வாழ்க்கையின் சூட்சுமங்கள்

சத்குருவுடன் கூட்டு: 7% முழுவதுமாக மாறும்பொழுது

குருக்ஷேத்திரப்போருக்குச் சற்று முன்னர், பக்தி மற்றும் அருளின் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக, பாண்டவர்கள் கிருஷ்ணனின் பலம் மிகுந்த படையைவிட அவரது தனிப்பட்ட அருகாமையை வேண்டினர். இந்தப் பழமையான மதிநுட்பத்திலிருந்து எழுந்த, ஈஷாங்கா 7% கூட்டு என்ற கருத்தாக்கத்தை சத்குரு தெளிவுபடுத்துகிறார். அபரிமிதமான அருளைப் பெறுவதற்காக தனிமனிதர்கள் தங்களின் 7% நிதி ஆதாரத்தை அர்ப்பணிக்கின்றனர். இந்த அருளானது, ஒருவரது உலகாதாய முயற்சிகளை பெரிதும் தளர்த்தி, உச்சபட்ச நல்வாழ்வுக்கான கவனத்தை அதிகரித்து, பொருள்தன்மையான நோக்கங்களை இலகுவாக்குவதை, சத்குரு விளக்குகிறார். இந்த தனித்துவமான கூட்டு எப்படிப் பரந்து விரிவடைய முடியும் என்பதைக் கண்டுகொள்ள மேலும் வாசியுங்கள்.

கேள்வியாளர்: சத்குருவுடன் 7% கூட்டு என்ற ஒன்று இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இது எதைப் பற்றியது? தயவுசெய்து உங்களால் விளக்கமுடியுமா?

கிருஷ்ணனின் கண்ணயரும் சவாலும், ஒரு விதிவசமான தேர்ந்தெடுத்தலும்

சத்குரு: மகாபாரதத்தில் நடந்தேறிய அழகான ஒரு நிகழ்வு உண்டு. குருக்ஷேத்திரப் போர் நெருங்கியதால், இரண்டு எதிரணியினரான கௌரவர்களும், பாண்டவர்களும், தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒவ்வொரு இராஜாங்கத்துக்கும் சென்று பரப்புரை செய்து கொண்டிருந்தனர். அது வாழ்வு மற்றும் மரணம் குறித்த விஷயமாக இருந்தது. ஒவ்வொரு படைவீரரும் பெருமதிப்பு பெற்றிருந்த நிலையில், அவர்களால் இயன்ற அளவுக்குப் படை திரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தனர். இரண்டு தரப்பினரும் வலிமையான படைகளைத் திரட்டியிருந்தனர்.

இந்தக் கூட்டுறவு வெற்று வார்த்தைகள் அல்ல.

கிருஷ்ணன், ஒரு அரசனாக இல்லையென்றாலும், பல படையெடுப்புகளில் பங்கேற்றிருந்த நன்கு பயிற்சி பெற்ற 10,000 க்கும் அதிகமான யாதவ சேனைக்கு தலைமை ஏற்றிருந்தான். கிருஷ்ணன் எதிர்காலத்தை அறிந்திருந்த நிலையில் இருப்பினும் அவன் எப்போதும் லீலா வினோதனாகையால், ஒருநாள் மதியவேளையில், உறக்கத்தில் இருப்பதுபோல் பாவனை செய்துகொண்டிருந்தான்.

கௌரவர்களில் மூத்தவன், துரியோதனன், அந்த அறைக்குள் நுழைந்தபோது, கிருஷ்ணன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையோடு உறக்கத்தில் இருப்பதைக் கண்டான். அவன் அமர்ந்தவாறு காத்திருந்தான், அப்போது கிருஷ்ணனது பாதங்கள் தன்னை நோக்கி இருப்பதைக் கவனித்தான். சட்டென்று துரியோதனனுக்குள், “இவன் ஒரு அரசன்கூட இல்லை, வெறும் மாடு மேய்ப்பவன். நான் ஒரு பேரரசன். நான் ஏன் இவனது பாதங்களின் கீழ் அமர்ந்திருக்கிறேன்?” என்ற எண்ணம் தோன்ற, அவன் மெல்ல எழுந்து, கிருஷ்ணனின் தலைமாட்டில் சென்று அமர்ந்துகொண்டான்.

