சிறப்புக் கட்டுரை

கர்மாவின் வடிகாலா கனவுகள்?

இது உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம்: விசித்திரமான, தத்ரூபமான ஒரு கனவு கண்டு, அது எங்கிருந்து வந்தது, அது உங்களுக்கு எதையாவது சொல்ல வருகிறதா, அதற்கு ஏதேனும் ஆழமான அர்த்தம் இருக்கிறதா? என கண்விழித்த பிறகும் நீங்கள் விழிக்க நேர்ந்திருக்கலாம்.

இதை அப்படியே மாறுபட்ட ஒரு கோணத்தில் அணுகுகிறார் சத்குரு. நாம் தவறான கேள்வியை கேட்கிறோம். கனவுகளை ஆராய்ந்து அதற்கு அர்த்தம் தேடுவதற்கு பதிலாக, முதலில் நாம் ஏன் கனவு காண்கிறோம் என்பதிலிருந்து ஆராய வேண்டும். உறங்கும் மனம் பற்றிய வழக்கமான புரிதலுக்கு சவால் விடுகிறது சத்குருவின் ஆழமான பார்வை.

சத்குருவின் கூற்றுப்படி, கனவுகள் என்பவை தீர்க்கதரிசனமாக இல்லாமல் , கர்மா என்றழைக்கப்படும் நம்முடைய ஆசைகள்,ஞாபகக் குவியல்களின் இரவு நேர வடிகாலாகவே செயல்படுகின்றன.

சத்குரு: நாம் கனவு என்று குறிப்பிடுவதில் உங்கள் மனம் மற்றும் இங்கிருக்கும் உங்கள் உயிர்த்தன்மையின் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. "I have a dream" என்ற புகழ் பெற்ற ஆங்கில உரையை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் நாம் இப்போது பெரும்பாலும் பேசுவது நீங்கள் விரும்பி உருவாக்கிக் கொள்ளாத, எங்கிருந்தோ உங்களுக்கு வருவன போலத் தோன்றும் கனவுகளைப் பற்றித்தான் - இந்த கனவுகளை நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆசைகளின் வடிகாலாய் இருக்கும் கனவுகள்

பெரும்பாலும், 90 சதவீதத்திற்கும் அதிகமான கனவுகள் வெறும் வடிகாலாகவே இருக்கின்றன. வடிகால் என்று நாம் கூறும்போது இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஏதோ ஒன்றை நல்லது, அழகானது, ஈர்ப்பானது, மதிப்பானது என மனித மனம் அங்கீகரித்து விட்டால், அதன் மீது மனதிற்கு விருப்பம் ஏற்படுவதை பெரும்பாலும் தவிர்க்க இயலாது. ஒரு நாள் முழுவதிலும் மனம் உருவாக்கும் பெரும்பாலான ஆசைகள் விழிப்புணர்விலேயே இல்லாதவை. அவை தன்னிச்சையாக நிகழ்ந்து விடுகின்றன, ஏனென்றால் மனம் பலவற்றின் மீதும் ஆசை கொள்ளும் நோக்கில் இருக்கிறது. உங்களின் எல்லா ஆசைகளும் நிறைவேறாமல் இருப்பது உங்களுக்கு நல்லது தான். அவை எல்லாமே நிறைவேறிவிட்டால் நீங்கள் பெரும் சிக்கலில் இருப்பீர்கள்.

நீங்கள் இன்னும் அதிக விழிப்புணர்வு கொண்டவராக மாறவேண்டும். பகல் பொழுதில் எந்தளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்களோ, அந்த அளவு இரவில் உங்களுக்கு கனவுகள் வருவது குறையும்.

இந்த வகையான கனவுகள், நீங்கள் எதையெல்லாம் விரும்புகிறீர்களோ அவற்றின் மிகைப்படுத்தலாகவே இருக்கின்றன. இதை வேறு விதமாக கூறுவதென்றால், அது ஒரு வடிகால். உங்கள் கனவில் இந்த வடிகால் நிகழவில்லை என்றால், அந்த ஆசைகள் உங்களுக்கு பெரும் அழுத்தமாகவும், கட்டாயமாகவும் மாறக்கூடும். அந்த விதத்தில், கனவு உங்களுக்கு வேலை செய்கிறது தான்.

