
பரவெளி மற்றும் ஈர்ப்பு குறித்த ஐன்ஸ்டீனின் புலனாகாத கருத்தாக்கங்களுக்கு வியக்கவைக்கும் ஒரு காட்சியை வழங்கும் கருந்துளையின் பிம்பம் ஒன்றைக் கைப்பற்றுவது அறிவியலுக்கான ஒரு மைல்கல்லாக இருந்தது. அறிவியற்பூர்வமான நுண் நோக்குதலைக் காட்டிலும் பிரபஞ்சத்தை அறிவது அதிக கவனம் தேவைப்படுவது என்பதை முன்வைக்கும் சத்குரு, தொலைநோக்கிகளிடமிருந்து, மனவெளிக்குத் திரும்பி, ஆழமாகப் பார்ப்பதற்கு நம்மை சவாலுக்கு அழைக்கிறார்.
கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. சமீபத்தில், ஈவன்ட் ஹொரைசான் டெலெஸ்கோப் இதுவரையில் யாரும் எடுத்திராத ஒரு கருந்துளையின் பிம்பத்தைப் படமாக்கியது. பரவெளி(space) மற்றும் காலம் (time) இவைகளது மாறுபாட்டின் விளைவுதான் ஈர்ப்பு என்பதை விவரிக்கும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டினை இது விரைவுபடுத்துகிறது. கருந்துளை என்பது ஒரு வெற்றிடம் என்று அவர்கள் கூறுகின்றனர். அது ஒரு சிறிய பரப்புக்குள் திணிக்கப்பட்ட பொருளின்(matter) ஒரு பெரிய சேகரிப்பாக உள்ளது. இதுதான் ஒளியினால்கூடத் தப்பிக்கமுடியாத, அதிவலிமையான ஈர்ப்புசக்தியாக உருவாகிறது. ஆகவே எனது கேள்வி, காலம் – பரவெளி(space-time) இவைகள் மீது எப்படி ஈர்ப்பானது தாக்கம் ஏற்படுத்துகிறது?
சத்குரு: ஈர்ப்புவிசையின் காரணமாகத்தான், நீங்கள் இங்கே எவ்வளவு நேரமாக அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் கால்களும், முதுகும் உங்களிடம் கூறுகின்றன. ஈர்ப்புவிசை இல்லாமலிருந்தால், பிரச்சனை இருக்காது. வாரப் பத்திரிக்கைகள், இணையக் கட்டுரைகள், மற்றும் வாட்ஸ் அப் செய்திகளில் பரப்பப்படும் அறிவியல்பூர்வமான மேதைமைகள் இந்த விதமாகத்தான் இருக்கிறது. இது முற்றிலும் தவறல்ல, ஆனால் மிகவும் எளிமையானது. ஆனால் கேள்வியில் ஒரு முரண்பாடு உள்ளது. ஈர்ப்பு விசையானது, பரவெளி- காலம் இவற்றின் விளைவு என்று நீங்கள் கூறினீர்கள், ஆனால் கேள்வியின் இறுதிப்பகுதி அதனுடன் முரண்படுகிறது.
அறிவியலை அற்பத்தனமாக அணுகக்கூடாது; அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான ஈடுபாடும் அதில் மூழ்கி இருத்தலும் தேவை. இந்த கிரகத்தில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே சார்பியல் கோட்பாட்டை உண்மையாகப் புரிந்துகொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் - அதிகபட்சம் 25 பேர் இருக்கலாம், அவர்களின் புரிதல் கூட குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருக்கலாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தானே தனது புரிதலின் வரம்புகளை உணர்ந்து அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஆகவே, “பரவெளி-காலம் இவைகள் எங்கோ ஒருஇடத்தில் வளைந்து நெளிகிறது”, என்பதுபோன்ற விஷயங்களை உருவாக்கிக்கொள்ளாமல் இருப்பது மேலானது. பிரபஞ்சத்தில் ஒரு நேர்க்கோடாக இருப்பது எதுவுமில்லை; அனைத்தும் வளைந்தும் நெளிந்தும் இருக்கிறது. அதுதான் படைப்பின் இயல்பு, மற்றும் பூமியின் இயல்பும்கூட. உண்மையில் நீங்கள் அதை ஒரு பெரிய அளவில் பார்க்கும்போது, எல்லாமே வளைந்தும் மாறுபட்டும் இருக்கிறது, மற்றும் சூரியனின் கதிர்கள்கூட ஒரு நேர்க்கோடாக உங்களை வந்தடைவதில்லை; அவைகளுக்கும் அங்கே ஒரு மாறுபாடு உள்ளது. உங்களது மனதில் முடிவு செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கத்துக்குள் பிரபஞ்சத்தின் இயல்பை உங்களால் அடக்கிவிடமுடியாது.
