
முன்பு எப்போதையும்விட சமூக ஊடகத்தின் ஈர்ப்பு நமது குழந்தைகளின் மீது மிக வலிமையாக இருக்கும் ஒரு காலகட்டத்தில், அதன் பரந்துபட்ட தாக்கத்தினை எதிர்கொள்வதற்கு பெற்றோர்கள் புதிய தந்திரங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். உண்மையல்லாத ஆனால் உண்மைபோல் தோற்றமளிப்பதில் இருந்து, இயற்கையின் வலிமை மற்றும் வீரியத்தை நோக்கி இளம் மனங்களை திசைதிருப்பி, நடைமுறையானதும், தாக்கம் நிறைந்ததுமான வழிகளில் அவர்களை ஈடுபடுத்தும் வழிகளை சத்குரு வெளிப்படுத்துகிறார். நமது குழந்தைகள் நிஜ வாழ்க்கை அனுபவங்களுடன் மீள்தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்தும் மின்னணு யுகத்துக்கான குழந்தை வளர்ப்பு நுணுக்கங்களை அறிந்துகொள்ளும் ஒரு பயணத்துக்குத் தயாராகுங்கள்.
கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. பெற்றோர்கள் என்ற நிலையில், சமூக ஊடகங்களின் எதிர்மறை விளைவுகளில் இருந்து எங்கள் குழந்தைகளை எங்களால் எப்படிப் பாதுகாக்க முடியும்?
சத்குரு: சமூக ஊடகம் இல்லாமல் உங்கள் குழந்தைகள் வளர்வதை நீங்கள் விரும்பினால், அவர்கள் ஆறு வயதை எட்டியதும், அவர்களை எங்களிடம் அனுப்பலாம். சமூக ஊடகம் போன்ற விஷயங்களில் ஈடுபடாமல், வாழ்க்கை குறித்த வித்தியாசமான உணர்வுடனும், வாழ்தலுக்கான உற்சாகத்துடனும் குழந்தைகளை வளர்த்து வருகிறோம். ஆனால், சமூக ஊடகம் ஒட்டுமொத்தமாகவே எதிர்மறையாக இருக்கவேண்டிய அவசியமில்லை – அதுவே அதிகபட்ச மக்களைச் சென்றடைவதற்கான ஒரு அபாரமான தொழில்நுட்பமாகவும், சாத்தியமாகவும் இருக்கமுடியும். நானே சமூக ஊடகத்தில் இருக்கிறேன், ஆனால் நான் ஏதோ ஆதரவு அல்லது அங்கீகாரத்தைத் தேடுவதன் காரணத்தினால் அதில் அல்ல. யார் அங்கீகரித்தாலும், அங்கீகரிக்கவில்லை என்றாலும் நான் என்ன கூறவேண்டுமோ அதைக் கூறுகிறேன். விளைவுகளைக் கருத்தில்கொள்ளாமல், உண்மை என்று நான் பார்ப்பதைக் கூறுகிறேன். இதுதான் நான் எடுத்துள்ள நிலைப்பாடு: ஒவ்வொருவரையும் சந்தோஷப்படுத்துவதைவிட, எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவது நீண்ட கால அளவில் மிகவும் முக்கியமானது.
உண்மையானதாக நீங்கள் பார்ப்பவைகளை நீங்கள் கூறும்போது, அது உடனடியாக மதிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் ஐந்து, பத்து அல்லது ஒரு நூறு வருடங்களில் அது புரிந்துகொள்ளப்படலாம். வரலாற்றுரீதியாக, ஒரு குறிப்பிட்ட ஆழமான தன்மையில் இருந்த பெரும்பாலான மனிதர்கள், அவர்களது மரணத்துக்கு நீண்ட காலத்திற்குப் பிறகுதான் அங்கீகரிக்கப்பட்டனர். சமீபகாலம் வரைக்கும் அப்படித்தான் உலகம் இருந்துள்ளது. இன்றைக்கு, சமூக ஊடகத்தின் காரணமாக, வாழ்ந்துகொண்டிருக்கும்போதே ஒரு குறிப்பிட்ட அளவுக்கான ஏற்றுக்கொள்ளுதல் இருக்கிறது.
சமூக ஊடகம் தன்னளவில் ஒரு தீய சக்தியல்ல. நாம் அதை எப்படி, எந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்துகிறோம் என்பதையே அது சார்ந்திருக்கிறது. சமூக ஊடகத்தினால் குழந்தைகள் (மற்றும் பெரியவர்கள்) தாக்கத்துக்கு உள்ளாவது ஏனென்றால், அவர்கள் வாழ்க்கையில் நிகழும் மிக மகிழ்ச்சியான ஒன்றாக அது இருக்கலாம். நீங்கள் செய்யக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், கைப்பேசியின் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட உங்களுடன் இருப்பதை அதிக மகிழ்ச்சியான ஒன்றாக அவர்கள் உணரும்படி உங்களையே நீங்கள் உருவாக்கிக்கொள்ளுங்கள். மக்கள் என்னிடம் கேட்கின்றனர், “சத்குரு, என் குழந்தையை எப்படி என்னை ஆச்சரியத்துடன் பார்க்கச் செய்வது?” நான் கூறினேன், “அவர்கள் மனதில் நீங்கள் ஒரு சூப்பர்ஸ்டாராக இருக்கவேண்டும்.”
