நேர்காணல்

வாழ்வின் விளிம்பில்: மரணத்துடன் நிகழ்ந்த இரண்டு உரசல்கள் பற்றி சத்குரு வெளிப்படையாகப் பேசுகிறார்

கடந்த வருடம், உயிருக்கு அச்சுறுத்தலான இரண்டு மருத்துவ அவசரகால நிலைமைகளை சத்குரு எதிர்கொண்டார். இரண்டு முறை அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அது அவரை மரணத்துக்கு மிக நெருக்கமாக அழைத்துச் சென்றது.

பிரபல PODCASTER, எழுத்தாளர் லெவிஸ் ஹோவஸ் உடனான ஓர் மனந்திறந்த உரையாடலில், அறுவை சிகிச்சை வரை அழைத்துச்சென்ற சவாலான சூழல்கள் குறித்தும், அவரை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் அஞ்சியபோது என்ன நிகழ்ந்தது என்பதையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறார்.

லூயிஸ் ஹோவ்ஸ்: கடந்த வருடம் இரண்டு முறை நீங்கள் மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்டீர்களா?

சத்குரு: ஆமாம், நான் என் தலையை கொஞ்சம் முட்டிக்கொண்டேன். அது எல்லாமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை நீங்கள் பார்க்க முடியும்; 2024 ஜனவரி இறுதியில் எனது தலையில் தாங்க முடியாத அளவு வலி ஏற்படத் துவங்கியது. ஆனால் எனக்கு தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் இருந்தன, ஆகவே நான் இடைவெளியில்லாமல் செயல்பட்டுக்கொண்டிருந்தேன். என்ன நிகழ்கிறது என்பது எனக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வதை தவிர்த்தேன். ஏனென்றால் நான் வலி நிவாரணிகள் எடுத்தால், என்ன நிகழ்கிறது என்பது எனக்குத் தெரியாமல் போய்விடும் – நான் பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டாலும் அறிந்துகொள்ளாமல் போய்விடுவேன்

எனக்கு ஒரு பக்கம் ஏறக்குறைய செயலிழக்கும் அளவுக்கு வலி மிகவும் தீவிரமடைந்தது. ஆனால் நான் எல்லா செயல்களையும் தொடர்ந்துகொண்டு, நாடு முழுவதும் பல பயணங்களையும் மேற்கொண்டிருந்தேன். மார்ச் 8 – மஹாசிவராத்திரி அன்றுகூட – அது ஒரு முழு இரவுக் கொண்டாட்டம் – நான் கடுமையான வலியில் இருந்தேன். நீங்கள் அன்றைய வீடியோக்களைப் பாருங்கள் – நான் அங்கே இரவு முழுவதும் நடனமாடிக்கொண்டும், தியானம் செய்துகொண்டும், பேசிக்கொண்டும், எல்லாமே செய்துகொண்டிருந்தேன். நான் வலியில் இருந்ததை அறிந்திருந்த, என்னைச் சுற்றியிருந்த ஓரிருவர் தவிர, வேறு யாரும் எதுவும் தவறாக இருப்பதாக உணரவில்லை, நான் கண்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவ்வப்போது சற்று ஈர ஒத்தடம் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் கண்களில் மின்சாரம் பாய்வது போல் இருந்தது.

நான் சென்னைக்கும், மும்பைக்கும் பயணிக்கவேண்டியிருந்தது. அதன் பிறகு மார்ச் 14 அன்று ஒரு நிகழ்ச்சிக்காக நான் டெல்லி வந்தடைந்தேன். மருத்துவர் என்னைப் பார்த்துவிட்டு, “சத்குரு, இந்த நிகழ்ச்சியை நீங்கள் செய்யமுடியாது. நீங்கள் உடனடியாக மருத்துவமனை வரவேண்டும்,” என்றார்.

நான் சொன்னேன், “அது ஒரு தனியார் நிகழ்ச்சி, நான் சம்மதம் தெரிவித்துள்ளேன். நான் அதை செய்தாக வேண்டும்.”

என்ன நிகழ்கிறது என்பது எனக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வதை தவிர்த்தேன்.

