காலங்களுக்கு அப்பாற்பட்ட ஞானம்

கிருஷ்ணனின் காப்பியக்கதைகள்: அன்பு, பக்தி, மற்றும் தர்மம் – ஒரு ஆய்வு

இந்தியாவின் இதிகாச பாரம்பரியத்தின் வளமிகுந்த வண்ணக்கலவையில், பக்தி, அன்பு, மற்றும் தர்மத்தின் ஒரு உரிமை சாசனமாக, வாழ்க்கைக்கு உரிய புதிரின் வடிவமான கிருஷ்ணனைப்போல் சில மனிதர்கள் ஆழமான அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றனர். வறிய நிலையிலிருந்த சுதாமாவுடனான அவனது இளமைக்கால நட்பிலிருந்து, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் கையறு நிலையிலிருந்த அர்ஜுனனுக்கு ஆழ்ந்த வழிகாட்டலை வழங்கியது வரை, கிருஷ்ணனது வாழ்க்கை, வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில் காலத்தை வென்ற நுண்ணறிவின் உண்மையான மதிப்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. கிருஷ்ணனின் இணையற்ற மதிநுட்பம் மற்றும் அன்பு, மற்றும் முழுமையான ஈடுபாடு மூலமாக வழிநடத்தும் அவனது மரபை வரையறுக்கும் அத்தியாயங்களுக்குள் இந்த ஆய்வானது பயணிக்கிறது.

அன்பைத் தழுவிக்கொண்டு, தர்மத்தின் வழி நடத்தல்

சத்குரு: கிருஷ்ணன் அவனைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் இருந்து அபரிமிதமான அன்பையும், புகழ்ச்சியையும் அனுபவித்தான், ஆனால் அபாயம் மற்றும் ஏமாற்றத்தின் தீவிரமான கணங்களையும் அவன் எதிர்கொண்டான். பெரும்பாலான மனிதர்களை உடைந்துபோகச் செய்யும்படியான சூழ்நிலைகளில் இருந்தபோதிலும், இந்த எல்லா அனுபவங்களும் எளிமையானவை என்பதைப்போல் அவன் அவற்றினூடாகக் கடந்து சென்றான். மக்களின் எல்லாவிதமான அன்பின் வடிவங்களையும் அவன் ஏற்றுக்கொண்டான், ஆனால் அவன் தன் கருத்தைத் தெரிவிக்கும் எந்த வாய்ப்பையும் ஒருபோதும் தவறவிடவில்லை.

கிருஷ்ணன், தான் அதிகமாக மதித்ததை எப்போதும் தெளிவுபடுத்தினான். அவன் அரசர்களிடையே பழகினாலும், அவனுக்கு இராஜாங்கங்கள் தடையின்றி வழங்கப்பட்டாலும், அவன் ஒருபோதும் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அவர்களது இராஜாங்கங்களில் தர்மத்தை நிலைநிறுத்துவது எப்படி என்று அவன் அவர்களுக்கு வழிகாட்டினான். மக்கள் தன்னை எவ்வளவு ஆழமாக உணர்ந்தனர் என்பதுதான் கிருஷ்ணனுக்கு மிகவும் நேசமாக இருந்ததேயன்றி, மக்கள் என்ன வழங்கினார்கள் என்பது அல்ல.

அறுசுவை விருந்துகளைவிட ஒரு ஏழை மனிதனுடைய உணவின் மதிப்பு

அவனுக்குப் பெருமதிப்பு வாய்ந்தது என்னவென்பதில் அவனுடைய பகுத்துணர்வைச் சித்தரிக்கும் எண்ணற்ற கதைகள் உள்ளன. சுதாமா அல்லது குசேலர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சாந்திபானியின் குருகுலத்தில் கிருஷ்ணன் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது, சுதாமா என்ற பெயர்கொண்ட ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு குசேலன் என்றொரு பட்டப்பெயர் இருந்தது. ஏனென்றால் அவன் மிகவும் மெலிந்தவனாக, ஏழ்மையான உடைகளில், மிகவும் வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தான். ஆனால் அவன் ஒரு புத்திகூர்மையான சிறுவனாக இருந்தான், கிருஷ்ணன் அவனது குணத்தை சட்டென்று அடையாளம் கண்டுகொண்டான். அவர்களுக்கிடையே ஒரு ஆழமான புரிதல் இருந்தது.

