சத்குரு எக்ஸ்குளூசிவ்

கிரியா யோகா ஆண்களுக்கு மட்டுமே என்று இருந்ததா? அந்நிலை இப்போது மாறுகிறதா?

நூற்றாண்டுகளாக, கிரியா யோகா பாதை பெரும்பாலும் ஆண்களாலேயே பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இதற்குக் காரணம் என்ன என்பதை இக்கட்டுரையில் சத்குரு உடைத்துப் பேசுகிறார். அது மட்டுமின்றி இன்றைய பெண்கள் சக்தி நிலையிலான பயிற்சிகளை மேற்கொள்ள, இயற்கையாகவே இருக்கும் சாதகங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

கேள்வி: பெண்கள் கிரியா யோகப் பாதையில் நடக்கத் தேவையான தகுதிகள் என்ன? கடந்த காலத்தில் பெண் யோகிகள் இருந்துள்ளனரா?

சத்குரு: கிரியா யோகப் பாதையில் பயணித்த பெண்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்குக் காரணம், கிரியா யோகா சாதனையின் குறிப்பிட்ட கட்டங்களில் தீவிர ஒழுக்கமும் விடாமுயற்சியும் தேவை இருக்கிறது. பொதுவாக, இதில் உள்ள கடினமான சவால்களின் காரணமாக பெண்கள் கிரியா யோகத்தை தேர்ந்தெடுக்கவில்லை. உடல் ரீதியாகவும், கிரியா யோகாவில் பெண்கள் சிறிது சாதகமற்ற நிலையில் இருக்கிறார்கள்.

பாரம்பரியமாக கற்பிக்கப்பட்ட, கிரியா யோகாவின் பொதுவான பயிற்சி முறைகள், பெரும்பாலும் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டவை, ஏனெனில் பெரும்பாலான பயிற்சியாளர்கள் ஆண்களாக இருந்தனர். ஒரு உவமையோடு சொல்வதென்றால், ஈஷா யோக மையத்திற்கு வரும் அனைவரும் மூன்று அடி உயரம் மட்டுமே இருந்தால், அனைவரும் வசதியாக நுழையும் வகையில் நாங்கள் மூன்றரை அடி உயரமுள்ள கதவுகளை மட்டுமே கட்டுவோம். பிரச்சனை எப்போது வருமென்றால், ஆறு அடி உயரமுள்ள ஒருவர் வரும் நாளன்றுதான்.

பொதுவாக, ஆண்கள் மட்டுமே கிரியா யோகா பாதையில் பயணித்தனர், ஏனென்றால் இதற்கு குறிப்பிட்ட விதமான ஒழுக்கமும், வழக்கமான வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதும் தேவை இருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்த நம் கலாச்சார சூழ்நிலையில் பெண்களுக்கு இது சாத்தியமில்லாததாக இருந்தது. பதினைந்து வயதிலேயே பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை இருந்ததால், கிரியா யோகா பயிற்சிக்குத் தேவையான சூழலில் அவர்களால் இருக்க முடியவில்லை. எனவே, பாரம்பரியமாக கிரியா யோகா, ஆண்களுக்கு மட்டுமே என்று ஆனது - ஆனால் அது யோகாவின் இயல்பு காரணமாக அல்ல, அந்தக் காலத்தின் சமூக சூழ்நிலைகள் காரணமாக அவ்வாறு இருந்தது.

பல்வேறு குருமார்களால் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட அனைத்துப் பயிற்சிகளும் ஆண்களுக்காகவே இருந்தன, ஏனென்றால் அவர்களின் சீடர்கள் பெருவாரியாக ஆண்களாக இருந்தனர். எனவே அதற்குத் தகுந்தாற்போல் கட்டமைத்தனர். அப்படியானால் எந்தப் பெண்ணும் கிரியா யோகப் பாதையில் நடந்ததில்லை என்று அர்த்தமல்ல – சிலர் நடந்துள்ளனர். ஆனால் அவர்கள் மிகச் சிறுபான்மையானவர்கள், அவர்களுக்கென்று அதிகமான பயிற்சிகள் உருவாக்கப்படவில்லை.

