ஒரு குருவின் அருகாமையில் இருப்பது உங்கள் ஆராவை சுத்தப்படுத்த முடியுமா? மர்மமான குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம் என்கிறார் சத்குரு. ஆன்மீகப் பயணம் நாம் நினைப்பதை விட மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும், தனிப்பட்ட முறையிலும் இருக்கலாம்.
கேள்வியாளர்: சத்குரு, உங்கள் இருப்பில் இருப்பதன் மூலமும், உங்கள் ஆராவுடன் தொடர்பு கொள்வதன் மூலமும் எங்கள் ஆராவை சுத்தப்படுத்த முடியுமா?
என்னைச் சுற்றி ஒளி வட்டம் ஏதும் உங்களுக்குத் தெரிகிறதா? நீங்கள் ஏதாவது ஒன்றைப் பார்க்க தீவிரமாக விரும்பும்போது, உங்கள் மனம் அதை உருவாக்கி உங்களுக்குக் காட்ட முடியும். இன்றைய சமூகத்தில் இது புரிந்துகொள்ளப் படாவிட்டாலும், உங்கள். வாழ்க்கையில் உங்களால் செய்ய முடிந்த மிகவும் நடைமுறைக்கேற்ற விஷயம் ஆன்மீக செயல்முறையே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விஷயங்களைப் பார்ப்பது என்பதாகவே ஆன்மீகம் ஒரு பெயரை பெற்றுவிட்டது. இல்லாத விஷயங்களை நீங்கள் பார்க்கத் தொடங்கும்போது, அதுவே ஒரு பிரச்சனையாகிவிடுகிறது.
உயிரற்ற பொருட்களுக்கும் கூட அவற்றின் சொந்த ஆரா உள்ளது. ஒவ்வொரு பொருளுக்கும் அதைச் சுற்றி ஒளி மற்றும் சக்தியின் களமான அதன் சொந்த ஆரா உள்ளது. நீங்கள் எங்காவது சென்று கூடுதல் ஆராவைப் பெறமுடியாது. உங்கள் உடல், மனம், உணர்வுகள் மற்றும் சக்திகளை ஒரு குறிப்பிட்ட அளவு துடிப்புடன் வைத்திருந்தால், உங்களைச் சுற்றி ஒளி மற்றும் சக்தியின் களம் இருக்கும். அதைப் பார்க்கவோ அளவிடவோ அல்லது மற்றவர்களின் ஆராவுடன் ஒப்பிடவோ முயற்சிக்காதீர்கள்.
நீங்கள் காலையில் எழும்போது, உங்கள் உடல், மனம் மற்றும் உணர்வுகள் இன்று உற்சாகமாக உள்ளதா என்பதைப் பாருங்கள். உங்கள் சக்திகளைப் பற்றி நீங்கள் இப்போது விழிப்புடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் இந்த மூன்று அம்சங்களைப் பற்றி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். வாழ்க்கை என்பது உற்சாகம்; மரணம் என்பது செயலற்ற தன்மை. ஒவ்வொரு நாளும், நீங்கள் எந்தத் திசையில் நகர்கிறீர்கள் என்பதை அளவிட வேண்டும். நீங்கள் மேலும் உற்சாகமாகிறீர்களா, அல்லது மேலும் செயலற்றவராகிறீர்களா?
நீங்கள் தவறான எண்ணங்களை உருவாக்கினால், நீங்கள் சோம்பல் நிலையை நோக்கி நகர்வீர்கள். வேறு வகையான எண்ணங்களை உருவாக்கினால், நீங்கள் இயக்கம் மற்றும் உற்சாகத்தை நோக்கி நகர்வீர்கள். இந்த உயிரை உற்சாகமாக வைத்திருந்தால், உங்கள் ஆரா நன்றாகவே இருக்கும். கவனம் செலுத்த வேண்டிய அளவிடக்கூடிய அம்சங்கள் நிறைய உள்ளன, அதாவது உங்கள் உடல் எப்படி இருக்கிறது, உங்கள் மனம் எப்படி இருக்கிறது, உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கின்றன, உங்கள் சக்திகள் எப்படி இருக்கின்றன போன்றவை. மக்களின் ஆராவைப் பார்க்க முயற்சிப்பதை விட இவற்றை நம்புவது சிறந்தது.
இடங்களும் மக்களும் நிச்சயமாக உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர், ஆனால் நீங்கள் நரகத்திற்குச் சென்றாலும் கூட தூய்மையாக வெளியே வரும் விதமாக உங்களை உருவாக்கிக் கொள்வதே சிறந்தது. இது முக்கியமானது. இல்லையெனில், நீங்கள் எங்கெல்லாம் செல்ல முடியும் என்பதை வரம்புக்குள்ளாக்குவீர்கள். நான் எங்கும் செல்ல முடியும், அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பூமியில் உள்ள மிக மோசமான இடத்திற்குச் சென்றாலும் கூட எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் திறன் பெற்றவராக நீங்களும் ஆகவேண்டும். ஆன்மீக செயல்முறை என்பது வெளி விஷயங்கள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை தீர்மானிப்பதில்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்கிறீர்கள். இப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும்.
எப்போதும் உங்களைச் சுற்றி இருப்பவற்றை 100 சதவீதம் உங்களால் தீர்மானிக்க முடியாது, மேலும் உங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் கூட நீங்கள் விரும்பும் விதமாக சரியாக நடந்துகொள்ள மாட்டார்கள். இதனால்தான் இப்போதெல்லாம் பலர் நாய்களை வளர்க்கிறார்கள் - அவை தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாய்கள் கூட தங்கள் சொந்த விருப்பப்படி செயல்படுகின்றன, ஆனால் நீங்கள் விரும்புவதைச் செய்ய வைப்பதில் பொதுவாக வெற்றி பெறுகிறீர்கள்.
இந்த உலகில் யாரும் 100 சதவீதம் உங்கள் விருப்பப்படி நடப்பதில்லை. குறைந்தபட்சம் நீங்களாவது நீங்கள் விரும்பும் விதமாக நடந்துகொள்ள வேண்டும். உங்களை நீங்கள் விரும்பும் விதமாக மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. நீங்கள் உங்கள் விருப்பப்படி அமைத்துக்கொண்டால், உங்களை ஆனந்தமாக வைத்துக்கொள்வீர்களா அல்லது துன்பமாக வைத்துக்கொள்வீர்களா? நீங்கள் ஆனந்தமாக இருங்கள்; உங்கள் ஆராவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் - அது சிறப்பாகவே இருக்கும்.