
6000-திற்கும் மேற்பட்டோர் ஆதியோகி ஆலயத்திலும், பல லட்சக்கணக்கானோர் இணையத்தின் வழியாகவும் பொங்கும் உற்சாகமும், பக்தியும், கருணையும் நிறைந்த இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
மனிதகுலத்தின் ஆன்மீக, பரிணாம வளர்ச்சிக்கான ஏக்கத்தின் திசையை நிர்ணயிக்கக்கூடிய தருணமாக இருந்தது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன், ஆதியோகி நீண்ட காலமாக அசைவற்று அமர்ந்திருப்பதைப் பார்த்து, மக்கள் அவர் இறந்துவிட்டார் என நினைத்தனர். பின் அவர் கண் திறந்து, கற்றுக்கொடுக்க
ஆரம்பித்தார். அந்த நொடி முதல் அவர் ஆதிகுருவானார், மனித குலத்தின் முதல் ஆன்மீக ஆசானானார், யோகக் கலையும் பிறந்தது.
இதனால்தான் குரு பௌர்ணமியின் மகத்துவம் இன்றும் நம் உள்ளங்களில் ஆழமாக பதிந்திருக்கிறது - பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு உள்ள ஞானத்தையும் அருளையும் பரிமாறும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் நாளாகும்.
ஜூலை 10 அன்று ஈஷா யோக மையத்தில் ஆனந்தத்தோடு எதிர்பார்ப்பும் நிரம்பியிருந்தது. கண்கொள்ளாக் காட்சியாக மலர் அலங்காரங்கள் எங்கும் நிறைந்திருந்தன. காற்றில் எங்கும் மகிழ்ச்சி கலந்திருந்த நிலையில், அங்கு உற்சாகமாக கூடியிருந்த அனைவரின் உள்ளத்திலும் எண்ணத்திலும், முழுமையாக, சத்குருவின் கருணையில் நனையும் பாக்கியத்தை நோக்கியே இருந்தது.
அன்று பக்தர்கள் மிகுந்த பக்தியுடனும், நன்றியுணர்வுடனும் தியானலிங்கத்திற்கு அர்ப்பணங்களைச் செய்தனர். சத்குரு விவரிக்கும் விதமாக, தியானலிங்கம் என்பது "தெய்வீகத்தின் உச்சபட்ச வெளிப்பாடு - வேறு எதனாலும் அல்லது வேறு எவராலும் தொட முடியாத பரிமாணங்களில் உங்களைத் தொடும் ஒரு வாழும் குரு."
ஆதியோகி ஆலயத்தின் சூழல் மிகவும் பரவசத்துடன் காணப்பட்டது, பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடனும் சத்குருவின் கருணையில் நனையும் பாக்கியத்தை நோக்கியும் காத்திருந்தனர். அவர்கள் காத்திருந்த அந்த நேரமும் வந்தது. குரு பௌர்ணமி கொண்டாட்டம் வண்ண மயமான ஊர்வலத்துடன் சத்குருவிற்கான வரவேற்புடன் துவங்கியது.
சத்குருவிற்கு செய்யப்பட்ட பக்தியின் அர்ப்பணிப்பான பாத பூஜை அனைவரையும் கட்டிப்போட்டது.
ஈஷா யோக மையத்தில் நேரில் பங்கேற்றோருக்கும், இணையத்தின் வழியாக பங்கேற்றோருக்கும், குருவின் முன்னிலையில் குருபூஜை செய்யும் பாக்கியம் கிடைத்தது. இது அனைவருக்கும் மறக்கமுடியாத அனுபவமானது.
ஒரு பங்கேற்பாளர் இதை மிக அழகாக - "சூட்சுமமாக அல்லாமல், நம்முடன் வாழும் குருவிற்கு பூஜை செய்யும் அதிர்ஷ்டம் கிடைதற்கறிய திருவருளாகும்" என்று கூறினார்.
ராம் மிர்யாலா பாடத் தொடங்கியவுடன், அரங்கமே அந்தப் பாடலால் மெய் மறந்தது. அவர் இசையில், "எதுக்கைய்யா...." என பாடத் தொடங்கியவுடன், காய்ந்து வறண்டு போன நிலம், முதல் மழையால் எப்படி உயிர்தெழுமோ அப்படி ஒரு அனுபவத்தை பங்கேற்பாளர்களிடையே ஏற்படுத்தியது.
சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவுடன், பார்த்திவ் கோஹில், ராம் மிர்யாலா சேர்ந்து பாடிய "சத்குரு ராயா......." பாடல் எல்லோருடைய மனதையும் கவர்ந்தது. அவர்கள் குரலால் வெளிப்படுத்தப்பட்ட உணர்வு பங்கேற்பாளர்களை கட்டிப்போட்டது.
அவர்களின் கரகோசங்கள் அந்தப் பாடல் எந்தளவு அவர்களது மனதைக் கவர்ந்தது என்பதைக் காட்டியது.
உங்கள் குரல், எல்லா உயிர்களுக்கும் ஆத்ம ஞானத்தை கொடுக்குமளவு சக்தி வாய்ந்தது. இது, ஒரு சில கலைஞர்களுக்கு மட்டுமே வாய்த்த அற்புத சக்தியாகும், இந்த வரிசையில் பாரதத்தில் இருக்கும் கலைஞர்களுள் நிச்சயம் நீங்கள் தலைசிறந்தவர்கள்.