பல ஆண்டுகள் கழிந்தன, ஆனால் குசேலனின் வறுமைக்கு விடிவு ஏற்படவில்லை. அவன் அதிக ஏழ்மையிலேயே உழன்றான். அவனது மனைவி அவனை உசுப்பினாள், “உங்களது நண்பர் கிருஷ்ணன் மிகப்பெரிய செல்வந்தனாகியுள்ளார். நீங்கள் அவரிடம் சென்று ஏன் உதவி கேட்கக்கூடாது?” குசேலன் பதில் கூறினான், “எனது நண்பன் எனக்கு மிகவும் அன்பானவன். அவனிடம் சென்று என்னால் எதையும் கேட்கமுடியாது.” ஆனால் அவள் வற்புறுத்தினாள். இறுதியாக, குசேலன், “குறைந்தபட்சம் நான் சென்று, கிருஷ்ணனைச் சந்திக்கிறேன், அவனைக் கண்டு மிகப்பல வருடங்கள் ஆகிவிட்டன”, என்று எண்ணமிட்டான். ஒரு குடும்பஸ்தனாக, கிருஷ்ணனுக்காக ஒரு அன்பளிப்பு எடுத்துச் செல்ல விரும்பினான். அவனிடம் எதுவுமில்லை, ஆனால் வீட்டில் ஒரு கைப்பிடி அவல் இருந்தது, அதனால் அதை அவனது உடையில் முடிந்துகொண்டு, கிருஷ்ணனைக் காணச் சென்றான்.

கிருஷ்ணருக்கு மிகவும் ப்ரியமானது மக்கள் என்ன வழங்குகிறார்கள் என்பது பற்றியதல்ல, அவர்கள் எவ்வளவு ஆழமாக உணர்ந்துள்ளனர் என்பதேயாகும்.

கிருஷ்ணன் வாழ்ந்துவந்த துவாரகையின் அரண்மனை வாயிலுக்கு குசேலன் வந்தபோது, காவலாளிகள், அவனது ஏழ்மையான நிலையையும், உடைகளையும் கண்டு, அவனை விலக்கித் தள்ள முயற்சித்தனர். ஆனால் அவன் கூறினான், “தயவுசெய்து கிருஷ்ணனிடம் சென்று சுதாமன் வந்துள்ளதாகக் கூறுங்கள். அவர் என்னைக் காண விரும்பினால், நான் இங்கிருப்பேன்; இல்லையென்றால், நான் சென்றுவிடுவேன்.”

சுதாமன் வந்திருக்கிறான் என்ற இந்த வார்த்தை கிருஷ்ணனைச் சென்றடைந்த கணமே, கிருஷ்ணன் வாயிலுக்கு ஓடோடி வந்துசேர்ந்தான். அவனைக் கண்டதும் மார்புறத் தழுவிக்கொண்டு, உள்ளே அழைத்துச் சென்று, அவனைத் தனக்குரிய ஆசனத்தில் அமரச் செய்து, கண்ணீர் வழிந்தோட, சுதாமனது பாதங்களை அவன் தனது கரங்களால் கழுவினான். எங்கிருந்தோ வந்திருந்த இந்த பிச்சைக்காரனைப் போன்ற மனிதன், கிருஷ்ணனால் இவ்வளவு மரியாதையுடன் நடத்தப்படுவதை மக்களால் நம்பவே முடியவில்லை.

பிறகு கிருஷ்ணன் கேட்டான், “எனக்காக என்ன கொண்டு வந்துள்ளாய் குசேலா?” அவனுக்குத் தெரியும் குசேலன் வெறுங்கையுடன் வந்திருக்கமாட்டான் என்பது. இந்த ஒரு கைப்பிடி அவலை, அரண்மனையில் வாழ்ந்துகொண்டிருந்த கிருஷ்ணனுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு, குசேலன் மிகவும் தயக்கமும், சங்கோஜமும் அடைந்தான். ஆனால் கிருஷ்ணன் வற்புறுத்தினான். பிறகே குசேலன், தான் கொண்டுவந்திருந்த இந்த கைப்பிடி அவலை வழங்கினான். அதனை கிருஷ்ணன் பெரும் ஆனந்தத்துடன் சாப்பிட்டவாறு கூறினான், “என் வாழ்க்கையிலேயே நான் சாப்பிட்ட மிகச் சிறந்த உணவு இதுதான்!” இதைப்போன்ற எண்ணற்ற சம்பவங்கள் உண்டு.

