இந்த தொடரில், ஒவ்வொரு மாதமும் ஈஷா பிரம்மச்சாரிகள் அல்லது சந்நியாசிகளில் ஒருவர் தனது சொந்த பின்புலம், பார்வைகள் மற்றும் இந்த புனிதமான “தெய்வீகப் பாதை"யில் பயணிப்பதன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.”
சில நிமிட தாமதம்
ஜனவரி 1996ல் எனக்கு 18 வயதாக இருந்தபோது நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். என் தோழி ஒருவர் யோகா வகுப்பில் கலந்துகொள்ளப் போவதாக சொன்னார். பள்ளியில் படிக்கும்போது நான் தடகளப் போட்டிகள் மற்றும் கைவினை வேலைகளில் ஈடுபட்டிருந்தேன், ஆனால் கல்லூரியில் விளையாடவோ கைவினையில் ஈடுபடவோ எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. நான் அப்போது செய்த கைவேலை என்றால் தவளையையும் கரப்பான்பூச்சியையும் ஓணானையும் ஆய்வுக்கூடத்தில் வெட்டிப் பார்த்தது மட்டும்தான்! படிப்பைத் தவிர எதுவும் இல்லாததால் கல்லூரி சுவாரசியமின்றி இருந்தது.
எனவே டாட்டாபாத் மையத்தில் நிகழ்ந்த அதிகாலை நேர யோகா வகுப்பில் என் தோழியுடன் கலந்துகொள்ள முடிவுசெய்தேன். வகுப்பின் மூன்றாம் நாளில் நாங்கள் சில நிமிடங்கள் தாமதமாக சென்றோம். அப்போது அங்கிருந்த தன்னார்வத் தொண்டர்கள் எங்களை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள், காலை 10 மணி வகுப்புக்கு வரச்சொன்னார்கள். இடைப்பட்ட நேரத்தில் எங்கு செல்வதென்று தெரியாமல் நிகழ்ச்சி நடக்கும் அறைக்கு வெளியிலேயே அமர்ந்து காத்திருந்தோம்.
இந்த அனுபவத்தால் அடுத்த நாள் நேரத்திற்கு செல்லவேண்டும் என்று உறுதியாக இருந்தோம் - காலை 3 மணிக்கே எழுந்து நாங்களே சாப்பாட்டை சமைத்து எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அதிகாலை இருட்டில், தெருவிளக்குகள் இல்லாத பாதையில், நேரத்திற்கு பேருந்தைப் பிடிப்பதற்காக 2-3 கிலோமீட்டார் நடந்து சென்றோம். பேருந்திலிருந்து இறங்கி யோகா நிகழ்ச்சி நடக்கும் வகுப்பறையின் கதவுகள் திறக்கும்முன் டாட்டாபாத் மையத்தை அடைந்தோம். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சொன்ன நேரத்திற்கு ஒரு இடத்தில் இருப்பது, தீவிரமாக இருப்பது, ஏதோவொன்றை நிகழச்செய்யும் உறுதியுடன் இருப்பது போன்ற சில விஷயங்களை இது எனக்கு உணர்த்தியது.
புதிய கதவுகள் திறந்தபோது
தீட்சை நாள் என் பிறந்தநாளாக அமைந்தது. அன்று வித்தியாசமான ஏதோவொன்று நடக்கக்கூடும் என்று என் தோழி சொன்னார். அதேபோல வெள்ளை உடைகளும் காவி தலைப்பாகையும் அணிந்திருந்த சத்குருவைக் கண்டேன். ஒரு குறிப்பிட்ட தியானத்தில் ஆழ்ந்தபோது, என்னுள் ஏதோவொன்று உடைந்தது போன்ற உணர்வில் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனது, அது என்னை ஆழமாகத் தொட்டது. நான் சாதாரணமாக அழமாட்டேன், ஆனால் முதல்முறையாக கட்டுப்படுத்த முடியாத ஒரு அழுகை பீறிட்டு வந்தது. என்னையும் மீறி சிறிது நேரம் அழுதேன். அன்று முதல் எனக்குள் மெதுவாக மாற்றங்கள் நடக்கத் துவங்கின. நான் மென்மையாக நடக்க ஆரம்பித்தேன், அனைத்தையும் கவனிக்கத் துவங்கினேன், ஊர்ந்துசெல்லும் சிறு உயிர்களையும் மிதிக்காமல் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.
கொண்டாட்டமான தன்னார்வத் தொண்டு
வகுப்பில் கலந்துகொண்ட பிறகு நான் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கினேன் - திங்கள் முதல் வெள்ளி வரை டாட்டாபாத் மையத்தில் மாலை வேளைகளில் வழிகாட்டுதலுடன் வழங்கப்பட்ட தியான நிகழ்ச்சிகளுக்கு உதவுவதற்கு அங்கு செல்வேன், சனி ஞாயிறில் ஆசிரமத்திற்கு செல்வேன். நான் பல நாட்கள் கல்லூரி வகுப்புகளை கட் அடித்துவிட்டு தன்னார்வத் தொண்டு செய்வேன் - (என் தந்தை கண்டுபிடிக்க முடியாதவாறு) என் கல்லூரிக்குச் செல்லும் திசையில் முதல் பேருந்தில் ஏறுவேன். பிறகு இடையில் இறங்கி ஆசிரமத்தின் திசையில் செல்லும் வேறொரு பேருந்தில் ஏறுவேன். ஒருமுறை நான் இன்டர்னல் பரிட்சை ஒன்றைத் தவறவிட்டேன், அப்போது அது ஆசிரமத்தில் இருந்த ஒருவருக்குத் தெரியவந்து ஒரு பிரம்மச்சாரி என்னைத் திட்டினார். அதற்குப் பிறகு நான் எவரிடமும் எதையும் சொல்வதை நிறுத்திவிட்டேன்!
