பாலியிலும், கம்போடியாவிலும் சத்குருவுடன் அணுக்கமும், தீவிரமுமாய் நடைபெற்ற ஞானத்தின் பிரம்மாண்டம் நிகழ்வின் நிறைவு நாளில், பல வருடங்களாக சத்குரு மேற்கொண்டுள்ள அளவற்ற செயல்பாடுகள் குறித்து, ஆழமான நன்றியுணர்வின் வெளிப்பாடாக ஒரு பங்கேற்பாளர் முக்கியமான கேள்வி ஒன்றினை எழுப்பினார். மனித நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சத்குருவின் பரந்த பணிகளுக்கு, நாம் உறுதுணையாக இருப்பதற்கான வழிகளை சுட்டிக்காட்டத்தக்க அந்தக் கேள்வியானது, பலரின் உணர்வுகளையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. நமது தனிப்பட்ட சாதனாவைத் தாண்டி, மனிதகுலத்திற்கும், பூமியின் மீது ஒரு மாற்றம் ஏற்படுத்தவல்ல தாக்கத்தை உருவாக்குவதற்கும், அவரது தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவாக நாம் பங்கேற்கக்கூடிய மூன்று செயல்பாட்டுக் களங்களை தனது பதிலில் சத்குரு தெளிவாக விளக்குகிறார். நீங்கள் எவ்வாறு அதில் ஈடுபடுத்திக்கொள்ள முடியும் என்பதைக் காண்பதற்கு தொடர்ந்து வாசியுங்கள்.
கேள்வியாளர்: சத்குரு, எங்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்துள்ளீர்கள். எங்கள் சாதனாவைத் தாண்டி, உங்களுக்காக நாங்கள் செய்யக்கூடிய மூன்று விஷயங்கள் என்ன?
சத்குரு: உலகத்தில் செய்வதற்குப் பல விஷயங்கள் உள்ளன. அதற்கு எப்படி உறுதுணையாக இருப்பது என்று நீங்கள் பார்க்கலாம். தற்போது, உலகம் முழுவதிலும், சாத்தியமாகும் இடங்களிலெல்லாம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல இடங்களை உருவாக்கும் செயல்முறையில் நாம் இருக்கிறோம். விழிப்புணர்வான உலகை உருவாக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சுமார் 32 சதுர மைல் நிலப்பரப்பில், ஒரு யோக நகரத்தை நாம் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலப்பரப்பை பிரதிஷ்டை செய்வதுடன், அடுத்த ஆறிலிருந்து எட்டு வருடங்களுக்குள் 30,000 - 35,000 மக்கள் வாழக்கூடிய ஒரு நகரத்தைக் கட்டமைப்பது எங்களது இலக்காக உள்ளது.
பெங்களூரு, மும்பை, டெல்லி, மற்றும் கௌஹாத்தியிலும்கூட நாங்கள் யோக மையங்களைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். பூமியையே பிரதிஷ்டை செய்வது எனது விருப்பமாக இருக்கும் காரணத்தால், எங்கெல்லாம் யாரேனும் நிலமும், தேவையான ஆதரவும் வழங்குகிறார்களோ, அங்கெல்லாம் சக்திவெளிகளை உருவாக்க விரும்புகிறோம். இதனை எங்களால் மட்டுமே செய்துவிட முடியாது, ஏனென்றால் நாங்கள் ஒருபோதும் பணத்தின் மீது கவனம் செலுத்தியதில்லை.
ஏறக்குறைய 18 - 20 வருடங்களுக்கு, ஈஷா அறக்கட்டளை பணமில்லாமல் இருப்பதில் நான் உறுதியாக இருந்தேன், ஏனென்றால் அறக்கட்டளையின் மையத்துக்குள் தவறான மக்களை ஈர்ப்பதற்கு நான் விரும்பவில்லை. எங்களுடன் இணைய வந்தவர்கள், அர்ப்பணிப்பு மற்றும் பக்தியின் வெளிப்பாடாக பணிபுரிய வந்தனரேயன்றி, அறக்கட்டளை செழிப்பாக இருந்ததால் அல்ல. நீங்கள் ஒரு தங்க மலையையே கொடுத்தாலும், அதனைப் பொருட்படுத்தாத மக்கள் இப்போது எங்களிடம் உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட வெளிகளை உருவாக்குவதற்கான நேரம் வந்துள்ளது – அந்த சக்திவெளிகளில் நுழைந்தாலே மாற்றம் நிகழவேண்டும் – ஏனென்றால் நீண்டகால அளவில் அதுதான் மனிதகுலத்துக்குப் பயனளிப்பதாக இருக்கும்.
எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு இது உலகெங்கும் நிகழத் தேவைப்படுகிறது. இந்தியா நமக்கான ஒரு எளிதான சூழலாக இருக்கிறது. இங்கே நாம் அதிகமாக செயலாற்றுவது ஏனென்றால், மக்கள் இந்த விதமான செயல்பாடுகளை மிக விரைவில் புரிந்துகொள்கின்றனர். இந்தியாவுக்கு வெளியில், அதனை நிகழ்த்துவதற்கு மிக அதிகமான முயற்சி தேவைப்படுகிறது. ஆனால் எனக்கு, எந்த ஒரு தேசமும் நன்றாகத்தான் உள்ளது; நமக்கு அவசியமான ஆதரவு மட்டும்தான் தேவைப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் மாநில அரசுகள் நமக்கு நிலம் வழங்கும் நிலையில், இயற்கையாகவே, மிக அதிகமான நமது பணிகள் இங்கே நிகழும். நான் முன்னரே கூறியபடி, இதற்கு தேசம் குறித்த முன்முடிவு காரணமல்ல, இங்கே மிக எளிதாக அது நிகழ்வது ஒன்றுதான் காரணம்.
இதனை நிகழச் செய்வதற்கு, தினசரி பயிற்சி செய்துகொண்டிருக்கும் மக்களும், மற்றும் என்ன செய்யப்படுகிறது என்பதன் மதிப்பைப் புரிந்துகொள்ளும் மக்களும் மிக அதிக எண்ணிக்கையில் நமக்குத் தேவைப்படுகின்றனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நாம் இளைய சமுதாயத்தினரை இலக்கு வைத்து, அவர்கள் இன்னர் இன்ஜினியரிங் பயிற்சியை எடுப்பதற்காக, நாம் 50 சதவிகிதம் மற்றும் 100 சதவிகிதம் உதவித்தொகை வழங்கியுள்ளோம். இந்த உதவித்தொகைகளை உங்களால் ஸ்பான்சர் செய்யமுடிந்தால் – உங்கள் திறனுக்கேற்றவாறு அது 10, 20, 100 அல்லது 10 லட்சமாக இருந்தாலும் – அவற்றை நாம் இளைஞர்களுக்கு அளிப்பதால், லட்சக்கணக்கானவர்கள் இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு முடித்து, தங்களது பயிற்சியைத் தொடங்கமுடியும்.
பயிற்சி செய்யும் தியான அன்பர்கள் இல்லாமல், உண்மையில் இதனை எங்களால் நிகழச்செய்ய முடியாது. இதற்கு உறுதுணையாக இருப்பதற்கு, மக்களுக்கு இது குறித்து சிறிதளவு அனுபவம் இருந்தாக வேண்டியுள்ளது. அதுதான் தற்போது நாங்கள் செயல்பட்டுவரும் ஆரம்பப் படியாக இருக்கிறது.
தினமும் 21 நிமிடங்கள் தங்களது கண்களை மூடுவதற்கு சம்மதிக்கும் அனைத்து வயதினர் மற்றும் திறன்களுடைய மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு சில லட்சக்கணக்கானவர்களைத் தொடுவதற்கு நாம் விரும்புகிறோம். மூன்றாவது படியாக, ஒரு 15 - நிமிடப் பயிற்சியின் உதவியுடன் நாம் மக்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறோம். இந்தப் பயிற்சியானது 12 – 15 வெவ்வேறு மாறுபாடுகளில் வழங்கப்படும். கணிசமான வயது வந்தோர் மக்கள்தொகையினரை, ஒரு நாளில் 15 நிமிடங்களுக்கு அவர்களது கண்களை மூடுமாறு நம்மால் செய்யமுடிந்தால், உலகம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றமடையும்.
