நமது அடையாளங்களில் சிக்கிவிடாமல் முழுமையாக வாழ்வது சாத்தியம்தானா? வாழ்க்கையில் நாம் செய்யும் ஏற்பாடுகள் குறித்த நமது அடிப்படையான புரிதலை சத்குரு எதிர்கொள்கிறார். நமது நெருங்கிய உறவுகளில்கூட அளவுக்கதிகமாக அடையாளப்படுதல் எப்படி துன்பத்துக்கு வழிகாட்ட முடியும் என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். அதற்குப் பதிலாக, எல்லாப் படைப்புக்கும் அடிநாதமாக இருக்கும் அடிப்படையான புத்திசாலித்தனத்துடன் இணைந்த, ஒரு விழிப்புணர்வான ஒருங்கிணைப்பை நோக்கி நகருமாறு யோசனை வழங்குகிறார்.
கேள்வி: சத்குரு, எங்களது அடையாளங்களைக் கைவிடுமாறு அல்லது அவைகளை விலக்குமாறு நீங்கள் கூறினீர்கள். நாங்கள் அனைவரும் பிரம்மச்சாரிகள் ஆகவேண்டும் என்பது இதற்கு அர்த்தமா? ஒருவர் திருமணம் செய்துகொண்டு, அவரது துணையுடன் அடையாளப்படாமல் இருப்பது எப்படி? இல்வாழ்வினர் ஞானம் அடைவதற்கு என்ன வழி இருக்கிறது?
சத்குரு: உங்கள் திருமணத்திலிருந்து வெளியில் வருவதற்கான ஒரு வழியைத் தேட நீங்கள் முயற்சி செய்கிறீர்களா, என்ன? இந்தக் கேள்விக்கு பதிலளிக்க நான் மறுப்பு தெரிவிக்கிறேன்.
நீங்கள் ஏதோ ஒன்றுடன் அல்லது மற்றவருடன் அதிகப்படியாக அடையாளப்பட்டிருந்தால், யாருடனாவது உங்களால் விவேகத்துடன் வாழமுடியுமா? இதனால்தான், சிறிது காலத்துக்குப் பிறகு, மிக அற்புதமான உறவுகள் கூட நரகமாக மாறிவிடுகின்றன: நீங்கள் ஏன் இணைந்தீர்கள் என்பதை மறந்துவிடும் அளவுக்கு மிக மோசமாக நீங்கள் அடையாளப்படுகிறீர்கள். அந்த உறவின் நோக்கத்தைக் காட்டிலும், உறவின் அடையாளம் பெரிதாகிவிடுகிறது.
இங்கு அடையாளம் இல்லாமல் இருப்பது என்றால், உங்களுக்கு ஒரு பட்டம் வழங்கப்பட வேண்டும் என்பது அர்த்தமில்லை. பிரம்மச்சரியத்தை ஒரு பட்டமாக நீங்கள் பார்த்தால், அதுகூட மிக மோசமான ஒரு அடையாளம்தான். நீங்கள் ஒரு பிரம்மச்சாரி என்று மற்றவர்கள்தான் கூறவேண்டும் – நீங்கள் வெறுமனே இருக்கவேண்டும்.
பிரம்மச்சரியம் என்றால், நீங்கள் தெய்வீகத்தின் பாதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது, உங்களுக்கே உரித்தான எந்த திட்டமும் உங்களுக்கு இல்லை. நீங்கள் படைப்பாளியின் திட்டத்துடன் இணைந்துசெல்ல விரும்புகிறீர்கள். அவர்களுக்கு உரிய திட்டங்கள் சுற்றிச் சுற்றித்தான் வருகிறது, அவர்களை வேறெங்கும் அழைத்துச் செல்வதாகத் தோன்றவில்லை என்பதை ஒரு பிரம்மச்சாரி உணர்ந்துள்ளார். “படைப்பாளி இதையெல்லாம் செய்யமுடியும் என்றால், நான் அந்தப் படைப்பாளியின் திட்டத்தின்படி சென்றால், நிச்சயமாக அவர் வேறெங்காவது எனக்கு வழங்குவார்”, என்று அவர்கள் எண்ணுகின்றனர். இந்த நம்பிக்கையில் ஒரு பிரம்மச்சாரி வாழ்கிறார்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்திருக்கும் ஏற்பாடுகள் என்னவாக இருந்தாலும், படைப்பாளியின் திட்டத்தில் நம்பிக்கையுடன் இருப்பதுதான் வாழ்வதற்கான சிறந்த வழி, ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் ஒரு பரிமாண மாற்றத்தை உருவாக்குவதற்கு உங்களது சொந்த புத்திசாலித்தனம் போதுமானதாக இல்லை. தற்போதைய, இந்தப் பரிமாணத்தில் பிழைத்திருப்பதற்கும், மற்றவரைக்காட்டிலும் சிறிது மேலாக செயல்படவும் உங்களது புத்திசாலித்தனம் போதுமானதாக இருக்கலாம். உங்களிடம் சிறிது அதிகமான பணம், செல்வம், அல்லது வேறு அனைத்தும் இருக்கலாம். ஆனால் அது போதுமானது அல்ல.