நீங்கள் இந்த ஆசைகளை இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது வெளியிட்டுக்கொள்ளலாம் . உடல் ஓய்வு நிலையில் இருப்பதால் மனத்தின் செயல்பாடுகளுக்கு பெருமளவு சக்தி இருக்கிறது. அந்த நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்தி மனம் தன்னைத்தானே சரிசெய்துகொள்கிறது. 90 சதவீத கனவுகள் இந்த வகையைச் சேர்ந்தவையே. இதைப் பற்றி செய்வதற்கும் ஏதுமில்லை, நினைவில் கொள்ளவும் ஏதுமில்லை. நினைவில் கொள்ள வேண்டிய தேவையுமில்லை - அது அப்படியே நிகழ அனுமதியுங்கள்.

ஆனால் அனுதினமும் உங்களுக்கு நிறையக் கனவுகள் வருகின்றன என்றால், உங்கள் நாள் எப்படிச் செல்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் இன்னும் அதிக விழிப்புணர்வு கொண்டவராக மாறவேண்டும். பகல் பொழுதில் எந்தளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்களோ, அந்த அளவு இரவில் உங்களுக்கு கனவுகள் வருவது குறையும். உங்களைச் சுற்றி இருப்பவை மீது எந்த அளவுக்கு விழிப்புணர்வின்றி நீங்கள் ஆசை கொள்கிறீர்களோ அந்த அளவு கனவுகள் அதிகரிக்கும். பகல் பொழுதில் உறுதியோடு நீங்கள் தியானத்தில் போதுமான அளவு ஈடுபட்டால், இரவில் குறிப்பிடத்தக்க அளவு கனவுகள் குறையும்.

பிராரப்தம்: உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கர்மா உங்கள் கனவில் கரைகிறது

பிராரப்தத்தின் அடிப்படையிலும் கனவின் இன்னொரு வெளிப்பாடு இருக்கிறது.

நமது உடலில் ஞாபகக் குவியல்கள் பொதிந்துள்ளன. இதை நாம் கர்ம உடல் அல்லது கர்ம கட்டமைப்பு என்று அழைக்கிறோம், அடிப்படையில் இவை ஞாபகங்களே. உங்களது ஒட்டுமொத்த கர்ம நினைவுகளும் இப்போது உங்கள் வாழ்க்கையில் நிகழ துவங்கினால், உங்கள் மனம் உடைந்துவிடும். யாராலும் கையாள முடியாத அளவுக்கு அது அளப்பரியது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, திடீரென்று எனக்கு ஒரு மாபெரும் அனுபவம் நிகழ்ந்தது [அவரது ஞானோதய அனுபவம்]. அந்த மகத்தான அனுபவத்தினால் பல பிறவி ஞாபகங்கள் என் மனதிற்குள் வேகமாக பாய்ந்தன. என்னால் அதை கையாள முடிந்தது. இல்லையென்றால் பொதிந்திருக்கும் ஞாபகங்கள் உயிர்பெறும் போது மனம் உடைந்துவிடும்.

உங்களது ஒட்டுமொத்த கர்ம நினைவுகளும் இப்போது உங்கள் வாழ்க்கையில் நிகழ துவங்கினால், உங்கள் மனம் உடைந்துவிடும்.

தற்போது நீங்கள் கையாள்வதற்காக உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஞாபகங்களை மட்டும் நீங்கள் தொடுவதற்கான வழியை இயற்கை அல்லது உங்கள் உடலமைப்பு கண்டிருக்கிறது. இதுவே பிராரப்தம் என அழைக்கப்படுகிறது. நமது பாட்டிகளின் காலத்தில் சாதாரணமாக பேச்சு வழக்கில் பயன்படுத்தும் வார்த்தையாக இது இருந்தது. ஏதோ ஒன்று அவர்கள் நினைத்தவாறு நடக்கவில்லை என்றால், "அய்யோ, பிராரப்தம்" என்பார்கள் - அதாவது உங்கள் கர்மா வேலையைக் காட்டுகிறது.

எனவே இரண்டாவது வகையான கனவு, பிராரப்தத்தின் அடிப்படையில் நிகழ்வது. உங்களது பழக்க வழக்கங்கள், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்ச்சிகள் உங்கள் உடல் எப்படி உணர்கிறது என உங்களது அன்றாட செயல்களில் இது வெளிப்படுகிறது. உங்கள் உடலை நீங்கள் கூர்ந்து கவனித்தால், ஒவ்வொரு நாளும் அது வித்தியாசப்படுவதை கவனிக்க முடியும் - ஏனென்றால் நிகழும் அனைத்தையும் பிராரப்தமே உருவாக்குகிறது.