2025 ஆம் வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் 300 கோடி மக்கள் தினசரி தங்கள் கண்களை 15 நிமிடங்கள் மூடுவதற்கு ஊக்குவிப்பதற்கான வழிகளை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். இதனை வெளியிடுவதற்கு நாங்கள் மெகா ஆப் ஒன்றைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். இதனை நிகழச் செய்வதற்கு எங்களுக்கு பல்வேறு நிலைகளில் தொழில்நுட்பம், நிதி ஆதாரம், மற்றும் உறுதுணை தேவைப்படுகிறது. தயவுசெய்து, உங்களால் என்ன வழங்கமுடியும் என்று பாருங்கள்.
மனிதர்களின் நீண்டகால நல்வாழ்வுக்கு, கீழ்வரும் மூன்று அம்சங்கள் முக்கியமானவை: மனநலம், தியானத்தன்மை, மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெளிகள். பூமியிலேயே மனிதர்கள்தான் அதிக திறமையும் திறனும் கொண்ட உயிரினங்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, நாம்தான் பூமியிலேயே அதிகமாக அழிக்கவல்ல உயிரினங்களாக உருவெடுத்துள்ளோம்.
நமது வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும் எண்ணற்ற உயிரினங்கள் மறைந்துகொண்டிருப்பது நம்புதற்கரிது. அவைகள் அனைத்தும் மறைந்துவிடும் அதே வேகத்தில், அடுத்த 25 வருடங்களில், மனித வாழ்க்கையும் நிலைகுலைந்துவிடும். நிலைகுலைதல் என்று நான் கூறும்போது, நாம் அனைவரும் இறக்கப்போகிறோம் என்பது அதன் பொருளல்ல. நிலைகுலைய இருக்கும் முதல் விஷயம், “மென்பொருள்”. 2045 ஆம் வருடவாக்கில், உலகமக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினருக்கு மனோவியல் உதவி தேவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவ்வளவு பேருக்கும் மனோவியல் மருத்துவர்கள் கிடைப்பது சாத்தியமில்லாதது. மேலும், 2045 மற்றும் 2055 ஆவது வருடங்களுக்கு மத்தியில், 20 சதவிகித மக்கள்தொகையினர் தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் நமது குழந்தைகள் அடங்கியுள்ளனர்.
1000 கோடி மக்கள்தொகையில் இருபது சதவிகிதம் என்றால், 200 கோடி மக்கள், ஒரு பத்து வருட காலத்தில் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பது அதன் பொருள். அது நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத மிக மோசமான அழிவாக இருக்கும்; உலகப்போரால்கூட இதைச் செய்யமுடியாது, ஆனால் பொறுப்புமிக்க விஞ்ஞானிகள் இதைக் கணிக்கின்றனர். அந்தத் திசையில்தான் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அடுத்த ஐந்திலிருந்து பத்து வருடங்களில் நாம் சரியான விஷயங்களைச் செய்தால், இந்தப்போக்கினை நாம் மாற்றிவிடக்கூடும். ஒருவேளை அதை நாம் முழுமையாக நிறுத்தமுடியாமல் போகலாம், ஆனால் மக்கள் தங்களையே மாற்றிக்கொள்வதற்கு உதவும் பயிற்சிகளை அவர்களுக்குள் கொண்டுவருவதன் மூலம், நாம் அதை ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைக்கலாம். அதனைச் செய்வது சாத்தியமே.
மண் காப்போம் இயக்கம் குறைந்தபட்சம் கொள்கை அளவிலாவது முன்னேறிக்கொண்டுள்ளது. கொள்கை நிலைநிறுத்தப்பட்டுவிட்டால், செயல்பாடு தொடரும். அதற்கு மற்றொரு ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் தேவைப்படக்கூடும். மேலும், நாம் காப் 28 உடன் இணைந்து செயல்பட்டு வருவதுடன், இப்போது வரவிருக்கும் காப் 29 க்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். அது சரியான திசையில் நகர்ந்துகொண்டுள்ளது. அதுவும் வேகமெடுக்கும் என்று நம்புகிறோம். மன ஆரோக்கியம் அந்த அளவுக்கு அதிகமாக காத்திருக்க முடியாது. அதற்காக நாம் மிக விரைந்து செயல்பட வேண்டும்; இல்லையென்றால், விஷயங்கள் மோசமாகும்.
