மறைஞான அறிவு

உண்மை என்பது என்ன?

உண்மையின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வது நேரடியானதாக இருப்பதைப்போல், மழுப்பலாகவும் இருக்கமுடியும். உண்மை எனப்படுவது வெறுமனே நமது வார்த்தைகளில் இல்லை என்ற உணர்தலுக்கு சத்குரு நம்மை வழிநடத்துகிறார்; அது நாம் வாழும் விதத்தில், நாம் வெளிப்படுத்தும் நன்றியுணர்வில், மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கான நமது போற்றுதலில் இரண்டறப் பிணைக்கப்பட்டுள்ளது. சொல்லாடலில் மட்டுமின்றி, உண்மையான இணைத்துக்கொள்ளுதலில் வாழும் ஒரு வாழ்க்கையின் முக்கிய அங்கமாக, அதன் பங்களிப்பை வெளிப்படுத்தும் உண்மையின் அடுக்குகளை நாம் ஆராய்கையில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.

கேள்வியாளர்: என் தாயாருக்கு வாழ்க்கையில் ஒரு தடுமாற்றம் இருக்கிறது, நான் அவர்களிடத்தில் உண்மையைக் கூறும்போது, அவர்களால் அதைக் கையாளமுடியவில்லை. மற்றும் அவர்கள் உண்மையைக் கூறும்போது, அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து உண்மையைக் கூற விரும்புவதுடன், அதை எப்படிச் செய்வது என்பதற்கு ஒரு தீர்வும் கேட்கிறார்கள்.

உண்மை மற்றும் செயலின் இயல்பு

சத்குரு: உங்களால் உண்மையைக் கூறமுடியவில்லை என்றால், எதையும் கூறாதீர்கள். உண்மையை ஜீரணிக்கப் போதுமான முதிர்ச்சி இல்லாத மக்கள் இருக்கும் ஒரு சூழலில் நீங்கள் இருக்குமாறு நேர்ந்துவிட்டால், உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் எதையும் கூறாமல் இருந்தால், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைப் பொறுத்து, வேறு ஏதோ ஒரு வழியில் அது வெடித்துவிடக்கூடும், மேலும் மக்களும் அதைக் கவனிப்பார்கள்.

நிதர்சனத்தில் ஒரே ஒரு உண்மைதான் இருக்கிறது எனும்போது, உண்மை மற்றும் உண்மையின்மை எனப்படும் வேறொன்று இருப்பதாக நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் – நீங்கள் எதைப் பேசினாலும், உங்கள் கைகால்களைப் பயன்படுத்தினாலும், அல்லது வெறுமனே பார்த்தாலும்கூட அது ஒருவிதமான செயல்தான். நீங்கள் எந்தவொரு செயலைச் செய்யும்போதும், அது எல்லாமே உங்களைப்பற்றி மட்டும்தானா, அல்லது அது இணைத்துக்கொள்ளும் இயல்புடையதா என்று நீங்கள் சோதிக்கவேண்டும். அந்த ஒரே உண்மைதான் இருக்கிறது.

வாழ்க்கையைப் பற்றிய உண்மை வாழ்க்கையிலேயே உள்ளது, உங்கள் வார்த்தைகளில் இல்லை.

உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் உள்ளிட்ட வேறு எந்த உயிருடனும் எந்த உணர்வும் இல்லாமல் நீங்கள் இங்கே இருந்தால், நீங்கள் ஒரு பெரிய பொய்யாக வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மைகளைப் பற்றி பேசும்போது, உங்கள் வாழ்வின் எந்த அம்சங்களை நீங்கள் பகிர்ந்துகொள்வது என்பதுடன், யாருடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் தேர்வுசெய்ய முடியும். இந்த நியாயம் உங்களிடம் இல்லையென்றால், உங்களை நீங்களே முட்டாளாக்கிக்கொள்வீர்கள். விருப்ப உரிமையைச் செயல்படுத்துவதால், நீங்கள் உண்மையைக் கூறவில்லை என்று அர்த்தமல்ல.

வாழ்க்கை குறித்த உண்மை என்னவென்றால், நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும்போது, நீங்கள் எதை வெளிமூச்சாக வெளியிடுகிறீர்களோ, அதை மரங்கள் உள்மூச்சாக எடுக்கின்றன. மரங்கள் வெளிமூச்சாக வெளியிடுவதை நீங்கள் உள்மூச்சாக எடுக்கிறீர்கள். மரங்களை நீங்கள் விலக்கினால், நீங்கள் ஒரு பொய்யர். உங்கள் வாழ்க்கை கோடிக்கணக்கான உயிர்களின் விளைவு. உங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு நுண்ணுயிர்களில் இருந்து, புழு பூச்சிகள் வரை, அனைத்தும் இந்தக் கணத்தில் பங்களிப்பு செய்கின்றன. அது உண்மைதானே?