மனத்தில் வெளிப்படும் ஞாபகங்கள் உடலில் ஒரு உணர்ச்சிப் போக்கை உருவாக்குகின்றன. தற்போது எந்தவிதமான பிராரப்தம் நிகழ்கிறதோ அதுதான் உங்கள் உடல் உணரும் விதத்தை நிர்ணயிக்கிறது. நீங்கள் விழிப்புணர்வோடு இருந்து உங்கள் உடலை கவனித்தால், அன்று வரப்போவதை நீங்கள் அறிய முடியும்.

உங்களில் பலரும் இதை கவனித்திருக்கலாம், குறிப்பிட்ட சில நாட்களில் ஏதோ ஒரு மோசமான சம்பவம் நிகழ்ந்தபோது காலையிலிருந்து அதுவரையும் ஏற்கனவே நீங்கள் விளையாட்டுத்தனமாக இருந்திருப்பீர்கள், திடீரென்று ஏதோ ஒன்றில் சிக்கியிருப்பீர்கள். இதை கவனித்தறிய நீங்கள் ஞானமடைந்தவராகவோ அல்லது அபார விழிப்புணர்வு உள்ளவராகவோ இருக்கத் தேவையில்லை. ஆனால் இதைப் புரிந்துகொள்ளத் தெரியாததால் அவர்கள் தாங்களாகவே அந்த சிக்கலுக்குள் சென்றுவிடுகிறார்கள். அதை புரிந்துகொள்ள முடிந்தவர்கள், அதுபோன்ற நாட்களில் சற்று விலகியிருப்பார்கள். ஏனென்றால், கர்மப் பதிவுகள் அல்லது பிராரப்தம் உங்கள் உடல், மனம், சக்தியின் செயல்பாட்டில் மட்டுமல்லாமல் உங்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நீங்கள் விழிப்புணர்வோடு இருந்து உங்கள் உடலை கவனித்தால், அன்று வரப்போவதை நீங்கள் அறிய முடியும்.

பிராரப்தம் தான் இப்படி வெளிப்படுகிறது, இதுவேதான் இரவில் கனவு வடிவிலும் நிகழ்கிறது. இந்த கனவுகளில் எல்லாவிதமான வினோதங்களும் கலந்திருக்கலாம் - உங்களை அறிந்தவர்கள், அறியாதவர்கள், பரீட்சையமான பரீட்சையமற்ற சூழ்நிலைகள் என எல்லாம் சேர்ந்த கலவையாக இருக்கும். இதுபோன்ற கனவுகள் உங்கள் ஞாபகத்தில் இருக்கலாம்: நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு அறிமுகமே இல்லாத ஒருவரும் அங்கே இருக்கிறார், அல்லது நீங்கள் ஏதோ ஒரு வினோதமான இடத்தில் இருக்கிறீர்கள், உங்கள் மொத்த குடும்பமும் அங்கே இருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்தது, தெரியாதது, நீங்கள் விழிப்புணர்வோடு ஞாபகத்தில் வைத்திருப்பது, விழிப்புணர்வோடு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளாதது - எல்லாமே கனவில் கலந்துவிடுகிறது. பிராரப்தத்தின் வெளிப்பாடு, இந்த விதமான கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தமும் இருக்கலாம்.

கனவில் வரும் உருவங்களை நீங்கள் கவனிக்கத் தேவையில்லை; அந்தக் கனவு உங்களுக்குள் விட்டுச் செல்வது என்னவோ அதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும். இது என்ன, ஒளிந்திருக்கும் ஆசைகளை மனம் தீர்த்துக்கொள்கிறதா, இல்லை ஏதோ ஒரு மனப்பதிவு இது நிகழ காரணமாக இருந்ததா? அந்த காட்சியை நீங்கள் பார்க்காதீர்கள். அந்த காட்சி முக்கியமானதல்ல, ஆனால் அது உடலில் எதை விட்டுச் செல்கிறதோ அதுவே முக்கியமானது. காலையில் கண்விழிக்கும் போது, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

