சத்குரு எக்ஸ்குளூசிவ்

தீவிரத்துடன் இணைந்து வாழ்ந்திருத்தல்: சத்குருவுடன் விஜியின் வாழ்க்கை

ஆழம் காணமுடியாத பக்தி, தளர்வில்லா அர்ப்பணிப்பு, மற்றும் துடிப்புமிகுந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விஜியின் வாழ்க்கைக்குள் ஒரு பார்வை – விஜியுடன் ஆரம்ப நாட்களில் பயணிக்கும் பேறு பெற்றிருந்த ராதே மற்றும் சத்குரு உள்ளிட்ட ஒரு சிலர், உயிரோட்டமாகப் பின்னலிடும் ஞாபகங்கள், மற்றும் வார்த்தைகளற்ற உணர்வுகளை ஏந்தி நிற்கும் அரிய காட்சிக்கணங்களை நமக்கு வழங்குகின்றனர். ஒரு ஆன்மீக இயக்கத்தின் கட்டமைப்பின் மீதும், அதன் மையத்தில் துடிக்கும் இதயங்களிடத்தும் ஒரு அழியாத தடம் பதித்துச்சென்ற இருப்புக்குச் சொந்தமான ஒரு மனுஷியின் தெளிவான சித்திரத்துக்கு, அவர்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் வண்ணம் பூசுகின்றன. உணர்ச்சியும், ஆழமும், செறிவூட்டும் விளக்கமும், ஒரு கணவராகவும், குருவாகவும் சத்குருவுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு பயணத்தின் சிக்கலும் மொட்டவிழும் மலராக இதழ் விரிக்கையில், அந்த வாசத்தினை எங்களுடன் இணைந்து நீங்கள் நுகர்ந்துகொள்ளுங்கள்.

சத்குரு: விஜி சிறுமியாக இருந்தபோது நாட்டியம் கற்றுக்கொள்ள விரும்பினாள், ஆனால் அதற்கான வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை. ஒருமுறை அவள் கூறினாள், “எனக்கு ஒரு மகள் இருந்தால், அவள் நாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன்.” அதற்கு நான், “முதலில், உனக்கு மகள் இல்லை, மேலும் அவள் நடனம் ஆடப்போவதுமில்லை”, என்றேன். அவள், “இல்லை, நான் ஒரு மகளைப் பெற்றுக்கொள்வேன் என்று கூறவில்லை. நான் கூறுவதன் பொருள், ஒரு மகள் எப்போதாவது இருக்க நேர்ந்தால், அவள் ஒரு நடனமணியாக வேண்டும். “அது சரி, அவர்கள் என்னவாகவும் ஆகலாம். ஒரு கற்பனையான மகள்தானே, நடனமணியாக இருக்கட்டும், உண்மையில் அல்ல”, என்று நான் கூறினேன்.

கோதைசேகர்: அந்த நாட்களில், யோகா வகுப்பு பதிமூன்று நாள் வகுப்பாக இருந்தது. விஜி எப்போதும் வகுப்பின் கடைசியில் அமர்ந்திருப்பது வழக்கம். அப்போது அவர் ஏழுமாத கர்ப்பம் தரித்திருந்தார். வகுப்பின் இறுதி நாளன்று, நாங்கள் பவானி சாகர் அணைக்கட்டுக்கு சென்றிருந்தோம். நாங்கள் பேருந்திலிருந்து இறங்கி அணைக்கட்டின் பூங்காவை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது, சத்குரு விஜியை அணைக்கட்டுக்கு உள்ளே அழைத்துச் சென்றார். சில நேரங்கள் விஜியுடன் சத்குரு நடந்தார்; சில நேரங்களில் வேறு யாரையாவது இருக்குமாறு அவர் பார்த்துக்கொண்டதால், விஜிக்கு அருகில் எப்போதும் யாராவது இருந்தனர்.
அப்போது நான் விஜியிடம் கூறினேன், “நீங்கள் ஏன் செல்கிறீர்கள்? ‘என்னால் முடியாது’ என்று நீங்கள் அவரிடம் கூறவேண்டுமல்லவா?” அதற்கு விஜி கூறியது, “ இல்லையம்மா, என்னால் முடியாது. அது அவருக்குத் தெரியும், ஆனால் அவருக்காக நான் அதைச் செய்வேன்.” ஒருநாள் மாலை நேரத்தில், நாங்கள் விஜிக்கு வளைகாப்பு செய்து அவர்களை ஆச்சரிப்படுத்தினோம். அவர்கள் உண்மையிலேயே கண்களில் நீர் வழிய நெகிழ்ந்து போய்விட்டார்கள். நாங்கள் அனைவரும் உணர்ச்சிரீதியாக பிணைந்திருந்தவர்கள்; நாங்கள் அனைவருமே அழுதுவிட்டோம் என்றுதான் கூறுவேன். இன்னமும் அந்தக் கணங்கள் என் மனதில் பசுமையாக உள்ளது.