இணைத்துக்கொள்ளுதல் மற்றும் நன்றியுணர்வில் வாழ்ந்திருத்தல்

வாழ்க்கை குறித்த உண்மை என்னவென்றால், உயிரின் வேராக இருப்பது நாம் அல்ல; நாம் அதன் ஒரு விளைவாகவே இருக்கிறோம். இந்த பூமியின் மீது இருக்கும் மற்ற எல்லா உயிர் வடிவங்களும் நமது இருத்தலுக்கு பங்களிப்பு செய்துள்ளன. இணைத்துக்கொள்ளுதலின் எந்த உணர்வும் இல்லாமல் நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் ஒரு வாழும் பொய்யராக இருக்கிறீர்கள்.

உயிரின் இயல்பு எப்படிப்பட்டது என்றால், உயிரானது தானாகவே நிகழமுடியாது – அது நிகழ்வதற்கு அனைத்தும் காரணமாக உள்ளன. நீங்கள் ஒரு தனிப்பட்ட உயிராக இருக்கிறீர்கள் என்று உங்கள் மனதில் நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தாலும், நீங்கள் ஒரு தனிப்பட்ட உயிரல்ல. உண்மையில், நீங்கள் இந்தப் பெருந்திரளான உயிரின் ஒரு விளைவாக இருக்கிறீர்கள். உயிரின் இந்தப் பெருநிகழ்வில் வெடித்தெழுந்த நீங்கள் ஒரு சிறு நிகழ்வு மட்டுமே. படைப்பின் பெருந்தன்மை உங்களுக்கு ஒரு தனிப்பட்ட உணர்வைக் கொடுத்துள்ளது. ஆனால் நீங்களாகவே இங்கு வந்து இறங்கியதாக நீங்கள் எண்ணிக்கொள்ளுமளவுக்கு அதை நீங்கள் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்கள். அது அப்படியல்ல, இந்த பூமிக்குள் இருந்து நீங்கள் “ஊர்ந்து” வெளியில் வந்துள்ளீர்கள், மற்றும் திரும்பவும் நீங்கள் “ஊர்ந்து” சென்றுவிடுவீர்கள்.

இணைத்துக்கொள்ளுதலின் எந்த உணர்வும் இல்லாமல் நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் ஒரு வாழும் பொய்யராக இருக்கிறீர்கள்.

நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவும் அளவிடற்கரிய செயல்முறைகளைக் கடந்து வந்துள்ளதை நீங்கள் புரிந்துகொள்வதை நான் விரும்புகிறேன். ஒரு தானியம் பூமியிலிருந்து முளைத்தெழுந்து வளர்வதற்கு லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள், புழுக்கள் மற்றும் பூச்சிகள் பங்களிப்பு செய்கின்றன. உங்களுக்காக யாரோ ஒருவர் விவசாயம் செய்தார், யாரோ ஒருவர் அறுவடை செய்தார், யாரோ ஒருவர் சுத்தம் செய்தார், யாரோ ஒருவர் மொத்தமாக கொள்முதல் செய்தார், மற்றும் அதன் பிறகு யாரோ ஒருவர் சில்லறை வியாபாரம் செய்தார். இன்றைக்கு அதை யாரோ ஒருவர் சமைத்தார். சாப்பிடும்போது இவையனைத்தையும் உங்களால் உணரமுடியாது என்றாலும், குறைந்தபட்சம் உங்கள் உயிரைத் தக்கவைத்திருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரு சிறிதளவு நன்றியுணர்வு கொள்ளுங்கள். அது இல்லையென்றால், நீங்கள் ஒரு வாழும் பொய்யர்.

இப்போது, நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம், நீங்கள் உண்மை பேசவேண்டுமா, இல்லையா?

நீங்கள் வாழ்க்கையைப் புரிந்திருக்கும் விதம், வாழும் விதம், மற்றும் வாழ்க்கையை உணரும் விதத்தில்தான் உண்மையும், பொய்களும் உள்ளனவே அன்றி, நீங்கள் சாதாரணமாகப் பேசும் அர்த்தமில்லாத வார்த்தைகளில் இல்லை. நீங்கள் பேசுவதெல்லாம் தொடர்பில்லாதவை. நீங்கள் பேசும் வார்த்தையுடன் போராடும்போது, உண்மையின் பெயரில் நீங்கள் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்வீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் உங்களது குழந்தைப் பருவத்திலிருந்தே நிகழ்ந்திருக்கும். நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது, பெப்பர்மிண்ட் சாப்பிட அதிகம் விரும்பியிருந்தீர்கள். நீங்கள் நான்கு அல்லது ஐந்து வயதை எட்டியபோது, உங்கள் தாய், “பெப்பர்மிண்ட் கிடையாது” என்று கூறியதால், நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பீர்கள். பிறகு உங்கள் தாய் ஏதோ தந்திரம் செய்து, அவைகள் மறைந்துவிட்டதாகக் கூறியிருப்பார்கள்.