கர்மப் பதிவுகள் அல்லது பிராரப்தம் உங்கள் உடல், மனம், சக்தியின் செயல்பாட்டில் மட்டுமல்லாமல் உங்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த காரணத்தினால் தான் தங்கள் வாழ்க்கையை கவனிப்பவர்கள் நரம்பு மண்டலத்தைத் தூண்டும், போதை ஏற்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் தவிர்க்கிறார்கள். போதை வஸ்துக்களும், தூண்டும் பொருட்களும் உங்கள் நரம்பு மண்டலம் முற்றிலும் மாறுபட்ட ஒரு சிக்னல்களைக் கொடுக்க வைக்கிறது, உங்களால் எதையும் கவனிக்க முடியாது.

பிராரப்தத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டாவது வகையான கனவை, உங்களால் கூர்ந்து கவனிக்க முடிந்தால், அது பல விஷயங்களையும் குறிப்பிட்டு காட்டுவதை உணரலாம். குறிப்பாக உங்கள் உடல்நலம் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது உங்கள் உடலுக்கு ஒரு அழிவோ, பாதிப்போ ஏற்படும் சாத்தியமோ இருந்தால், உங்கள் பிராரப்தத்தை கவனிப்பது நல்லது.

நான் எப்போதும் கனவுகளைப் பற்றி பேசுவதில்லை. ஏனென்றால் தங்கள் தினசரி வாழ்வில் கற்பனைத் திறனை தறிகெட்டு ஓடவிடுபவர்களாக நிறைய பேர் இருக்கிறார்கள்: "என் கனவில் இதைப் பார்த்தேன், எனவே இன்று இது நடக்கப்போகிறது; நாளை அது நடக்கப்போகிறது" என்று தினமும் ஏதாவது ஒன்றை கூறுவார்கள். இரவில் மட்டுமின்றி பகல் முழுவதும் கூட கனவுகள் நிகழும்.

சஞ்சிதா: மதகுகள் திறந்த ஞாபகக் கிடங்கு

மூன்றாவது வகையான கனவு உங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட அனுபவ நிலைகளை எட்டும்போது நிகழ்கிறது. ஒரு சக்திவாய்ந்த அனுபவம் உங்களுக்கு ஏற்படும்போது உங்களில் நிறையப்பேர் இதை கவனித்திருக்கலாம் - நீங்கள் ஷாம்பவி தீட்சை பெற்ற போதோ, பாவஸ்பந்தனா அல்லது சம்யமா நிகழ்ச்சியில் பங்கேற்ற போதோ, வேறு ஏதோ ஒருவிதமான தீட்சை நிகழ்வில் பங்கேற்ற பின்போ - உங்கள் கனவுகளின் போக்கு, வகை மற்றும் அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

ஒரு சக்திவாய்ந்த அனுபவம் என்றால் உங்களுக்குள் ஏதோ ஒரு வரம்பை நீங்கள் கடந்திருக்கிறீர்கள். உங்களுக்குள் நீங்களே உருவாக்கியுள்ள அடுக்கடுக்கான பல எல்லைகள் இருக்கிறது. அதில் ஒரு அடுக்கை நீங்கள் கடக்கும்போது கனவுகளின் தன்மையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம். இதுவரை செயலற்றிருந்த மனப்பதிவுகள் புதிதாக வெளிப்படக்கூடும். இதனால் இதுவரை வாழ்வில் இல்லாத சிக்கலான சில சூழல்களை எதிர்கொள்ள நேரும்.

இந்த நியாபகக் குவியல்கள் அல்லது கர்ம பதிவுகளின் கிடங்கு சஞ்சிதா என்று அழைக்கப்படுகிறது.

ஒரு சக்தி அனுபவம் குறிப்பிட்ட ஒரு வரம்பைத் தகர்த்துக்கொண்டு நிகழும்போது, புதிதாக ஒரு மனப்பதிவு வெளிப்படலாம். இந்த வரம்புகள் உங்கள் பாதுகாப்புக்காகவே. ஏனெனில் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் திறந்துகொண்டால் உங்கள் மனம் உடைந்துபோகக் கூடும்.