அதற்காக செய்யவேண்டிய அனைத்தையும் நீங்கள் செய்யவேண்டும். நடனமாடுவது அவர்களின் கண்களுக்கு உங்களை ஒரு சூப்பர்ஸ்டாராக்கும் என்றால், நீங்கள் நடனமாடவேண்டும். அது பாடலாக இருந்தால், நீங்கள் பாடவேண்டும். அவர்கள் சூப்பர் என்று நினைப்பது எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் செய்யவேண்டும். ஒரு இனப்பெருக்கச் செயல்பாட்டைவிட, உலகத்துக்கு ஒரு புதிய உயிரைக் கொண்டுவரும் பொறுப்பின் ஒரு பகுதியாகிய இது மிகமிக முக்கியமானது. மற்ற உயிரினங்கள் அவைகளின் சந்ததியை பிரசவித்ததும், ஆரம்ப கட்டங்களில் உணவை மட்டும்தான் அளிக்கவேண்டியுள்ளது.
மற்ற எல்லா உயிரினங்களும் அதன் வளர்ப்பின் தன்மையைப் பொருட்படுத்தாமல், அது எப்படி வளரவேண்டுமோ அப்படி இயல்பாகவே வளர்கின்றன. ஆனால் மனிதக் குழந்தைகள் பல விஷயங்களில் பெருமளவு உருவாகாத நிலையில் வருகின்றனர். இதுதான் ஒரு மனிதரின் நேர்த்தி - நாம் விழிப்புணர்வாக நம்மை ஒரு குறிப்பிட்ட வழியில் உருவாக்கிக்கொள்ள முடியும். பிறப்பின்போது, ஒரு சில அம்சங்கள் மட்டும் தீர்மானிக்கப்படுகின்றன; எஞ்சியுள்ள மற்றவை கவனிப்பிற்கும், தாக்கத்துக்கும் திறந்ததன்மையில் உள்ளன. அதன் விளைவாக, ஒரு மனிதரைப் பெற்றெடுப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பாக உள்ளது.
சிறு வயதிலிருந்தே கூடுமானவரை குழந்தையை இயற்கை மூலக்கூறுகளுடன் ஈடுபடுத்துவது நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான விஷயம். அவர்களை திரையரங்கம் அல்லது ஷாப்பிங் மால் அழைத்துச் செல்வது, அல்லது தொலைக்காட்சியினைப் பார்ப்பதற்குப் பதில், காட்டில் ஒரு நடையுலாவுக்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு நகரத்தில் வாழ்ந்துகொண்டும், உங்களுக்கு அருகில் காடு எதுவும் இல்லை என்றால், ஆரம்பத்தில் ஒரு செல்லப்பிராணியாக அவர்களுக்கு ஒரு வெட்டுக்கிளியைக்கூட நீங்கள் வாங்கிக் கொடுக்கலாம்.
குழந்தைகள் ஈடுபாடு காண்பிக்கவும், உயிருக்கு பதிலாற்றவும் அறிந்துகொள்வது முக்கியமானது. உங்களிடம் ஒரு செல்லப்பிராணி இருக்குமேயானால், நீங்கள் அவருக்கு கவனம் செலுத்தவேண்டும். அவற்றின் விருப்பு-வெறுப்புகளைப் புரிந்துகொள்வதும், அவற்றுக்கான அனைத்தையும் செய்வதும் அவசியமாகிறது. அது நல்ல உறவுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நல்ல பயிற்சியாக உள்ளது. அதற்கு அதிகமான கூர்மையான கவனிப்பும், ஈடுபாடும் தேவைப்படுகிறது.
இந்த ஈடுபாட்டுடன் குழந்தைகள் வளர்வது அவசியம். வார இறுதியில் குழந்தைகளை ஏதோ ஒரு ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் செல்வதற்குப்பதில், உங்கள் நகரத்துக்கு வெளியில் இருக்கும் இயற்கையான சூழல் அமைந்துள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்குங்கள். நீங்கள் விரியத் திறந்த கண்களுடன் பார்த்தீர்கள் என்றால், அங்கே எண்ணற்ற அளவிலான உயிர்கள் இருப்பதைப் பார்ப்பீர்கள். அது ஒரு வண்டாக இருந்தாலும், ஒரு வெட்டுக்கிளி அல்லது மண்புழுவாக இருந்தாலும் உங்கள் குழந்தை இயல்பாகவே இத்தகைய விஷயங்கள் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள உயிர்களுடன் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தவேண்டும், ஏனென்றால் அதுதான் நீங்கள் உருவாக்கக்கூடிய மிக ஆரோக்கியமான தொடர்பு. குழந்தைகள் உயிர்த்தன்மையானவர்கள், அவர்கள் எப்போதும் உயிர்களுடன் ஈடுபாடும், தொடர்பும் கொள்வதனால் சிறந்து வளர்கின்றனர். தற்போது மனித சமூகம் பெருமளவுக்கு எண்ணங்கள், உணர்ச்சிகள், முன்முடிவுகள், கருத்துகள், தத்துவங்கள், கருத்தாக்கங்கள், மற்றும் நம்பிக்கை முறைகளுடன் ஆழமாக மூழ்கியுள்ளது. பெரும்பாலான மனிதர்களும் இப்படித்தான் ஆகிவிட்டனர், மற்றும் சமூக ஊடகமும் அதிலேயே நிரம்பிக்கிடக்கின்றது. அதற்குப் பதிலாக, குழந்தைகள் உயிர்களுடன் தொடர்புகொள்ள வேண்டும்.
உயிர்களுடன் ஒருவிதமான ஈடுபாடும், தொடர்பும் இருந்துவிட்டால், அதைப்போல் வேறு எதுவும் மகிழ்ச்சியளிப்பதாக இருப்பதில்லை. இளம் வயதிலிருந்தே குழந்தைகள் இதனை உணரும்போது, அவர்கள் எதற்கும் அடிமையாகமாட்டார்கள் என்பதுடன் அவர்கள் வாழ்க்கைக்கும் திறந்த நிலையில் இருப்பார்கள்.