சிறப்புக் கட்டுரை

கர்மாவின் முக்கிய அம்சம் ஏன் கடந்த காலத்தைப் பற்றியது அல்ல என்பதற்குப் பின்னால் உள்ள ஆச்சரியமான உண்மை

வாழ்க்கையில் உங்களுடன் பயணிக்கும் கண்ணுக்குத் தெரியாத, உங்கள் முதுகில் சுமக்கும் ஒரு பையாக கர்மாவைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு மர்மமான கையால் அது கனமான அல்லது இலகுவான பையாக கட்டப்பட்டுள்ளது. சுமைகளைச் சாமர்த்தியமாகக் குறைப்பது எப்படி என்பதை வெளிப்படுத்தும் சத்குரு, வாழ்க்கைப் பயணத்தை, கஷ்டப்பட்டு இழுத்துச் செல்லும் ஒரு பயணமாக உணர்வதிலிருந்து, அழகாகவும் இலகுவாகவும் நகரும்
ஒரு பயணமாக மாற்றுகிறார்.

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, நாம் ஹடயோகா ஆசனங்களைப் பயிற்சி செய்யும்போது நமது கர்ம கட்டமைப்பை எரிக்கிறோமா, அல்லது அது இயற்கையாகவே காலப்போக்கில் தானாக அழிகிறதா?

சத்குரு: ஆசனங்கள் கர்மக் கட்டமைப்பை எரிக்கிறதா?

உங்கள் கர்ம சேமிப்புக் கிடங்கின் அடிப்படைகள்

நீங்கள் அனைவரும் வெவ்வேறு அளவிலான உடல் வலிமையைக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், சுமந்து செல்ல வேண்டியவை நிறைய உள்ளன என்றும் வைத்துக்கொள்ளலாம். உங்களது சுமந்து செல்லக்கூடிய திறனை பொறுத்து அல்லது உங்கள் உடல் அல்லது அமைப்பு எந்த அளவு தயாராக உள்ளது என்பதைப் பொறுத்து நீங்கள் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்வீர்கள்.

இதேபோல், நீங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சக்திரீதியாகவும் உங்கள் உடலமைப்பைத் தயார்செய்தால், அது அதிக கர்ம சுமைகளைச் சுமக்க முடியும். இப்படித்தான் சஞ்சித கர்மா, இந்த வாழ்க்கைக்கு ஒதுக்கப்பட்ட கர்மாவாகிய பிராரப்த கர்மாவாக மாறுகிறது. உங்களுக்குள் உள்ள புத்திசாலித்தனம் உங்கள் சக்திநிலையின் வலிமை மற்றும் கர்ம கையிருப்பு ஆகியவற்றை மதிப்பிட்டு, இந்த வாழ்க்கையில் எவ்வளவு கர்மாவைக் கையாள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.

நீங்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், சக்திரீதியாகவும் உங்கள் உடலமைப்பைத் தயார்செய்தால், அது அதிக கர்ம சுமைகளை சுமக்க முடியும்.

ஒவ்வொரு சங்கராந்தியிலும், உத்தராயணத்திற்கும் தட்சிணாயணத்திற்கும் இடையிலான மாற்றத்தின் போதும் இந்த ஒதுக்கீட்டை மாற்றியமைக்க முடியும். யோகிகள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதிக கர்மாவை எடுத்துக்கொள்கிறார்கள். தீவிரமான சாதனாவில் இருப்பவர்களுக்கு, ஒவ்வொரு சந்திர சுழற்சியும், குறிப்பாக அமாவாசை நாள், கூடுதல் கர்மாவை எடுத்து அதை விரைவில் தீர்த்துவிட ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மிகச் சிறியவர் ஏன் அதிக சுமையைச் சுமந்தார்

ஈசாப்பின் மிக அழகான கதை ஒன்று உள்ளது. ஒரு மன்னர் பயணம் செய்யும்போது, ஒவ்வொருவரும் ஒரு சுமையைச் சுமக்க வேண்டியிருந்தது. ஈசாப் சிறியவராகவும் அவ்வளவு வலு இல்லாதவராகவும் இருந்தார். ஆனால் அவர் அதிக சுமையை எடுத்துக்கொண்டார். மற்றவர்கள் அனைவரும் இந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள இலகுவான சுமையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒருநாள், அவர்கள் அவரிடம், "நீங்கள் ஒரு சிறிய மனிதர்-நீங்கள் ஏன் அதிக சுமையை எடுத்துக்கொண்டீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு அவர் "உணவுப் பொட்டலங்கள் தான் அதிக சுமையாக இருந்தது. அதனால் நான் அதை எடுத்துக்கொண்டேன். ஆனால் ஒவ்வொரு வேளை உணவின்போதும், இந்த சுமை குறைந்துகொண்டே வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக, நான் வெறுங்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

உடல் செயல்பாடு இந்த வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் கர்மாவின் அளவான பிராரப்தாவில் ஒதுக்கப்பட்ட அனைத்து சக்தியையும் எரிக்க வேண்டும்.