சத்குருவின் இருப்பில் உணர்ந்த தீவிரம்
அந்த ஆண்டில் அதற்குப் பிறகு ஆசிரமத்தில் நடந்த பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அந்த அனுபவம் மிகவும் தீவிரமானதாக இருந்தது. பெரும்பாலான தியானங்களில், குருபூஜை செய்யப்படும் மேடையை நோக்கி என்னை ஏதோவொன்று வீசியதைப் போல இருந்தது. எனக்கே தெரியாமல் அங்கு விழுந்து அழுதுகொண்டிருப்பேன்.
இப்போது தியானலிங்கம் இருக்கும் இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஒரு தற்காலிக ஓலைக் கொட்டகையில் நடந்த சம்யமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அந்த நாட்களில் சம்யமா நிகழ்ச்சி மிகவும் தீவிரமாக இருந்தது. அது பிரதிஷ்டைக்கு முந்தைய காலமாக இருந்ததாலோ என்னவோ, அவர் சம்யமா நிகழ்ச்சியை மிகத்தீவிரமாக வைத்திருந்தார். அவர் அனைவரையும் சக்திநிலையின் உச்சத்தில் இருக்கச்செய்தார்.
நிகழ்ச்சியின்போது என்னால் அசைவின்றி அமர முடியவில்லை. ஒவ்வொரு தியானம் துவங்கியபோதும் நான் இங்கும் அங்கும் குதித்துக்கொண்டு இருந்தேன். ஒருமுறை சத்குரு வந்து என் முதுகுத்தண்டில் தட்டினார். அதற்குப் பிறகு நான் தியானத்தில் அசைவின்றி அமர்ந்திருந்தேன். ஒருமுறை ஒரு தியானத்தின்போது கண்மூடியிருந்தபோதே மேடையை நோக்கி இழுக்கப்பட்டதை உணர்ந்தேன். ஒரு பாம்பைப் போல ஊர்ந்துசென்று சத்குரு அமர்ந்திருந்த மேடையின் மீதே ஏறி சத்குருவின் பாதங்களைப் பற்றிக்கொண்டு அழுதுகொண்டிருந்தேன். என்னை தன்னார்வத் தொண்டர்களால் தடுக்க முடியவில்லை என்று பிறகு தெரிந்துகொண்டேன். சத்குரு, நான் சற்று நேரம் அங்கு அமர்ந்திருக்க அனுமதித்தார். பிறகு அவர் தன் உள்ளங்கையை என் தலைமீது வைத்தார். அப்போது ஏற்பட்ட தாங்கமுடியாத ஒரு உணர்வால் நான் அங்கிருந்து உருண்டு கீழே தரையில் விழுந்துவிட்டேன். என்னால் வெகுநேரத்திற்கு என் உடலை அசைக்க முடியவில்லை, கண்களைத் திறக்க முடியவில்லை, எதுவும் செய்ய முடியவில்லை.
ஆசிரியர் பயிற்சி
1997ல் சத்குரு அறிவித்த 2-மாத ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சியில் நான் சேர்ந்திட விரும்பினேன். ஆசிரியர் பயிற்சிக்கான நேர்க்காணலில் சத்குரு என்னிடம், “நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டார். “நான் முழுநேரமாக வர விரும்புகிறேன்” என்றேன். அவர் “முழுநேரமாக என்றால் என்ன?” என்று குறும்புத்தனமாகக் கேட்டார். நான் பிரம்மச்சரியம் எடுக்க விரும்புவதைச் சொன்னேன். எனக்கு அப்போது 19 வயது. அவர் சிரிக்கத் துவங்கிவிட்டார். அவர் கண்களில் விளையாட்டுத்தனம் ததும்ப, “சரி, ஆசிரியர் பயிற்சிக்கு வா,” என்றார்.
அந்நாட்களில் ஆசிரியர் பயிற்சி மிகவும் கடுமையாக இருக்கும், அதே சமயத்தில் கொண்டாட்டமாகவும் இருக்கும். ஆரம்பத்தில் வகுப்பின் தர்க்கரீதியான அம்சங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்நாட்களில் ஒரு பெண் அனைவருக்கும் முன்னால் நின்று ஆன்மீக செயல்முறையை இந்த அளவு தர்க்கப்பூர்வமாக பரிமாறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆசிரியர் பயிற்சி நடக்கும்போது அந்த நாட்களில் பெரும்பாலான நேரம் சத்குரு எங்களுடன் இருப்பார். குறிப்பாக பெண்களுக்கு ஒவ்வொரு படியிலும் உதவுவார் - நாங்கள் ஏதோவொரு செயல்முறையில் அடுத்த படியை எடுக்க சிரமப்பட்டால் அவர் உதவிசெய்வார்.
ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு நான் சத்சங்கம், குழந்தைகளுக்கான யோகா வகுப்பு மற்றும் 13-நாள் யோகா வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தேன். 2001ல் எனக்கு பிரம்மச்சரிய தீட்சை வழங்கப்பட்டது.