கிருஷ்ணனின் தலைவலிக்கான கோபிகையரின் ஆச்சரியமூட்டும் நிவாரணம்

அப்படிப்பட்ட மற்றொரு சம்பவம் கிருஷ்ணனின் பிறந்த தினத்தன்று நிகழ்ந்தது. ஒரு பெரும் கொண்டாட்டத்திற்காக, நடனம், இசை, மற்றும் கோலாகலங்களுடன் பரவலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததுடன், ஒரு பெரும்திரளான மக்கள் கூடியிருந்தனர். ஆனால் கிருஷ்ணன் வீட்டிலேயே அமர்ந்துகொண்டு, எதிலும் பங்கேற்பதில் நாட்டமில்லாமல் இருந்தான். வழக்கமாக, எல்லாவிதமான கொண்டாட்டத்திலும் ஆர்வத்துடன் வேடிக்கை செய்பவன், ஆனால் அன்று, அவனுக்கு எதனாலோ விருப்பம் இல்லாமல் இருந்தான்.

ருக்மிணி அவனருகில் வந்து, “உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? என் பிரபு, நீங்கள் ஏன் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை?” என்று கேட்டாள். “ஓ, எனக்கு ஒரே தலைவலியாக உள்ளது”, என்றான் கிருஷ்ணன். அவனுக்கு உண்மையிலேயே தலைவலி இருந்ததா அல்லது அது வெறும் பாசாங்கா என்பது நமக்குத் தெரியாது. ருக்மிணி கூறினாள், “மருத்துவரை அழைப்போம்.” மருத்துவர் வந்தார். அவர்கள் பல்வேறு மருந்துகளை ஆலோசித்தனர், ஆனால் கிருஷ்ணன், “இல்லை, இவைகளெல்லாம் எனக்கு வேலை செய்யாது” என்று கூறிவிட்டான். அதற்குள், சத்யபாமா, நாரதர் அடங்கலாக மற்றும் பலரும் கூட்டமாகக் கூடிவிட்டனர்.

கிருஷ்ணனுக்குத் தலைவலி என்பதை கேட்டபோது, அவர்கள் மிகவும் வருத்தமடைந்து அவனைக் கேட்டனர், “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” கிருஷ்ணனும், “என்னை உண்மையாகவே நேசிக்கும் யாராவது ஒருவர் தனது பாதத்திலிருந்து சிறிதளவு தூசியை எடுத்து, என் தலை மீது அதைத் தேய்க்கவேண்டும், அப்போது அது சரியாகிவிடும்,” என்று பதில் கூறினான். உடனே சத்யபாமா, “இது என்ன முட்டாள்தனம், நான் உங்களை நேசிக்கிறேன், ஆனால் நான் என் பாதத் தூசியை எடுத்து உங்கள் தலையில் வைப்பது என்பது நடக்காது,” என்று ருக்மிணி அழுதாள். “அது ஒரு அவச்செயல், எங்களால் இதைச் செய்யமுடியாது.”

கிருஷ்ணர் தன் வாழ்நாள் முழுவதும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தனக்கு மிகவும் மதிப்பானதையே எப்போதும் வெளிப்படுத்தினார்

நாரதர், “நீங்கள் பகவானாக இருக்கிறீர்கள். இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, இது என்ன பொறி? என் பாதத் தூசியை எடுத்து உங்கள் தலையில் வைத்தால், ஒருவேளை நான் என்றென்றைக்கும் நரகத்தில் எரிந்துபோவேன். அப்படிப்பட்ட விஷயங்களை நான் செய்ய விரும்பவில்லை”, என்று கூறி மறுத்துவிட்டார். இந்த விஷயம் பரவியது. அனைவரும் அஞ்சினர்: “நாங்கள் அப்படிப்பட்ட விஷயங்களைச் செய்யப்போவதில்லை. நாங்கள் கிருஷ்ணனை நேசிக்கிறோம், ஆனால் அப்படி ஒரு விஷயத்தைச் செய்வதால் நாங்கள் நரகம் செல்ல விரும்பவில்லை.”

