ஈஷா சமையல்

ராகி இடியாப்பம், தேங்காய் காய்கறி சொதியுடன்
4 பேருக்கு பரிமாறும் அளவு

தேவையான பொருட்கள்

சொதிக்காக:

4 கப் தேங்காய் பால்

100 கிராம் பாசிப்பருப்பு

1½ மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்

50 கிராம் கேரட்

50 கிராம் உருளைக்கிழங்கு

50 கிராம் முருங்கைக்கீரை

200 கிராம் தக்காளி

1 சிட்டிகை மஞ்சள்

1 சிட்டிகை மிளகாய் தூள்

1 சிட்டிகை இஞ்சி விழுது

உப்பு சுவைக்கேற்ப

ராகி இடியாப்பத்திற்கு:

400 கிராம் வறுத்த ராகி மாவு

200 கிராம் வறுத்த அரிசி மாவு அல்லது 200 கிராம் அரிசியை ஊறவைத்து, காயவைத்து, அரைத்து, வறுத்து நாமே மாவைத் தயாரிக்கலாம்

1¾ மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்

உப்பு சுவைக்கேற்ப

செய்முறை

ராகி இடியாப்ப மாவு தயாரித்தல்:

  • நீங்கள் சொந்தமாக அரிசி மாவு தயாரிப்பதற்கு, அரிசியை 2 முதல் 3 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டி அரிசியை சிறிது உலர வைக்கவும். பிறகு, அதை நைசாக அரைத்து, சல்லடையில் சலித்து, பின்னர் அதை வறுத்து, நிழலில் உலர வைக்கவும்.
  • ராகி மாவையும் அரிசி மாவையும் ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு அதில் உப்பு போட்டு கலக்கவும்.
  • வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, தேங்காய் எண்ணெயையும் சேர்த்து பிசைந்து மென்மையான மாவை உருவாக்கவும். அது கையில் ஒட்டாமலும் அதேசமயம் வறண்டு போகாமலும் இருப்பதை உறுதிசெய்யவும்.
  • சீரான மென்மையான கலவையைப் பெறுவதற்கு நன்கு பிசையவும்.

இடியாப்பம் தயாரித்தல்:

  • இடியாப்பக் குழாயில் மாவை நிரப்பி, நெய் தடவிய இட்லி தட்டில் அல்லது ஸ்டீமர் தட்டில், மாவைப் பிழிந்து மெல்லிய நூடுல்ஸ் போன்ற இடியாப்ப இழைகளை உருவாக்கவும்.
  • மிதமான சூட்டில் 12-15 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். அவை மென்மையாகவும் அதேசமயம் மாவாக இல்லாமலும் இருக்கவேண்டும். சிறிது நேரம் ஆறவைத்து பரிமாறவும்.

சொதி தயாரித்தல்:

  • பாசிப்பருப்பைக் கழுவி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு 15-20 நிமிடங்கள் நன்கு வேகவைக்கவும்.
  • பருப்பு மலர்ந்ததும் அதில் நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்கீரையை சேர்த்து வேகவைக்கவும்.
  • சிறிய துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் சேர்க்கவும். இவற்றுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளைச் சேர்த்து வேக வைக்கவும்.
  • இறுதியாக தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
  • தேங்காய் எண்ணெயில் இஞ்சி, கொத்தமல்லி தழை சேர்த்து தாளிக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ராகி இடியாப்பத்தை சொதியுடன் பரிமாறி ருசித்து மகிழுங்கள்.

உங்களிடம் இடியாப்பக் குழாய் இல்லையென்றால், இதே பொருட்களைப் பயன்படுத்தி ராகி கொழுக்கட்டைகளைச் செய்து, இந்த பாரம்பரிய உணவை நீங்கள் அனுபவிக்கலாம்.

ராகி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

400 கிராம் வறுத்த ராகி மாவு

200 கிராம் வறுத்த அரிசி மாவு

1 சிட்டிகை கடுகு

1 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு

2 சிவப்பு மிளகாய், சிறிய துண்டுகளாக்கவும்

1 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்

1 மேசைகரண்டி பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்

1 சிறிய கைப்பிடி நறுக்கிய கறிவேப்பிலை

1¾ மேசைகரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நெய்

உப்பு சுவைக்கேற்ப

செய்முறை

மாவு தயார் செய்வது:

  • ஒரு பெரிய கிண்ணத்தில் வறுத்த ராகி மாவையும் அரிசி மாவையும் கலக்கவும்.
  • ஒரு பெரிய கடாயில், 1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் அதில் சிவப்பு மிளகாய் துண்டுகளைச் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு நறுக்கிய முட்டைக்கோஸையும் கறிவேப்பிலையையும் சேர்க்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். லேசாக வதக்கவும்.
  • இதனுடன் 500 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக மாவுக் கலவையைச் சேர்த்து, ஒரு மாவுப் பதத்தை உருவாக்கும் விதமாகக் கிளறவும். மிகவும் மென்மையாகவோ அல்லது மிகவும் வறண்டதாகவோ இல்லாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். சிறிதுநேரம் ஆறவிடவும்.

கொழுக்கட்டை பிடித்தல்:

  • உங்கள் கைகளால் சிறிது மாவை எடுத்து நீள் உருளை வடிவத்தில் பிடிக்கவும்.

உருண்டைகளை வேகவைத்தல்:

  • வேகவைக்கும் தட்டில் தேங்காய் எண்ணெயை லேசாக தடவவும்.
  • பிடித்த மாவு உருண்டைகளை அந்த தட்டில் வைக்கவும்,
  • அவை ஒன்றையொன்று தொடாமல் இருப்பதை உறுதிசெய்யவும். 15-20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும், மாவு இறுக்கமாக மாறும்வரை வேகவைக்கவும். ஒரு குச்சியை வைத்துக் குத்தி பரிசோதித்துப் பாருங்கள்; குச்சியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக வெளிவர வேண்டும். அப்போது எடுத்துவிடலாம். சொதியுடன் சூடாக பரிமாறி மகிழுங்கள்.