உங்கள் பாடல் ஒவ்வொன்றும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டதைப்போல் உணர்ந்தேன்.... சும்மா பாடுவதாக மட்டும் இல்லாமல் ஆழமான பல உணர்ச்சிகளின் கலவையாக இருந்தது.
பார்த்திவ் கோஹில்-ன் "ரங்க் தே" பாடல், ஆன்மீகத் தேடலின் சூழலை மேலும் வண்ணமயமாக்கியது.
ஸ்வாகத் ராதோட்-ன் "பாயோஜி மேனே" பாடல், கலக்கமான வாழ்க்கை சூழலில் இருந்து பக்தர்கள் தெளிவு பெற உதவும் குருவை கௌரவிக்கும் விதமாக இருந்தது.
அந்த மாலைப் பொழுது பண்முகத்தன்மையோடு இருந்தது: மாச்சல் மாண்டேனோ அதீத உற்சாகத்துடன் "சாம்ப சதாசிவா" பாடலை ராம் மிர்யாலாவுடன் சேர்ந்து பாடினார்.
மோஹித் சௌஹானின் மென்மையான குரலில் "ஷிவ் கைலாஷோ கே" பாடல் தற்கால ரசனைக்கும், தொன்மையான பக்திக்கும் ஒரு பாலமாக அமைந்தது.
சத்குரு குருகுலமான சம்ஸ்கிருதியின் மாணவ செல்வங்கள் நிகழ்த்திய பரத நாட்டிய நிகழ்ச்சி தொன்மைவாய்ந்த பக்தியின் இயக்கத்தோடான வெளிப்பாடாக இருந்தது - ஒவ்வொரு அசைவும் நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக மரபைத் தாங்கி நின்றது.
ராதேயின் நடன நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஈஷாவில் யோக பயிற்சியைக் கற்று வீடு திரும்புகிற தியான அன்பர்களின் மாற்றத்தைப் பற்றி வீட்டில் உள்ளோர்களின் உணர்வுகளைத் தனது நகைச்சுவை கலந்த நாட்டிய நாடகமாக அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
கருத்தும் அதனை வெளிப்படுத்திய விதமும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. இத்தனை அழகியலுடன் இதை நிகழ்த்திய ராதே மற்றும் குழுவினருக்கு பாராட்டுக்கள்.
மிக நேர்த்தியான நடன நிகழ்ச்சி, இக்காலகட்டத்திற்கு தேவையான கருத்து அதற்கு மேலும் மெருகூட்டியது.
எனக்கும், இன்னும் பலருக்கும் இது உங்களுடைய மிகச் சிறந்த நடன நிகழ்ச்சிகளுள் ஒன்று எனத் தோன்றியது. மையக்கருத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது, தொகுப்பாக அமைத்து அளித்ததற்கு பாராட்டுகள்.
இன்னும் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை எங்களுக்காக வழங்க வேண்டும் அக்கா.
சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவுடன் தன்னார்வலர்கள், முழுநேரத் தன்னார்வலர்கள் சேர்ந்து "ஏகம் நித்யம்" பாடலைப் பாடினர். நித்தியமானதும் தூய்மையானதுமானதை கொண்டாட 6,000 குரல்கள் ஒன்றிணைந்தன. இது வெறும் மந்திர உச்சாடனமாக மட்டுமல்லாமல் நன்றியுணர்வு மற்றும் பக்தியின் வெளிப்பாடாக இருந்தது.
ஒரு ஆன்மீகக் கூட்டத்தின் உண்மையான மதிப்பு அதன் பிரம்மாண்டத்தைப் பற்றியது அல்ல, அதில் கலந்துகொண்டவர்களின் அனுபவத்தைப் பற்றியது. 2025 குரு பௌர்ணமியில் பகிரப்பட்ட அனுபவங்கள் இதனை உணர்த்துகின்றன.
நேரில் கலந்துகொள்ள கிடைத்த இந்த அறிய வாய்ப்பிற்காக பூரிப்படைவதோடு, குருவின் பாத பூஜையை நேரில் காணக் கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
குருவருளின் தீவிரமான சக்தியில் மூழ்கித் திளைத்த அனுபவமாகும்.
இது மாயாஜாலமான பௌர்ணமி இரவு. நேரிலோ இணையத்திலோ எவ்விதம் கலந்து கொண்டோம் என்பது முக்கியமல்ல. நேரலை என்பது வெறும் ஒளிபரப்பாக மட்டுமல்லாமல் அனுபவத்தை உலகெங்கும் கடத்தியது.
2025 குரு பௌர்ணமியை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றியது வெறும் மலர் அலங்காரங்களும் இசை நிகழ்ச்சிகளும் மட்டுமல்ல, காலம் கடந்த தொன்மை, நிகழ் காலத்துடன் உறவாடிய தருணங்களும் தான். ராம் மிர்யாலாவின் பாடல்கள், ராதேயின் நாட்டிய நாடகம், குருபூஜையுடன் ஒன்று கலந்த மக்கள் கூட்டம் என இவை எல்லாம் குரு-சிஷ்ய பாரம்பரியம் உயிர்ப்போடு செழித்து ஓங்குவதற்கு சான்றாக அமைந்தது.
அந்த ஓர் இரவில், ஆயிரக்கணக்கான மக்களது உள்ளம் தன்னைவிட உயர்வான ஒன்றிற்காக திறந்த நிலையில் இருக்கும்போது என்ன நடக்கும் என்பதை உணர்ந்தன - உலகெங்கிலும் இருந்து நேரலையில் இணைந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அந்த சாத்தியத்தின் துளிகளைப் பெற்றனர்.