரீலங்கா சென்ற அந்த சூழ்நிலை உங்களுக்கு தெரியும். அவையனைத்தும் நிகழ்ந்துவிட்டன. ராமன் திரும்பி வந்தப்பொழுது அவரே காசிவிஸ்வநாதருக்கு பூஜை செய்ய வேண்டும் என்று விரும்பினார், அதற்காக அனுமாரை காசி சென்று ஒரு லிங்கம் எடுத்துவருவதற்காக அனுப்பினார்களாம். ஆனால் அனுமார் சென்று அதிக நேரமாகியும் வராததால், ராமர் இங்கேயே மணலில் ஒரு லிங்கம் செய்து பூஜை செய்ய துவங்கினார். அதுவே ராமேஸ்வரம் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி, அங்கு அக்னிதீர்த்தங்கள் என்பவற்றையும் உருவாக்கினார்கள்.

அப்போதிலிருந்து இன்றும் கூட ஆயிரம் ஆயிரம் வருடங்களாக பக்தர்கள் இந்த அக்னி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் விடுவார்கள். அங்கிருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்து இங்கு ராமேஸ்வரத்தில் விடுவார்கள். மணல் எடுத்து சென்று அங்கு கங்கையில் விடுகின்றார்கள். இந்தவிதமாக இருப்பது மிகவும் ஒரு ஆழமான நிகழ்வு. இது தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்வதில்லை, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இது போன்று ஏதோவொரு விதமான பாரம்பரிய வழக்கம் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் ராமேஸ்வரம் இல்லை. அவர்கள் ஏதோ ஒன்று வைத்திருக்கிறார்கள். ஆனால், அனைவரும் காசிக்கு செல்கிறார்கள்.

நம் பாரம்பரியத்தில் வேரூன்றியிருக்கும் காசியாத்திரை

தென்னிந்தியாவில் ஒரு வழக்கம் என்னவென்றால், திருமணம் நடப்பதற்கு முன்பு, திருமணம் செய்துகொள்வதற்கு கடைசி நிமிடத்தில், “என்ன சொல்றீங்க மாப்பிள்ளை…?” என்றால் அதற்கு, “நான் இல்லை, நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன், நான் காசிக்கு சென்றுவிடுவேன்” என்று மணமகன் சொல்வார். வெறுமனே அங்கு ஒரு நாடகம் நடத்துகிறார்கள், “காசிக்கு சென்றுவிடுவேன்” என்று.

அப்படியென்றால் அதன் அர்த்தம் என்னவென்றால், எனக்குள் துறவி ஆவதற்கான ஒரு ஆர்வம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். “இல்லை இல்லை! மணப்பெண் காத்திருக்கிறாள், நீ அப்படியெல்லாம் செய்யமுடியாது!” என்று கூறி, திருப்பி அழைத்து வந்து திருமணம் செய்கிறார்கள். இதற்கு காசியாத்திரை என்று சொல்வார்கள். திருமணத்தில் ஒரு சிறு காசியாத்திரை இருக்கிறது. ஆனால் மூன்று நிமிடத்தில் சென்றுவந்துவிடுவார்கள்.

இதுபோன்று எதற்கு இருக்கிறது, காசிக்கு செல்வது என்பது எதற்காக அனாதிகாலத்திலிருந்து அவ்வளவு முக்கியமாகிவிட்டது என்று யாருக்கும் தெரியாது.

காசியின் பழமை

காசி, Kashi

கங்கா ஆரத்தி, Ganga Arati

எவ்வளவு வருடங்களுக்கு முன்பு இந்த காசி என்பது உருவாக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. வரலாற்றில் இதைப்பற்றி குறிப்பு இல்லை. சில இடத்தில், தொல்பொருள் ஆராய்ச்சிகள் செய்த சில இடங்களில், ஆறு அடுக்குகளில் நகரம் இருப்பதாகக் கூறுகின்றார்கள். ஒன்றுக்குக் கீழ் ஒன்று கீழே சென்றுவிட்டது. இதைப்பற்றி மக்களுக்கு எளிதாக நடைமுறையில் தெரிவதில்லை. இப்போது நாம் இதுபோன்று கட்டிடங்கள் வைத்திருக்கிறோம். ஒரு பத்தாயிரம் வருடங்கள் ஆகிவிட்டது என்றால், நிலநடுக்கம் எதுவும் நிகழத்தேவையில்லை, தானாகவே இந்த கட்டிடங்கள் அனைத்தும் உள்ளுக்குள் கீழே சென்றுவிடும், மண் மேலே வந்துவிடும்.

மண் நம்மை மட்டும் சாப்பிடுவதில்லை, நாம் உருவாக்குகிற அனைத்தையும் உண்டுவிடும். இன்னும் ஒரு பத்தாயிரம் வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றை கட்டினீர்கள் என்றால் அவையும் அடுத்தவொரு பத்தாயிரம் வருடங்களில் கீழே சென்றுவிடும். இந்தவிதமாக பார்த்தீர்கள் என்றால் ஆறு அடுக்குகள் இருக்கிறது. ஆறு அடுக்குகள் என்றால் எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கவேண்டும் என்று நமக்கு தெரியவில்லை, யாருக்கும் தெரியவில்லை.

