
பெரும்பாலான மக்களுக்கு யோகா என்றவுடனே, கடினமான ஆசனங்கள் தான் அவர்களின் கற்பனையில் வருகின்றன. ஆனால் இது வெறும் நுனிப்புல் மேயும் செயல்தான் என்பதை அறிவீர்களா? யோகாவின் ஆழமான பரிமாணங்கள் பெருமளவில் ஏன் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளன, உடல்ரீதியான பயிற்சிகளோடு மட்டும் நின்றுவிடும்போது நாம் எதைத் தவறவிடுகிறோம் என்பதை எல்லாம் நம்மை உணரச் செய்கிறார் சத்குரு.
நாம் உடற்பயிற்சி என்று சொல்லும்போது, எடை தூக்குவது போன்ற செயல்களைத்தான் நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், வயது ஆக ஆக அவற்றை குறைந்தளவில் செய்வதே சிறந்தது. இளம் வயதில் கூட, அதிக அளவில் அத்தகைய பயிற்சிகளை செய்வது நல்லதல்ல. அதிக எடைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் இயற்கையான உடல் எடையைக் கொண்டே பெரும்பாலான உடற்பயிற்சிகளை செய்வதே சிறந்தது. ஏனெனில், அதிக எடைகளால் தசைகள் வீங்கி, அந்த வீக்கமடைந்த தசைகளுக்கு தேவையான நெகிழ்வுத்தன்மை இருக்காது.
உடல் உண்மையிலேயே திறம்பட செயல்பட வேண்டுமெனில், தசைகள் வலிமையாகவும் நெகிழ்வாகவும் இருக்க வேண்டும். தசைகள் தனது நெகிழ்வுத்தன்மையை இழந்துவிட்டால், படிப்படியாக உடல் பல வழிகளில் பாதிப்புக்கு உள்ளாகும். பாடி பில்டிங் செய்யும் வீரர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அவர்கள் படும் துன்பங்கள் மிகப் பெரியவை, ஏனெனில் அந்த முறையில் உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல.
உங்கள் வயதுக்கு, நீங்கள் உடற்பயிற்சி செய்வதானால், அதிகம் நடப்பதே சிறந்தது. எளிமையான பயிற்சிகள் உள்ளன - சூரிய நமஸ்காரம் என்று ஒன்று உள்ளது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு முழுமையான உடற்பயிற்சி முறை. நீங்கள் 25 அல்லது 50 சூரிய நமஸ்காரங்களைச் செய்தால், அது எல்லா வகையிலும் ஒரு முழுமையான பயிற்சியாக அமையும். அல்லது நடைப்பயிற்சியுடன் கொஞ்சம் ஸ்ட்ரெட்ச்சிங்கும் செய்யலாம். உடல் அனைத்து வகையான அசைவுகளையும் பயன்படுத்தும் விதமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
யோகாசனங்களின் முக்கிய அம்சமே இதுதான். எந்த அசைவும் விட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கிறது - அனைத்து அசைவுகளும் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் இந்த உடல் பயன்பாட்டில் இருக்கும்போது தான் சிறப்பாக செயல்படுகிறது. நீங்கள் எதைப் பயன்படுத்தவில்லையோ அது இல்லாமல் போய்விடுகிறது - அது உடலோ, மூளையோ, இரண்டுமே அப்படித்தான். எப்போது பார்த்தாலும் நாற்காலியிலேயே அமர்ந்து அமர்ந்து, வெறுமனே தரையில் உட்காருவது அவ்வளவு பெரிய பிரச்சனை ஆகிவிட்டது.
