
நாம் இந்த மாதம் புத்த பூர்ணிமாவை கொண்டாடவிருக்கும் ஒரு தருணத்தில், மாற்றம் ஏற்படுத்தவல்ல சித்தார்த்த கௌதமரது ஞானமடைதலின் மரபை ஆராய்ந்து அறிவதற்கு உங்களை வரவேற்கிறோம். நமது நவீன போராட்டக் களங்களாகிய தனிமை மற்றும் மன ஆரோக்கியம் என்னும் இரண்டு விஷயங்களுடன் முக்கிய தொடர்புடைய புத்தரின் போதனைகளை வலியுறுத்தும் சத்குரு அவரது கண்ணோட்டத்தை இந்தப் பதிவில் பகிர்ந்துகொள்கிறார். விழிப்புணர்வு மற்றும் நல்வாழ்வின் பாதையை வளர்க்கும் காலத்தை வென்ற ஞானத்தை மீட்டெடுங்கள்.
சத்குரு: புத்த பூர்ணிமா, கௌதம புத்தரின் ஞானமடைந்த நாளைக் குறிக்கிறது. நிகழ்வுகள் நிறைந்த ஆனால் ஏமாற்றம் மிகுந்த எட்டு வருடங்களுக்குப் பிறகு, அவர் மேற்கொண்டிருந்த ஆன்மீக சாதனாவினால், அவரது உடல் மிகவும் பலவீனமாகியிருந்தது. குறிப்பாக, அவர் மிக அரிதாக சாப்பிட்ட கடந்த நான்கு வருடங்களில், அவர் எலும்பும், தோலுமாக ஆகியிருந்தார். ஆசிர்வதிக்கப்பட்ட இந்த நாளில், இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் அந்த போதி மரத்தின் கீழ் அமர்ந்தார்.
அங்கே ஒரு தீர்மானத்துடன் அவர் அமர்ந்தார்: இன்றைக்கு, ஒன்று எனக்குள் ஞானம் பிறக்கும், அல்லது நான் இங்கேயே இறப்பேன் நான் கண்களைத் திறக்கவும் மாட்டேன், எழுந்திருக்கவும் மாட்டேன்.” அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்தவுடன், அவரைத் தடுத்துக்கொண்டிருந்த அனைத்தையும் உடைத்தெறிந்துவிட்ட நிலையில், அவர் ஒரு ஞானமடைந்த மனிதரானார். ஞானமடைந்த வாழ்க்கையின் எஞ்சிய 40 வருடங்களில், அவர் இடைவிடாமல் பயணம் செய்தார். 2,500 வருடங்களுக்கும் அதிகமான வருடங்களுக்குப் பிறகு, நாம் இன்னமும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
கௌதமர் செய்த ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வாழ்க்கையைப் பார்ப்பதற்கு துணிச்சல் மிக்க ஒரு வழியை அவர் அறிமுகப்படுத்தினார்: உங்கள் மனதின் மீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், உங்கள் விதி உங்கள் கைகளில் இருப்பதுடன், நீங்கள் விரும்புவதையும் உங்களால் உருவாக்கமுடியும். உங்களுக்கு நிகழும் ஒவ்வொன்றும் உங்களது கர்ம சுழற்சியின் விளைவுதான் என்று கூறி, கர்மாவைப் பற்றியும் அவர் விரிவாகப் பேசினார். நீங்கள் இந்த சுழற்சியைக் கடந்து செல்லக் கற்றுக்கொள்ள முடியும், அல்லது அதே முட்டாள்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டு, மீண்டும் மீண்டும் உருவாகும் கர்மச்சுழலில் சிக்கிக்கொண்டு தேங்கிப்போக முடியும். அவரது போதனைகள் அனைவரையும் சென்றடையவதற்காக, கௌதமர் சமூகத் தடைகளை உடைத்தெறிந்தார்.