இந்த நியாபகக் குவியல்கள் அல்லது கர்ம பதிவுகளின் கிடங்கு சஞ்சிதா என்று அழைக்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவு சஞ்சிதா நுழையும்போது உங்களது உயிர் நோக்கம் இதுவரை இருந்ததைவிட அகண்டு விரிவடைகிறது. இதற்கு முன் உங்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட அளவிலான மனப் பதிவுகளுக்குள்ளேயே நிகழ்ந்து வந்தது, ஆனால் ஒரு பெரும் அனுபவம் உங்களுக்குள் நிகழும்போது உங்கள் உயிர் தன் சாத்தியங்களை விரிவுபடுத்திக் கொள்கிறது.

நீங்கள் அதை திறமையாகக் கையாண்டால், அந்தப் பெரும் சாத்தியம் ஒரு அபாரமான வாய்ப்பாகிறது. அதை நீங்கள் திறமையாகக் கையாளாதபோது அதுவே உங்களுக்கு சிக்கலாகிறது. மனிதர்கள் இப்படித்தான் அவதிக்கு உள்ளாகிறார்கள்: மற்ற உயிரினங்களை விட மனித உயிருக்கு ஒரு பெரும் சாத்தியம் காத்திருக்கிறது. மற்ற எந்த உயிரினத்தைப் போலவும் நீங்கள் இருந்தால் வெறுமே உண்பதும் உறங்குவதுமே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் உங்கள் உயிருக்கு அளப்பரிய ஒரு சாத்தியம் இருப்பதாலேயே நீங்கள் சிரமப்படுகிறீர்கள்.

உங்களுக்குள் புதிய மனப்பதிவுகள் திறப்பது உங்களுக்கு மிகுந்த வலியை தரலாம் ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை அதிவேகமாக முன்னோக்கி செலுத்துகிறீர்கள்.

அதுபோலவே, பெரும் சாத்தியமுள்ள ஞாபகங்கள் திறந்து கொள்ளும்போது, அதை நீங்கள் திறமையாகக் கையாண்டால், அது அற்புதமானதாக இருக்கும்; இல்லை என்றால் அதனாலேயே வலி வரும். அது வலியை தருவதாகவே இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில், அதுவும் உங்களுக்கு நல்லது தான். யோகா வலி நிறைந்தது தான், இருந்தாலும் நாம் செய்கிறோம், ஏனென்றால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அதில் நமக்கு நன்மை இருக்கிறது. அதனால் தான் தொடர்ந்து பயிற்சி செய்கிறோம்.

உங்களுக்குள் புதிய மனப்பதிவுகள் திறப்பது உங்களுக்கு மிகுந்த வலியை தரலாம் ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை அதிவேகமாக முன்னோக்கி செலுத்துகிறீர்கள். எது அடுத்த பிறவியில் கையாளப்பட வேண்டுமோ, அதை இந்த பிறவியிலேயே நீங்கள் கையாள முயற்சிக்கிறீர்கள், ஏனென்றால் அனைத்தையும் விரைவாக முடிக்க நீங்கள் விரும்புகிறீர்கள். இதற்குப் பிறகும் இன்னொரு பிறவியை எடுக்க நீங்கள் விரும்பவில்லை. இந்த பிறவியிலேயே எல்லாவற்றையும் பார்த்துவிட எண்ணுகிறீர்கள்.

இது இன்னும் சிக்கலானதாக ஆகிறது, ஆனால் நீங்கள் அதை சரியாக கையாண்டீர்களானால், அது மிகவும் நல்லதாகிறது. இல்லையென்றால் ஆன்மீகப் பாதையில் நுழைந்த பிறகு இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமும் எல்லா திசைகளிலிருந்தும் உங்களை உதைப்பது போல் தோன்றும். இதற்கு முன் நீங்கள் கையாண்டிராத ஒரு பரிமாணம் உங்களுக்கு திறக்கும்போது அப்படித்தான் தோன்றும்.

நீங்கள் இருக்கும் நிலையில் அப்படியே இருந்தால், வாழ்க்கை சௌகர்யமானதாக தோன்றும், ஆனால் தேங்கிப்போய் துன்பப்படுவீர்கள். அடுத்த நிலைக்கு உயர்ந்தால், நீங்கள் முன்னே செல்கிறீர்கள், ஆனால் இன்னும் பெரிய சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

கனவுகளைப் பொறுத்தவரை இது முற்றிலும் மாறுபட்ட வழியில் நிகழ்கிறது. உங்கள் கனவுகளில் சஞ்சிதா வெளிப்படத் துவங்கினால், மிக வினோதமான, அர்த்தமற்ற கனவுகள் ஏற்படும்.

