
வாழ்க்கையில் புறசக்திகளின் இடையறாத தள்ளுமுள்ளுகளுக்கு மத்தியில், தனிமனித தேர்ச்சிக்கான ஒரு பாதையாக ஈஷா யோகா காணப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே நமது மனங்களுக்குக் கட்டளையிட்டு, நமது விதியை நம்மால் செதுக்கமுடியுமா? சுய வல்லமை பெறுதல் மற்றும் நமது உணர்திறனின் எல்லைகளுக்கு மேல் உயர்வதற்கான வலிமையை நோக்கிய பயணத்தை அறிவுறுத்தும் சத்குருவின் ஆழமான ஞானத்தில் நனைந்திடுங்கள்.
கேள்வியாளர்: நமது கட்டுப்பாட்டை மீறிய நிலையில் நம்மைச் சூழ்ந்திருக்கும் வெளிச்சூழல்கள் மற்றும் மக்களால் எல்லா நேரமும் தாக்கத்துக்கு உள்ளாகும் நமது மனங்களை நோக்குகையில், ஈஷா யோகா உண்மையில் சாத்தியம்தானா? என் மனதையும் எப்படி கவனிப்பது?
சத்குரு: ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம் – அவர்களுக்கு ஒரே பெற்றோர், அவர்கள் ஒரே பள்ளிக்குச் சென்றனர், மற்றும் ஒரே வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக வெளிப்படுகின்றனர். மற்ற மூவருக்கும் மாறாக, ஒருவர் மட்டும் குடும்பம், சூழல், மற்றும் சூழ்நிலைகளின் எல்லைகளைத் தாண்டி எழுவதற்கு முடிந்தது.
ஆகவே, அது சாத்தியம்தான். பல்வேறு எல்லைகளுடன் இருக்கும் ஒரே சமூகம் மற்றும் கலாச்சாரத்தில், ஒரு சில தனிமனிதர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டி எழுச்சி அடைகின்றனர், மற்றும் வேறு பலரும் எழுச்சி அடைவதில்லை. தங்களது ஒட்டுமொத்த மனித அமைப்பை உள்தன்மையில் எப்படிக் கட்டமைப்பது என்பதை அவர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் அதை ஒரு அறிவியலாக அணுகாமல், சில எளிமையான பயிற்சிகள், கடைப்பிடித்தல்கள், கற்றுக்கொள்ளும் வழிகளை வளர்த்துக்கொள்வதன் மூலமாகவே, அவர்கள் இந்த எல்லைகளைக் கடந்து பரிணமித்தனர்.
ஒருவேளை நீங்கள் பள்ளிக்குச் சென்றதில்லை என்றால், நீங்கள் இப்போது இருப்பதைப்போல் இருந்திருப்பீர்களா? உங்களது அறிவாற்றல் திறன்களும், மனதின் திறன்களும் இதைப்போல் இருக்காது. அதாவது, உங்களது கல்வி குறைந்தபட்சம் ஒரு சிறிய அளவுக்கேனும் உங்களை கட்டமைத்துள்ளது. ஒருவரது முகத்தைப் பார்த்தே, தங்கள் மனதை அவர்கள் எந்த அளவுக்கு பயன்படுத்துகின்றனர் என்றும், அது எவ்வளவு கூர்மையாக அல்லது கூர்மழுங்கியதாக உள்ளது என்றும் நீங்கள் கூறமுடியும்.
தனிமனிதர்கள் எப்போதும் தங்களைக் கட்டமைத்துக்கொண்டுதான் இருந்துள்ளனர், ஆனால் அதை ஒரு அறிவியலாக அவர்கள் பார்த்ததில்லை. அவர்களுக்குக் கிடைத்த ஆதாரவளங்களைப் பயன்படுத்தி அவர்கள் பரிணமித்துள்ளனர். யாரோ ஒருவர் மட்டும் அதிர்ஷ்டசாலியாக இருப்பதாக நாம் எண்ணிக்கொள்ளலாம், ஆனால் உண்மையில் அவர்கள் குறிப்பிட்ட விஷயங்களைச் சரியாக செய்தனர். அதனால்தான் அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில் இருக்கின்றனர்.
பலரும் குறிப்பிட்ட செயல்களில் இறங்குவதற்கு முன், உதாரணமாக அவர்கள் திருமணம் செய்வதற்கு முன், ஜோதிடவியல் கணிப்புகளைச் சார்ந்து செயல்படுகின்றனர். நீங்கள் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் எதிர்காலக் கணவர் அல்லது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்களா என்று ஒரு மூன்றாம் நபரிடத்தில் சென்று கேட்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தங்களது உள்தன்மையைப் பற்றி எதையும் அவர்கள் செய்திருக்காத காரணத்தால், மக்கள் அப்படிப்பட்ட விஷயங்களை நாடுகிறார்கள். சில குறிப்பிட்ட அம்சங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டால், தேவையான சூழ்நிலையை அவர்களால் உருவாக்கமுடியும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அவை அனைத்தும் உங்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. உங்கள் புத்திசாலித்தனம் அல்லது முட்டாள்தனத்தின் அளவையும் அது உள்ளடக்கியுள்ளது.
நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கும் சக்தி ஒன்றுதான் என்பதை நவீன அறிவியல் நிரூபிக்கிறது. கடவுள் எல்லா இடத்திலும் இருப்பதாக மதங்கள் கூறுகின்றன. கடவுள் எல்லா இடத்திலும் இருந்தால், பிறகு அவர் உங்களுக்குள்ளும்கூட இருக்கிறார். ஆனால் அவர், வெவ்வேறு தனிமனிதர்களில், வெவ்வேறு வழிகளில் ஏன் செயல்படுகிறார்? இந்த சக்தியானது தன்னை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் உருவாக்கியுள்ள சாத்தியத்தை அது சார்ந்திருக்கிறது. “கடவுள் எங்கும் இருக்கிறார்” அல்லது “அனைத்தும் ஒரே சக்தி” என்று நீங்கள் எப்படிக் கூறினாலும், அது அடிப்படையில் ஒரே விஷயம்தான்.
ஐன்ஸ்டீன் E=mc2 சமன்பாட்டை வரையறுத்தபோது, அனைத்தும் ஒரே சக்தி என்பதை அவர் எடுத்துக்காட்டினார். அது என்னவென்றால், நாம் “ஈஷ்வரா” என்று அழைக்கும் இந்த ஒரே சக்தியை அவர் “E” என்ற எழுத்தால் குறிக்கிறார். ஈஷ்வரன் எங்கும் இருப்பதாக நாம் கூறுகிறோம். இதனையே E எங்கும் இருக்கிறது என்று ஐன்ஸ்டீன் கூறுகிறார். நாம் சக்தியை மானிட உருவகமாக்க முயற்சிக்கும்போது, ஐன்ஸ்டீன் அதைப்பற்றி சக்தியாக மட்டும் பேசுகிறார் என்பதுதான் ஒரே வித்தியாசம்.
ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் இருக்கும் சாராம்சம் ஒன்றுதான் என்பதை அறிவியல் மற்றும் மதம் இரண்டுமே ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், ஒரே சக்தியானது பல்வேறு தளங்களில் வெளிப்பாடு காண்பது ஏன்? அது எல்லாமே உங்களுக்கு நீங்களே உருவாக்கியுள்ள வாய்ப்புகளைச் சார்ந்திருக்கிறது.