இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 8

கேதார்நாத் ஜோதிர்லிங்க தரிசனம் தனக்கு வழங்கிய பரவச அனுபவத்தை விவரிக்கும் எழுத்தாளர், அக்கோயிலின் வரலாற்றுப் பின்னணி குறித்தும் தனித்துவங்கள் குறித்தும் பேசுவதோடு, ஆதிசங்கரர் பற்றி சத்குரு சொன்ன வியக்க வைக்கும் செய்திகளையும் பகிர்ந்துகொள்கிறார்!

திரு. அஜயன் பாலா:

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா, writer ajayan balaகடல் மட்டத்திலிருந்து 3,583 மீட்டர் உயரத்திலிருக்கும் கேதார்நாத் 22,850 அடி உயரமுடைய மகாபந்த் எனும் பனிச்சிகரத்தில் மந்தாகினி நதியையொட்டி அமைந்திருக்கிறது. கேதார்நாத் கோயிலை முதன்முறையாக தரிசிப்பவர்களுக்கு என்னதான் ஆச்சர்யத்தை தந்தாலும் கோவிலினுள் நுழைபவர்களுக்கு சட்டென ஒரு ஏமாற்றமும் தோன்றக்கூடும். காரணம் அதன் சிறிய எளிமையான புறத்தோற்றம்.

வழக்கமாகத் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் வேலைப்பாடுகள் மிகுந்த வானை முட்டும் உயரமான கோபுரம். பிரம்மாண்டமான பிரகாரம், ஆயிரம்கால் கொலு மண்டபம். இது போதாதென மேளச்சத்தம் ஜால்ரா ஓசை, திரைசீலை இத்தனையும் இருந்தால் மட்டுமே கோவிலாகப் பார்த்து அனுபவித்துப் பழக்கப்பட்ட நம் மனதுக்கு, இவை எதுவும் இல்லாத அதன் எளிமையான தோற்றம் துவக்கத்தில் ஏமாற்றத்தையே தரும். ஒரு சிறிய கோபுரத்துக்குக் கீழே இரண்டு சின்ன அறைகள் முதலில் சிறிய பிரகாரம் என்னதான் இடுக்கி நின்றாலும் மொத்தமாக ஐம்பது பேருக்கு மேல் அங்கு நிற்க முடியாது. அதைத்தாண்டி உள்ளே நுழைந்தால் ஒரு சிறிய சதுரவடிவிலான கருவறை. அங்கு சுயம்புவாக மூலவர் சிறுகூம்புவடிவக் கல் மூலம் லிங்கமாக உருவகிக்கப்படுகிறார்.

என் முறை வந்தபோதும் நானும் அதனைக் குனிந்து தொட்டு திரும்பிய கணத்தில் உடல் முழுக்க பொங்கி பிரவகிக்கும் அபரிமிதமான சக்திநிலையை உணர்ந்தேன். வாழ்வின் உன்னதமான தருணத்தை எதிர்கொள்கிறபோது நம் மனம் அடையக்கூடிய நிலை அது.

திருவண்ணாமலையின் மலைத்தோற்றத்தை சிறு கல்லாக சுருக்கினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு தோற்றம். அதனைச் சுற்றி பலவித புஷ்பங்கள் அலங்கரிக்கப்பட்டிருக்க ஈரமான அந்தக்கல்லை தொட்டு கண்களில் ஒற்றியபடி பலரும் வலம் வந்தனர். நிசப்தமான அந்த அறையில் சிறுகுரல் மட்டும் யாரும் மூலவரை தொடவேண்டாம் என எச்சரித்துக்கொண்டிருந்தது. யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பலரும் தொட்டு வணங்கியபடி நகர்ந்து கொண்டிருந்தனர். என் முறை வந்தபோதும் நானும் அதனைக் குனிந்து தொட்டு திரும்பிய கணத்தில் உடல் முழுக்க பொங்கி பிரவகிக்கும் அபரிமிதமான சக்திநிலையை உணர்ந்தேன். வாழ்வின் உன்னதமான தருணத்தை எதிர்கொள்கிறபோது நம் மனம் அடையக்கூடிய நிலை அது. உச்சிமுதல் பாதம் வரை அலையென பரவும் அந்த பேருணர்வால் மனம் இன்னும் இன்னுமாய் விரிவு கொள்ளத் துவங்க, நானும் ஒரு சிவனாக அந்த கணத்தில் மாறிக்கொண்டிருப்பதை உணரத் துவங்கினேன். உச்சிமுதல் உள்ளங்கால் வரை பரவிய அந்த உணர்வால் நாடி நரம்புகள் உட்பட முப்பது முப்பத்தாருகோடி ஜீவ அணுக்களிலும் மெய்மையை முழுமையாக தரிசிக்க முடிந்தது. வெளியே வந்தபோது வேறு ஆளாக மாறிவிட்ட ஒரு புத்துணர்ச்சி.

