உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் இடையறாத சுழற்சியில் சிக்கிப்போயிருக்கிறீர்களா? பகற்பொழுதின் மனரீதியான பாரத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்வதற்கு வடிவமைக்கப்பட்ட, மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு இரவுநேரப் பயிற்சியினை சத்குரு பகிர்ந்துகொள்கிறார். இதன் மூலம், ஓர் சுமையற்ற வாழ்க்கை அனுபவத்திற்கான புதிய தெளிவு,இலேசான தன்மை மற்றும் விடுதலை உணர்வை உங்களுள் விழித்தெழச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிடுங்கள். நீங்கள் இன்னும் ஆழமாக செல்கையில், இருப்பின் நிதர்சனத்துக்கும், நமது மனங்களுக்குள் நாம் கட்டமைக்கும் புனர் கதைகளுக்கும் இடையிலான வேறுபாட்டினை வெளிக்கொணர்வீர்கள்.வாழ்வில் ஆனந்த இருப்பையும், முழு ஈடுபாட்டையும் வளர்த்தெடுக்கும் நடைமுறை வழிகாட்டுதலை சத்குரு நமக்கு வழங்குகிறார்.
கேள்வி: சத்குரு, இருப்பின் நிதர்சனத்துக்கும், மனரீதியான நிதர்சனத்துக்கும் இடையில் எப்படி ஒரு கோடு வரைவது? மேலும், முழுமையான ஈடுபாட்டுடன் வாழ்தல் குறித்த விளக்கத்தையும், அதை எப்படி பயிற்சி செய்வது என்பதற்கான வழிகாட்டலையும் எங்களுக்கு வழங்கமுடியுமா?
சத்குரு: நீங்கள் இருப்போடு மனத்தை ஒப்பிட்டுக் கேட்பதனால் , நீங்கள் உருவாக்கும் அனைத்தும் – உங்கள் எண்ணங்கள், உங்களது உணர்ச்சிகள், உங்கள் கருத்துகள், உங்கள் அபிப்ராயங்கள், மற்றும் உங்களது தத்துவங்கள் – அனைத்தும் மனரீதியானவை. நீங்கள் இவற்றை எங்கிருந்தாவது, அதாவது உங்களுடைய மதத்திலிருந்து, உங்களுடைய கலாச்சாரத்திலிருந்து, வேறு யாரோ ஒருவரிடமிருந்து எடுத்து வந்திருக்கலாம், ஆனால் அவை எல்லாமே மனரீதியானவை. அது உங்கள் தலைக்குள் மட்டும்தான் வேலை செய்கிறது.
உங்களின் கண்ணோட்டத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்பினால், இன்றிரவு உறங்கச் செல்லும் முன் இந்தப் பயிற்சியை நீங்கள் முயற்சிக்கலாம்: உங்கள் படுக்கை மீது அமர்ந்து கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சேர்த்துவைத்துள்ள அனைத்தையும் கருத்தில் கொள்ளுங்கள் – உங்களின் செல்வங்கள், உங்கள் பணம், உங்கள் ஆடைகள், உங்கள் உடல், உங்கள் மனம், உங்களது உறவுகள், அனைத்தையும் – விழிப்புணர்வோடு ஒதுக்கி வையுங்கள், பின்பு நீங்களாக மட்டும் படுக்கைக்குச் செல்லுங்கள். ஆரம்பத்தில், நீங்கள் அதனுடன் போராட வேண்டி இருக்கலாம், ஆனால் தினமும் பயிற்சியைத் தொடருங்கள்.
