நடப்புகள்

ஈஷாவில் 2024 குரு பௌர்ணமி கொண்டாட்டம்: பக்தி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான ஓர் உன்னதத் திருநாள்

ஆதிகுருவான ஆதியோகி 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, தன் ஞானத்தை மனிதகுலத்திற்கு வழங்கினார். அது மனிதர்கள் பிரபஞ்சத்தையும் படைப்பின் மூலத்தையும் உணரும் விதத்திலும், புரிந்துகொள்ளும் விதத்திலும் ஒரு பரிமாண மாற்றத்திற்கு வழிவகுத்தது. அவர் படைப்பின் தனித்த ஒரு துண்டுக்கும், அதன் மூலத்திற்கும் இடையே தன்னையே ஒரு பாலமாக்கினார். படைப்பின் மூலத்தைத் தொடுவதற்கு, நீங்கள் அந்தப் பாலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசையும், ஆசியும்.  – சத்குரு

உலகின் முதல் யோகியான ஆதியோகி, முதல் குருவாக மாறி, தனது முதல் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலைப் பரிமாறத் தொடங்கிய புனிதமான நாளை, நாம் குரு பௌர்ணமியாகக் கொண்டாடுகிறோம். இந்நிகழ்வு இருப்புநிலை, மனித உடலமைப்பு மற்றும் ஆன்மீகப் பரிணாமம் பற்றிய முற்றிலும் புதியதொரு புரிதலை வழங்கியது.

ஈஷா யோக மையத்தில் இந்த ஆண்டு ஜூலை 21 அன்று நடைபெற்ற கொண்டாட்டங்கள், குருபூஜை மற்றும் யோக சாதனாவுடன் ஆரம்பமாகின. முதல்முறையாக வழங்கப்படும் இத்தகைய நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள், அருளை கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சாதனாவில் ஈடுபட்டனர். அன்றைய தினம் குருவாசகத்தில் சத்குரு இவ்வாறு கூறியிருந்தார்: "குரு பௌர்ணமி ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல - அது பரிணமிக்க வேண்டுமென எடுத்துக்கொள்ளும் உறுதி. உங்கள் வாழ்வை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நீங்கள்தான் நிர்ணயிக்கிறீர்கள். உச்சபட்ச விடுதலையை உணர்வீர்களாக. குருவின் அருள் உங்கள்மீது இருக்கிறது. அன்பும் ஆசியும்."

இந்த சிறப்பான தருணத்தில், தெய்வீகத்தின் உச்சபட்ச வெளிப்பாடாகவும், உயிருள்ள ஒரு குருவாகவும் விளங்கும் தியானலிங்கத்திற்கு பக்தர்கள் கைலாச தீர்த்தத்தையும் லிங்கஜோதியையும் அர்ப்பணித்தனர்.

பருவ மழை பொழிந்துகொண்டிருந்த வேளையில், ஈஷா யோக மையத்தை பாரம்பரிய அலங்காரங்கள் அழகூட்டின; மகிழ்ச்சியான முகங்கள் எங்கும் காணப்பட்டன. இவையெல்லாம் இணைந்து பக்தியுணர்வையும் கொண்டாட்ட சூழலையும் எதிரொலிப்பதாய் அமைந்தன.

ஈஷா பிரம்மச்சாரிகள் ஒரு சிறப்பு டமரு சேவையை வழங்கினர். சூழ்நிலையை உயிரோட்டமாக வைத்திருக்கும் நோக்கத்தில், யோக மையத்தில் டமரு இசை தினசரி அர்ப்பணிக்கப்படுகிறது.

கிராமப்புற சமூகங்களின் பக்தியின் வெளிப்பாடாக, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை எடுத்துவந்து தியானலிங்கத்திற்குப் பால் அர்ப்பணம் செய்தனர்.

மாலைநேரக் கொண்டாட்டத்தின் போது, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் பக்தி கீர்த்தனங்களையும் பாடல்களையும் வழங்கினர். அந்த இசையதிர்வுகள் ஆதியோகி ஆலயம் முழுவதும் பக்தி அலையாகப் பரவியது. “சரணம் ஸ்மரணம்” போன்ற சில கீர்த்தனங்கள் மக்களின் இதயங்களில் ஆழமான பக்தி உணர்வைத் தூண்டிய அதேவேளையில், “ஷிவ ஷிவா” போன்ற கீர்த்தனங்கள் அனைவரையும் எழுந்து நடனமாடச் செய்தன.

இரவு நேரம் வந்ததும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் சக்தியூட்டப்பட்ட நீர்நிலைகளான தீர்த்தகுண்டங்களில் ஒரு தனித்துவமான பூதசுத்தி செயல்முறையில் பங்கேற்றதன் மூலமும், சிறப்பு நள்ளிரவு நாத ஆராதனையில் பங்கேற்றதன் மூலமும், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடங்களை ஆழமாக உணர்ந்து அனுபவிப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பைப் பெற்றனர்.

பெங்களூருவில் உள்ள சத்குரு சந்நிதியில் நடந்த குரு பௌர்ணமி விழாவிலும் கொண்டாட்ட உணர்வும், பக்தி உணர்வும் ஒருங்கே பிரதிபலித்தன.

குரு பௌர்ணமி கொண்டாட்டம் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, உற்சாகமான செயல்முறைகள் மற்றும் அர்ப்பணங்கள் மூலம் ஆதியோகியின் ஞானத்தைக் கொண்டாடி, தங்களுக்குள் பரிணமித்து, ஆழமான தொடர்பைப் பெற வழிவகுத்தது.