கிராமப் புத்துணர்வு இயக்கம்
2003ல் கிராமப் புத்துணர்வு இயக்கத்தைப் பற்றி சத்குரு அறிவித்தபோது, நானும் அதன் அங்கமானேன். கிராம மக்களுக்கு நடத்தப்படும் ஆறு நாள் யோகா வகுப்புகளை கவனித்து அதன்பிறகு நானும் கிராமங்களில் யோகா வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். கிராம மக்கள் பலருக்கு அப்போது ஈஷாவைப் பற்றி எதுவும் தெரியாது, ஆனால் அந்த ஆறு நாட்களுக்கு அவர்களுடைய வீட்டில் நாங்கள் தங்குவதற்கு அனுமதித்தார்கள்.
கிராம மக்கள் அதிகப்படியான உடல்செயலில் ஈடுபட்டிருந்ததால், வகுப்புகளில் அவர்களுடைய உடல் உறுதியையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் கண்டு வியந்தேன். சூரிய நமஸ்காரம் செய்யும்போது அவர்களால் சுலபமாக வளைய முடிந்தது, நெற்றி முழுங்கால்களைத் தொட்டது. பெண்களுமே உறுதியாகவும் துணிச்சலாகவும் இருந்தார்கள். யோகா நிகழ்ச்சிகளில் விளையாடப்படும் ஒரு விளையாட்டில், எதிரணியைச் சேர்ந்தவர் தொடும்முன் கைக்குட்டையை எடுத்துக்கொண்டு தன் பக்கத்திற்கு ஓடவேண்டும். அந்த விளையாட்டை விளையாடும்போது, பெண்களும் கூட சேலையை வரிந்து கட்டிக்கொண்டு ஆண்களைத் துரத்துவார்கள்.
யோகா வகுப்புகள் கிராம மக்களின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின, பலர் குடிப்பழக்கத்திற்கும் பிறவற்றுக்கும் அடிமையாக இருப்பதிலிருந்தும், மனம்சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் மீண்டனர். ஒரு விவசாயியின் பகிர்வு இன்றும் என் நினைவில் நிற்கிறது. அவர் நிறையபேரிடம் கடன் வாங்கியிருந்தார், அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்தார். அந்த சமயத்தில் ஈஷா யோகா வகுப்பிற்கு அறிமுகமானார். அவர் அடுத்து பாவ ஸ்பந்தனா, சம்யமா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவர் சத்குருவின் மீது மிகவும் பக்தியானார். அவர் சம்யமா நிகழ்ச்சியின் நிறைவுநாள் வகுப்பில் கலந்துகொண்ட பிறகு கண்களில் கண்ணீர் மல்க என் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார். “அன்று நடந்த அந்த ஆறு நாள் யோகா வகுப்பில் கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால், கடன் தொல்லையால் தற்கொலை செய்திருப்பேன்,” என்று சொன்னார். தனது பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்குத் தேவையான உறுதியை இந்த வகுப்பு வழங்கியதாகச் சொன்னார். இன்று அவர் நல்ல நிலையில் இருக்கிறார்.
ஒருமுறை ஒரு பள்ளி ஆசிரியர் யோகா வகுப்பில் கலந்துகொண்டார். அவரால் கீழே உட்காரமுடியாது, நாற்காலியில்தான் உட்காரமுடியும். ஆனால் வகுப்பின் மூன்றாவது நாளில் அவர் தரையில் அமர்ந்து பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தார். வகுப்பின் நிறைவு நாளில் அவர் பகிர்ந்துகொண்டபோது, 10 ஆண்டுகளாக அவர் தரையில் உட்கார்ந்ததே இல்லை, பயிற்சிகளை செய்தபிறகுதான் மீண்டும் தரையில் உட்கார முடிந்தது என்று சொன்னார். இப்படி பலர் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை என் கண்முன் கண்டேன்.
கிராம மக்களின் உபசரிப்பும் சிரமங்களும்
6-நாள் வகுப்பில் தினமும் 2 அல்லது 3 வகுப்புகள் நடக்கும், ஒவ்வொரு வகுப்பும் விளையாட்டுடன் துவங்கும். பலசமயம் ஒவ்வொரு வகுப்பு முடிந்தபிறகும் நான் அந்த வகுப்பிற்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் எடுத்து ஓரமாக அடுக்கி வைக்கவேண்டியிருக்கும், வகுப்பு நடக்கும் அந்த இடம் அதற்குப்பிறகு வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும். சிலசமயம் ஒவ்வொரு வகுப்பும் வெவ்வேறு இடங்களில் நடக்கும், அதனால் வகுப்பிற்கான பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொரு இடமாக கொண்டுசெல்ல வேண்டியிருக்கும். அப்படியிருந்தால், சில நேரங்களில் இரண்டு வகுப்புகளுக்கு இடையே இருசக்கர வாகனத்தில் நல்ல வெயிலில் பயணம் செய்ய நேரிடும். வகுப்பு முடிவதற்குள் மிகுந்த பசியாகிவிடும், ஆனால் அந்த எளிய கிராமத்து மக்கள் தங்களிடம் இருக்கும் உணவைப் பரிமாறுவார்கள் - அதில் போதுமான ஊட்டச்சத்து இருக்காது. அதை அவர்கள் மிகுந்த அன்புடன் பரிமாறினாலும் போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாததால் என் உடல் பலவீனமடையத் துவங்கியது.