அடுத்த நாள், எனக்கு இந்தியா டுடே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று இருந்தது. அது ஒரு 45- நிமிட உரையாடல் நிகழ்ச்சி. ஆனால் மருத்துவர், “நீங்கள் இதைச் செய்யமுடியாது, நான் இதைக் கடுமையாக மறுக்கிறேன்,” என்று உறுதியாக கூறிவிட்டார். எனவே நான் இந்தியா டுடே குழுவினரிடம் எனக்குக் குடும்பத்தில் ஒரு அவசர நிலை ஏற்பட்டுள்ளது என்று கூற முயற்சித்தேன்.

ஆனால் அவர்களோ, “ சத்குரு, டிக்கெட்டுகள் விற்றுவிட்டன; ஒவ்வொருவரும் உங்களுக்காகத்தான் வந்துள்ளனர். நீங்கள் எப்படி இதைச் செய்யமுடியும்?” என்றனர். இதுவரை, என் வாழ்வில் நான் ஒரு நிகழ்ச்சியைக்கூட ரத்து செய்ததில்லை. எனக்கு என்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல், செய்து வந்துள்ளேன். ஆகவே நான் மருத்துவரிடம், “பாருங்கள், அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்” என்றேன்.

லூயிஸ் ஹோவ்ஸ்: அவர்கள் உங்களை நம்பி இருக்கிறார்கள்.

சத்குரு: ஆமாம், நான் பின்வாங்க முடியாது. அதனால் அந்த நிகழ்ச்சியில் பேசினேன், 45 நிமிடங்கள் கடந்துவிட்டன, ஆனாலும் பத்திரிக்கையாளர்கள் இன்னும் கேள்விகள் கேட்க விரும்பினர். அதற்குள் என் வலது கால் தானாகவே ஊசலாடத் துவங்கியது. முந்தைய நாளே, மருத்துவர்கள் ஒரு MRI ஸ்கேன் செய்து, எனது மூளையின் மையம் 8.4 மில்லிமீட்டர் நகர்ந்துவிட்டதைக் கண்டிருந்தனர். அதனால் மருத்துவர் “சத்குரு, பன்னிரண்டு மில்லிமீட்டர் நகர்வது உயிருக்கு ஆபத்தானது”, என்றார்.

“அந்த அளவுக்குச் செல்லமாட்டேன். இதை மட்டும் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்,” என்றேன் நான்.

என்னுடைய கால் நடுங்கத் தொடங்கியதும், நான் எல்லை தாண்டிவிட்டதை அறிந்துகொண்டேன். எந்த நேரத்திலும் எனக்கு முடக்கு வாதமோ, பக்கவாதமோ எதுவேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற நிலை. இப்போது நான் மேடையை விட்டு இறங்கி மருத்துவரிடம் சென்று, “நான் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டேன், நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள்”, என்று கூறினேன்.

அவர் என்னை நேரடியாக அறுவை சிகிச்சை மேஜைக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் ஸ்கேன் செய்தபோது, என் மூளையின் மீடியன் 11.5 மில்லிமீட்டர் விலகியிருந்தது - மரண எல்லையிலிருந்து 0.5 மில்லிமீட்டர் தூரத்தில் இருந்தேன். உடனடியாக என்னை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்றனர், பெரிய துவாரமிட்டு, மயக்க மருந்து கொடுத்தனர்."

டெல்லியில் இருக்கும் இந்த இளம் நர்ஸ்கள் - அவர்கள் எல்லோரும் என்னை அறிவார்கள்; என்னைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு என்னை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததில்லை. இங்கே அவர்கள் என்னை மேஜையில் படுக்க வைத்தபோது, எட்டு பேர் பெரிய புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே தேவையிருந்திருக்கும், ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கிருக்க விரும்பினார்கள்.

நான் அவர்களிடம், 'நான் மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும்போது, இப்படிப் புன்னகைக்காதீர்கள். நான் சொர்க்கத்திற்கு வந்துவிட்டதாக நினைத்துவிடுவேன்' என்றேன். அவர்கள் அனைவரும் நிறுத்த முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தனர், பிறகு நான் மயக்கமடைந்துவிட்டேன்.

நான் எப்போதும் இப்படித்தான் வாழ்கிறேன் – அது இப்போது வந்தாலும், நான் தயாராக உள்ளேன். நான் திரும்பிப் பார்க்கமாட்டேன்.