மா கற்பூரி: விஜி ராதேயை சுமந்திருக்கும் நேரத்தில் அவர் வாந்தி எடுக்கும்போது, விஜியின் மனதைத் தொடும்படி சத்குரு வந்து, அதை அப்படியே தன் கையில் எடுப்பது எப்போதும் வழக்கமான ஒரு நிகழ்வு. இவைகள் சிறிய விஷயங்கள்தான், ஆனால் அவைகளே விஜியின் வாழ்க்கையை நிறைவுசெய்யப் போதுமானவையாக இருந்தன. விஜிக்கு சத்குரு எல்லாமாக இருந்தார். பழைய தியான அன்பர்கள் சூழந்திருக்க, ஒரு குடும்பமாக இருந்த எங்களிடையே ஒரு குழந்தை பிறந்தது. சத்குருவுக்கும், விஜிக்கும் மட்டுமல்லாமல், எங்களுக்கும் அது கொண்டாட்டமான கணங்களாகவே இருந்தது.

ராதே: தனது வாழும் காலத்தில் அவர் நிறைவேற்ற முயற்சி செய்துகொண்டிருந்த தெளிவான நோக்கத்தையும், அதை எங்கே எடுத்துச் செல்ல விரும்பினார் என்பதையும் கருத்தில்கொண்டு, ஒரு குழந்தையையும் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் முடிவெடுத்தது ஏன் என்று என் தந்தையை நான் ஒருமுறை கேட்டுள்ளேன். அவர்கள் இருவரும் பைக்கிலேயே அவ்வளவு பயணித்துக்கொண்டு, அவ்வளவு செயல்பாடுகளுக்கிடையே ஒரு குழந்தையையும் பெற முடிவெடுத்தது எனக்கும்கூட சற்றுப் புரியாத ஒன்றுதான். ஆனால் அது என் தாயின் விருப்பமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு வீட்டையும், அந்த வீட்டில் தனது குழந்தை மற்றும் கணவருடன் வாழவும் விரும்பினார். அத்தனையையும் அவர் நிறைவேற்றிக்கொண்டார்.

கீதா கந்தசாமி: அப்போது ராதேவுக்கு 90 நாட்கள் கூட ஆகியிருக்காது, அவர் நிகழ்ச்சி முழுவதும் அங்கேதான் இருந்தார். குழந்தைக்கென அல்லது அவர்களுக்கென தனியறை எதுவும் இல்லை. அவர்கள் எங்களுடன் தான் இருந்தார்கள். மேலும், குழந்தைக்கென சிறப்பு கவனிப்பு எதுவும் இல்லை. சில சமயங்களில் அந்த வகுப்புகளின்போது, அவர்களுக்கு உணவு கூட இருக்காது. மக்கள் அதற்காக பொறுப்பேற்று, பின் மறந்து விடுவார்கள். அவர்கள் கேட்கக்கூட மாட்டார்கள்.

மா கம்பீரி: விஜி அப்போது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். குழந்தை ராதே சத்குருவுடன் பயணித்துக்கொண்டிருக்க, சத்குருதான் குழந்தையைக் கவனித்துக்கொள்வார். வகுப்புக்காக எங்கு சென்றாலும் இப்படித்தான் வெவ்வேறு வீடுகளில் ராதே வளர்ந்துவந்தாள். அவள் எந்த வீட்டுக்குச் சென்றாலும், அந்த வீட்டுத்தலைவியை “அம்மா” என்றும் வீட்டுத்தலைவரை “அப்பா” என்றும் அழைப்பதை நான் கண்டேன். ராதே அவர்களை அம்மா, அப்பா என்றுதான் குறிப்பிடுவாள், மற்றும் சத்குரு மட்டும் அவளுக்கு எப்போதும் “ஜக்கி”யாகத்தான் இருந்தார்.

ராதே: அந்த நேரத்தில், அவரை அனைவரும் – என் தாய், தன்னார்வலர்கள், அப்போது அறக்கட்டளையில் முழு நேரமும் இணைந்திருந்த மக்கள் – ஜக்கி என்றே அழைத்தனர். அவர் அனைவருக்குமான ஒரு நண்பராக இருந்தார். அவரை அனைவரும் ஜக்கி என்று அழைத்த ஒரு வீட்டில் நான் வளர்ந்த காரணத்தால், நானும் கூட அப்படியே அழைத்ததாக நினைக்கிறேன்.