சிறிது நேரம் கழித்து, யுதிஷ்டிரன் வந்தான். அவன் கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவனது பாதத்தின் அருகில், அதை ஒரு ஆசிர்வாதமாகக் கருதி அமர்ந்துகொண்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு, கிருஷ்ணன் அப்போதுதான் கண் விழிப்பது போன்ற பாவனையில் தனது கண்களைத் திறந்தான். அவன் தனக்கு நேர்முன்பாக, பாதத்தினடியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனைக் கண்டதும், “ஓ, யுதிஷ்டிரா, நீ வந்துவிட்டாயா!” என்றான். அவர்கள் மேலும் பேசுவதற்கு முன், துரியோதனன் தனது வருகையை உணருமாறு செய்ததால், கிருஷ்ணன், “ஓ, துரியோதனா, நீயுமா? உங்கள் இருவரையும் எது இங்கே வரவழைத்துள்ளது?” என்றான்.

இருவருமே, வரவிருக்கும் போரில் கிருஷ்ணனின் உதவியை நாடி வந்திருப்பதாகக் கூறினர். கிருஷ்ணன் ஒரு தேர்ந்தெடுத்தலை முன்வைத்தான்: “உங்களில் ஒருவர் எனது படையைப் பெற்றுக்கொள்ள முடியும், மற்றவர் என்னை அருகில் வைத்துக்கொள்ளலாம், ஆனால் நான் போரிடமாட்டேன். நான் வெறுமனே உங்களுடன் வருவேன். மேலும், முதலில் யுதிஷ்டிரன் மீது என் பார்வை விழுந்த காரணத்தால், தேர்ந்தெடுக்கும் உரிமையை அவன் முதலில் பெறுகிறான்.” துரியோதனன் எதிர்த்தான், “இங்கே நான்தான் முதலில் வந்தேன்! முதல் வாய்ப்பை நீ எனக்குத்தான் அளிக்கவேண்டும்.” கிருஷ்ணன் மறுத்தபடி, யுதிஷ்டிரனிடம் தேர்வு செய்யுமாறு கூறினான்.

யுதிஷ்டிரன் கூறினான், “பகவானே, நீங்கள் எங்களுடன் இருப்பதை மட்டும் நாங்கள் வேண்டுகிறோம். படை குறித்து எனக்கு கவனம் இல்லை.” துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பாண்டவர்கள் முட்டாள்கள் என்பது அவனுக்குத் தெரியும், ஆனால் பயிற்சி பெற்ற 10,000 வீரர்களுக்குப் பதிலாக, ஒரு நபரைத் தேர்வு செய்யும் அளவுக்கான முட்டாள்கள் என்று அவன் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை. மேலும் இந்த ஒருவன் போரிடக்கூட மாட்டானாம். ஒரு முட்டாள்தனமான தேர்ந்தெடுத்தலாகத் தோன்றியது – ஆனால் அந்தத் தேர்ந்தெடுத்தல்தான், போரின் முடிவை எல்லா விதத்திலும் மாற்றிவிட்டது.