நுண்ணுயிர்கள், பூச்சிகள் மற்றும் புழுக்களின் இனத்தொகை சரியும்போது, மனித அமைப்பில் குலையும் முதல் விஷயம், “மென்பொருள்”, அல்லது நமது மனக் கட்டமைப்பு. நிலைகுலையும் இரண்டாவது விஷயம், “வன்பொருள்”, அல்லது நமது பொருள் உடல். 2045 - 2060 க்கு இடையில் அது நிகழ்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தற்கொலை செய்துகொள்வார்கள், ஏனென்றால் வாழத் தகுதியில்லாத அளவுக்கு அவர்கள் துன்பத்தை அனுபவிப்பார்கள். 50 சதவிகித மக்கள்தொகையினர் துன்பப்பட்டால், அதில் 20 சதவிகிதத்தினர் தாங்கிக்கொள்ள முடியாத துன்பத்தின் காரணமாக தற்கொலை செய்யக்கூடும். நாம் அந்தக் கட்டத்திலிருந்து வெகுதொலைவில் இல்லை – காலநிலை அமைப்புகள் மாறிக்கொண்டிருக்கும் விதத்தைத்தான் பாருங்களேன்.
இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் நீங்கள் பார்த்தீர்களென்றால், அது எல்லா இடங்களிலும் 40 டிகிரி வெப்பத்துக்கும் அதிகமாக, பழுக்கக் காய்ந்தது. பல இடங்களில், நான்கு மாதங்களுக்கும் மேலாக, ஒரு மழைப்பொழிவுகூட காணப்படவில்லை. இந்த விதமான வானிலை இங்கு வாழ்வதை கடினமாக்குகிறது. வெப்பநிலையானது, 40 அல்லது 50 டிகிரியைக் கடந்தால், ஒரு ஹெலிகாப்டர் அல்லது விமானத்தைக்கூட உங்களால் பறக்கவிட முடியாது.
ஏறக்குறைய ஒவ்வொரு நகரத்திலும் தண்ணீர் பற்றாக்குறைகள் உள்ளன. மேலான ஒருங்கிணைப்புடன் இருப்பவர்கள், தங்களுக்கான நீரை மற்ற உயிரினங்கள் அல்லது மற்ற மனிதர்களிடம் இருந்து எடுத்துக்கொள்கின்றனர், ஆனால் அது நீண்டகாலம் நீடிக்காது. எல்லாவற்றுக்கும் மேல், நமது உடல் மற்றும் மன ஆரோக்கியமும், சுற்றுச்சூழலியலும் சிறிதும் தாக்குப்பிடிக்கமுடியாத ஒரு வழியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நமது மக்கள்தொகை பெருகிக்கொண்டுள்ளது, இது கட்டாயமாக அதிகப்படியான பிறப்புகளினால் அல்ல – பிறப்புகள் குறைந்துவிட்டன – ஆனால் நாம் அனைவரும் நீண்ட காலம் வாழ்ந்துகொண்டிருப்பதுதான் காரணம். நீண்ட காலம் வாழ்வது ஒரு ஆசிர்வாதமாக இருக்கவேண்டும்; ஆனால் துரதிருஷ்டவசமாக, அது ஒரு சாபமாகியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போது, மக்கள், “ஏன் இவ்வளவு காலம் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் சபிக்கத் தொடங்கிவிடுவார்கள். இந்த திசையில் நாம் முன்னேறிக்கொண்டிருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன, ஆனால் எதுவுமே நிகழாததுபோல் நாம் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு உயர்ந்த கட்டிடத்திலிருந்து குதிப்பதைப்போல “அறியாமையே பரவசம்” என்று கூறுகின்றனர், அது பரவசம்தான் – நீங்கள் தரையை மோதும் வரை.
நாம் இயன்ற அளவுக்கு அதிகமாக மன ஆரோக்கியத்தை முன்னேற்றுவதற்கு விரும்புகிறோம், ஏனெனில் அப்போதுதான், சூழ்நிலைகள் கடினமாகும்போது மனிதர்கள் தங்களைத்தாங்களே அறிவுபூர்வமாக நடத்திக்கொள்வார்கள். மனிதர்கள் பீதியடைந்து, கட்டுக்கடங்காமல் போய்விட்டால், இந்த சூழ்நிலைகளை நிர்வகிப்பது அசாத்தியமாகிவிடும்.