நான் ஒருநாள் பொருட்களை இடம் மாற்றுவது, வகுப்பு நடத்துவது, அடுத்த வகுப்பில் சேர மக்களை அழைப்பது என்று பல வேலைகள் இருந்ததால், காலையில் என்னுடைய யோகப் பயிற்சிகள் அனைத்தையும் முடிக்க முடியவில்லை. இரவு தங்குமிடத்தை அடைந்ததும், நான் தங்கியிருந்த கிராம வீட்டிலிருந்த அக்காவிடம் பயிற்சிகளை முடித்துவிட்டு உண்கிறேன் என்றேன். எனவே அவர் எனக்கான உணவையும் ஒரு செம்பு தண்ணீரையும் எடுத்து வைத்துவிட்டார். நான் பயிற்சிகளை முடித்துவிட்டு இரவு 11:30 மணி அளவில் சாப்பிட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடித்தேன். அப்போது தண்ணீர் சரியில்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டது, அப்போது செம்பிற்குள் தலைப்பிரட்டைகள் ஒட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்! அடுத்தநாள் சளியும் காய்ச்சலும் வந்தது, மருத்துவர் சிகிச்சையளித்தார். இப்படி பல சிரமங்களை எதிர்கொண்டேன். ஆனால் இந்த வகுப்பு கிராம மக்களின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்க்கும்போது என் உடல்நலப் பிரச்சனைகள் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை.
என் சாதனா என்னை எப்போதும் உயிர்ப்பாக வைத்திருந்தது. என்ன நடந்தாலும் யோகப் பயிற்சிகளை செய்யத் தவறமாட்டேன். ஈஷாவிற்கு வருவதற்கு முன் நான் இந்த அளவுக்கு அதிக உடல்செயல் செய்ததில்லை. கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் திட்டங்களுக்காக செயலாற்றிய பிறகு, நிறைய செயல்களை எடுத்துச்செய்யும் திறமை எனக்கு இருப்பதை உணர்ந்தேன், அது என் எல்லைகளைத் தாண்டி செயல்பட உதவியது.
கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்
நாங்கள் கிராமங்களில் இன்னும் பல விஷயங்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தோம் - மூலிகைத் தோட்டங்கள், நடமாடும் மருத்துவமனைகள், பெண்களுக்கு த்ரோபால், ஆண்களுக்கு வாலிபால். இந்த சிறிய ஆரம்பங்கள், தமிழ்நாட்டில் இன்று நடத்தப்படும் கிராமோத்சவ விளையாட்டுக்கு வழிவகுத்தது.
கிராம மக்களுக்கு விளையாட்டை கற்றுக்கொடுக்க தனியாக எங்களுக்கு நேரம் இருக்கவில்லை, எனவே மாலை நேர யோகா வகுப்பு முடிந்தபிறகு, அவர்கள் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிவந்து விளையாட்டைக் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். கிராமப் பெண்களை விளையாட்டு மைதானத்திற்குக் கொண்டுவருவது சிரமமானது, ஏனென்றால் வழக்கமாக இருட்டியபிறகு பல கிராமங்களில் பெண்களை வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் அவர்களை விளையாட்டு மைதானத்திற்கு வர சம்மதிக்க வைத்தோம். முதியவர்களும் போர்வையை போர்த்திக்கொண்டு, வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு மைதானத்தில் அமர்ந்து விளையாட்டை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆரம்பத்தில் அனைவருக்கும் முன்பாக விளையாடுவதற்கு பெண்கள் தயங்கினார்கள். ஆனால் நான் அவர்களை விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தி விதிமுறைகளை கற்றுக்கொடுத்தேன். நாங்கள் அவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி கொடுத்தபோது ஆண்களையும் பெண்களையும் எதிரெதிர் அணிகளில் விளையாட வைத்தோம். விளையாட்டை ஸ்கோர் வைத்து விளையாட ஆரம்பித்த பிறகு, அவர்களை மைதானத்திலிருந்து வெளியேற வைப்பது கடினமாகிவிட்டது! அவர்கள் மிகவும் உற்சாகமாக விளையாடினார்கள், சிலசமயம் நள்ளிரவு 12 மணி வரை விளையாடினார்கள்.
முதல் கிராமோத்சவம் 2003ல் கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. அதன் அரையிறுதிப் போட்டிக்கு சத்குரு வந்திருந்தார். கிராமப் புத்துணர்வு இயக்கத்தை சுலபமாக செயல்படுத்துவதற்காக கோபிசெட்டிபாளையத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து செயல்பட்டோம். என்னுடைய பிரிவில் பல்வேறு கிராமங்களில் இருந்து 40 விளையாட்டுக் குழுக்கள் இருந்தன. முதல்கட்ட கிராம அளவிலான போட்டிகள், இறுதிச்சுற்று போட்டிகளுக்கு முந்தைய ஒரு வாரத்திற்கு மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றன. வறட்சியால் அவதிப்பட்ட கிராம மக்களின் உற்சாகத்தை மீட்டெடுக்க, சரியான நேரத்தில் அவர்களுக்கு கிராமோத்சவம் கிடைத்தது. அந்த முதல் கிராமோத்சவத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்து உற்சாகமாக விளையாட்டைப் பார்த்தும், அது அவர்களிடத்தில் ஏற்படுத்திய மாற்றமும் இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. விளையாடும்போது அவர்கள் தங்கள் ஜாதி, மதம், இனம் அனைத்தையும் மறந்து ஆனந்தமாக தங்களை முழுமையாக விளையாட்டிற்குள் வீசினார்கள்.