உங்களது புத்திசாலித்தனம் இந்தப் பரிமாணம் குறித்ததாக இருப்பதால், அதனை ஊடுறுவி, கடந்து செல்வதற்கு அது போதுமானதாக இல்லை. இந்தப் பரிமாணத்தைக் கடப்பதற்கு, எல்லா பரிமாணங்களுக்கும் அடித்தளமாக மற்றும் எது இல்லையோ அதற்கும் அடித்தளமாக இருக்கின்ற ஒரு புத்திசாலித்தனத்துடன் நீங்கள் ஒருங்கிணைய வேண்டும். உங்களையே நீங்கள் அதன் கரங்களில் ஒப்படைத்துவிட்டால், நீங்கள் ஒருங்கிணைவீர்கள். இந்த புத்திசாலித்தனம் எல்லா இடத்திலும் இருக்கிறது – வெளியிலும் மற்றும் உள்ளேயும், அது ஒன்றாகவே இருக்கிறது.
இந்தப் பரிமாணத்தில்கூட, உங்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டினை நீங்களாகவே நடத்தமுடியாது; இந்த மூளைக்கு அது அதிக சிக்கலானதுதான். இதுதான் ஒரு மனிதரது நிலை என்று இருக்கும்போது, அவர்களது சொந்த விஷயங்களையே செய்துகொண்டு, சுற்றிச் சுற்றிச் சென்றுகொண்டிருப்பதில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை யாரோ ஒருவர் உணர்ந்துகொண்டு, அவர் ஒரு பிரம்மச்சாரியானார். இது பார்வைக்குத் தோன்றுவதைப்போல் எளிமையானதல்ல என்பதை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால், இப்போது அவர்கள் அந்த மாதிரி ஆவதற்கு பெருமுயற்சி செய்துகொண்டு இருக்கின்றனர்.
சிலர் ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணை மணந்துள்ளனர். சிலர் அவர்களது செல்வம், கார்கள், அல்லது வீடுகளை மணந்துள்ளனர். வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விஷயங்களை மணந்துள்ளனர். பிரம்மச்சாரிகள் மெல்லமெல்ல ஈஷா யோக மையத்துக்கு மணம் முடிக்கப்படலாம். பொருளியல் நிலையில், ஒவ்வொருவரும் ஏற்பாடுகள் செய்கின்றனர். பிரம்மச்சாரிகள்கூட இங்கே ஒரு ஏற்பாடு செய்தனர். அது ஒரு எளிமையான, குறைந்த சிக்கல் கொண்ட ஏற்பாடு, ஆனால் அவர்களும் எந்த ஒரு ஏற்பாடும் இல்லாமல் இல்லை.
உங்களது திருமணம், உறவுகள், வேலை, தொழில், செல்வம், அல்லது வேறு என்னவாக இருந்தாலும், அனைத்தும் ஏற்பாடுகளாகவே உள்ளன. நமது வாழ்க்கையை மேம்படுத்தவும், எளிதாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஏற்பாடுகள் நமது வாழ்க்கையைக் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் அல்ல. இந்த அளவுக்கு நாம் அறிந்திருந்தால், உங்களால் அவைகளை செயல்படுத்த முடிந்தால் நாம் தேர்வு செய்திருக்கும் ஏற்பாடுகள் எல்லாமே சரியானதுதான். அந்த ஏற்பாடுகள் வேலை செய்யவில்லை என்றால், என்ன செய்வது என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் நம்பிக்கை மற்றும் விருப்பத்துடன்தான் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன, அதைச் சிக்கலாக்குவதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றும் நீங்கள் திருமணமானவர் என்றால், நீங்கள் அடையாளப்பட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அது அழகாக இருப்பது அடையாளத்தின் காரணத்தால் அல்ல. அடையாளத்தினால் அது அவலட்சமாகத்தான் மாறும். நமது வாழ்க்கையை மேம்படுத்தவும், அழகாக்கவும் நாம் செய்துள்ள ஒரு ஏற்பாடு இது என்று நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் அது சிறப்பாக வேலை செய்யுமா? அல்லது நீங்கள் மிக மோசமாக அடையாளப்பட்டால் அது சிறப்பாக வேலை செய்யுமா? நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக வேலை செய்யும்.