தந்த்ரா: உங்கள் கனவுகள் அனைவரின் உண்மை அனுபவமாய் ஆகும்போது…

இன்னொரு வகையான கனவு இருக்கிறது, இது வழக்கமாய் நாம் சொல்லும் கனவே அல்ல. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இப்போது நம்மோடு தேவி லிங்கபைரவி இருக்கிறாள். அவள் ஒரு கனவு. நாம் தேவியை கனவு கண்டோம். ஒரு தன்மை மெய்ப்படும் அளவுக்கு நீங்கள் கனவு காண்கிறீர்கள் - இது உங்கள் உயிர் நோக்கத்தையும், சக்தியையும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் உருவமைக்கும் கனவு இது.

ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் படைத்தல் நிகழும் நேரத்தை "கனவு நேரம்" என்கிறார்கள். படைத்தவன் அதை கனவு கண்டார். இந்தியாவில் இதை நாம் மாயை என்கிறோம் - மாயையை கனவு என்று சொல்லலாம். அல்லது நாம் இதை லீலை, ஒரு விளையாடல் என்று அழைக்கிறோம். படைத்தவன் தனது மாயையை நெய்து விளையாடுகிறார்.

லீலை, மாயை, இந்த வார்த்தைகள் படைத்தலை மிக பொருத்தமாக விவரிக்கின்றன. நாம் தந்த்ரா என்று எதைக் குறிப்பிடுகிறோமோ, அதன் விஞ்ஞானமும், ஏதோ ஒன்றைக் கற்பனை செய்து, அதை மெல்ல நிஜம் ஆக்குவது தான். முதலில் அதை உங்கள் மனத்தில் உருவாக்குகிறீர்கள், பின்னர் மெதுவாக அதை செயல்படுத்துகிறீர்கள், இறுதியில் அதுவே யதார்த்தம் ஆகிறது.

நாம் அனைவருமே உடல் வடிவம் பெற்று நிஜம் ஆன கனவுகள் தான்.

எல்லா இறை வடிவங்களும் இப்படித்தான் உருவாக்கப்பட்டன. யாரோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவற்றைத் தங்கள் மனத்தில் உருவாக்கி, அதை செயல்படுத்தினார்கள். இப்போது அவை அவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவரின் அனுபவத்திலும் உண்மையானதாக இருக்கின்றன. உங்கள் கனவு அனைவருக்கும் ஓர் உயிருள்ள அனுபவமாக மாறும்போது, அதுதான் நிஜம். அது உங்கள் வீரியமிக்க வார்த்தைகளைக் கொண்டு அவர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவோ அல்லது அவர்களை வசியம் செய்ய முயற்சிப்பதையோ பற்றி அல்ல. அவர்கள் எதையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் தேவியின் ஆலயத்திற்குள் நுழையும்போது, அவளது சக்தி உங்கள் முகத்தில் அறைகிறது. நீங்கள் எதையும் நம்பத் தேவையில்லை, ஏனென்றால் அவள் நிஜம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன், அவள் ஒரு கனவாகவே இருந்தாள். அந்தக் கனவுதான் இன்று மெய்ப்பட்டு இருக்கும் நிஜம். நாம் அனைவருமே உடல் வடிவம் பெற்று நிஜம் ஆன கனவுகள் தான். ஆனால் பொருள்தன்மையைப் பயன்படுத்தாமலேயே ஒரு கனவுக்கு நீங்கள் உருவம் தரமுடியும். இது வழக்கமான அர்த்தத்தில் கூறப்படும் கனவு அல்ல - இதுவே படைப்பு. படைத்தல் முழுவதும் இப்படித்தான் நிகழ்கிறது.

உங்களால் மாயையுடன் விளையாட முடியும். இப்போது நான் ஒரு பந்து வைத்து விளையாட விரும்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம். இப்போது இங்கு பந்து எதுவும் இல்லை, ஆனால் நான் ஒரு பந்து இருப்பதாக நினைத்துக்கொண்டு விளையாடத் துவங்குகிறேன். இதை நான் போதுமான தீவிரத்துடன் செய்தால், சற்று நேரத்திற்குப் பிறகு, இங்கே ஒரு பந்து இருப்பதை யார் வந்தாலும் உணர முடியும்.