கௌதமரின் ஆன்மீக செயல்முறை சாதி, மத நம்பிக்கைகள், மற்றும் பல அம்சங்களைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் சென்றடையச் செய்ததில் அவரது அணுகுமுறை புரட்சிகரமாக இருந்தது. யோகமுறையில் இது எப்போதுமே இருந்துவந்துள்ளது, ஆனால் மெல்லமெல்ல, காலப்போக்கில், குறிப்பிட்ட சமூகங்கள் ஆன்மீக செயல்முறை மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதுடன், அது மற்றவர்களுக்குக் கிடைப்பதையும் அனுமதிக்கவில்லை. அறிவு என்பது ஆற்றலாக இருந்த காரணத்தால், அந்த அறிவாற்றல் ஒரு சில மக்களின் கைகளில் மட்டுமே இருந்தன.
கௌதமர் இந்த சமூகத் தடைகளை உடைத்தார். அவரது போதனைகளை அவர் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்தார், குறிப்பாக ஆன்மீக போதனைகளிலிருந்து வழக்கமாக விலக்கிவைக்கப்பட்ட அடித்தட்டு வகுப்புகளும், போதனைகளைப் பரப்புவதற்கு உதவக்கூடிய மேல்மட்ட அதிகாரிகளும் இதில் அடங்குவர். அவர் மிக முக்கியமாக, தனது மக்கள் தொடர்பை சிறப்பாகக் கட்டமைத்தார். நீங்கள் வழங்குவது மதிப்பு மிகுந்த அறிவு அல்லது பொருட்கள் என்று எதுவாக இருந்தாலும், உங்களிடம் நிறுவன அமைப்புமுறை இல்லையென்றால், அது உலகைச் சென்றடையாது.
தற்போது ஆன்மீகத்துக்கு நிறுவனம் தேவைப்படுகிறது. ஆன்மீக செயல்முறையை ஒரு விளிம்பு நிலை நிகழ்வாக செய்வதைக்காட்டிலும், ஒட்டுமொத்த உலகத்தையும் சென்றடைவதற்கான வழிகளை நாம் கண்டறியவேண்டும். உங்கள் பற்களைத் தேய்ப்பதற்கு உங்களுக்கு பெற்றோர்கள் கற்றுக்கொடுத்ததைப்போல, எட்டு அல்லது ஒன்பது வயதை அடைவதற்குள், இயல்பாக தியானம் செய்வது எப்படி என்று பெற்றோர்கள் உங்களுக்கு கற்றுத்தர வேண்டும். கௌதமர் இதைதான் உருவாக்க விரும்பினார்.
மனிதமனம் எப்படி மிக அற்புதமான விஷயங்களைச் செய்யமுடியும் என்பதை கௌதமர் எடுத்துக்கூறினார். நீங்கள் மனரீதியான செயல்முறைகளை மீறி எழுந்தால், அற்புதம் என்று நீங்கள் கருதுவது எல்லாமே ஒரு தினசரி நிகழ்வாக இருக்கமுடியும். உங்கள் மனரீதியான செயல்முறையை மீறிக்கொண்டு நீங்கள் எழுந்து நின்றால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாயாஜாலமாக்க முடியும் என்பதுதான் மக்களின் புரிதலில் அவரது போதனையின் மிகப்பெரிய அம்சமாக இருக்கிறது. உங்கள் மனரீதியான செயல்முறையில் நீங்கள் புதைந்து கிடந்தால், உங்களால் காரணரீதியாக மட்டுமே இருக்கமுடியும். ஆனால் நீங்கள் மனதளவிலான செயல்முறையை விஞ்சி மேலெழுந்தால், உங்களது காரண அறிவை நீங்கள் இழப்பதில்லை, ஆனால் உங்களால் மாயாஜாலமாக வாழமுடியும். இதன்பொருட்டு, அவர் உருவாக்கிய பல வழிமுறைகளை மக்கள் உணரத் தொடங்கியதுடன், துணைக்கண்டத்தின் அந்தப் பகுதியெங்கும் அது ஒரு அலையாக உருவானது.
மக்களின் வாழ்க்கைக்குள் கௌதமர் கொண்டுவந்த முக்கியமான அம்சங்களுள் ஒன்று இது: உங்கள் மனதை உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தால், உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியும்.