காலையில் நீங்கள் கண்விழித்து எழும்போது, ஒரு புத்தம்புதிய உயிர் போல நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் பிறந்தபோது, இங்கே ஒரு சிறிய உடலுடன் மட்டுமே வந்தீர்கள்; இப்போது அது மிகவும் பெரியதாகியுள்ளது. இது மொத்தத்தையும் நீங்கள் சேகரித்துள்ளீர்கள். விழிப்புணர்வில்லாமல் நீங்கள் விஷயங்களைச் சேகரிக்கும்போது – அது உங்கள் உடலோ, மனமோ, உடைமைகளோ அல்லது மனிதர்களோ எதுவாயினும் – அவை அனைத்தும் சுமையாகின்றது. விழிப்புணர்வின்மையில், அனைத்தும் உங்களைப் பற்றிக்கொள்கிறது, இப்போது அதை நீங்கள் உங்களுடனேயே சுமக்கவும் வேண்டியுள்ளது.
நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தீர்கள் என்றால், அது உங்களுடன் ஒட்டிக்கொள்வதை கற்பனை செய்துபாருங்கள்; உங்கள் பின்பக்கத்துடன் ஒட்டிக்கொண்ட நாற்காலியுடன் நடமாடுவது மிகவும் அவலட்சணமாக இருக்கும். பெரும்பாலான மக்களுக்கு இதுதான் வாழ்வின் நிதர்சனமாக இருக்கிறது; அவர்கள் ஓராயிரம் விஷயங்களைச் சுமந்துகொண்டே செல்வதை அவர்கள் இன்னும் உணரவில்லை அவ்வளவுதான்.
நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது உங்கள் முகம் எவ்வளவு அழகாக இருந்தது. நீங்கள் வளரவளர, நீங்கள் சேகரித்துள்ள பலதரப்பட்ட விஷயங்களுடன், உள்ளபடியே நீங்கள் மேலும் அதிக ஆனந்தமானவராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கை கூடுதல் சுமையானதாகியுள்ளது, மற்றும் உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் இதே விதமாக இருப்பதால், அது சரியானது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் – ஆனால் அது சரியல்ல. ஒவ்வொரு உயிர் வடிவமும் – புழு, பூச்சியிலிருந்து பறவைகள், மரங்கள், மற்றும் மனிதர்கள் வரை – ஒரு உற்சாகமான, முழு அளவிலான உயிராக இருக்கத்தான் முயற்சிக்கிறது. ஆனால் நீங்கள் சேகரித்துள்ள விஷயங்களையே ‘நீங்கள்’ என்று தவறாகக் கருதினால், உங்களால் எதையும் செய்யமுடியாது.
மனரீதியான செயல்முறையை உண்மையானது என்று நீங்கள் தவறுதலாகப் புரிந்துகொள்ளும்போது, அதன்பிறகு அவை அனைத்தும் உங்களுடன் ஒட்டிக்கொள்கிறது. எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் இதை உணரவேண்டியது அவசியம், அதாவது எங்குமில்லாததின் நடுவில் இது ஒரு சின்னஞ்சிறு கிரகமாக, சூரியனைச் சுற்றி சுழன்றும், வட்டமடித்துக்கொண்டும் இருக்கிறது. அது எங்கே தொடங்குகிறது என்று உங்களுக்குத் தெரியாது. அது எங்கே முடிகிறதென்றும் நமக்கு எதுவும் தெரியாது. இந்தச் சின்னஞ்சிறு பூமியில், நாம் சர்க்கஸ் செய்துகொண்டிருக்கிறோம்.
படைத்தலைப் பொறுத்தமட்டில், நீங்கள் ஒரு மிகச்சிறிய தன்மை. இதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் கருத்துகள், அபிப்ராயங்கள், மற்றும் சூத்திரங்களுடன் நீங்கள் அதிகம் பிணைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் உங்கள் தலைக்குள், நீங்கள் பெரிய ஆள் என்று நினைக்கிறீர்கள் – இது ஒரு ஆபத்தான பிரச்சனை. பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு தூசியளவுகூட இல்லை. ஆனால் உங்கள் வீட்டில் – நீங்கள் ஒரு பெரிய ஆளென்று நீங்கள் எண்ணிக்கொள்கிறீர்கள் – உண்மையிலே இது ஒரு ஆபத்தான பிரச்சனை.