இறுதிச்சுற்றுக்குப் பிறகு மாலையில் சத்குருவுடன் சத்சங்கம் இருந்தது. அவர் மேடையில் ஏறியதும் என் கண்களில் கண்ணீர் பெருகியது. அந்த க்ஷணத்திற்காக நாங்கள் அவ்வளவு வேலைகள் செய்திருந்தோம். ஆரம்பத்தில் சத்குரு எங்களிடம் சொன்னது, “நீங்கள் நிலத்தை மட்டும் தயார்செய்யுங்கள், நான் வந்து விதை விதைப்பேன்.” அது அப்போது எங்கள் கண்முன் நடந்தேறியது.
நடமாடும் மருத்துவமனைகள்
நடமாடும் மருத்துவமனைகள் கிராம மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தன. சாதாரண சளி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற முடியாதவர்களாக இருந்தாலும், பயணம் செய்ய முடியாத முதியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு நடமாடும் மருத்துவமனைகள் ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருந்தன. நடமாடும் மருத்துவமனைகளால் கையாள முடியாத அளவு மோசமான உடல் உபாதைகள் கொண்டவர்களை நகரத்திலுள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல பரிந்துரைப்போம். அங்கு அவர்களுடைய மருத்துவ கட்டணத்தைக் குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தோம்.
கிராமப் புத்துணர்வு இயக்கத்திற்காக நான் சேலம் கிராமப்பகுதியில் இருந்தபோது, வகுப்புகளோடு அங்குள்ள 3 நடமாடும் மருத்துவமனைகளையும் நான் கவனித்துக்கொண்டு இருந்தேன். ஆனால் அதை நடத்துவது சவாலானது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட கிராமத்தில் இருக்கவேண்டும். அதோடு அந்த நடமாடும் மருத்துவமனையின் அங்கமாக செயலாற்றும் 4-5 மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியை கிராமங்களில் ஏற்பாடு செய்யவேண்டும். அதனினும் கடினமானது ஒரு மருத்துவர் வராவிட்டால் அவருக்கு மாற்றுக் கண்டுபிடிப்பது. அடிக்கடி கிராமங்களுக்கு நடுவே அந்த நடமாடும் மருத்துவமனையை பழுதுபார்க்கும் சூழ்நிலை ஏற்படும், எப்படியோ நகரத்திலிருந்து ஒரு மெக்கானிக்கை அங்கே கூட்டிச்செல்ல வேண்டியிருக்கும்.
ஒருமுறை ஒரு நடமாடும் மருத்துவமனையிலிருந்த புரொஜெக்டரை யாரோ திருடிவிட்டார்கள். காவல் நிலையத்தில் நாங்கள் புகார் கொடுத்தபோது, அந்த நடமாடும் மருத்துவமனையில் இருந்த அனைவரையும் விசாரணைக்கு வரச்சொன்னார்கள். அவர்களுடன் நானும் காவல் நிலையத்திற்கு சென்றபோது, அங்கிருந்த அனைவரும் எனக்கு சல்யூட் செய்தார்கள். எனக்கு சங்கோஜமாக இருந்தது. நான் அவர்களுக்கு நமஸ்காரம் செய்தேன். நான் உட்காருவதற்கு நாற்காலியை எடுத்து வைத்தார்கள். அவர்களுக்கு ஒரு பிரம்மச்சாரியின் மீது அந்த அளவு மரியாதை இருந்தது. நாங்கள் இன்ஸ்பெக்டரிடம் பேசியபோது, எங்கள் டிரைவர் 50,000 ரூபாய் மதிப்புள்ள புரொஜெக்டரைத் திருடி அருகிலுள்ள கிராமத்தில் ஒருவருக்கு 3,000 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. எங்களுக்கு புரொஜெக்டர் திரும்பக் கிடைத்தது. அடுத்த ஈஷா யோகா வகுப்பிற்கு பெரும்பாலான காவல்துறையினர் பதிவுசெய்தார்கள்
கின்னஸ் உலக சாதனை
ஒருநாள், பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு ஒரே நாளில் 8 லட்சம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்போவதாக சத்குரு அறிவித்தார். ஒவ்வொரு மையத்திற்கும் 10,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன, 10 மையங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. யாருக்கு மரக்கன்று வழங்கப்பட்டது என்பதையும், அது எங்கு நடப்பட்டது என்பதையும் ஆவணப்படுத்தி, கின்னஸ் சாதனைக்காக பதிவுசெய்து அனுப்பிவைக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு 2 நாட்கள் முன்பு, என் ஒருங்கிணைப்பாளர் என்னை அழைத்து, ஒரு மையத்தில் கூடுதலாக 50,000 மரக்கன்றுகள் நடமுடியுமா என்று கேட்டார். சில விநாடிகள் யோசித்துவிட்டு, “சரி!” என்று சொல்லிவிட்டேன். திடீரென்று என் வாழ்க்கையில் அதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக செயல்படத் துவங்கினேன். மரக்கன்றுகள் ஒருநாள் முன்னதாகத்தான் வந்து இறங்கும், எனவே 50,000 மரக்கன்றுகளையும் ஒரே நாளில் விநியோகம் செய்யவேண்டும். அதை எப்படிச் செய்வது, எப்படி தன்னார்வத் தொண்டர்களை வரவழைப்பது, எப்படி கூட்டங்கள் நடத்துவது, எப்படி ஆவணப்படுத்துவது என்று திட்டமிட்டேன்.
அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது, நாங்கள் 1.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டோம். தமிழ்நாடு முழுவதும் தன்னார்வத் தொண்டர்கள் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை படைத்தோம்.