மனதுக்கு மீறி எழுவது என்றால் ஒரு புத்தராக மாற்றமடைவது என்பது பொருள். புத்தர் என்பது அவரது பெயரல்ல. அவரது பெயர் கௌதம சித்தார்த்தன். புத்தன் என்பது இருத்தலின் ஒரு நிலை. உங்களது காரண அறிவுக்கு மேல் நீங்கள் இருந்தால், நீங்கள் ஒரு புத்தன். நீங்கள் காரண அறிவில் இருந்தால், நீங்கள் இடையறாமல் துன்பப்படும் ஒரு மனிதராக இருக்கிறீர்கள். நீங்கள் காரண அறிவுக்குக் கீழாக இருந்தால், உங்களை நாம் புத்து (முட்டாள்) என்று அழைக்கமுடியும்.
உயிரினங்களாக இருந்தபோது, நாம் காரண அறிவுக்குக் கீழ்நிலையில் இருந்தோம். பிறகு மனிதர்களாக, நாம் காரண அறிவில் பரிணமித்தோம். காரண அறிவுக்கு மேலாக நீங்கள் பரிணமிக்க விரும்பினால், அதற்கு ஒரு விழிப்புணர்வான முயற்சி தேவைப்படுகிறது.
கௌதமருடைய போதனைகளும், அவர் கவனம் செலுத்திய யோகாவின் அம்சங்களும், இன்றைய உலகில் மிக முக்கியமாக உள்ளன. சமீபத்தில், அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் தனது ஒரு ஆய்வில், இரண்டு அமெரிக்கர்களில் ஒருவர் தனிமையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். 50 சதவிகித ஜனத்தொகையினர் தனிமையில் இருந்தால், அபாயகரமான மனநோய்களுக்கான ஒரு வளமான இடத்தை நீங்கள் தயார்செய்துவிட்டீர்கள்.
இன்றைக்கு, காதலர்களுக்கும், கணவன் மனைவிக்கும், குடும்பங்களிலும், நண்பர்களுக்கு இடையிலும் மக்கள் தனிமையில் இருக்கின்றனர். எண்ணூறு கோடி மக்கள்தொகை உள்ள ஒரு உலகத்தில், நீங்கள் தனிமையில் இருப்பதா? எங்கு சென்றாலும் மக்கள் கூட்டமாக இருப்பதால், சிறிது தனிமையான இடம் இருப்பதை நான் விரும்புகிறேன்.
உலகில் எண்ணூறு கோடி மக்கள் இருப்பினும், இப்போது 50 சதவிகித மக்கள் தனிமையாக உணர்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் முகமை நிறுவனமாகிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்தபடி, பதின்ம வயது பெண்களுள், மூன்றில் ஒருவர் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். நாங்கள் வளர்ந்துவந்தபோது, பதின்ம வயது பெண்கள் உற்சாகமாகவும், காரணமில்லாமல் சிரித்துக்கொண்டும் இருப்பது வழக்கம். இப்போது, மூன்று பதின்ம வயது பெண்களில் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கின்றார். புயல் மேகங்கள் கூடியுள்ளது போன்றது இது, ஆனால் நாம் முழுக்க நனையும்வரை இதை அலட்சியம் செய்கிறோம். விரைவிலேயே, ஒவ்வொரு வீட்டிலும் மனஅழுத்தம் கொண்ட ஒரு நபர் இருப்பார். அது எப்போது என்பதுதான் கேள்வி.
மனநல பெருந்தொற்று குறித்து பரவலாக மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். இது ஏதோ நகைச்சுவை அல்ல. ஏனென்றால் உலகெங்கும் மனித சமூகங்கள், இந்த பூமியின் மற்ற ஒவ்வொரு உயிரினத்துக்கும் பெருத்த இழப்பை ஏற்படுத்துவதில் கடுமையாக செயல்பட்டு வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளால் ஆளப்படும் மற்ற உயிரினங்களைப் போல நான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருந்தால், இதையெல்லாம் செய்துகொண்டிருக்கத் தேவையில்லை. ஆகவே, நமது காரண அறிவுக்கு மேலாக நாம் உயரவேண்டிய ஒரு காலம் வந்துள்ளது. இல்லையென்றால், மனநோய்கள் இயற்கையான ஒரு விளைவாக இருக்க நேரும்.