ஆதலால், இரவில், நீங்கள் உறங்கச் செல்லும் முன், எல்லாவற்றையும் கீழே போட்டுவிடுங்கள். நீங்கள் எதுவும் இல்லாதவர் போல் ஆகிவிடுங்கள். உலகத்தில், யாரோ ஒருவராக நீங்கள் நடமாடவேண்டும்; அது நல்லதுதான். மற்றவர்களுடன் நீங்கள் பாசாங்கு செய்துகொள்ளலாம், ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றாக இருக்கிறீர்கள் என்பதாக நீங்கள் நம்பவேண்டியதில்லை. இந்த எல்லாக் குப்பையையும் உங்கள் தலைக்குள் நீங்கள் சுமக்காமல் இருந்துவிட்டால், பிறகு வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. வெறுமனே சுவாசித்துக்கொண்டு, இங்கே அமர்ந்திருப்பதே அதிஅற்புதமானது.
நீங்கள் யாருடைய இறுதிச் சடங்குக்காவது சென்றிருக்கிறீர்களா? அந்த ஆள் அசையாத ஒரு நிலையில் கீழே படுத்திருக்கிறார். அதற்கு ஒருநாள் முன்னர்தான், பணத்துக்காக அவர் சுற்றிலும் ஓடியாடித் தாவிக்கொண்டு இருந்திருப்பார். இப்போது நீங்கள் அவரிடம் சென்று, லாட்டரியில் அவர் ஓராயிரம் கோடிகள் வென்றுவிட்டார் என்று கூறினாலோ, அல்லது அவரது வீட்டுக் கொல்லையில் ஒரு பெரிய உருண்டையை நாம் கண்டெடுத்துள்ளதாகக் கூறினாலோ, அவருக்கு அதில் எந்த ஆர்வமும் இருக்காது . அவர் விரும்பும் எதையும் நீங்கள் அவரிடம் குறிப்பிடலாம் – உணவு, பெண்கள், மது, எதிலும் -அவர் ஆர்வம் கொள்ளமாட்டார். ஒருநாள் முன்புவரை, இந்த விஷயங்களுக்காக இடையறாமல் அவர் எல்லா இடங்களிலும் சுற்றியிருந்திருப்பார்.
அப்போதைக்கும் இப்போதைக்கும் இடையில் அவருக்கு நிகழ்ந்துள்ள ஒரே விஷயம் என்னவென்றால், அவரிடமிருந்து உயிர் பறிக்கப்பட்டு விட்டது. உயிர் போய்விட்டால், மற்ற எல்லா விஷயங்களும் அவருக்கு அர்த்தமற்றுப் போகின்றன. இப்போதுகூட, உங்களிடம் இருப்பது உயிர் மட்டும்தான். மற்றவை அனைத்தும் உங்கள் கற்பனையே. உங்கள் ஞாபகத்தை மட்டும் நான் நீக்கிவிட்டால், உங்கள் தந்தை அல்லது தாய் யார் என்பது உங்களுக்குத் தெரியாது. உங்கள் ஞாபகத்தை நான் நீக்கிவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் உங்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. ஆதலால், இது எல்லாமே மனரீதியானது மட்டுமே. சமூக சூழலைப் பொறுத்தவரை அது சம்பந்தமுள்ள விஷயம் தான். ஆனால் உங்களின் உள்நிலைக்கு , எந்த சம்பந்தமும் அற்றது அது.