கிருஷ்ணன் வருவதற்காக அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர், ஆனால் அவன் அங்கே தலைவலியுடன் அமர்ந்துகொண்டிருந்தான். கிருஷ்ணனுக்கு ஒரு தலைவலி ஏற்பட்டு, அவன் குணமடைவதற்கு அவனை நேசிக்கும் ஒருவரது பாதத்தூசி தேவைப்படுகின்ற இந்தச் செய்தி பிருந்தாவனத்துக்குச் சென்றது. கோபியருக்கு இது தெரியவந்தபொழுது, ராதை அவளது சேலைத் தலைப்பினை மண்ணில் விரிக்க, எல்லா கோபியரும் அதன் மீது கட்டற்று நடனமாடினர். பிறகு, அவர்கள் தூசி நிரம்பிய துணியினை கிருஷ்ணனிடம் கொண்டுசேர்க்குமாறு நாரதரிடம் கொடுத்தனர். கிருஷ்ணன் அதை அவனது தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டதும், குணமடைந்தான்

கிருஷ்ணர் தன் வாழ்நாள் முழுவதும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தனக்கு மிகவும் மதிப்பானதையே எப்போதும் வெளிப்படுத்தினார்

அழிவிலிருந்து தர்மத்துக்கு மாறுகையில்

குருக்ஷேத்திரப் போர் நிகழவிருந்தபோது, ஏறக்குறைய துணைக்கண்டத்தின் ஒவ்வொருவரும் எதிரெதிர் அணியினரில் ஒருவருடன் கூட்டணியாக இருந்த நிலையில், அது எதிரணி அழியும்வரை போர் என்பதைப்போல இருந்தது. போரைத் தவிர்ப்பதற்கு சாத்தியமான எல்லாவற்றையும் கிருஷ்ணன் செய்திருந்தான், ஆனால் அது தவிர்க்க இயலாததாக ஆனபோது, அவன் முழுமையாக அதில் கவனம் செலுத்துபவனாக இருந்தான்.

அர்ஜுனன், அவனுக்கு நிகழ்ந்திருந்த எல்லா அநியாயங்களுக்கும் பழிதீர்க்க விரும்பி, வெறுப்பு மற்றும் கோபத்தினால் எரிந்துகொண்டிருந்தவன், இந்தச் சூழ்நிலையில் நெஞ்சுறுதி இழந்தான். அவனுக்கு முன்பாக அணிவகுத்து நின்றிருந்த மக்களை – அவனது தாயாதிகள், பங்காளிகள், அவனது மாமன்கள், அவனது குரு, அவனது மிக நெருக்கமான பாட்டனார்கள், பெருமதிப்பிற்குரிய பீஷ்மர், பல நண்பர்கள், மற்றும் எண்ணற்ற வீரர்கள் – பார்த்ததில், அவன் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டான். அவர்களை அவன் பார்த்தபோது, அவன் இதயம் பலமிழந்தது, “இந்த எல்லோரையும் என்னால் எப்படிக் கொல்லமுடியும்? எனக்கு என்ன ஆகும்?”

போரைத் தவிர்ப்பதற்கு சாத்தியமான எல்லாவற்றையும் கிருஷ்ணன் செய்திருந்தான், ஆனால் அது தவிர்க்க இயலாததாக ஆனபோது, அவன் முழுமையாக அதில் கவனம் செலுத்துபவனாக இருந்தான்.

மறுபுறத்தில், துரியோதனன், பாண்டவர்களைக் காட்டிலும் மிகப்பெரிய சேனையை சேகரித்திருந்தபோதிலும், அவனும் நம்பிக்கை இழந்திருந்தான். இருதரப்புக்கும் பொதுவான குரு துரோணாச்சாரியாரும், அவனது பெரிய பாட்டனார் பீஷ்மரும், பாண்டவர்களை மிகவும் நேசித்ததுடன், அவனது சேனையிலிருந்த மற்ற பலரும் பாண்டவர்களுடன் ஆழமான நட்பும் வைத்திருந்ததை அறிந்திருந்ததால், இவர்கள் அனைவரும் போரின் முக்கியமான கட்டத்தில் தன்னைக் கைவிட்டுவிடுவார்களோ என்று துரியோதனன் ஆழ்ந்த கவலையில் இருந்தான். ஆகவே துரியோதனன் ஒருவிதமான குழப்பத்திலும், நம்பிக்கையிழந்த நிலையிலும் இருந்தான்; அர்ஜுனன் வேறொரு விதமான நம்பிக்கையின்மையில் இருந்தான்.

இரண்டு தரப்பிலும் மிகுந்த நம்பிக்கையின்மை மற்றும் விரக்தி நிலவிய இந்தக் கணத்தில் கீதை பேசப்பட்டது. கீதையின் நுணுக்கங்களை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், இந்தச் சூழலைப் புரிந்துகொள்வது முக்கியம்.