ஒரு பெண்ணுக்குள் சிறிதளவு பக்தி இருந்தால், அவளது கிரியாக்கள் எளிதில் தீவிரமடைகிறது.

இங்கு நாம் கட்டமைத்திருக்கும் பயிற்சி முறைகள், பெண்களுக்கும் பொருத்தமானவை. அவர்கள் தங்களது பயிற்சிகளுடன் நலமாக இருக்கின்றனர். எனவே, ஒரு பெண், கிரியா யோகா பாதையில் செல்ல முடியுமா? ஆம், அவளால் முடியும், ஆனால் ஒரு பெண் கிரியா யோகாவையே முழுமையான பாதையாக பின்பற்ற விரும்பினால், அவளுக்கு அது சிறிதளவு சாதகமற்றதாக உள்ளது. அவள் அதைச் செய்தாக வேண்டுமென்று விரும்பினால், சற்றுக் கூடுதலாக அவள் முயற்சிக்கத் தேவையிருக்கும்.

ஒருவர் வளர்ச்சி அடைய விரும்பினால், இந்த நான்கு பரிமாணங்களின் சரியான ஒரு கலவையை உருவாக்குவது எப்போதுமே சிறந்தது: ஞானம், கர்மா, கிரியா, மற்றும் பக்தி. பெண்களுக்கு, உணர்ச்சிப் பரிமாணம் பொதுவாக அதிக ஆதிக்கம் கொண்டதாக இருக்கிறது. இதனை அவர்கள் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

நான் பார்ப்பது என்னவென்றால், ஒரு பெண்ணுக்குள் சிறிதளவு பக்தி இருந்தால், அவளது கிரியாக்கள் எளிதில் தீவிரமடைகிறது. அவளுக்குள் பக்தி இல்லையென்றால், கிரியாக்களின் உதவியுடன் மட்டும் சக்திநிலையை உயர்த்திக்கொள்வது பல பெண்களுக்கு மிகவும் கடினமாகிறது.

பொதுவாக ஒரு ஆணுக்கு, ஞானம், கிரியா, மற்றும் கர்மா இணக்கமுள்ளதாக இருக்கும். பெண்ணுக்கு வழக்கமாக ஞானம் மற்றும் கிரியாவின் கலவையைக்காட்டிலும், பக்தி மற்றும் கிரியாவின் கலவை அதிக இணக்கமுள்ளதாக இருக்கிறது. ஆனால் இது ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு ஆணுக்கும் உண்மையாக இருப்பதில்லை. இரண்டு அம்சங்களுக்கும் இடையில் அவர்கள் ஊசலாடவே செய்கின்றனர்.

நாம் கிரியா யோகாவை ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் வழங்குகிறோம். ஆனால் அவர்கள் பயிற்சியின் ஒரு குறிப்பிட்ட தீவிரத்தை எட்டினால், அப்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறு விதமான பயிற்சிகளை நான் வழங்குகிறேன். ஏனென்றால் பாரம்பரியமான சில பயிற்சிகள் பெண்களுக்குப் பொருத்தமானதல்ல. அப்படிப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்வது அவர்களது உடலமைப்புக்குத் தகுந்ததாக இருக்காது; அது அவர்களது உடலமைப்பை பாதிக்கும். அதற்குத் தகுந்தாற்போல், பயிற்சிகளை நாம் கட்டமைக்க முடியும்.

முற்காலத்தில் குருமார்கள் பெண்களுக்கென்று பயிற்சிகளை உருவாக்க விரும்பவில்லை என்று அர்த்தமல்ல; அவர்களுக்கு பெண் சீடர்கள் இல்லாததால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.