அறுவை சிகிச்சை நன்றாக நடந்தது. நான் குணமடைந்தேன், ஆனால் மிகவும் நிலையற்றுப் போயிருந்தேன் - நேராக நடக்க முடியவில்லை; என் சமநிலை இழந்துவிட்டேன். ஆனால் நான் அனைவரின் மனதிலும் நம்பிக்கையை தக்க வைத்தேன். பிரதமர் கூட எப்படி இருக்கிறேன் என்று விசாரிக்க அழைத்தார். நாடு முழுவதும் இது பெரிய செய்தியாக இருந்தது. மருத்துவர், 'ஆறு மாதங்கள் கார் ஓட்டக்கூடாது, இரண்டு ஆண்டுகள் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது' என்று சொன்னார்.

மூன்று வாரங்கள் கழித்து, நான் கோயம்புத்தூர் வந்தடைந்தேன். யோக மையத்துக்கு காரை ஓட்டிச்சென்றேன்.

லூயிஸ் ஹோவ்ஸ்: நீங்கள் கார் ஓட்டினீர்களா?

சத்குரு: ஆமாம், அவர்கள் சொல்வது எதற்கென்றால், நீங்கள் வண்டி ஓட்டும்போது குலுங்கினால், ஏதாவது நிகழ்ந்துவிடக்கூடும் என்பதற்காக. நான் கூறினேன், “நான் வண்டி ஓட்டினால், அது எப்போது குலுங்கும் என்பதாவது எனக்குத் தெரிந்துவிடும். வேறொருவர் வண்டி ஓட்டினால், அவர்கள் காரை எப்போது குலுக்குவார்கள் என்றே எனக்குத் தெரியாது.”

அவர்கள் சொன்னார்கள், 'அதிரக்கூடாது, அசையக்கூடாது, விழுந்துவிடக்கூடாது.' நான் சொன்னேன், 'நான் அதைக் கவனித்துக் கொள்கிறேன்.' காயம் இன்னும் ஆறாத நிலையில் இருந்தபோதும், நான் திரும்பிச் சென்றேன். மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், உணர்ச்சிவசப்பட்டனர், ஏனெனில் நான் முடிவுக்கு வந்துவிட்டேன் என்று அவர்கள் அனைவரும் மிகவும் பயந்திருந்தனர்.

அதற்கு 21 நாட்களுக்குப் பிறகு, பாலி மற்றும் கம்போடியாவில் ஒரு நிகழ்ச்சியை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அதில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து, குறிப்பாக தற்போதைய புவிசார் அரசியல் காரணங்களால் இந்தியாவிற்கு வரமுடியாத சீனர்கள் மற்றும் ரஷ்யர்கள் பதிவு செய்திருந்தனர். அது ஒரு தனித்துவமான குழு. ஆனால் மருத்துவரோ, 'நீங்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை' என்று கூறிவிட்டார்.

நான் டாக்டரிடம், 'அதை நான் கவனமாக பார்த்துக்கொள்கிறேன்' என்று சொன்னேன். என் மகள் என்னுடன் பயணம் செய்வதாகச் சொன்னாள், மேலும் என்னைக் கவனித்துக்கொள்ள ஒரு முழுக் குழுவும் இருந்தது. எனவே நான் நிகழ்ச்சியை நடத்த பாலிக்குச் சென்றேன்; அங்கு நிறைய உடல் ரீதியான செயல்பாடுகள் இருந்தன. கற்பிப்பதை மட்டும் நான் கவனித்துக்கொள்வேன்; மற்ற விஷயங்களை மற்றவர்கள் கவனித்துக் கொள்வார்கள். எல்லாம் மிக நன்றாக நடந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, நாங்கள் கம்போடியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனக்கு உடற்பயிற்சி தேவைப்பட்டதால், என் காயத்தின் மீது பிளாஸ்டிக் ரேப் போட்டுக் கொண்டு கொஞ்சம் நீந்திக் கொண்டிருந்தேன்.