யோகக் கலாச்சாரத்தில், சிவன் திறந்த வாயுடன் அமர்ந்திருக்க, அதிலிருந்து பால்வெளிகள் வெளிப்படுவதாக அழகான பிம்பங்கள் உள்ளன. எல்லா பால்வெளிகளும் மீண்டும் வாயில் உள்ளிழுக்கப்படும் மற்ற சித்தரிப்புகளும் இருக்கின்றன. ஆகவே, இயற்கையில் பொருள்தன்மையாக இல்லாதது எதுவோ அதனை சிவன் குறிக்கிறார். அதை நீங்கள் கருந்துளை, கருப்பு சக்தி, அல்லது வேறு ஏதோ என்று அழைக்க விரும்பினாலும், அது மிகச்சரியானது. அறிவியல்பூர்வமான கொள்கைகளை நான் வாய்மொழிப்படுத்த முயற்சிக்கவில்லை; நான் வாதம்சார்ந்த வெளிப்பாடுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த பிம்பங்கள் கூறுவது என்னவென்றால், எல்லாமே ஒன்றுமற்றதிலிருந்து வருகிறது மற்றும் ஒன்றுமற்றதற்குத் திரும்பிச் செல்கிறது. ஒரு விதத்தில், அறிவியல் அந்த இடத்துக்கு நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறது, ஆனால் உங்கள் மனதில் ஒரு குறிப்பிட்ட புரிதலை கல்லில் அமைத்துவிட முயற்சிக்காதீர்கள்.
ஒருமுறை சங்கரன்பிள்ளை, குழந்தைகள் தாங்களாகவே இணைத்து, இயங்கச் செய்வதற்கான ஒரு இயந்திரவியல் பொம்மையைக் கண்டுபிடித்தார். ஒரு இளம் தாய் அதை வெற்றிகரமாக இணைக்கமுடியாமல் போனபிறகு, கேட்டார், “ஒரு எட்டு வயது குழந்தைக்கு இது மிகவும் சிக்கலானதாக இல்லையா?” சங்கரன்பிள்ளை கூறினார், “இல்லை, இது மிகவும் முக்கியமானது ஏனென்றால், இன்றைய உலகில் வாழ்வதற்கு இந்த பொம்மை குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் : அதை நீங்கள் எப்படி வைத்தாலும், அது தவறு.”
பிரபஞ்சத்தின் இயல்பைப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் எந்தெந்த வழியில் முயற்சித்தாலும், நீங்கள் தவறாகத்தான் போவீர்கள், ஏனென்றால் உங்கள் முடிவுகள் தவறானது என்பதால் அல்ல, அதற்குக் காரணம் நீங்கள் தவறான கருவியைப் பயன்படுத்துகிறீர்கள். பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு மனதைப் பயன்படுத்துவது என்பது, ஒரு அடிஸ்கேலுடன் சமுத்திரத்தின் ஆழத்தை அளப்பதைப் போன்றது. நீங்கள் தவறான முடிவுகளுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது.
உங்களது மனரீதியான கருவிகள், பேரண்டம் அடிமட்டமில்லாதது என்று உங்களை உணரச் செய்வதாக இருக்கின்றன. மனம் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்யமுடியும், ஆனால் அதற்கு அனைத்தையும் கையாள்வதற்கான திறன் இல்லை. எப்போதும் உங்கள் மனதின் நாடகத்தில் சிக்குண்டுபோகாமல், உங்களது தேர்வினால் அதற்குள் ஈடுபடும் ஒரு நிலைக்கு உங்கள் மனதை நிலை நிறுத்தினால், அதன்பிறகு தற்போது உங்களால் புரிந்துகொள்ள முடிவது என்னவோ, அதைக்காட்டிலும் அதிகமாக நீங்கள் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் இதற்காக, ஒட்டுமொத்தமாக அனைத்தையும் நீங்கள் புரிந்துகொண்டிருப்பதாக அர்த்தமில்லை. அதற்கான மற்ற வழிகள் உள்ளன. ஆனால் சிந்தனையால் மட்டும் அனைத்தையும் உங்களால் கிரகித்துவிடமுடியும் என்று நீங்கள் எண்ணினால், அது ஒரு முட்டாள்தனமான அணுகுமுறை.
“நமக்குத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல - நமக்கு எப்போதும் தெரியவராது”, என்பதனை நவீன பௌதிகவியலாளர்கள் அங்கீகரிக்கும் நிலைக்கு வந்துள்ளதாக நான் எண்ணுகிறேன். இதன் அர்த்தம் என்னவென்றால், நமக்கு இருக்கும் கருவிகள் உண்மையிலேயே எதையும் அறிந்துகொள்ளப் போதுமானவை அல்ல என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆகவே, உங்களது மனதின் வாயிலாக அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள்.