என் தாயும், தந்தையும் இணைந்திருந்த ஒரு பழைய புகைப்படம் இருக்கிறது. என் தந்தை சவரம் செய்வதை நிறுத்துவதற்கு முன்பு, மீசையும், கத்தரிக்கப்பட்ட தலைமுடியும் வைத்திருந்தார். அந்த மாதிரி நான் அவரை ஒருபோதும் பார்த்ததில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், அவர் நீளமான தலைமுடியுடனும், நீண்ட தாடியுடனும்தான் இருக்கிறார். ஆகவே, அந்தக் குறிப்பிட்ட புகைப்படம் என்னைக் குழப்புவது வழக்கம் – இந்த நபர் யார்? ஆகவே நான் என் தாயைக் கேட்டேன், “உங்கள் தோள் மீது கை வைத்திருக்கும் இந்த மாமா யார்?” அவர் அடக்கமுடியாமல் சிரித்தவாறு, “போய் ஜக்கி மாமாவைக் கேள்”, என்றார். அந்தப் புகைப்படம் என்னை நீண்டகாலம் குழப்பியவாறு இருந்தது.

மா கம்பீரி: ஆனால் நான் எப்போதும் விஜியை, ஒரு கவனிப்பு மிகுந்த தாயாக இருப்பதைப் பார்த்துள்ளேன். இருப்பினும், விஜியின் தந்தையோ அல்லது மகளோ மற்றும் வேறு யாருமே இருந்திராத அளவுக்கு, சத்குரு விஜியின் வாழ்வில் முக்கியமானவராக இருந்தார்;

அழகுமலை என்ற இடத்தில் நடைபெற்ற பெண்களுக்கான பாவஸ்பந்தனாவில் தன்னார்வலராக இருப்பதற்கு நான் சென்றபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. பெண்களுக்கான பாவஸ்பந்தனா முடிந்தபிறகு, அடுத்த நாள் ஆண்களுக்கான பாவஸ்பந்தனா தொடங்கவிருந்தது. ஆகவே நான் சத்குருவிடம் கேட்டேன், “நீங்கள் வேறெங்காவது சென்றுவிட்டு, பிறகு நாளைக்கு இங்கு வருவீர்களா?” அவர், “இல்லை, ஆண்களுக்கான வகுப்பு நாளை தொடங்கவிருக்கிறது. நான் இங்கேயே தங்கிவிடுவேன்”, என்றார். இப்படி நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு தியான அன்பர், விஜி தொலைபேசியில் பேசியதாகவும், இரண்டு பாவஸ்பந்தனாவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சத்குரு திருப்பூர் நகருக்கு வருவாரா என்று கேட்டதாகவும் கூறினார்.

விஜி அழைத்ததையும், அவர் வருவாரா என்று அறிந்துகொள்ள விரும்பியதையும் கேட்ட கணமே, சத்குரு திருப்பூருக்குக் கிளம்பிவிட்டார். ஏனெனில் வகுப்புகள் நடந்துகொண்டிருந்த இடத்தில் தொலைபேசி செய்யும் வசதி இல்லாததால், அவர் அங்கு சென்று விஜிக்கு தொலைபேசி செய்துவிட்டு, மீண்டும் வகுப்பு நடந்த இடத்திற்கு வண்டி ஓட்டியவாறு வந்தார். அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கான ஒருவழிப்பயணமே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும்.

ராஜா: விஜி அக்கா கோபமாக இருந்தால், அதுகூட 100 சதவிகிதமாகத்தான் இருக்கும். அந்த நேரங்களில் யாரும் அவர்களுக்கு அருகில் செல்லமுடியாது.

சத்குரு: என் மனைவி விஜி கூறுவதுண்டு, “இந்த கணம், என்னுடன் இருக்கும் இவர்தான் மிக அற்புதமான கணவர்; மிக அன்பானவர், மிக அதிசயமான மனிதர் என்பதுபோல இருக்கும். அடுத்த கணமே, இவர் முற்றிலும் புதியவர் போல் இருப்பார். இவர் யார் என்பதே புதிரானது,” அந்த மாதிரி ஒரு நிலையில் இணைந்து வாழ்வது எளிதல்ல.

ராஜா: ஒரு வகுப்பு தொடங்க இருக்கிறது என்றால், 13 நாட்களுக்கு அவர் வெளியூரில் இருக்க நேரும் என்ற காரணத்தால், விஜி அக்காவுக்கு சத்குரு ஏதோ ஒரு உறுதியளிக்க வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, “நீ தீட்சை நாளன்று அங்கு வந்துவிடு, இரவில், நாம் ஒரு திரைப்படம் செல்வோம்,” என்பதைப்போல ஒரு உறுதிமொழி இருக்கும். அவர் திடீரென்று திட்டத்தை மாற்றினால், அதற்காக சத்குரு ஒரு விலை தருவதை விஜி அக்கா உறுதி செய்துகொள்வார்.