நாங்கள் உங்களுக்கு ஒரு கிரீடம் தருவதாக வைத்துக்கொள்வோம். ஒரே விஷயம் என்னவென்றால், அது 25 கிலோ எடை கொண்டது – 20 கிலோ தங்கத்துடன், மற்றொரு ஐந்து கிலோ வைரம். அதைச் சூடிக்கொண்டு உங்களால் நன்றாக நடமாடமுடியாது. உங்கள் தலை மீது நாம் 25 கிலோ கல்லை வைக்கிறோமோ, அல்லது 25 கிலோ தங்கத்தை வைக்கிறோமோ, சுமை சுமைதான். சமூகத்தில், சில அறிவிலிகள் உங்களைப் பார்த்து, “அடேயப்பா! அவர் தலை மீது அத்தனை தங்கம் வைத்துள்ளார்”, என்று கூறலாம். ஆனால் உங்களின் சுமை ஒன்றேதான். ஆதலால், உங்கள் மனித அனுபவமும், உங்கள் சமூகப் பரிவர்த்தனைகளும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அவற்றை நீங்கள் புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது மிக முக்கியம்.
உங்களுடைய மனரீதியான நிதர்சனங்கள், இருத்தலின் நிதர்சனத்தைவிட மிகப்பெரியதாக இருக்கும்வரை, உங்களுக்கு உண்மையான ஈடுபாடு என்பது இருக்காது. பெரும்பாலான மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும், அவர்கள் தனக்குள் என்ன நினைக்கின்றனர் மற்றும் உணர்கின்றனர் என்பதைக் குறித்தே உள்ளது. அவர்களுக்கு இருத்தலின் நிதர்சனத்தைவிட, அவர்களது எண்ணங்களும், உணர்ச்சிகளுமே அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அப்படியானால் நீங்கள் வாழ்க்கையை முற்றிலும் தவறாகப் புரிந்துள்ளீர்கள் என்பதே இதன் பொருள். நீங்கள் உங்களது எண்ணங்களுடன் மட்டும் ஈடுபாடு கொண்டுள்ளீர்கள். உங்களது சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் பிடியில் நீங்கள் சிக்கிக் கிடக்கும்போது, எப்படி உங்களால் அனைத்துடனும், அல்லது எதனுடனேனும் ஈடுபாடாய் இருக்க முடியும்?
உங்கள் எண்ணங்களும், உணர்ச்சிகளும் அதிக முக்கியமாகிவிட்டதற்கு காரணம் என்னவென்றால், உங்களுக்குள் எங்கோ ஓரிடத்தில் இந்தப் படைப்பிலேயே நீங்கள்தான் மிகமுக்கியமான நபர், பிரபஞ்சத்தின் மையம் நீங்கள்தானென்று நினைக்கிறீர்கள். இதனால்தான், ஆன்மீக செயல்முறையில் பக்தி குறித்து அதிகம் பேசப்படுகிறது. உங்களைவிட அதிக முக்கியமாக ஏதோ ஒன்றை அல்லது யாரோ ஒருவரை நீங்கள் உயரத்தில் வைக்கும்போது, பக்தி மேலெழுகிறது. உங்களைவிட ஏதோ ஒன்றை அல்லது யாரோ ஒருவரை மிக அதிக முக்கியமானதாக உயர்த்திப்பிடிக்கும்போது, ஈடுபாடு என்பது இயல்பான செயல்முறையாக உள்ளது.
மக்கள் யாருடனாவது காதலில் விழும்போது, ஓரளவுக்கு அவர்கள் இதனை உணர்கின்றனர். ஆரம்பத்தில், அது எல்லாமே அந்த நபரைக் குறித்ததாக இருக்கிறது. ஆனால் சிறிது காலத்துக்குப் பிறகு, அது எல்லாமே உங்களைக் குறித்ததாகவும், உங்கள் நன்மைக்காக அந்த நபரை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதைக் குறித்ததாகவும் இருக்கிறது. அதன்பின், கிளர்ச்சியான அனுபவமாக முன்னர் இருந்த ஒன்று, சிக்கலாக ஆகிவிடுகிறது.