நீங்கள் வேலையினால் இறுக்கமடைந்தால், அதற்கான தீர்வு எளிமையாகத் தோன்றக்கூடும்: நீங்கள் வேலையிலிருந்து வெளியேறி, ஆனந்தமாக இருக்கமுடியும். ஆனால் உண்மையிலேயே நீங்கள் நீக்கப்பட்டால், நீங்கள் இன்னமும் அதிகமாக இறுக்கமாகக்கூடும். உங்கள் திருமணத்தில் நீங்கள் இறுக்கமடைந்தால், அதிலிருந்து வெளியேறிவிட்டால், நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்களா? இல்லை, நீங்கள் அனேகமாக இன்னமும் துன்பமயமாகத்தான் இருப்பீர்கள். இதுபோலத்தான் எல்லா விஷயங்களும் உள்ளன.
சூழ்நிலை பிரச்சனை அல்ல; பிரச்சனை என்னவென்றால், உங்களுடைய மனரீதியான செயல்முறைக்கு மேல் உங்களால் உயரமுடியவில்லை. உங்களிடத்தில் புத்தனின் மூலக்கூறு இல்லை. நீங்கள் ஒரு புத்து(முட்டாள்)வாக இருந்திருந்தால்கூட, குறைந்தபட்சம் நீங்கள் இனிமையுடன் இருப்பீர்கள். ஆனால் இப்போது உங்கள் மனரீதியான செயல்முறையில் நீங்கள் சிக்கியுள்ளீர்கள்; எல்லாமே மக்களை நிலைதடுமாறச் செய்கிறது.
உலகத்தில் பிழைத்திருத்தலை நாம் எளிதாக்க முயற்சிக்கிறோம். பொருளாதாரம் நன்றாக செயல்பட்டால், பிழைப்பு ஒரு சவாலாக இல்லை என்பது அதன் அர்த்தம். பிழைப்பு ஒரு சவாலாக இல்லாதபோது, மனிதர்கள் தங்களையே நிலைப்படுத்திக்கொள்வதற்கான சிறந்த நேரம் இதுதான். ஆனால் பிழைப்பு ஒரு சவாலாக இல்லாத இடங்களில், மக்கள் முழுமையாக நிலைதடுமாறிக்கொண்டு உள்ளனர். மனிதர்கள் மனதுக்கு மேல் உயர்ந்தெழக் கற்றுக்கொள்வது மிகமிக முக்கியமானது.
கௌதமர் ஒரு தாக்கம் ஏற்படுத்துவதற்கு, அரசர்களை நாடினார். இன்றைக்கு ஒட்டுமொத்த உலகத்தையும் சென்றடைவதற்கு நம்மிடத்தில் தொழில்நுட்பம் உள்ளது. மண் காப்போம் இயக்கத்தின் மூலமாக, நாம் நாற்பது கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளோம். இப்போது, அவர்களின் மனங்கள் சிறிதளவு திறந்ததன்மையில் இருக்கும் நிலையில், அதை விட்டுவிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அவர்களை நாம் தியானம் செய்ய வைக்கவேண்டும். ஏனென்றால் விழிப்புணர்வான மனிதர்கள் இல்லாமல், மண்ணோ, வானமோ நிலைக்காது.
மனிதர்கள் தங்களது சக்தியையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் விதமும், மற்றும் எவ்வளவு விழிப்புணர்வாக நாம் வாழ்கிறோம், சாப்பிடுகிறோம், நடக்கிறோம், சுவாசிக்கிறோம், இனப்பெருக்கம் செய்கிறோம், மற்றும் இறக்கிறோம் என்பதும், அனைத்தும் எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும். நீங்கள் அனைவரும் உங்களுக்குள் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். ஒரு விழிப்புணர்வான உலகை நாம் உருவாக்கவேண்டும்.