இமயமலையில் அமைந்துள்ள மிக முக்கியமான 12 ஜோதிர்லிங்களில் ஒன்றான சிவ பிண்டா இங்குதான் உள்ளது. கோவிலுக்கு வெளிப்புறம் காணப்படும் இந்த லிங்கம் பஞ்சபாண்டவர்களால் வணங்கப்பட்டது. துவக்கத்தில் அதுவே கோவிலாகவும் இருந்தது. பிற்பாடு இப்போது இருக்கும் இந்த கோவில் 8ம் நூற்றாண்டில் இங்கு வந்த ஆதிசங்கரரால் கட்டப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேதார் எனும் அந்த சிறு புனிதத்தலத்துக்கு வருடத்தில் ஆறு மாதம்தான் உயிர். சித்திரை மாதத்தில் சூரியன் வைசாகத்தில் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளன்று திறக்கப்படும். இக்கோவில் அதற்கடுத்த ஆறுமாதங்களில் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு பின் ஐப்பசி மாதத்தில் சூரியன் விருச்சிகராசியில் பிரவேசிக்கும்போது மூடப்படும். மற்ற நாட்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் இங்கு மனித சஞ்சாரமே இருக்காது. எங்கும் பனிமயம்தான். பண்டாக்கள் எனப்படும் இக்கோவிலின் பூஜாரிகள் இக்காலங்களில் இங்கிருக்கும் மூலவர் சிலையை கீழே குப்தகாசி அல்லது ஊகிமட்டுக்கு எடுத்து சென்று அங்கு வைத்து பூஜைகளைத் தொடர்ந்து செய்வர். அதேபோல இங்கு வசிக்கும் 470 பேரும் இக்காலங்களில் கேதாரை விட்டு வெளியேறி ஆறுமாதங்களுக்கு பின்பே வருவர். யாத்ரீகர்களும் இக்காலங்களில் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவர். நடை திறக்கப்படும் நாட்களில் காலை முதல் இரவு வரை கோவிலில் பால் போக், மகா அபிஷேகம், ருத்ரா அபிஷேகம், அஷோடார், சிவ அஷ்டோத்திரம், சிவ சகஸ்கரநாமம், சிவ நாமாவளி, சிவ மகிமை எனும் பூஜைகளும், அர்ச்சனைகளும் தொடர்ந்து நடைபெறும். கோடைக்காலமே ஆனாலும் இங்கு இரவில் காணப்படும் குளிர் மிகக் கடுமையானது.

கோவிலைவிட்டு வெளியே வந்தபோது மாலை 6 மணி. கொண்டு வந்த உடைகள் பெரும்பாலும் நனைந்துவிட்டதாலும், புதிய ரெயின் கோட்டுகள் வாங்குவதற்காகவும் தேடி விசாரித்து கடை ஒன்றினுள் நுழைந்தபோது எங்களுடன் வந்தவர்களில் பெரும்பாலோர் அங்கிருந்தனர். ஆனால் அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தையும் உடம்பையும் பலதரப்பட்ட ஆடைகளுக்குள் புதைத்துக்கொண்டு குளிரில் நடுங்கிக்கொண்டே கடைக்காரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தனர். அன்று அங்கு இருந்தது ஒரே ஒரு கடைதான். அந்த கடைக்காரர் நினைத்தால் பன்மடங்கு விலையைக் கூட்டியிருக்கலாம். வேறு வழியில்லாத காரணத்தால் நாங்களும் எவ்வளவு கொடுத்தாவது அந்த ஆடைகளை வாங்கும் நிலையில் இருந்தோம். ஆனால் அவர் சாதாரணமாக கீழே அந்த ஆடைகளுக்கு என்ன விலை இருக்குமோ அதை மட்டுமே கேட்டார். வாழ்வின் கடைசியான உண்மையையும் அறிந்த ஒருவராக அப்போது அவர் எனக்குத் தோன்றினார். கைகளில் பை இருந்ததால் உள்ளூர அவரை வணங்கிவிட்டு நடுங்கியபடி அறைக்கு வந்தேன். கோவிலுக்கு பின்புறமிருந்த மண்டபத்தில் சத்சங்கம் மாலை 6 மணிக்குக் கூடியது. நான்தான் கடைசி ஆள். அரக்கபரக்க ஓடிவந்து கடைசி ஆளாக அமர அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த சவுண்ட்ஸ் ஆப் ஈஷா இசை நிறுத்தப்பட்டு, சத்சங்கம் துவங்கியது. வழக்கமான சடங்குகள் முடிந்து கேதாரில் முன்பு படமாக்கப்பட்ட சத்குருவின் வீடியோ காட்சி திரையிடப்பட்டது.