நீங்கள்தான் பிரபஞ்சத்தின் மையம் என்று நீங்கள் நினைக்கும்போது, பிரபஞ்சம் உங்களிடம் ஈடுபாடாக இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் நீங்கள் அதனிடம் ஈடுபாடு கொள்வதில்லை. ஒவ்வொரு கணமும் உங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் பிரபஞ்சம் ஏற்கனவே ஆழமான ஈடுபாட்டுடன்தான் உள்ளது. பிரபஞ்சம் உங்களுடன் ஈடுபாடு கொள்ளாமல் இருந்திருந்தால், நீங்கள் இறந்திருப்பீர்கள்.
நீங்கள் சுவாசிக்கும் காற்று, நீங்கள் அமர்ந்திருக்கும் பூமி, நீங்கள் அருந்தும் நீர், இவை அனைத்தும் உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. உங்களைச் சுற்றிலுமோ அல்லது உங்களுக்குள்ளேயோ உள்ள ஏதோ ஒன்று உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதற்கு கவனம் கொடுங்கள். யாராவது உங்கள் கழுத்தை நெரித்துப் பிடித்திருந்தால், அந்த நேரம் நீங்கள் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்தி, அதனுடன் முழுமையாக ஈடுபடக்கூடும். அதுபோல வலி மற்றும் ஆபத்தின் தீவிரமான கணங்களில் மட்டும்தான் தற்போது உங்களுக்கு ஈடுபாடு வருகிறது. நீங்கள் உயிரை அலட்சியம் செய்தால், அது உங்களைக் கடந்து சென்றுவிடும்.
நீங்கள் எடுக்கும் ஒரு எளிமையான சுவாசம் உங்களுக்கு உயிர் தருவதாக உள்ளது. நுரையீரலை நிறைக்கும் ஒரு சுவாசம்தான் தற்போது உங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இது ஒரு அற்புதமான, அதிசயமான செயல்முறை. ஆனால் அதை லட்சியம் செய்யத் தேவையில்லை என்று நீங்கள் எண்ணுவது ஏனென்றால், மற்ற எதனுடனும் ஈடுபாடுகொள்ள வழியில்லாத அளவுக்கு நீங்கள் உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் உங்களை மூழ்கிக் கிடக்கிறீர்கள்.
மதுவையோ அல்லது போதைப்பொருள்களையோ உட்கொள்ளாமல், வேறு எதையும் செய்யாமல், நீங்கள் பரவசமாக இருக்கமுடியும். இது நீங்கள் கண்டுணரவேண்டிய ஒரு சாத்தியம். அற்புதமான விஷயங்களைச் செய்யக்கூடிய ஏதோ ஒன்று உங்களுக்குள் உள்ளது, ஆனால் தற்போது நீங்கள் அதை தடுத்து வைத்துள்ளீர்கள். அதனை வெளிக்கொணர்வதற்கான நேரம் இது. நம்முடைய பாவஸ்பந்தனா நிகழ்ச்சி அந்த சாத்தியத்தை உங்களுக்குக் காண்பிக்க முடியும்.
உங்களை நீங்களே ஆராய்ந்துணர்வது தகுந்தது. ஆனால் பெரும்பாலான மக்கள் தவணைகளில் திறந்த நிலைக்கு வருகின்றனர் – அவர்கள் ஒரு குறிப்பிட்ட உச்சத்தை அடைந்து, அதன் பிறகு தவணைகளில் பின்வாங்கத் தொடங்கிவிடுகின்றனர். யாரோ ஒருவர் ஏதோ ஒன்றைக் கூறியதால் அல்லது செய்துவிட்ட காரணத்தால், காலம் செல்லச் செல்ல அவர்கள் திறந்த தன்மையில் இருப்பதைக் குறைத்துக்கொண்டே செல்கின்றனர். நீங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட தன்மையாக இருந்துள்ளதால், இது போன்ற விஷயங்கள் ஒரு பிரச்சனையாக இருக்கிறது, மேலும் அது ஒவ்வொரு கட்டத்திலும் அச்சுறுத்தலை உணர்கிறது. அது எவ்வளவு அச்சுறுத்தலாக உணர்கிறதோ, அவ்வளவு அதிகமாக பாதுகாப்பு செயல்முறையும் அதிகரிக்கிறது.
