Question: ஈஷா யோகா வகுப்பின் போது எங்களுக்கு இயற்கை உணவுகளின் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. நான் இயற்கை உணவுமுறைக்கு மாறிவிடுவதற்கு ஆவலாய் இருக்கிறேன். எது சரியான காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்....

சத்குரு:

சரியான உணவு என்று நீங்கள் சுவையைப் பற்றிச் சொன்னால், நீங்கள் போக வேண்டிய இடம் வேறு...(அனைவரும் சிரிக்கிறார்கள்)

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: சத்தான...

சத்குரு:

காலை உணவை சீக்கிரம் தயாரியுங்கள்

ஓ! இயற்கை உணவா? அப்படியென்றால் சரி. சரியான காலை உணவு என்பது உடலுக்கு மட்டுமல்லாமல், உங்கள் வீட்டுச் சூழ்நிலை, சமுதாயம் ஆகியவற்றுக்கும் ஒத்து வருவதாக இருக்கவேண்டும். அவர்களை

உணவை தயாரிப்பதையும், சாப்பிடுவதையும் வேடிக்கையாகவும் சந்தோஷமாகவும் செய்யுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக ஆக்காதீர்கள்.

உங்களால் நூறு சதவிகிதம் ஒதுக்கி வைத்துவிட முடியாது. ஏனென்றால் நீங்கள் தனித்து வாழவில்லை, அவர்களுடன்தான் வாழ்கிறீர்கள். காலை உணவு விரைவாக முடிந்ததென்றால், வீட்டில் உள்ள அனைவருக்குமே நல்லதுதான். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு. காலை உணவை மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்குள் தயாரித்துவிட முடிந்தால், அது அற்புதமானதுதானே? அப்போது காலை வேளைகள் மிகவும் ஆனந்தமாக இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் காலை வேளைகளை மிகவும் டென்ஷனோடு துவக்குவதைப் பார்க்கிறேன். ஏனென்றால் காலை உணவைத் தயாரிப்பதற்கே இரண்டு மணி நேரம் ஆகிறது. கணவர் ஏழு மணிக்கு எழுந்திருக்கிறார். குழந்தை எட்டு மணிக்கு பள்ளிக்கூடம் போக வேண்டும், இந்த நேரக் கணக்கே ஒத்து வருவதில்லை, இல்லையா?

சத்தான நிலக்கடலை

ஒரு வழியாகக் கணவனும், குழந்தைகளும் வெளியே கிளம்பிப் போனவுடன், ‘அப்பாடா! பிசாசுகள் வெளியே கிளம்பிவிட்டன!’ என்று மனைவிகள் பெருமூச்சு விடுகிறார்கள். ஆமாம், அப்படித்தான் ஆகிவிட்டது. நீங்கள் ஒரு வேலை செய்யலாம். முந்திய தினம் இரவே தேவையான அளவிற்கு நிலக்கடலை ஊற வையுங்கள். அடுத்தநாள் அதை எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். ஆஸ்துமா இல்லாதவர்கள் அதனுடன் ஒரு வாழைப் பழத்தையும் போட்டுக் கொள்ளலாம். ஆஸ்துமா இருப்பவர்கள் சப்போட்டா அல்லது மாம்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம். விருப்பமிருந்தால் இதில் தேனையும் சேர்த்துக் கொள்ளலாம். தேன் மிகவும் நல்லது. அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இது அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பால் போல அருந்தலாம் அல்லது கெட்டியாக கஞ்சி போலவும் குடிக்கலாம். இனிப்பு வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதனுடன் உப்பும், மிளகும் சேர்த்து காரமாகவும் அருந்தலாம். ஆனால் இந்த அத்தனை விஷயங்களும் வெறும் மூன்றே நிமிடங்களில் முடிந்துவிடும். இதைக் குடிப்பதற்கு கூடுதலாக இரண்டு நிமிடங்கள் ஆகலாம். ஐந்து நிமிடங்களில் காலை உணவே முடிந்துவிடும். மீதமிருக்கும் நேரத்தில் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசலாம் அல்லது உங்களுக்கு விருப்பப்பட்டதைச் செய்யலாம். இதனால் உங்கள் வாழ்க்கையும் மிக எளிமையாக இருக்கும். இந்த உணவு தாராளமாக நான்கைந்து மணி நேரம் தாக்குப்பிடிக்கும். மேலும் இதனால் உங்கள் வயிறும் மிக லேசாக இருப்பதால், அலுவலகத்தில் தூங்காமல், உற்சாகத்துடனும் அமைதியுடனும் வேலை செய்வீர்கள்.

ஹோட்டல்களிலும் இயற்கை உணவு

அல்லது இது உங்களுக்குப் போதுமானதாக இல்லையென்றால், நீங்கள் விரும்பினால் அதனுடன் கொஞ்சம் பழங்களோ அல்லது சாலட்டோ சாப்பிடலாம். முளை கட்டிய தானியங்கள், பயறு வகைகள், கேரட் போன்றவற்றை நீங்கள் விரும்பிய வகையில் கலந்து சாப்பிடலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. எந்த விகிதத்தில் வேண்டுமானாலும் மாற்றி மாற்றிக் கலந்து சாப்பிடலாம். உங்கள் கற்பனைத் திறனைக் கூட்டி, குறைத்து, பல வழிகளில் அதைத் தயாரிக்கலாம். இப்போதெல்லாம் ஹோட்டல்களிலும், மற்றவர்களும் பலவிதமான வழிகளில் இயற்கை உணவைச் சமைக்கிறார்கள், பார்த்திருக்கிறீர்களா? பல ஹோட்டல்களில் முழுமையான இயற்கை மதிய உணவு வழங்கப்படுகிறது, தெரியுமா? உங்களுக்கு வேண்டுமானால் அங்கு சென்று எப்படி செய்கிறார்கள் என்று பார்த்து வாருங்கள். காய்கள், பழங்களை பலவிதமான வடிவங்களில்தயார்படுத்தி வழங்குகிறார்கள். ஏனென்றால் இப்படி பலவிதமான வடிவங்களில் இருந்தால் குழந்தைகள் அதை மிகவும் விரும்புவார்கள். மிக்கி மௌஸ் போல காய்கறிகளை வெட்டி வைத்தால், குழந்தை கண்டிப்பாக சாப்பிடும், இல்லையா?