சத்குருவின் இருப்பில் யோகா வகுப்புகள்
நான் என்ன செய்துகொண்டு இருந்தாலும் சரி, யோகா வகுப்பில் இருந்தாலும் சமூக நலத்திட்டங்களுக்கான செயலாற்றிக்கொண்டு இருந்தாலும், சத்குருவின் இருப்பும் அருளும் எப்போதும் என்னோடு இருந்துள்ளது.
ஒருமுறை ஒரு அறிமுக வகுப்பிற்கு நான் 11 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. நான் அங்கு சென்றடையவே அதிக நேரம் ஆகிவிட்டதால், தூசி நிறைந்திருந்த அந்த இடத்தை சுத்தம் செய்து வகுப்பிற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிக்க குறைவான நேரம்தான் இருந்தது. பயணத்தாலும் வகுப்பு ஏற்பாடுகள் செய்ததாலும் மிகவும் களைப்பாக இருந்தது. அப்படியே அறிமுக வகுப்பை எடுக்கத் தொடங்கினேன். தன்னார்வத் தொண்டர்களை மைக் முன்னால் வந்து அவர்களது அனுபவத்தைப் பகிருமாறு அழைத்தேன். அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கும்போதே, சத்குருவின் இருப்பு என்னுள் முழுமையாக நிரம்புவதை உணர்ந்தேன். என் கண்கள் தானாக மூடத் தொடங்கின. திடீரென இரண்டாவது வரிசையிலிருந்த ஒரு பெண்மணி தாவிக்குதித்து முன்னால் வந்து என் கால்களைப் பற்றிக்கொண்டார். நான் கண்களைத் திறந்து அவரைப் பார்த்தேன். நான் கண்களை மூடிய மறுகணம் அந்த பெண்மணி என் கால்களைப் பற்றிக்கொண்டார். சத்குருவின் இருப்பை அவர் எப்படி உணர்ந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இப்படி பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன.
விஜியம்மா அளித்த அன்பும் ஊக்கமும்
என்னுடைய 13-நாள் வகுப்பின் தீட்சை நாளன்று நான் விஜி அக்காவை முதன்முதலில் பார்த்தேன், ஆனால் நான் அவரிடம் பேசவில்லை. பிறகு நான் ஆசிரமத்திற்கு வந்தபோது சில பிரம்மச்சாரிணிகளும் விஜி அக்காவும் தண்ணீர்த் தொட்டியில் நீந்திக்கொண்டு இருந்தார்கள். அவர் என்னையும் வரச்சொல்லி அழைத்தார். நான் சேலை அணிந்திருந்ததுடன் மாற்றுத்துணிகள் இல்லாமல் இருந்தேன். அவர் என்னை விடவே இல்லை, “நான் என்னுடைய துணிகளைக் கொடுக்கிறேன், நீ வா,” என்று மிகவும் நெருக்கமானவரைப் போல என்னை நடத்தினார்.
அவருக்கு குழந்தை போன்ற குணம். சத்குரு வாய்ப்புக் கிடைத்த பொதெல்லாம் அவரை வம்புக்கு இழுப்பார். ஓடி விளையாடும்போது விஜி அக்கா அவுட் ஆகிவிட்டால், விஜி அக்கா “நான் அவுட் ஆகவில்லை,” என்பார். சத்குருவும், “ஆம் விஜி, நீ அவுட் இல்லை. நீ ஓடு, அப்போதுதான் உன் எடை குறையும்,” என்பார். இப்படி இருவரும் விளையாட்டாக பேசிக்கொண்டே இருப்பார்கள்.
விஜி அக்கா கர்ம யாத்திரையை முடித்துவிட்டு வந்தபோது அவரது முகம் முற்றிலுமாக மாறிப்போயிருந்தது. அவர் மிகவும் தீவிரமாகவும் ஒருமுனைப்பாகவும் இருந்தார். அவர் எப்போதும் எனக்கு ஓர் ஊக்கமாகத் திகழ்கிறார். எங்கள் யாரையும் போன்ற சாதாரணமான ஒருவரான அவர் உச்சபட்சத்தை அடையமுடியும் என்றால், அனைவருக்கும் அது சாத்தியமே. அது எனக்கும் சாத்தியம்தான். அவர் சத்குருவையும் ராதேயையும் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் மிக உயர்ந்த ஒன்றை உணர்ந்திருப்பார்.
மங்களூரு காட்டில் மலையேற்றம்
2002ல் பிரம்மச்சாரிகள் அனைவரும் மங்களூருக்கு சத்குருவுடனும் ராதேயுடனும் யாத்திரையாக சென்றோம். ஒருநாள் மாலையில் அவர் நாளை நாம் ஒரு நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம் என்றார், அப்போது அவரோடு வருபவர்களுக்கு கவிதை வாசிப்பதாகச் சொன்னார். நீர்வீழ்ச்சிக்கு வராதவர்கள் குமார பர்வதம் சென்றுவரலாம் என்றார். “எப்படியும் எனக்கு சத்குருவின் கவிதைகள் புரியாது, நான் அதைக் கேட்டுத் தூங்கிவிடுவேன், அதற்கு மலையேற்றமே மேல்,” என்று நினைத்தேன். குமார பர்வதம் மிகவும் சக்திவாய்ந்தது, எனவே அங்கு செல்வதற்கு ஆர்வமாக இருந்தேன்.