ஒரு மனிதருக்குள் இரண்டு அடிப்படையான பரிமாணங்கள் உண்டு: சுய-பாதுகாப்புணர்வு மற்றும் எல்லையில்லாமல் விரிவடைவதற்கான ஏக்கம். இந்த இரண்டில் எதை நீங்கள் வலிமைப்படுத்தப் போகிறீர்கள்? எல்லையில்லாமல் விரிவடைவதற்கான பேராவலை நீங்கள் வல்லமைப்படுத்தினால் மட்டும்தான், நாங்கள் செய்யும் அனைத்தையும் உங்களால் உணரமுடியும். உங்கள் எல்லைகளை பலப்படுத்துவதற்கு நீங்கள் முயற்சித்தால், எல்லாமே உங்களுக்கு எதிராக இருக்கும், அல்லது குறைந்தபட்சம் உங்கள் அனுபவத்தில் அது எதிரானது போல் தோன்றும்.
பாவஸ்பந்தனா ஒரு முழுமையான செயல்முறை அல்ல – அது ஒரு ட்ராம்போலின் போன்றது. நீங்கள் போதிய உயரத்தில் குதித்தெழும்பினால், உங்களால் சுவரைத் தாண்டிப் பார்க்கமுடியும். அது உங்களுக்கு ஒரு காட்சியை மட்டும் வழங்குகிறது, ஆனால் பாவஸ்பந்தனாவைக் கொண்டு, நீங்கள் சுவரைத் தாண்டிச் செல்லமுடியாது. உங்களால் சுவர் தாண்டிப் பார்க்கமுடிந்தால், நீங்கள் மெல்லமெல்ல ஒரு ஏணியைக் கட்டமைத்து, ஒருநாள் சுவர் தாண்டிச் செல்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ஏணிதான் ஈஷா யோகா. அதனால்தான் அது மிகவும் ஈர்ப்பில்லாததாக – எல்லாமே காரண அறிவாக உள்ளது. நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மேலேறுகிறீர்கள். இறுதியில், நீங்கள் சுவர் தாண்டிச் செல்வீர்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால், நீங்கள் ஏணியின் மூன்றாவது படியில் நின்றுகொண்டு,நீங்கள் கடந்துவிட்டதாக எண்ணுகிறீர்கள். தினமும் நீங்கள் மேலேற விரும்புவதில்லை. நீங்கள் அங்கேயே தேங்கி விடுகிறீர்கள் அல்லது கீழிறங்கிவிடுகிறீர்கள்.
பாவஸ்பந்தனா உங்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் ஒரு காட்சியை வழங்குகிறது, ஆனால் அது உங்களை வேறெங்கும் எடுத்துச் செல்வதில்லை. சுவரைத் தாண்டிச் செல்வது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு நீங்கள் விரும்பினால், அதற்கொரு வழிவகை உள்ளது. அந்த வழிவகை உங்களுக்குப் பெரிதாக சிலிர்ப்பூட்டுவதாக ஒன்றும் இருக்காது. ஆனால் நீங்கள் ஒரு மாடிப்படியை அல்லது ஒரு ஏணியைக் கட்டமைத்தால், நீங்கள் நிச்சயம் சுவரைக் கடந்து செல்வீர்கள்.
ஈஷா யோகாவின் அடிப்படையான கொள்கைகளை உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் நிதர்சனமான ஒன்றாக நிகழ்த்தவேண்டியது தேவை. ஈஷா யோகாவின் ஒவ்வொரு அம்சத்தையும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நடைமுறைப்படுத்தினால், அது கதவுகளைத் திறந்துவிடும், இப்போது விஷயங்கள் மெல்ல நிகழும். ஒவ்வொரு நபருக்கும், அவரவர் வேகத்தில் அது இயல்பாக நிகழும், ஏனென்றால் தன்னளவில் அது ஒரு முழுமையான பாதை ஆகும்.