எதற்காக இன்னொரு தியானலிங்கம்?
இந்தியாவில் ஏற்கனவே லட்சக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், எதற்காக இன்னொரு தியான லிங்கம்?
சத்குரு:
இன்னொரு தியானலிங்கம் என்பதே தவறான கருத்து. நான் அறிந்தவரை வேறு எங்கும் தியானலிங்கம் கிடையாது. ஆசையின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் எழுப்பப்பட்ட கோயில்கள் வேறு.
தன் அகங்காரத்துக்குத் தீனி போடும்விதமாக, அடுத்த நாட்டு அரசன் கட்டிய கோயிலைவிடப் பெரிதாக எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் தான் இங்கு அதிகம். அந்த முயற்சியில் அந்தக் கோயிலை நிர்மாணிப்பதற்கு உட்படுத்தப்பட்டவர்கள் எத்தகைய துன்பத்துக்கு ஆளானாலும், அரசர்கள் அதைப் பற்றி கவலை கொண்டது இல்லை.
ஆனால், அன்பை மட்டுமே அடிப்படையாக வைத்து, தன்னார்வத் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது தியானலிங்கம்.
Subscribe
மந்திரங்கள் சொல்லி, உங்கள் பெயர், முகவரி கொடுத்து, தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து கடவுளிடம் கோரிக்கைகள் வைக்கும் தலமல்ல இது. அதனால், தியானலிங்கத்தைத் தரிசிக்க எந்தக் குறிப்பிட்ட மத நம்பிக்கையும் தேவையில்லை. சுருங்கச் சொன்னால், இது ஒரு வழிபாட்டுத் தலமாக உருவாக்கப்படவில்லை. ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய விதையை உங்களுக்குள் தூவுவதற்காக மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்ட அற்புதம் இது.
வாழ்க்கையின் இருமை நிலை
நீங்கள் இதுவரை அனுபவத்தில் உணர்ந்துள்ள வாழ்க்கை, இருவேறு நிலைகளுக்கிடையில் ஊசலாடுவது. இருள்-வெளிச்சம், ஓசை-நிசப்தம், விருப்பு-வெறுப்பு, இன்பம்-துன்பம், ஆண்-பெண் என்ற எல்லாவற்றுக்கும் இரண்டு பரிமாணங்கள் உண்டு. இரண்டு நிலைகள் இருந்தால்தான் படைப்பு என்று ஒன்று நிகழவே முடியும்.
இந்த இருமை நிலையைத்தான் நம் பாரம்பரியத்தில் சிவன்-சக்தி என்று உருவகப்படுத்தினார்கள். மனித உடலில் இடகலை, பிங்கலை என்று இரண்டு முக்கிய நாடிகள் வழியாக வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த அடிப்படை ஒரு புறம்.
மனித வாழ்வில் ஏழு முக்கிய வளர்ச்சி நிலைகள் உள்ளன. இவை மனித உடலில் ஏழு தளங்களில் ஏழு சக்கரங்களாக சூட்சுமமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சக்கரங்கள் பற்றியும், இவற்றில் ஒரு தூங்கும் பாம்பாக அபார சக்தி உறங்கிக் கொண்டு இருப்பது பற்றியும் அனுபவபூர்வமாக உணராதவரை, அடுத்தவர் வார்த்தைகளில் அது வேடிக்கைப் பேச்சாகிவிடும். தியானலிங்கத்தில், இந்த ஏழு சக்கரங்களும் உச்சநிலையில் தூண்டப்பட்டு இருக்கின்றன என்பதே அதன் தனித்தன்மை.
தியானலிங்கத்தின் எல்லைக்குள் வருபவர் எவரானாலும், சூட்சுமமாக அவருள் ஒரு விதை விதைக்கப்படுகிறது. அது அவரை மேல்நிலை நோக்கி உயர்த்திச் செல்வதற்குப் பேருதவி புரியும்.
ஏன் லிங்க வடிவம்?
வடிவற்ற நிலையிலிருந்த சக்தி ஒரு வடிவெடுக்கும்போது, அது முதலில் பெறுவது லிங்க வடிவம்தான். அதீத சக்தியைப் பூட்டிவைக்க மிக உன்னதமான வடிவம் லிங்கம்தான். எனவே, தியானலிங்கம்! மற்றபடி, இதைச் சிவாலயங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் லிங்க வடிவங்களுடன் குழப்பிக் கொள்ளத் தேவை இல்லை.
தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது எப்படி?
ஒரு வடிவத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மந்திரப் பிரதிஷ்டை, பிராண பிரதிஷ்டை என இரு வழிகள் உள்ளன. ஒவ்வொரு சக்தி நிலைக்கென்று உள்ள மந்திரங்களை உச்சாடனம் செய்து, பிரதிஷ்டை செய்வது மந்திரப் பிரதிஷ்டை. உயிர் சக்தி கொண்டு, நேரடியாகச் சக்தி நிலையில் பிரதிஷ்டை செய்வது பிராணப் பிரதிஷ்டை.
தியானலிங்கம் அதீத சக்தி கொண்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கால தீவிர சாதனை தேவைப்பட்டது. ஒரு முக்கோணத்துக்குள் சக்தியை நிலைநிறுத்திப் பூட்ட என்னுடன் சேர்ந்து இயங்க மேலும் இருவர் பயன்படுத்தப்பட்டனர்.
எத்தனையோ இடையூறுகளைத் தாண்டி, தியானலிங்கம் 1999, ஜுன் 24-ம் தேதி பூரணமான நிலையில் இந்த உலகுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்தக் கணம் நான் முழுமையாக, வெறுமையாக உணர்ந்தேன்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... தியானலிங்கம், யோகக் கலையின் அதி தூய்மையானதொரு வெளிப்பாடு.
ஏழு அடுக்குக் கட்டடத்துக்குள் கீழிருந்து ஒவ்வொரு மாடியாக ஏறி, அதன் உச்சிக்குப் போவதைப்போல், சக்தி நிலையை ஒவ்வொரு தளமாக உயர்த்திப் போவதற்கு பல முக்கிய சாதனைகள் புரிய வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட நிலையைத் தாண்ட ஒரு குருவின் உதவி மிக அவசியம்.
குரு என்பவர்...
குரு என்பவரை இங்கே பாடம் சொல்லித் தரும் ஆசிரியராகப் பார்க்கக்கூடாது. குரு, சும்மா கற்றுத் தருபவர் அல்ல. அவர் தன்னிடம் இருப்பதை சக்தி நிலையில் வழங்கி சீடனை உயர்த்துகிறவர்.
மனித உருவில் உலகுக்கு வரும் எந்தக் குருவுக்கும் உடல்ரீதியாக ஆயுள் ஒரு முடிவுக்கு வரும். மாறாக, நிரந்தரமாக உயிர்ப்புடன் வாழும் ஒரு குருவாகச் செயல்படும் விதமாக தியானலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.