கேதாரின் மகத்துவத்தையும் கோவிலின் தோற்றத்தையும் பற்றி பொதுவாக பேசத் துவங்கிய சத்குரு அவர்கள் இக்கோயிலின் பின்புறம் மலையை பார்த்தவண்ணம் ஒரு கையும், குச்சியுமான சிலை ஒன்று இருப்பதை பார்க்கலாம். அப்படி ஒரு சிலை இங்கு எதற்காக நிறுவப்பட்டுள்ளது தெரியுமா? என கேட்டு சிலநிமிடங்களில் அவரே ஆதிசங்கரர் கை இது என பதிலையும் கூறி, தொடர்ந்து சங்கரர் வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாக விவரிக்க துவங்கினார். சமணம், பௌத்தம் இரண்டும் இந்தியா முழுக்க உச்சத்தில் இருந்த காலத்தில் அவை மதிப்பீடில்லாத உலகத்துக்கு மக்களை அழைத்து சென்ற காரணத்தால் நாட்டில் எங்கும் குழப்பம் கூச்சல் தோன்றியது. இக்காலத்தில் காலடியில் பிறந்த சங்கரர் தன் 4ம் வயதில் வேதங்களை பாராயணம் செய்து கவுரபாதரின் சிஷ்யராக வளர்ந்து ஆன்மீக அறிவியலை தன் 8ம் வயது முதல் போதிக்க துவங்கினார்.

கேதார்நாத் ஜோதிர்லிங்க தரிசனம்... மகத்துவமும் தனித்துவமும்!, kedarnath jyothirlinga darisanam magathuvamum thanithuvamum

32ம் வயதுக்குள் இரண்டுமுறை இமயம் வரை வந்து திரும்பிய சங்கரர் முதல்முறை வந்தபோது இந்தியா முழுக்க மடங்களையும், சக்திபீடங்களையும், கோவில்களையும் நிறுவி மீண்டும் காலடி திரும்பினார். இரண்டாம் முறை இமயம் நோக்கி வந்த வேளையில் ஓரிடத்தில் குளித்துவிட்டு கோவிலை நோக்கி அவர் பூஜைக்குச் செல்லும் வேளையில் ஒரு தாழ்த்தப்பட்டவர் அவர் எதிரே வந்துவிட்டார். சடங்குகள் மூலமாகவும், புனிதங்கள் மூலமாகவும் மதத்தை மீண்டும் கட்டமைத்த சங்கரருக்கு இப்படி ஒருவன் தன் எதிரே வந்துவிட்ட விவகாரம் தன் புனிதத்துக்கு நேர்ந்துவிட்ட கேடாகக் கருதி தள்ளிப்போ என ஆவேசமாக கூற, சட்டென அந்த தாழ்த்தப்பட்டவர், எதை தள்ளிபோக சொல்கிறீர்கள்? என்னையா? என் உடம்பையா? என கேட்க, சங்கரருக்கு இந்த கேள்வி தூக்கிவாரிப்போட்டுள்ளது. அதுவரை அவர் சேகரித்த ஞானத்தால் அவருக்கு இந்த கேள்விக்கான பதில் கிடைக்காத நிலையில் அங்கிருந்து புறப்பட்ட சங்கரர் அதன்பிறகு எந்த போதனைகளையும் நிகழ்த்தாமல் கேதார் நோக்கி நடந்துவந்து பின் கோவிலைத் தொழுது பின்பக்கமாகச் சென்று அப்படியே காணாமல் மறைந்தார். அப்படி அவர் மறைந்த இடத்தின் நினைவாகத்தான் ஒரு குச்சியுடன் பிடித்திருக்கும் கை ஒன்றின் சிலை நிறுவப்பட்டுள்ளது என கூறி முடித்தார்.