பிறகு சத்குரு என்னிடம் நான் குமார பர்வதம் செல்கிறேனா என்று கேட்டார். நான் “ஆம்” என்றேன். அவர் என்னிடம், “புலி வந்தால் பரவாயில்லையா? யானை வந்தால் பரவாயில்லையா?” என்று கேட்டார். நான் “பரவாயில்லை” என்றேன். அதற்கு அவர், “சரி,” என்று போக அனுமதி கொடுத்தார். “ஏழாவது மலையைப் போல அந்த மலையேற்றம் செங்குத்தாக இருக்கும்,” என்றார்.
சில சுவாமிகள் மற்றும் ஒரு பிரம்மச்சாரிணியுடன் அதிகாலை மலையேறத் துவங்கினோம். காடு நிசப்தமாக இருந்தது, இலைகள் கூட அசையவில்லை. சுவாசிப்பதே சிரமமாக இருந்தது. அது கடினமான மலையேற்றம்.
ஒரு கட்டத்தில் பல சுவாமிகள் வேகமாக ஏறிவிட்டனர், எனக்கு சில படிகளுக்கு முன்னால் மூன்று சுவாமிகளும் எனக்கு சில படிகளுக்கு பின்னால் இன்னொரு பிரம்மச்சாரிணியும் வந்துகொண்டு இருந்தார்கள். எனக்கு அருகில் புலி உருமுவது போன்ற சத்தம் கேட்டது. சுவாமிகளை கத்தி அழைக்க பயமாக இருந்தது, ஏனென்றால் புலி சத்தம் நெருங்கிக்கொண்டே இருந்தது. என் டார்ச் பேட்டரியும் தீர்ந்துபோகும் நிலையில் இருந்தது. நான் டார்ச்சை அசைத்து சைகை செய்தேன். அவர்கள் அதை கவனித்து நான் இருக்கும் இடத்திற்குத் திரும்பினார்கள். பிறகு நாங்கள் சேர்ந்து சென்றோம். அதிர்ஷ்டவசமாக புலி சத்தம் மீண்டும் கேட்கவில்லை. இன்னொரு இடத்தில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குப் பிறகு ஒரு திறந்த வெளி இருந்தது. அங்கே புதிதாக போடப்பட்டிருந்த யானைச் சாணத்தைப் பார்த்தோம். யானை எங்கு இருக்கிறது, எங்கு சென்றது என்பது தெரியவில்லை. கவனமாக நடந்து சென்றோம்.
நாங்கள் மலை உச்சியை அடைந்தோம். அந்த இடம் பசுமை நிறைந்ததாக, காட்டுப்பூக்கள் பூத்துக்குலுங்க, மேகங்கள் நடனமாட மிகவும் அழகாக இருந்தது. மிகவும் சக்திமிக்கதாக இருந்ததால், கண்கள் திறந்திருந்தபோதே நான் தியான நிலையில் இருந்தேன். கீழே செல்லும்போது, எப்படியோ நானும் இன்னொரு சுவாமியும் முதலாவதாக அடிவாரத்தை அடைந்தோம். மற்றவர்களுக்காக காத்திருந்தபோது, காட்டில் பூத்திருந்த ஆர்க்கிட் மலர்களையும் தென்னை இலைகளையும் கொண்டு சத்குருவிற்கு ஒரு பூங்கொத்து செய்தேன். தங்கியிருந்த சத்திரத்தை சென்றடைந்தபோது சத்குருவும் அங்கு வந்தடைந்தார். நான் அவரிடம் அந்த பூங்கொத்தைக் கொடுத்தேன். அவர் என்னை கட்டியணைத்துவிட்டு, “தண்ணீரில் வைத்துவிடு, நாளை என் காரில் வைத்துக்கொள்கிறேன்,” என்றார்.
பிறகு நாங்கள் காட்டு வழியாக நடந்துசெல்லும்போது, அங்கிருந்த ரயில்வே டிராக்கில் நடந்துசென்றோம். அந்த ரயில்வே டிராக்கிற்கு மிகவும் கீழே ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு சுவாமி கால்தவறி மரப்பலகைகளுக்கு இடையே சென்றுவிட்டார். அவரது முதுகுப்பைதான் அவரை காப்பாற்றியது. நல்லவேளையாக பை பெரிதாக இருந்ததால் பலகைகளுக்கு நடுவே நழுவிச்செல்ல முடியாமல் அது மாட்டிக்கொண்டது, கீழே காட்டாறு ஓட அவர் அங்கு தொங்கிக்கொண்டு இருந்தார். நாங்கள் பையைப் பிடித்து அவரை மேலே இழுத்தோம். பிறகு நாங்கள் அதிக கவனத்துடன் நடந்தோம். நாங்கள் மையிருட்டாக இருந்த ஒரு ரயில்வே சுரங்கத்தின் வழியாக நடந்தோம். உங்கள் கையையே உங்களால் பார்க்கமுடியாது. என்னென்ன பிராணிகள் அங்கு இருந்தன என்று தெரியாது, தரையும் மேடுபள்ளமாக இருந்தது. யாரோ டார்ச்சை ஆன் செய்தார், உடனே சத்குரு அழுத்தமாக, “அதை அனைத்துவிடுங்கள்” என்றார். வெளியே வந்தபோது நான் முற்றிலும் மாறுபட்ட ஒரு உணர்வுடன் இருந்தேன், எனக்குள் எல்லாம் புதிதாக இருந்ததுபோல உணர்ந்தேன்.