தினசரி அடிப்படையில் உடலின் அனைத்து அசைவுகளையும் ஓரளவுக்காவது உள்ளடக்கிய உடற்பயிற்சிகளை செய்வதுதான் சிறந்தது. அப்படி செய்தால், இறக்கும் வரை உங்களை நீங்களே பார்த்துக்கொள்வீர்கள், மற்றவர்களின் கைகளைச் சார்ந்திருக்க மாட்டீர்கள். இது உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் முக்கியமானது. "எந்தளவு பயிற்சி செய்ய வேண்டும்" என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
எப்போதும் உடற்பயிற்சி செய்ய முயற்சிப்பதை விட, நீங்கள் ரசிக்கக்கூடிய செயல்களை உருவாக்கிக்கொள்வதே சிறந்தது. வெறும் உடற்பயிற்சி செய்வதற்குப் பதிலாக, நடக்கலாம், ஏதாவது விளையாடலாம், தோட்டவேலை செய்யலாம், யாருக்காவது சூட்கேஸ் தூக்கி உதவலாம், நாங்கள் உங்களுக்கு ஏதாவது செயல்பாட்டை பரிந்துரைக்க முடியும். எப்போதும் உடற்பயிற்சி செய்ய முயற்சிப்பதை விட, உங்களுக்குப் பிடித்த ஏதோவொரு செயலைச் செய்வது மிகவும் சிறந்தது.
20 வினாடி யோகா போதும் - செய்யும் பயிற்சியாகவே நீங்கள் இருக்கும்போது
நீங்கள் யோகா பயிற்சி செய்கிறீர்களா? என்று மக்கள் என்னைக் கேட்கும்போது, அவர்கள் உண்மையில் ஆசனங்களைத்தான் குறிப்பிடுகின்றனர், யோகாவை அல்ல. என்னுடைய யோகா, தினமும் இருபது வினாடிகள் மட்டும்தான். நான் யோகா பயிற்சி செய்வதில்லை – யோகாவாகவே இருக்கிறேன். உங்களுக்கு நான் யோகா கற்றுத்தருவதில்லை. யோக நிலையில் நான் என்னையே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். யோகா என்பது ஒரு குறிப்பிட்ட பயிற்சியல்ல - யோகா என்பது உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருப்பது.
உடலைக் கொண்டு நீங்கள் செய்யும் அனைத்தும் பல்வேறு தளங்களில், பல்வேறு வழிகளில் செய்யப்பட முடியும். நான் உடலளவில் ஒரு நாளுக்கு இருபது வினாடிகள் யோகா செய்கிறேன். உடலளவில் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், உயிரோட்டத்துடனும், புத்துணர்ச்சியுடனும், நலமாகவும் இருப்பதற்கு உங்கள் உடலின் எல்லா அம்சங்களுக்குள்ளும் சக்திகள் நன்கு பாயும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் பல்வேறு பயிற்சிகளின் மூலம் நீங்கள் செய்ய முயற்சிக்கிறீர்கள். எனக்கு இதை செய்துகொள்ள ஒரு இருபது வினாடி பயிற்சி வைத்திருக்கிறேன்.
நமது தன்னார்வலர்கள் பலரும் தினசரி ஒன்று அல்லது இரண்டு மணி நேர யோகா செய்கின்றனர். அவர்கள் என்னிடம் “இது நியாயமல்ல. எங்களுக்கு இருபது வினாடி யோகாவைக் கற்றுக்கொடுங்கள்” என்று கேட்கின்றனர். ஒரு விரிவான செயல்முறையுடன் அதைச் செய்வதைவிட, ஒரு கணத்தில் எளிமையாகச் செய்வதற்கு, சக்திகளின் மீது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆளுமை இருக்கவேண்டும்.
ஆகவே, நான் யோகா செய்கிறேனா, இல்லையா என்பது ஒரு பிரச்சனையல்ல. நான் கற்றுக்கொடுக்கும் யோகாவை நான் செய்வதில்லை. ஏனென்றால் பொதுவாக, அடிப்படை வடிவிலான யோக வழிமுறைகளைத்தான் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. மிகச் சிலருடன் மட்டுமே நான் மற்ற பரிமாணங்களுக்குள் செல்கிறேன்; பெரும்பாலானவர்களுடன், அது அடிப்படை நிலையில் தான் இருக்கிறது. நான் என்ன செய்கிறேனோ, அதைக் கற்றுகொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பினை இதுவரை நான் பெறவில்லை.