நானும் என் மகளும் நீந்திக் கொண்டிருந்தோம். அதன் பிறகு, நான் வெளியே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்; அவள் தரையில் அமர்ந்திருந்தாள். அருகில் திறந்திருந்த அறைக்குள் ஒரு பெரிய குரங்கு வந்தது. அங்கே பழங்கள் குவியலாக வைக்கப்பட்டிருந்தன. எனவே குரங்கு உள்ளே நுழைந்துவிட்டது, என் மகள் உள்ளுணர்வால் உந்தப்பட்டு குரங்கை நோக்கி கத்தினாள். குரங்கு திரும்பி, வாயைத் திறந்தபடி அவளை நோக்கி வந்தது.

குரங்கு கடித்த காயங்களை நான் பார்த்திருக்கிறேன் - அதில் ஒரு நபரின் முகத்தில் பாதி பகுதியே இல்லாமல் போயிருந்தது. அது அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே நான் எழுந்து என் கைத்தடியை எடுக்க ஓடினேன். யாரோ கதவை மூடி விட்டிருந்தார்கள். நான் வேகமாக சென்று கண்ணாடிக் கதவில் மோதிவிட்டேன்.

கண்ணாடியில் மோதியதால் ஏற்பட்ட பெரிய சத்தத்தில் குரங்கு ஓடிவிட்டது. நோக்கம் நிறைவேறியது, ஆனால் என் தலை உடைந்துவிட்டது.

உடனடியாக டெல்லிக்கு பறந்து சென்று மற்றொரு அவசர அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன், ஏனெனில் தலையில் அடிபட்டால் முடிந்தது என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள். பிறகு, அன்று இரவு வரை காத்திருந்து, சமநிலை இல்லாத தன்மை அல்லது வலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் தெரிகிறதா என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். ஒன்றும் நடக்கவில்லை. மறுநாள் காலை நான் நன்றாகவே எழுந்தேன். எனவே நான் சொன்னேன், “கம்போடியாவுக்குப் பறந்து செல்கிறேன். வெறும் மூன்று நாட்கள் மட்டுமே; இதை முடித்துவிடுகிறேன். ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால், திரும்பிச் சென்றுவிடுவேன்."

அடுத்த மூன்று நாட்கள் நிகழ்ச்சியை நடத்தி முடித்தேன். பிறகு கோயம்புத்தூருக்கு பறந்து வந்தேன். விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஸ்கேன் செய்ய சென்றேன். மீண்டும் ஒருமுறை, மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது.

நான் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அந்த அறுவை சிகிச்சையும் நன்றாகவே நடந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்றாவது நாளில், சைட்டோகைன் புயல் (cytokine storm) ஏற்பட்டது; உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஒரு புயலைச் சந்தித்தது. இது செப்சிஸ் (sepsis) அல்லது வேறு ஏதாவது தீவிர தொற்று இருந்தால் மட்டுமே நடக்கும். எனக்கு எந்த விதமான தொற்றும் இல்லை. என்ன நடந்தது என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எனக்குள்ளேயே மெல்லக் கசிந்து போய்க் கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.

நான் கண்களை மூடியபோது, உடலின் ஒவ்வொரு செல்லிலிருந்தும் நான் கசிந்துபோவதை உணர முடிந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் எதையோ இழக்க அனுமதிப்பதைப் போன்ற அந்த உணர்வு அழகாக இருந்தது.

நான் கண்களைத் திறந்தபோது, மருத்துவமனையின் தலைவர் உட்பட 14 மருத்துவர்கள் அங்கே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன், அவர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்திருந்தது. உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதால் என்னை இழந்துவிட்டதாக அவர்கள் நினைத்திருந்தார்கள்.

அவர்களின் முகங்களைப் பார்த்தபோது, நான் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையை அவர்கள் இழக்கத் துவங்குவதை நான் உணர்ந்தேன். நான் கண்களை மூடியபோது, உடலின் ஒவ்வொரு செல்லிலிருந்தும் நான் கசிந்துபோவதை உணர முடிந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் எதையோ இழக்க அனுமதிப்பதைப் போன்ற அந்த உணர்வு அழகாக இருந்தது.

எனவே நான் கண்களை மூடிக்கொண்டு இன்னும் அதிக விழிப்புணர்வுடன் இருந்தேன். சுமார் ஒன்றரை மணி நேரத்தில், மீண்டு விட்டேன்.