உடல் செயல்பாடு இந்த வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் கர்மாவின் அளவான பிராரப்தாவில் ஒதுக்கப்பட்ட அனைத்து சக்தியையும் எரிக்க வேண்டும். நோக்கம் என்னவென்றால், உங்களால் முடியும்போதே மேலும் மேலும் சுமைகளை எடுக்க உடலமைப்பைத் தயார்செய்வது, இதனால் பின்னர், நீங்கள் சுமக்க எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் நடந்து செல்வீர்கள், மேலும் வாழ்க்கை அழகாக மாறும். அதனால்தான் நமது தினசரி அட்டவணைகள் இப்போது அவை இருக்கும் விதத்தில் உள்ளன.

சக்தி ஒதுக்கீடு

உங்களுக்குள் உள்ள புத்திசாலித்தனம், உடலின் செயல்பாடு, மனதின் செயல்பாடு, உணர்ச்சி மற்றும் உள் நிர்வாகத்திற்கு என்று குறிப்பிட்ட அளவு சக்தியை ஒதுக்குகிறது. உங்கள் சக்தியில் நாற்பது சதவீதம் உடல் செயல்பாட்டிற்கும், நாற்பது சதவீதம் உணர்ச்சி செயல்பாட்டிற்கும், பத்து சதவீதம் அறிவுசார் செயல்பாட்டிற்கும், பத்து சதவீதம் உள் நிர்வாகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம்; அப்படி என்றால்  நீங்கள் எப்போதும் அதீத சுறுசுறுப்பாகவும், உணர்ச்சிவசப்பட்டும், தொடர்ந்து குழப்பத்திலும் சிக்கிக்கொள்வீர்கள்.

நீங்கள் கர்மாவை எரிக்க வேண்டிய அவசியமில்லை. இயற்கையாகவே வாழ்க்கை செயல்முறையானது வெறுமனே வாழ்வதன் மூலமாகவே அதை விடுவிக்கிறது.

இதுபோன்ற ஒருவரை நான் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட அளவிலான செயல்பாட்டில் அவர்களை ஈடுபடுத்த விரும்புகிறோம், இதன் மூலம் சில மாதங்களுக்குப் பிறகு, உங்களால் அமைதியாக உட்கார முடியும். பெரும்பாலான மக்கள் போதுமான சக்தியைச் செலவழிக்கும் வரை அவர்களால் அமைதியாக உட்கார முடியாது. செயல்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பிராரப்த கர்மாவில் உள்ள சக்தியை எரிப்பது அவசியம். நீங்கள் சேமிப்புக்கிடங்கில் இருந்து (சஞ்சித கர்மா) எடுத்து, இப்போதே பெரிய சுமைகளை எரித்தால், பின்னர் அவை தீர்ந்தவுடன், அது மிகவும் இலகுவாக இருக்கும்.

நீங்கள் கர்மாவை எரிக்க வேண்டிய அவசியமில்லை. இயற்கையாகவே வாழ்க்கை செயல்முறையானது வெறுமனே வாழ்வதன் மூலமாகவே அதை விடுவிக்கிறது. புதிய சுமைகளைச் சேர்க்காமல் இருப்பது எப்படி என்பதை மட்டுமே நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் மிக கனமான மூட்டையை எடுத்தாலும், அது ஒரு உணவு மூட்டை என்றால், அது போய்விடும். வழியில் குப்பைகளை எடுத்துக்கொள்வதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டாம்; வெறுமனே ஏற்கனவே உள்ள சுமைகளை எரிக்கலாம். கர்மாவை எரிப்பது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. புதிய கர்மாவை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதற்கு உங்களுக்குப் பயிற்சி தேவைப்படலாம்.

கர்மத்தை எளிதாக்குவதற்கு யமம் மற்றும் நியமம்

யோகாவின் அடிப்படை அம்சங்களான யமம் - நியமம், அதைக் கவனித்துக்கொள்கின்றன. நீங்கள் யமம் - நியமத்தைப் பின்பற்றினால், நீங்கள் எந்த புதிய கர்மாவையும் சேர்க்கமாட்டீர்கள். யமம் - நியமம் என்பது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதற்கான எளிய முறையாகும். பழைய கர்மா பிரச்சனை அல்ல - அது எரியும் அல்லது நாம் அதைக் கரைப்போம். பிரச்சனை என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து புதிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்கிறீர்கள். இரண்டு வாரங்களுக்கு நீங்கள் எந்த புதிய குப்பைகளையும் சேர்க்கவில்லை என்றால், நீங்கள் நிம்மதியாகவும், இலகுவாகவும், சுதந்திரமாகவும் உணருவீர்கள்.