ஒரு நிமிடம் நான் ஏறி வந்த குதிரையின் கண்களை பார்த்தேன், அதன் சேனை மறைத்த கண்களிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது. அந்த துக்கம் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. நான் மௌனமாக கீழே இறங்கி நடக்கத் துவங்கினேன்.

மறுநாள் காலை அனைவரும் அவசரமாக கோயிலுக்கு போய் மீண்டும் தொழுதுவிட்டு அவசர அவசரமாக கீழே இறங்கத் துவங்கினர். நானும் வந்து என் குதிரையை தேடிக் கண்டுபிடித்தேன். மழை பெய்யத் துவங்கியது என்றாலும் அது வரும்போதிருந்த பேய் மழையாக இல்லை. குதிரை உற்சாகத்துடன் புறப்பட துவங்கியது. நாங்கள் வந்துகொண்டிருக்கும்போது பாதி வழியில் எதிர்பாராத ஒரு சங்கடம், என் குதிரை அப்படியே நின்றுவிட்டது.

குதிரைக்காரன் அந்த குதிரையை மாட்டடி அடித்தும் உறுமியதே தவிரவும் அந்த மழையில் ஒரு இஞ்ச் நகரவில்லை. காரணம் கீழே விழுந்து தவித்த குதிரை, சாகும் தருவாயிலிருந்த அந்த குதிரை வாயில் நுரைதள்ள துடித்துக்கொண்டிருந்தது. அதை கொண்டு வந்த குதிரைக்காரன் ஒருபக்கம் இடிவிழுந்தார் போல அதையே பார்க்க சுற்றி அனைவரும் வேடிக்கை பார்க்கத் துவங்கினர். ஆனால் நான் வந்த குதிரை, இக்காட்சியைப் பார்த்ததும் எப்படி வேதனைப்பட்டதோ தெரியவில்லை. குதிரைக்காரன் அவ்வளவு அடி அடித்தும் அது நகராமல் அப்படியே நின்ற இடத்தில் நின்றது. சட்டென குதிரைக்காரனிடம் என்னை இறக்கிவிடும்படி சொல்ல அவனும் என்னை கைகளால் தாங்கி இறங்க ஒத்துழைத்தான். ஒரு நிமிடம் நான் ஏறி வந்த குதிரையின் கண்களை பார்த்தேன், அதன் சேனை மறைத்த கண்களிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது. அந்த துக்கம் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. நான் மௌனமாக கீழே இறங்கி நடக்கத் துவங்கினேன். கொஞ்சம் தொலைவில் குதிரைக்காரன் குதிரையுடன் என்னை பின் தொடர்ந்தான். குதிரையும் என் முன் மௌனமாக வந்து நின்றது. நான் அவனுக்கு கொடுக்க வேண்டிய மீதி தொகையை கொடுத்துவிட்டு நடக்கத் துவங்கினேன்.

அன்று மாலையே நாங்கள் குப்தகாசிக்கு சென்று பழைய விடுதியில் தங்கினோம். பின் அங்கிருந்து மறுநாள் காலை புறப்பட்டோம். எங்கள் அடுத்த இலக்கு பத்ரிநாத்.

பத்ரிநாத் நோக்கிய பேருந்து பயணத்தில் தான் கண்ட அழகியல் தன்மைகளை அழகுண்ர்ச்சி ததும்ப விவரிக்கும் எழுத்தாளர், கூடவே உணவு தயாரிக்கும் ஈஷா தன்னார்வ குழுவினரின் அசாத்திய ஈடுபாட்டினைப் பற்றியும் பேசுகிறார். மேலும் பல சுவாரஸ்ய அம்சங்களைத் தாங்கியபடி காத்திருக்கிறது அடுத்த பதிவு!

குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555

வலைதளம்: www.sacredwalks.org