“பரவெளி வளைந்தும், மாறுபட்டும் உள்ளது” அல்லது “காலம் வளைந்தும், மாறுபட்டும் உள்ளது,” என்று நீங்கள் கூறும்போது, உங்கள் புரிதலில் இதற்கு உண்மையான பொருள் என்ன? தற்போதைய கல்வி அமைப்பில் இதுதான் பிரச்சனை: அது வார்த்தைகளின் மீது வார்த்தைகளாக இருக்கிறது. நீங்கள் வார்த்தைகளை சம்பாதிக்கிறீர்கள், ஆனால் எதைப்பற்றியும் வாழ்க்கை அனுபவம் இல்லை. புத்தகங்கள், வார்த்தைகள், மற்றும் பாடப்புத்தக அறிவியல்கள் கடந்து உங்களையே சற்று கூடுதலாகப் பயிற்றுவித்துக்கொள்வதற்கு நீங்கள் முதலீடு செய்யவேண்டும். உயிர்பற்றி அதிகம் கற்றுக்கொள்வதற்கு, படைப்பின் எந்த பாகத்துக்காவது சற்று அதிக கவனம் செலுத்துங்கள் – அது ஒரு பூவாக இருக்கலாம், ஒரு இலையாக, ஒரு எறும்பாக, அல்லது ஒரு மரமாக இருக்கலாம். நீங்கள் நட்சத்திரங்களுக்கு கவனம் செலுத்த முயற்சித்தால், அது எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று நீங்கள் பார்ப்பீர்கள்.
கவனம் செலுத்தாமல் பிரபஞ்சத்தில் எதுவும் உங்களுக்காகத் திறக்காது. இன்றைக்கு, கவனக்குறைபாடு ஒரு தகுதியாகக் கருதப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, கவனத்துக்குக் கொடுப்பதைவிட, எண்ணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உங்களுடைய கவனத்தின் கருவிகளை கூர்தீட்டுவதற்குப்பதில், நீங்கள் எண்ணம் உருவாக்கும் செயல்முறையை சிக்கலாக்கிவிட்டீர்கள்.
உங்களுடைய எண்ணங்கள், உங்களுக்கு இருக்கும் எல்லைக்குட்பட்ட ஞாபகத்தை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி உங்களால் எதையும் சிந்திக்கமுடியாது. கவனம் செலுத்துவதற்கான உங்களது திறன், உங்கள் எண்ணத்தின் செயல்முறையைவிட வாழ்வின் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருவியாக உள்ளது. இங்குதான் நவீன சமூகங்கள் தவறிவிட்டன. நீங்கள் உங்கள் கூர்கவனத்தைப் பழகவேண்டும், உங்கள் சிந்தனையை அல்ல. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் நீங்கள் ஆர்வம் கொண்டவர் என்றால், அதைதான் நீங்கள் செய்யவேண்டும்.
உங்களுக்குக் குழந்தைகள் இருக்கும்போது, அவர்களை நீங்கள் உங்கள் உயிராக நடத்தவேண்டும். அந்தப் பொறுப்புணர்வும், அர்ப்பணிப்பும் உங்களுக்கு இல்லையென்றால், உங்களுக்குக் குழந்தைகள் இருக்கக்கூடாது. நீங்கள் ஒரு புலியாக அல்லது ஒரு பெண்புலியாக இருந்திருந்தால், தொண்ணூறு சதவிகிதம் மரபியல் மற்றும் உந்துதலால், மற்றும் பத்து சதவிகிதம் மட்டும் நீங்கள் கற்றுக்கொடுப்பது, மற்றும் செய்முறையாக நிரூபிப்பதால் தீர்மானம் செய்யப்படும். ஆனால் ஒரு மனிதராக, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது பத்து சதவிகிதம் மட்டும் மரபியலால், மற்றும் தொண்ணூறு சதவிகிதம் முழுவதும் கற்பதன் காரணமாகவே தீர்மானிக்கப்படுகிறது.
உங்களைச் சுற்றிக் குழந்தைகள் இருக்கும்போது, நீங்கள் நடந்துகொள்ளும் விதம், பேச்சு, உட்காரும் மற்றும் நிற்கும் நிலை, உங்களை நீங்கள் எப்படி வைத்துக்கொள்கிறீர்கள் என்பது அனைத்தும் மிக முக்கியமானது. அது யாரும் செவிகொடுத்துக் கேட்காத நல்லொழுக்க முட்டாள்தனத்தை அள்ளி இறைப்பதைப்பற்றிக் கிடையாது. உங்களுடைய மகத்தான போதனைகளைக் குழந்தைகள் கேட்பதில்லை. நீங்கள் எப்படி அமர்கிறீர்கள், நிற்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள், மற்றவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். உங்களைச் சுற்றிலும் குழந்தைகள் இருந்தால், நீங்கள் பரிணமிக்கவேண்டும்.