நான் அந்த நிலையிலிருந்து வெளியே வந்தபோது, ஆறு மணி நேரம் கடந்திருந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம், அவர்கள் என்னை முழுமையாக இழந்துவிட்டதாகவே எண்ணியிருந்தார்கள். குணமடைய எனக்கு கொஞ்சம் நேரம் எடுத்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களுக்குள், நான் பைக் ஓட்டத் துவங்கிவிட்டேன்.

லூயிஸ் ஹோவ்ஸ்: அந்த சமயத்தில் உங்களுக்கு ஏதாவது பயம் இருந்ததா?

சத்குரு: இல்லை, நான் எப்போதும் இப்படித்தான் வாழ்கிறேன் – அது இப்போது வந்தாலும், நான் தயாராக உள்ளேன். நான் திரும்பிப் பார்க்கமாட்டேன்.

லூயிஸ் ஹோவ்ஸ்: ஆனால் நிறையப்பேர் இப்போது இறக்க வேண்டுமென்றால் பயப்படுவார்கள், ஒருவேளை அவர்கள் வாழ்க்கையில் தாங்கள் விரும்பியதை இன்னும் நிறைவேற்றவில்லை என்பதனாலோ?

80 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் அவர்களது மரணம் நிகழும் இறுதிக் கணங்களில் நீங்கள் அவர்களை உற்றுக்கவனித்தால், அவர்கள் வலியிலோ, பயத்திலோ இருப்பதில்லை – அவர்கள் வெறுமனே திகைத்து நிற்கின்றனர். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய மனத்தின் நாடகங்களை உயிர்செயல் என்று தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்.

சத்குரு: அவர்கள் நூறு வயதை எட்டினாலும் பயப்படுவார்கள். அப்போதும் இதே நிலையில்தான் இருப்பார்கள்.

லூயிஸ் ஹோவ்ஸ்: ஆனால், தாங்கள் வாழ விரும்பிய அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியவில்லையே என்ற வருத்தம் கூட இருக்கலாம், இல்லையா?

சத்குரு: வாழ்க்கை அர்த்தமுள்ளதாவது வாழும் கால அளவினால் அல்ல. அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்வது விருப்பத்தினாலும் விழிப்புணர்வினாலுமே நிகழ்கிறது. 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் அவர்களது மரணம் நிகழும் இறுதிக் கணங்களில் நீங்கள் அவர்களை உற்றுக்கவனித்தால், அவர்கள் வலியிலோ, பயத்திலோ இருப்பதில்லை – அவர்கள் வெறுமனே திகைத்து நிற்கின்றனர். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய மனத்தின் நாடகங்களை உயிர்செயல் என்று தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்.

உங்கள் எண்ணமும், உணர்ச்சியும் - உங்களுடைய மனதில் நிகழும் நாடகங்கள் தான். ஆனால் அதுதான் உயிர்செயல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது நீங்கள் உருவாக்குவது. அது உண்மையில் உயிர்செயல் அல்ல. உயிர்த்தன்மை உங்களால் உருவாக்கப்படுவதல்ல, அது நிகழ்ந்துகொண்டிருப்பது. நீங்கள் இந்த உயிரை உருவாக்கவில்லை, சூழ்நிலைகளை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

லூயிஸ் ஹோவ்ஸ்: இல்லை.

சத்குரு: இந்த உடல் நீங்களா?

லூயிஸ் ஹோவ்ஸ்: என்னுடைய ஒரு பாகம்.

சத்குரு: இதை நீங்கள் காலப்போக்கில் சேகரித்துள்ளீர்கள். இது நீங்கள் சாப்பிட்ட உணவுதான் - இது வெறும் மண் தான். இதை நீங்கள் இப்போதே புரிந்துகொள்ளப் போகிறீர்களா, இல்லை ஒரு நாள் புழுக்களிடம் இருந்துதான் புரிந்துகொள்வீர்களா? நீங்கள் வெறும் மண்தான் என்பதை, அவர்கள் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அதை நீங்கள் இப்போதே உணர்ந்திருந்தால், வேறுவிதமாக வாழ்வீர்கள்.