நீங்கள் யமம் - நியமத்தைப் பின்பற்றினால், நீங்கள் எந்த புதிய கர்மாவையும் சேர்க்கமாட்டீர்கள்

இது விடுமுறையில் இருப்பது போன்றது. விடுமுறையில் இருப்பது என்றால் வேறொருவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை; நீங்கள் வெறுமனே படிக்கிறீர்கள், நீந்துகிறீர்கள், நடக்கிறீர்கள், மற்ற விஷயங்களையும் செய்கிறீர்கள். மேலும் நீங்கள் விடுமுறையில் இருப்பதால், எந்த முட்டாள்தனத்தையும் சேர்க்கவில்லை என்பதால் நீங்கள் அற்புதமாக உணர்கிறீர்கள்.

ஒரே இடத்தில் சுழலும் கர்ம சக்கரத்திலிருந்து தப்பித்தல்

நீங்கள் ஈஷா யோகா செய்தால், உங்கள் முழு வாழ்க்கையும் விடுமுறை நாட்களாகும் என்று நான் சொல்லி வந்திருக்கிறேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் விடுமுறை நாட்களாக இருக்கும்போது, நீங்கள் எதையும் சேர்க்கமாட்டீர்கள். விடுமுறையின்போது உங்கள் மனதில் "நான் என்ன பெறமுடியும்" என்ற எண்ணம் இல்லை. உங்கள் மனதில் இருந்து "நான் என்ன பெறமுடியும்" என்ற எண்ணத்தை நீங்கள் கைவிட்டால், உங்கள் மன செயல்பாடு மற்றும் கர்ம சித்திரவதையில் 90 சதவீதம் மறைந்துவிடும். மீதமுள்ளவற்றைச் சாதனா மூலம் கையாள்வது மிகவும் எளிதானது.

தொடர்ந்து புதிய குப்பைகளை சேர்க்கும்போது சாதனா செய்வதென்பது, ஒரு ட்ரெட்மில் சாதனத்தில் ஓடுவது போன்றது. நீங்கள் நல்ல உடற்பயிற்சியைப் பெறுவீர்கள், ஆனால் நீங்கள் எங்கும் சென்றடைய மாட்டீர்கள். ட்ரெட்மில் என்பது ஒரு வாகனம் அல்ல; அது உங்களுக்கு உடற்பயிற்சியை மட்டுமே தருகிறது, ஆனால் உங்களை எங்கும் கொண்டுசெல்லாது. பலர் இந்த வகையான யோகாவைச் செய்கிறார்கள் - அவர்கள் உடற்பயிற்சியை மட்டுமே பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் எங்கும் செல்லப்போவதில்லை. நீங்கள் உங்கள் கயிறுகளை அவிழ்க்காவிட்டால், உங்களால் எங்கும் செல்ல முடியாது.

உங்கள் மனதில் இருந்து "நான் என்ன பெறமுடியும்" என்ற எண்ணத்தை நீங்கள் கைவிட்டால், உங்கள் மன செயல்பாடு மற்றும் கர்ம சித்திரவதையில் 90 சதவீதம் மறைந்துவிடும்.

நீங்கள் தொடர்ந்து அந்த கர்மாவில் முதலீடு செய்வதால் மட்டுமே உங்கள் கர்மா உங்கள் மீது அதிகாரம் செய்ய முடிகிறது. நீங்கள் அதில் முதலீடு செய்யவில்லை என்றால், அது வெறுமனே அங்கே உள்ளது. நீங்கள் அதைத் தொலைவில் வைத்து, உங்களுக்கு தேவையானபோது மட்டும் அதைப் பயன்படுத்தினால், ஞாபகசக்தி என்பது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நீங்கள் அதில் சிக்கிக்கொண்டால், அது உங்களைச் சித்திரவதை செய்யும்.

கர்மா என்பது ஒரு கெட்ட விஷயமாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. அது உங்களுடன் சிறிது பயணிக்கட்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால், புதிய கர்மாவைச் சேர்க்கக்கூடாது. தற்போதுள்ள கர்மா எப்படியும் வாழ்க்கை செயல்முறையில் எரிந்துவிடும்.