
சுய முன்னேற்றத் துறையானது முடிவில்லாத மேம்பாடுகள் மூலம் தீர்வுகளுக்கு உறுதியளிக்கிறது. ஆனால், மிகவும் வெற்றிகரமானவர்கள் கூட மற்றவர்களைப் போலவே இன்னமும் திசை அறியாதவர்களாய் உணர்கிறார்கள். எத்தனை புதிய நெறிமுறைகள் வந்தாலும் அடிப்படை பிரச்சனையை தீர்க்க முடியாதென்றால் என்ன ஆவது? நமது மனத்தின் இரைச்சல்களை நிஜமென்று நாம் தவறாக புரிந்து கொண்டிருந்தால் என்ன ஆவது? ஏற்கனவே இருப்பதை தேடி அலைந்து நம்மை நாம் சோர்வடையச் செய்துகொள்வது ஏன் ? விளக்குகிறார் சத்குரு.
சத்குரு: இங்கே நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் நோக்கம் என்ன? அடிப்படையில், வாழ்க்கையை அது இருக்கிற விதமாக அறிவதுதான், நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம், ஆனால் அது அப்படி இருப்பதில்லை. அது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே புரிந்துகொள்வது மிக முக்கியம்.
உண்மையில் இங்கு இருப்பதற்கும், மனத்தில் இருப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நீங்கள் அறியவில்லை என்றால், நீங்கள் தொலைந்துபோவீர்கள். மனத்தில் இருப்பதற்கும், நிஜத்தில் இருப்பதற்கும் இடையிலான தெளிவான வேறுபாட்டை உணர்ந்துகொள்வது வாழ்க்கையில் அவ்வளவு சீக்கிரம் நடந்து விடுவதில்லை.
உங்களுக்கு நேர்கின்ற பல விஷயங்கள் நீங்களே உருவாக்கியவை தான், ஆனால் அது எல்லாம் தானே நிகழ்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் விதி, வாழ்க்கையை நீங்கள் எவ்விதம் உணர்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறதே தவிர நீங்கள் எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதில் அல்ல.
அப்படியானால், நாம் வாழ்க்கையை எவ்வாறு உணர்கிறோம்? ஒரு நிலையில் நாம் நமது மனக் கட்டமைப்பை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதைப் பொறுத்தது அது. நாம் அதை நிர்வகித்தால், எல்லாமே சரியாகிவிட்டது என்று அர்த்தமல்ல. ஆனால் பாதிப்பு பற்றிய பயம் உங்களுக்கு இல்லை என்ற இடத்தை நீங்கள் அடைந்துவிடுகிறீர்கள். பாதிப்பு பற்றிய பயம் இல்லையென்றால், நீங்கள் முழு வீச்சில் நடப்பீர்கள். இல்லையென்றால், பாதிப்பு பற்றிய பயம் இருக்கும்வரை, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாதியாகத்தான் இருக்கும்.
“எனக்கு என்ன நடந்துவிடுமோ?” ஒன்றும் நடந்துவிடாது. ஒன்றும் இல்லாமல் வருகிறீர்கள், ஒன்றும் இல்லாமல் திரும்பிச் செல்கிறீர்கள், பெறுவதற்கும், இழப்பதற்கும் இங்கே எதுவுமில்லை – ஆனால் இடைப்பட்ட காலத்தில், எவ்வளவு குளறுபடிகளை உருவாக்குகிறீர்கள், இது நீங்கள் மனத்தில் நிகழ்வதை, நிஜத்தில் நிகழ்வதென்று, தவறாகப் புரிந்துகொள்வதால் வந்தது.
இரண்டு தோழிகள் சந்தித்துக்கொண்டனர். ஒருத்தி இன்னொருத்தியிடம் கேட்டாள், “நீ உனது மோதிரத்தைத் தவறான விரலில் அணிந்து கொண்டிருக்கிறாயா?” அதற்கு அந்தப் பெண் கூறினாள், “ஆம், நான் தவறான ஒருவனைத் திருமணம் செய்துகொண்டேன்.” எந்தப்பெண்ணும் ஒருபோதும் சரியான ஆணை மணந்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவர் இல்லவே இல்லை. அவ்வளவு ஏன், கிருஷ்ணனின் இரண்டு மனைவியரும் கூட எப்போதும் புகார் கூறினர். மற்றவர்கள் அனைவரும் அவனை மாமனிதன் என்று நினைத்தனர், ஆனால் அவனது மனைவியர் புகார் கூறினர், ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும், அவர்கள் ஒரு சரியான ஆண்மகனை மணக்கவில்லை என்று.
நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால், பிறகு ஒன்றும் பிரச்சனை இல்லை. நீங்கள் சிந்திக்க முடியும், உணர முடியும், செயல்பட முடியும், சாப்பிட முடியும் – நீங்கள் உயிரோடு இருப்பதால்தான் இதை எல்லாம் உங்களால் செய்ய முடிகிறது.
ஆனால் நீங்கள் சாப்பிடும்பொழுது, சாப்பாட்டுக்காரர் ஆகக்கூடாது. சிந்திக்கும்பொழுது, சிந்தனையாளர் ஆகக்கூடாது. உலகத்தில் இதுதான் பிரச்சனை. நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்தால் – உதாரணமாக நான் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், மக்கள் என்னை, “ஓ, அவர் ஒரு மோட்டார் சைக்கிளிஸ்ட்” என்கிறார்கள். நான் ஒரு பந்தை அடித்தால், “அவர் கோல்ஃப் வீரர்” என்கின்றனர். இவை எல்லாம் நீங்கள் செய்யும் செயல்கள். உங்களால் ஆயிரம் விஷயங்களைச் செய்யமுடியும், ஆனால் நீங்கள் அதுவாக மாறவேண்டியதில்லை.
நீங்கள் யார் என்பதை செய்யும் செயல்களின் அடிப்படையில் நிர்ணயித்துக் கொண்டிருக்கும் வரை, உண்மையில் நீங்கள் என்னவோ அதை நீங்கள் ஒருபோதும் உணரமுடியாது. நீங்கள் பல விஷயங்களைச் செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம், ஆனால் நீங்கள் அதுவாகவே ஆகாதீர்கள். செயல் அல்ல நீங்கள். நீங்கள் ஆயிரம் விதமான செயல்கள் செய்பவராக இருக்கலாம், ஆனால் அவை எதுவும் நீங்கள் அல்ல. உண்மையில் நீங்கள் - நீங்கள் மட்டுமே.
நீங்கள் யார் என்பதன் மகத்துவம் உங்களுக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனம். நீங்கள் யார் என்பதன் மகத்துவம் உங்களுக்குத் தெரியாதபோது, நீங்கள் எந்த ஒரு செயல் செய்தாலும் அது உயிர்நிலையில் அர்த்தமில்லாதது. சமூகரீதியாக பொருத்தமுள்ள செயலாக அது இருந்தாலும், உயிர்நிலையில் சம்பந்தம் இல்லாததாகவே உள்ளது.
வெற்றியாளர்கள் இதனால்தான் துன்பப்படுகின்றனர். வாழ்க்கையில் வெற்றியடையாதவர்கள் துன்பப்படுவது ஏனென்றால், அவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுகின்றனர். அப்படியென்றால் வெற்றியாளர்கள் ஏன் துன்பப்படுகின்றனர்? அரண்மனைகளில் வாழ்பவர்கள் ஏன் துன்பப்படுகின்றனர்? பூமியில் இருப்பதிலேயே பெரும் செல்வந்தர்கள் ஏன் துன்பப்படுகின்றனர்? ஏனென்றால் உங்களிடம் என்ன இருந்தாலும், நீங்கள் என்ன செய்தாலும், அது எதுவுமே, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை சரிசெய்துவிடாது.
உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சரிசெய்தால் மட்டுமே உயிரின் இயல்பான தன்மை உங்கள் அனுபவத்தில் வரும். அதுவே உச்சம் என்று ஆகிவிடாது, ஆனால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை சரிசெய்தால், பாதையில் நீங்களே தடையாகிவிடாமலாவது இருப்பீர்கள். மற்ற விஷயங்கள் இன்னமும் தடையாக இருந்தாலும், நீங்கள் தடையாக இல்லை – இது மிக முக்கியமானது. ஏனென்றால் எப்போது நீங்களே பாதையில் குறுக்கிடுகிறீர்களோ, வேறு யாராலும் நீக்க முடியாது. மற்ற விஷயங்கள் தடையாக இருந்தால், நாம் அவற்றை நீக்கிவிடலாம்.
நீங்களே பாதையில் குறுக்கிடாதபோது, உயிர் தானாகவே மலரத் துவங்கும். நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யத் தேவை இருக்காது. நீங்கள் பாதையில் குறுக்கிடாமல் இங்கே அமர்ந்திருந்தால், அது தானே நிகழும். ஏனெனில் இது உயிரைப் பற்றியது, அந்த உயிர் தான் நீங்கள்.