உங்கள் கனவு அனைவருக்கும் ஓர் உயிருள்ள அனுபவமாக மாறும்போது, அதுதான் நிஜம்.

இதுதான் படைத்தல், இது உங்கள் கனவிலும் வேர் விட்டிருக்கிறது, ஏனென்றால் சஞ்சிதத்தின் எல்லைகளை நீங்கள் கடக்கும்போது நீங்கள் படைப்புக்கு மூலமாக இருப்பதன் பரிமாணத்தைத் தொடுகிறீர்கள். பொதுவாக, நீங்கள் இதை தொடும்போது, உங்கள் மனம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயிற்றுவிக்கப் படாததாய் இருந்தால் திக்குமுக்காடிவிடும். இதைத்தான் சிலர் மனமற்ற நிலை என்கிறார்கள்.

உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் முன்னிலையில் நீங்கள் வரும் அந்தக் கணத்திலேயே, உங்கள் மனம் உறைந்துபோகும். இது குழப்பம் அல்ல - இது ஒரு குறிப்பிட்ட அளவு தயார்படுத்தல் இல்லாத நிலையில் மனம் இல்லாது போவது.

பாரம்பரியமாக சொல்லப்படுவது போல, 'நீங்கள் கடவுளை சந்திக்கும்போது,' உங்கள் மனம் உறைந்து போகிறது. என்ன ஒரு வீண் நிலை! அங்கு செல்லத்தானே இவ்வளவு பிரயத்தனம் செய்தீர்கள், ஆனால் அங்கு சென்றதும் உறைந்து போகிறீர்கள். அப்படியும் கூட அது நல்லது தான். ஆனால் போதுமான அளவு பயிற்சி பெற்ற மனமும், கணிசமான அளவு சாதனாவின் துணையும் இருந்தால், மனப்பதிவுகள் இல்லாத அந்த இடத்தை நீங்கள் கடக்கும்போதும், உங்களை நீங்கள் விழிப்புணர்வோடு வழிநடத்திக்கொள்ள முடியும்."

யோகப் பயிற்சிகளின் மூலம் நீங்கள் செய்வது என்னவென்றால், உங்கள் மனத்தின் ஞாபகங்கள் அல்லது கர்ம கட்டமைப்புகள் உதிர்ந்து விட்டாலும் உங்களுக்கு மனம் இருக்கும்.

உங்கள் மனம் இப்போது இப்படி செயல்படுவதற்கு காரணம், மனம் வைத்திருக்கும் பதிவுகள் தான். ஞாபகங்கள் அற்ற, புரிதல் மட்டுமே இருக்கின்ற இடத்தின் எல்லைக்குள் நீங்கள் நுழையும்போது, கிட்டத்தட்ட எல்லா மனங்களும் உறைந்துவிடும். பெரும்பாலான மனங்கள் தற்போது இருக்கும் பதிவுகளைக் கொண்டே இயங்குகின்றன. அந்தப் பதிவுகளை எடுத்துவிட்டோம் என்றால், அவர்களுக்கு எதையுமே செய்யத் தெரியாது.

யோகப் பயிற்சிகளின் மூலம் நீங்கள் செய்வது என்னவென்றால், உங்கள் மனத்தின் ஞாபகங்கள் அல்லது கர்ம கட்டமைப்புகள் உதிர்ந்து விட்டாலும் உங்களுக்கு மனம் இருக்கும். உடல் உதிர்ந்து விட்டாலும் - அதாவது, நீங்கள் இறந்த பிறகும் - உங்களுக்கு மனம் இருக்கும். இப்போது நீங்கள் எங்கே செல்ல வேண்டுமோ அங்கே உங்களை நீங்கள் வழிநடத்தி செல்ல முடியும். இல்லையென்றால் வாசனை ஈர்க்கும் வழியிலெல்லாம் நீங்கள் சென்று கொண்டிருப்பீர்கள்.

இவை தான் கனவுகளின் நான்கு வகைகள். இதில் கடைசியாக வருவதை கனவு என்றே கூறமுடியாது - அது மறுபக்க கரை. எனவே எந்த கனவாக இருந்தாலும் அதை உதாசீனப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். கனவுகளின் அர்த்தம் தேடத் துவங்கினால், நீங்கள் இல்லாததையெல்லாம் கற்பனை செய்து கொண்டு உங்களது உயிருக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிடுவீர்கள்.