நாங்கள் தங்குமிடத்திற்கு திரும்பிச்செல்ல விரும்பினோம். சத்குரு உடனிருந்த வழிகாட்டியிடம் குறுக்குப்பாதை இருக்கிறதா என்று கேட்டார். அவர் ஒரு காட்டாறைக் கடந்து போகலாம், ஆனால் அது ஆழமானது, நீரோட்டம் வலுவானது, ஆபத்தானது என்றார். அதை கடக்கும் முயற்சியில் பலர் இறந்திருக்கிறார்கள் என்று அவர் தடுக்க முயன்றபோது, சத்குரு “அந்த வழியில் போவோம்,” என்றார். நன்கு நீச்சல் தெரிந்த ஒரு சுவாமி ஒரு கயிறுடன் நீந்தி ஆற்றைக் கடந்துசென்று மறுகரையில் கயிற்றை கட்டிவைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துகொண்டார். பிறகு அந்த கயிறை பிடித்துக்கொண்டு நாங்கள் ஒவ்வொருவராக ஆற்றைக் கடந்தோம். சத்குரு முதலில் சென்றார். நடுவில் அவர் கையில் வைத்திருந்த ஊன்றுகோல் கைநழுவி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. அவர் அதை பிடிக்க முயன்றார், அவரையும் ஆறு அடித்துச்செல்லப் பார்த்தது. அவரைப் பிடிக்க சில சுவாமிகள் ஆற்றுக்குள் குதித்தார்கள். அதற்குள் அவர் மீண்டும் கயிற்றுக்கு வந்துவிட்டார். அவர், “கவலைப்படாதீர்கள், நான் சாகமாட்டேன்,” என்றார். பிறகு நாங்கள் அனைவரும் மறுகரையை அடைந்தோம். அந்த வழிகாட்டி மிகவும் ஆச்சரியமடைந்தார்.
சத்குரு எங்களை எப்போதும் திகில் படத்தைப் போல விளிம்பிலேயே வைத்திருந்தார். நான் அதுவரை பாதுகாப்பான சூழலில் மட்டுமே செயல் செய்துகொண்டு இருந்தேன். ஆனால் அதைத் தாண்டி என்னால் பயமின்றி செயலாற்ற முடியும் என்பதை உணர்ந்தேன்.
கைவேலைப்பாடுகள்
எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் கைவினைப் பொருட்கள் செய்வதுண்டு. என் அம்மா கைவினைப் பொருட்கள் செய்வதில் திறமையானவர், எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுத்திருக்கிறார். நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது, ஆசிரம நிகழ்ச்சிகளுக்கு அழகூட்டவும், சத்குருவிற்கு மாலைகள் கோர்க்கவும், கோயிலில் அலங்காரங்கள் செய்யவும் உதவியுள்ளன.
இப்போது ஈஷா லைஃப் கடைகளின் அங்கமாக கைவினைப் பொருட்களுக்கென ஒரு தனி யூனிட் துவங்கியுள்ளோம். அதில் எம்பிராய்டரி, டெரகோட்டா நகைகள், நூல் வளையல்கள், மற்றும் மர அச்சுக்களால் பிரிண்ட் செய்வது போன்றவற்றைச் செய்கிறோம். அது நன்றாக நடப்பதுடன், அதில் அருகிலுள்ள கிராமத்துப் பெண்கள் பலர் பணியாற்றுகின்றனர். நான் வெளி உலகத்தை அதிகம் பார்க்காமல் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ஆசிரமத்திற்கு வந்ததால், எனக்கு என்ன செயல்கள் வழங்கப்பட்டாலும், அதை புதிதாக கற்றுக்கொண்டு செய்தேன். ஆனால் இப்போது கைவினைப் பொருட்கள் செய்யும்போது, 25 ஆண்டுகளில் முதல்முறையாக தெரிந்த ஒன்றை செய்து ஆசிரமத்திற்கு சிறிதளவு நிதிதிரட்டவும் உள்ளூர் மக்களின் நல்வாழ்வுக்கும் பங்காற்ற முடிகிறது.
சாதனாவால் பிறந்த சுதந்திரம்
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்யமா வகுப்பில் நான் தியானத்தில் அமர்ந்திருந்தபோது, ஒரு கட்டத்தில் எனக்கு உடலைப் பற்றிய உணர்வே இல்லாமல் போனது, நான் எங்கு அமர்ந்திருக்கிறேன் என்றே தெரியவில்லை, காலம் மற்றும் இடத்தைப் பற்றிய உணர்வு இல்லாமல் போனது. நான் கழிப்பறைக்கு போகும் தேவை இருக்கவில்லை, உணவுக்கான தேவையும் வரவில்லை, அப்படியே சில மணி நேரம் அமர்ந்திருந்தேன். இன்னும் சில முறை இந்த அனுபவம் ஏற்பட்டது. யோகப் பயிற்சிகள் செய்யும் அனுபவம் முற்றிலுமாக மாறிப்போனது. இத்தகைய அனுபவங்களும் என் சாதனாவும் நான் வளர்வதற்கு உதவியாக இருக்கின்றன. நான் ஏதோவொன்றில் தடைபடும்போதெல்லாம், ஈஷா யோகா வகுப்பின் கருவிகளை நினைவுபடுத்திக்கொண்டால் அதைக் கடந்துசெல்ல முடிகிறது. எனக்குள் ஒருவித சுதந்திரத்தை உணர்கிறேன்.
எனக்குள் எப்பொழுதும் மிகத்தெளிவாக இருப்பது என்னவென்றால், என் வாழ்க்கையிலும் என் செயலிலும் சத்குருவின் அருளால்தான் எல்லாம் நடக்கிறது, அவரது அருளின்றி எதுவும் நடக்காது.
—மா நாகபுஷ்பிகா