இப்படி பல வழிகளில் உங்களால் இயற்கை உணவை தயார் செய்து கொடுக்க முடியும். இப்படி உணவை தயாரிப்பதையும், சாப்பிடுவதையும் வேடிக்கையாகவும் சந்தோஷமாகவும் செய்யுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக ஆக்காதீர்கள். நிலக்கடலை என்பது மிகவும் திடமான ஒரு உணவு. மற்ற பழங்களையும், காய்கறிகளையும், இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். வயிறு மிகவும் லேசாக இருந்தால், நீங்களும் விழிப்புடன், சந்தோஷமாக, அமைதியாக இருந்து உங்கள் வேலைகளைப் பார்ப்பீர்கள். பிறகு ஒரு மணியளவில் நீங்கள் மதிய உணவைச் சாப்பிடலாம். சமைத்த உணவை ஒருவேளையாவது சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால், அதை மதிய நேரத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம். பச்சைக் காய்கறிகளுடன் சாம்பார், ரசம் என்று வேண்டியதை சாப்பிட்டுக் கொள்ளலாம். பொறியல் என்ற பெயரில் காய்கறிகளையெல்லாம் கொன்றுவிடுகிறீர்கள். அதற்கு பதிலாக பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

சமைத்த உணவுடன் என்ன சேர்த்து சாப்பிடுவது?

சமைத்த உணவுடன், நிறைய பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிடுங்கள். கேரட் ஜூஸ் போன்றவையெல்லாம் உங்களுக்கு மிகவும் நன்மை தரக் கூடியவை. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு அவை மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தை மிகவும் புத்திசாலியாக, மிகவும் விழிப்புள்ளவனாக இருப்பான். நீங்கள் அவனுக்குத் தயிர் சாதத்தைப் போட்டுவிட்டு, ‘ஏன் 90 மார்க் வாங்கவில்லை?’ என்று அடித்தால், என்ன செய்வது, சொல்லுங்கள்? அவனால் எப்படி முடியும்? தயிர் சாதம் சாப்பிட்டும் அவன் 90 மார்க் வாங்குகிறான் என்றால் அவன் மிகவும் புத்திசாலிதான்! உங்கள் குழந்தைகளுக்கு சரியான உணவுகளைக் கொடுத்துப் பாருங்கள், பல பிரச்சனைகள் சரியாகிவிடும். சரியான உணவுமுறையைக் கொண்டு வந்தாலே வீட்டிலிருக்கும் பல பிரச்சனைகள் தாமாகவே சரியாகிவிடும்.

வீட்டிற்குள் வேண்டாம் உணவுப் புரட்சி!

அதேநேரம், வீட்டுக்குள் ஒரு உணவுப் புரட்சியை ஏற்படுத்திவிட முயற்சிக்காதீர்கள். அது நீடித்து நிலைக்காது. படிப்படியாக, மெதுமெதுவாக அதைப் பழக்குங்கள். வீட்டிலிருப்பவர்கள் விரும்ப ஆரம்பித்தவுடன், இயற்கை உணவை உள்ளே நுழையுங்கள். அனைவரும் அதைத்தான் சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அவர்கள் அதை வெறுப்பார்கள். அந்த சூழ்நிலையை சரியாகக் கையாள வேண்டும். எப்போதுமே இரவில் பழங்களும், காய்கறிகளும் சாப்பிட்டுவிட்டு படுப்பது நல்லது. ஆனால் அது உங்களுக்குப் போதாது என்று நினைத்தால், நீங்கள் உடலளவில் அதிகப்பணி செய்யும் மனிதராக இருந்தால், அதனுடன் முளை கட்டிய தானியங்கள், பச்சைக் காய்கறிகளுடன் கொஞ்சம் தேன், இரண்டு, மூன்று எண்ணையில்லாத சப்பாத்தி இவற்றைச் சாப்பிடலாம். சாப்பாத்தியின் மேல் கொஞ்சம் எண்ணையோ அல்லது நெய்யோ ஊற்றிக் கொள்ளலாம். சப்பாத்திகளை கடையில் வாங்காமல் தயாரித்து சாப்பிடுங்கள். ஒரு நாளில் ஒரு வேளை அரிசி சாதம் சாப்பிட்டால் இன்னொரு வேளை நார்சத்து மிகுந்த வேறெதாவது தானியங்களைச் சாப்பிடுங்கள், இதுதான் சாப்பிடுவதற்கு சிறந்த வழி.

மேலும் கோதுமையை எப்போதும் மாவாக வாங்காதீர்கள். முழு கோதுமையாக வாங்கி மாவு மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சப்பாத்தி, கொஞ்சம் அரிசி, நிறைய காய்கறிகள், பழங்கள், ஊற வைத்த கடலை, முளை கட்டிய தானியம் என்று சாப்பிடுங்கள். முளை கட்டிய தானியங்களை தினம்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும். இதுதான் சரியான உணவுமுறை என்று பெரும்பாலும் நம்மால் சொல்ல முடியும்.