நீங்கள் எல்லா பெப்பர்மிண்ட்டையும் சாப்பிட்டிருந்தால், உடல்நலமில்லாமல் போயிருக்கும். ஆகவே வாழ்வியல் நடைமுறையில் உங்கள் தாய்க்கு உண்மை தெரிந்திருந்தது; அது வாய்மொழி உண்மை அல்லது வாய்மொழி பொய் குறித்தது அல்ல. உங்கள் மீதான அவளது அக்கறையினால், உங்களிடம் பொய் உரைக்கலாம், நாடகமாடலாம், மற்றும் தேவையான எதையும் செய்திருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ள எல்லா உயிருக்குமான உங்கள் அக்கறையின் காரணமாக, அவசியமான விதத்தில் எல்லா நாடகமும் செய்யலாம்.

அல்லது இந்த காட்சிச் சூழலை எடுத்துக்கொள்ளலாம்: சொர்க்கத்துக்குச் செல்ல விரும்பும் மக்கள் இங்கே இருக்கின்றனர், ஆனால் அவர்கள் உங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்ல விரும்புகின்றனர் – அவர்களை நீங்கள் தீவிரவாதிகள் என்றும் அழைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நபர் நம் வாசலுக்கு வந்து, “இங்கே யாராவது இருக்கிறார்களா?” என்றால், கதவைத் திறந்து பதில் கூறுபவர், உண்மையைக் கூறவேண்டுமா? இல்லை என்றுதான் நீங்கள் கூறுவீர்கள். வாழ்க்கையைப் பற்றிய உண்மை வாழ்க்கையிலேயே உள்ளது, உங்கள் வார்த்தைகளில் இல்லை.

வாழ்க்கையின் குறுகியகால இயல்பை புரிந்துகொள்ளல்

அது இதைப் போன்றது: இருளில் நீங்கள் பார்த்திராத பல விஷயங்கள் அல்லது இருப்பதையேகூட அறிந்திராத பல விஷயங்கள் சூரியன் உதித்த கணமே, உங்கள் கண்களுக்குப் புலப்படுகின்றன. விடிவதற்கு சற்றுமுன் நீங்கள் தோட்டத்தில் உட்கார்ந்தால், எதையும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள். ஆனால் சூரியன் மெல்ல உதித்தெழும்போது, எல்லாமே கண்களுக்குத் தெரிகிறது. வெளிப்பார்வைக்கு இருப்பதே தெரியாதவை எல்லாமே சட்டென்று பார்வைக்குப் புலப்படுகிறது.

மழைக்காலங்களில் திடீரென்று ஈசல்கள் தோன்றுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவைகள் ஓரிரண்டு மணி நேரங்கள் சுற்றிலும் பறக்கின்றன; பிறகு அவைகளின் இறக்கைகள் விழுந்துவிடுகின்றன, மற்றும் பெரும்பாலானவை இறந்தும் போகின்றன. அவைகளின் ஒட்டுமொத்த வாழ்வுச் சுழற்சியும் ஒரு சில மணி நேரங்களில் முடிந்துவிடுகிறது. அதை அந்த அர்த்தத்தில் உங்களால் பார்க்கமுடிகின்ற காரணத்தினால், அவைகளின் வாழ்வு அந்த அளவுக்குக் குறுகியதாக இருப்பது உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் இதைப்போலவே, ஒரு மலை உங்களைப் பார்த்து, நீங்கள் ஒரு ஈசலாக இருக்கிறீர்கள் என்று எண்ணிக்கொள்ளும். ஆயிரக்கணக்கான தலைமுறைகள் இங்கு வந்து செல்வதை, இந்த மலை பார்த்துள்ளது. அந்தத் தலைமுறையினர் ஒவ்வொருவரும் அவர்கள்தான் மகத்தானவர்கள் மற்றும் மிக முக்கியமானவர்கள் என்று எண்ணியிருப்பார்கள். இதுதான் வாழ்வின் இயல்பு. இதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் ஒரு வாழும் பொய்யர்.