இதனால்தான் மார்க் டுவெய்ன், “புராணங்களையும் தாண்டி பழமையானது காசி” என்று சொன்னார். “எப்போது ரோம் என்ற நகரம் பற்றிய பேச்சே இல்லையோ, அப்போதே காசி இருந்தது. எப்போது எகிப்து என்பது இல்லையோ, அப்போதே காசி இருந்தது. எப்போது கிரீஸ் என்பது இல்லையோ, அப்போதே காசி இருந்தது” என்று அவர் சொல்கிறார். எதனால் என்றால், காசி என்பது அந்தளவுக்கு தொன்றுதொட்ட காலத்தில் இருந்தே வந்து இருக்கிறது.

இந்தியாவின் தலைமைப் பல்கலைக்கழகம்

அனைத்து மக்களுக்கும் இது முக்கியமான ஒன்று என எதனால் ஆகிவிட்டது என்றால், அந்த காலத்தில் ஒரு அறிவு, ஒரு புரிதல், ஒரு ஞானம், ஆன்மீகம் அதுமட்டுமில்லாமல், ஒரு விஞ்ஞானம், கணிதம் என எதை புரிந்துக்கொள்ளவேண்டும் என்றாலும் அனைவரும் செல்வது காசிக்குத்தான். எதனாலென்றால் புரிந்தவர்கள் அனைவரும் அங்கு சென்று தங்கிக்கொள்கிறார்கள்.

ஏதோ ஒரு விஞ்ஞானம், ஏதோ ஒரு கல்வியில் மிகவும் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் அனைவரும் அங்கு சென்று தங்கினார்கள். அதனால், அந்த தேடுதலில் இருப்பவர்கள் அனைவரும் அங்குதான் செல்வார்கள். ஒரு பல்கலைக்கழகமாக வைத்தார்கள். நாடு முழுவதுக்கும் ஒரே ஒரு பல்கலைக்கழகம் - காசி. அனைவரும் அங்குதான் செல்வார்கள், அவ்வாறு இருந்தது. இந்த பல்கலைக்கழகம் என்பது ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு மட்டுமில்லை, புரிந்துக்கொள்ளும் தன்மையை அதிகப்படுத்திக்கொள்வதென்றாலும், ஆன்மீக தேடுதலில் இருந்தாலும், ஞானம், அறிவு என எந்த தேடுதலில் இருந்தாலும், அங்குதான் செல்ல வேண்டும். எதனாலென்றால், அங்குதான் புரிந்தவர்கள் அனைவரும் ரே இடத்தில் இருந்தார்கள். இதனால் நம் கலாச்சாரத்தில் இப்படி ஒன்று வந்துவிட்டது.

அனைவருக்குமான வெளிச்சத்தூண்

இப்போது நீங்கள் தமிழ்நாட்டில் பார்த்தீர்கள் என்றால் சிவகாசி, தென்காசி இருக்கிறது. எதற்கென்றால் காசிக்கு செல்ல முடியாதவர்களுக்கு இங்கேயே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வம். அந்த பாண்டிய மன்னன், அனைவரினாலும் காசிக்கு செல்ல முடியாது. அதனால் இங்கே அதைக் கொண்டு வந்துவிடலாம் என்று முயற்சி செய்தான். அது சிவகாசி, தென்காசி ஆகிவிட்டது. இது மிகவும் ஒரு ஆழமான தொடர்பு.

முக்கியமாக காசி என்றால் ஒரு வெளிச்சத் தூண். அந்தவிதமான வெளிச்சத் தூணை உருவாக்குவதற்கு ஒரு தொழில்நுட்பம், ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. இது மிகவும் ஒரு மகத்தான ஒரு நிலையில் இருக்கிறது. ஆனால் அந்த விதமான செயல் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. இப்போது நம் தியானலிங்கம் இருக்கிறது. இதுவும் ஒரு வெளிச்சத்தூண் தான். இதற்கு அந்த சக்தி இருக்கிறது. ஆனால் அளவில் அது மிகவும் பிரமாண்டமான நிலையில் இருக்கிறது.

அதுபோன்று நாம் வெளிச்சத் தூண்களை நம் நாட்டில் நிறைய உருவாக்கி இருக்கிறோம். மக்களுக்கு ஒரு வழிகாட்டுவதற்காக இவை உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது தியானலிங்கம் கூட அதே நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அளவில் மிகவும் மகத்தான நிலையில் இருக்கிறது. அந்தளவுக்கு உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு அதிகம் செயல் தேவைப்படுகிறது.


The Ganges and the ghats image from Wikipedia, Kashi Vishwanath Temple from Wikimedia, Ramanathaswamy Temple image from Wikimedia, Thousand pillar corridor - Rameshwaram temple image from Wikimedia