சிவன்: எல்லாவற்றையும் மாற்றும், உறக்கத்தில் இருக்கும் கூட்டாளி

நான் சிவனை எனது கூட்டாளி ஆக்கிக்கொண்டேன். சிவன் எதுவும் செய்வதில்லை; எல்லா வேலையும் செய்வது நான்தான், அவன் எதுவும் செய்வதில்லை. ஆனால் ஒவ்வொரு கணமும் எனது கூட்டாளியாக அவனை வைத்திருப்பதால், வாழ்க்கை ஆசிர்வாதமும், அழகும் மிகுந்ததாகியுள்ளது. நீங்கள் ஒரு சரியான கூட்டு வைத்துக்கொள்வதற்கு நேரம் வந்துவிட்டது, ஏனென்றால் உங்களது வியாபாரம், சமூகம், பொருளாதாரம், குடும்பம், மற்றுமுள்ள செயல்பாடுகள் மிக எளிதாகவும், அருளுடனும் நிகழ்ந்தால், உங்களது உச்சபட்ச நல்வாழ்வுக்காக நீங்கள் அதிக நேரம் ஒதுக்குவீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.

அருள் என்பது ஆன்மீக நல்வாழ்வுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது குறித்து நான் எப்போதுமே சிறிது கடுமையாக இருப்பது வழக்கம், ஆனால் இப்போது எல்லாத் தளங்களிலும் என்னையே அர்ப்பணிப்பதற்கு நான் தொடங்குகிறேன், ஏனென்றால் மக்கள் பிழைப்பு செயல்முறையில் அதிகம் பிணைக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவு அருளுடன் உங்களது பொருளாதார, சமூக, மற்றுமுள்ள செயல்பாடுகளை நாம் தளர்வாக்கி, சுமூகமாக்கினால் உங்களது உச்சபட்ச நல்வாழ்வின் மீது நீங்கள் போதிய கவனம் செலுத்துவீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.

ஈஷாங்கா 7%: உச்சபட்ச நலனுக்கான பொருளியல் ஆசிர்வாதம்

இந்தக் கூட்டுறவு வெற்று வார்த்தைகள் அல்ல. கௌதம புத்தர், 100 சதவிகித கூட்டு வேண்டுமென்று இவ்வாறு கூறினார், “நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை – உங்கள் வீடு, உங்கள் பணம், மற்றும் உங்கள் குடும்பம் – எல்லாவற்றையும் என் முன்பாக வைத்துவிடுங்கள், உங்களுக்குத் தேவையானதை நான் தருவேன்.”

பொருளியல் நோக்கங்களில் இருந்து பெருமளவு உங்கள் நேரமும், சக்தியும் விடுவிக்கப்பட்டால், உங்களது உச்சபட்ச நல்வாழ்வின் மீது நீங்கள் கவனம் செலுத்துவீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.

ஒரு வருடத்தின் 365 நாட்களில் நான் முன்மொழிவது என்னவென்றால், நீங்கள் 25 நாட்கள், 13 மணி நேரங்கள், 12 நிமிடங்கள், மற்றும் 12 நொடிகளை – துல்லியமாக ஒரு வருடத்தின் 7 சதவிகிதத்தை – இந்த கூட்டுறவுக்கு நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். உங்கள் வியாபாரம், உங்கள் வருமானம், மற்றும் உங்களது இடத்தின் 7 சதவிகிதம் என்னுடையதாக இருக்கவேண்டும். 100 சதவிகிதம் கேட்கும் கௌதமரைப்போல் அல்ல நான். ஆனால், நான் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறேன் என்றால், நீங்கள் எனக்கு 7 சதவிகிதம் இடம் அளித்தால், எப்படியும் மீதமுள்ள 93 சதவிகிதத்திலும்கூட நான் இடம்பெற்றுவிடுவேன்.

உங்கள் வாழ்க்கையின் பொருளியல் அம்சங்களை நீங்கள் அருளுடன் கையாள்வதற்காக, இந்த வாய்ப்பை நாம் வழங்குகிறோம். பொருளியல் நோக்கங்களில் இருந்து பெருமளவு உங்கள் நேரமும், சக்தியும் விடுவிக்கப்பட்டால், உங்களது உச்சபட்ச நல்வாழ்வின் மீது நீங்கள் கவனம் செலுத்துவீர்கள் என்று நான் எண்ணுகிறேன். அதனால்தான் நாம்
ஈஷாங்கா 7% வழங்குகிறோம்.