மா கற்பூரி: சத்குரு மைசூரில் ஆரம்ப நாட்களில் வகுப்புகள் நடத்தியபோது இருந்ததைப்போல், பல சூழல்களில் விஜி சத்குருவுக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். அந்த நேரத்தில் ஒரு வங்கியில் பணிபுரிந்துகொண்டு, சத்குரு தனது வாழ்வில் இந்த மிகப்பெரிய நிலைமாற்றத்தை மேற்கொண்டிருந்தபோது, அவரது நிதித்தேவைகளை விஜியே கவனித்துக்கொண்டார்.

ராஜா: ஒருமுறை, பாவஸ்பந்தனா மற்றும் சம்யமாவில் ஒரு புதிய தியானத்தை அறிமுகப்படுத்தும் முன், அந்த தியானத்தை முழுமைப்படுத்துவதற்காக சத்குரு ஒருவாரகால சாதனாவில் இருந்தார். இந்தக் காலகட்டம் முழுவதும், அவருடன் இருந்த விஜி அவரை முற்றிலுமாக கவனித்துக்கொண்டார். அதற்குப் பிறகு, சத்குரு கோவையில், முதல் ஹடயோகா வகுப்பு நடத்தினார். அது ஒரு பிரமிக்கத்தக்க அனுபவமாக இருந்தது. அப்போது விஜி பகிர்ந்துகொண்டார், “அவர் ஒரு குழந்தை போல இருக்கிறார்; எப்போதும் நான்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்.”

ராதே: என் தாயுடன் யார் இருந்தாலும் அவர்களுடன் முழுமையான ஈடுபாடுடன் இருந்துள்ளார். அவர்கள் யாருடனும் ஈடுபாடு காண்பிக்காத எந்த ஒரு கணத்தையும், நான் ஒருபோதும் கண்டது கிடையாது. ஜக்கி அல்லது என்னுடன் மட்டும்தான் என்பதில்லை, சுற்றிலுமிருந்த ஒவ்வொருவருடனும் அப்படித்தான் இருந்தார். என் தாய் யாரைச் சந்தித்தாலும், அவர்களுடன் முழுமையாக இணைந்திருந்து, அந்த கணத்தில் அவர்களின் உணர்வுகளில் ஒன்றியிருந்தார்.

சுவாமிநாதன்: அப்போதெல்லாம் விளையாட்டின்போது, சத்குருவின் தலைமையில் ஒரு குழுவும், விஜி அம்மாவின் தலைமையில் ஒரு குழுவும் விளையாடும். ஏழு கற்கள் பந்து விளையாட்டை நாங்கள் எப்படி விளையாடுவோம் என்பது ஒரு உதாரணம்.

மா கம்பீரி: சத்குருவை அவுட் செய்வதுதான் விஜியின் ஒரே முனைப்பாக இருக்கும். அதனால் மிகவும் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுவார்கள்.

சுவாமிநாதன்: சத்குரு முன்னால் வந்து நின்றுகொண்டு நேரடியாக சவால் விடுவார், “மறுபடியும், நீங்கள் கற்களை சரியாக வைக்காமல் இருக்கிறீர்கள்.” அந்த விளையாட்டுக்கள் முழு தீவிரத்துடன் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்கள் நீடிக்கும்.

மா கற்பூரி: விஜி இடுப்பில் கை வைத்தபடி சத்குருவின் எதிரில் வந்து நின்று எதிர்கொள்வார்.

கோதைசேகர்: பிறகு அவர்கள் இருவருக்குமிடையே பதிலுக்கு பதில் வார்த்தைப் பரிமாற்றங்களும் இருக்கும்.

ராஜா: விளையாட்டின்போது விஜி அக்கா பத்ரகாளிபோல் இருப்பார்.

கோதைசேகர்: ஒருமுறை வகுப்பில் நானும், விஜியும் தன்னார்வத்தொண்டு செய்துகொண்டு அருகருகே அமர்ந்திருந்தோம். வகுப்பில் உரை நிகழ்த்தும்போது, சத்குரு பத்து வருடங்களில் தன் உடலை விடப்போவதாகக் கூறினார். சட்டென்று விஜி நடுங்கிய கரங்களால் என்னைப் பற்றிக்கொண்டார். என்னவென்று பார்ப்பதற்காக நான் அவர் பக்கமாகத் திரும்பியபோது, கட்டுக்கடங்காமல் அழுதுகொண்டிருந்ததைக் கண்டேன். அது மாலை நேர வகுப்பாக இருந்த நிலையில், இரவு முழுவதும் அவர் கூறியதை எண்ணி அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில், அவர்கள் மயக்க நிலைக்குக்கூட சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்கு வழி தெரியவில்லை.

சத்குரு எக்ஸ்க்ளூசிவ்-ல், “விஜி: வெற்றித் திருமகள்” என்ற முழு தொடரையும் காணலாம்.