
பரந்து விரிந்த இயற்கை சூழலுடன் கூடிய ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில், ANI தலைமை ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ் அவர்களும் சத்குருவும், ‘அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையும் இந்தியாவில் தேர்தலும் ஒரே நேரத்தில் நிகழ்வது தற்செயலானதுதானா?’ என்ற கோணத்தில் கலந்துரையாடினர். அரசியல் காரணங்களுக்காக நடைபெறுகிறது என்ற கருத்தை நிராகரித்த சத்குரு, கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக கோவிலுக்கு சொந்தமான இடத்தைப் பாதுகாத்து வந்துள்ள பக்தர்களின் வரலாற்று அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.
இந்து ஆன்மீகக் கலாச்சாரத்தின் பெருமைகளை புத்துயிர் பெறச்செய்வது பற்றி நடைபெற்ற அவர்களின் கலந்துரையாடலில், சொர்க்கத்தில் இன்பங்களைத் தேடிச்செல்லும் மற்ற மரபுகளைப்போல் அல்லாமல், இந்த கலாச்சாரம் தனிமனித அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, உள்நிலை அறிதல் மூலம் முக்தியை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சத்குரு சுட்டிக்காட்டினார். பிரதிஷ்டை என்பது ஒரு ஜடப்பொருளில் இருந்து ஆன்மீக நிலையில் சக்திவாய்ந்த ஒரு தெய்வீக வடிவமாக உருமாற்றுவது என அவர் விளக்கினார்.
சனாதன தர்மத்தின் தன்மையை எடுத்துரைத்த சத்குரு, அனைத்தையும் ஒன்றாக அரவணைக்கும் அதன் உள்ளார்ந்த தன்மையைப் பற்றி குறிப்பிட்டார். மதச்சார்பற்ற நாடாக அறியப்படும் இந்தியாவின் இந்துக் கோவில்களின் மீது அரசின் கட்டுப்பாடு இருப்பது குறித்த முரண்பாட்டை விமர்சித்த அவர், இந்து கலாச்சாரத்தின் நெகிழ்வுத்தன்மையை எடுத்துரைத்தார்
"இந்து" என்ற வார்த்தையின் பரிணாம வளர்ச்சியை விளக்கிய சத்குரு, புவியியல் அடையாளத்துடனும் கலாச்சாரத் தன்மையுடனும் அது வேரூன்றி இருப்பதையும் குறிப்பிட்டார். இந்து சமுதாயத்தில், இராணுவத்தில் கவனம் செலுத்தாத வரலாற்று குறைபாடு பற்றியும், படையெடுப்புகளில் இருந்து கலாச்சாரத்தை மீட்டெடுப்பதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் விவாதித்தார். வாழ்க்கைக்கான முழுமையான அணுகுமுறையைக் குறிக்கும் இந்து சமூகத்தின் தகவமைத்துக்கொள்ளும் தன்மையை, பாரதத்தின் ஒரு முக்கிய அம்சமாக அவர் முன்வைத்தார்.
உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி பேசிய சத்குரு, ஆப்பிரிக்க நாடுகளை G20 மாநாட்டில் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாவின் அரவணைக்கும் அணுகுமுறை எடுத்துக்காட்டப்படுகிறது என்று பாராட்டிப் பதிவுசெய்தார். அமைதியான முறையில் ஏற்படும் அதிகார மாற்றங்களை, தேசத்தின் ஜனநாயக செயல்முறைக்கான முன்னுதாரணமாக அவர் முன்மொழிந்தார்.
இந்த கலந்துரையாடலில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்களையும், AIன் எதிர்கால தாக்கம் குறித்தும் சத்குரு நம்பிக்கை தெரிவித்தார். ஊடகங்கள் தொடர்பான பிரச்சனைகளில், "போலி செய்திகள்" பரவுவதை தனது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மிகைப்படுத்தப்பட்ட செய்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் எச்சரித்தார்.
மஹாசிவராத்திரி 2024க்கு தயாராகும் விதமாக, ஈஷா யோக மையத்தில் நடந்த "Grace of Yoga" என்ற நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலுமிருந்து 2,400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மற்ற ஆன்மீக செயல்முறைகளுடன், சத்குருவுடன் நடந்த ஒரு சிறப்பு நிகழ்விலும் அவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஒரு சக்திவாய்ந்த தியான செயல்முறையை வழங்கிய சத்குரு, பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். பங்கேற்பாளர்கள் ஒன்றாக "ஷம்போ" உச்சாடனம் செய்ய, ஆதியோகி ஆலயம் முழுவதும் அதன் புனித அதிர்வுகள் நிறைந்தபடி நிகழ்ச்சி நிறைவடைந்தது.
கோவை ஈஷா யோக மையத்தில் வரலாற்றாசிரியர் டாக்டர் விக்ரம் சம்பத் அவர்களுடன் கலந்துரையாடிய சத்குரு, இந்திய வரலாற்றை மறுமதிப்பீடு செய்ய அழைப்புவிடுத்தார். பிரபலமான ஊடகங்களாலும் கல்வியாளர்களாலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள, வரலாற்றுப் படையெடுப்பாளர்களால் உள்ளூர் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையான, பெரிதும் கவனிக்கப்படாத அக்கிரமங்களைப் பேசவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
படையெடுப்பாளர்களை வேட்கைமிக்க நபர்களாக சித்தரிப்பது குறித்து கேள்வி எழுப்பிய சத்குரு, தேசிய உணர்வை இது எவ்வாறு சிதைத்துள்ளது என்பதையும், பல இந்தியர்களை அவர்களின் கலாச்சார மற்றும் ஆன்மீக அடையாளத்திலிருந்து எவ்வாறு துண்டித்தது என்பதையும் பதிவுசெய்தார். இன்றைய தொழில்நுட்ப ரீதியாக ஒன்றுபட்ட உலகில் பொருந்தக்கூடிய, இந்தியாவின் தனித்துவமான நாகரிகத்தை கோடிட்டுக்காட்டிய சத்குரு, தேசத்தின் கலாச்சார நெறிமுறைகளின் ஒருங்கிணைந்த தன்மையை எடுத்துரைத்தார்.
டாக்டர். சம்பத் உடனான இந்த கலந்துரையாடலில், காசி விஸ்வநாதர் கோவில் போன்ற புனிதத் தலங்களுக்குரிய நிலங்களை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நடந்துவரும் சட்டப்பூர்வ முயற்சிகள் பற்றியும் ஆராயப்பட்டது. வட இந்தியாவின் புனிதத் தலங்களைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்த சத்குரு, இந்துக் கோயில்களின் நிலையை சீரழிக்கும் வரலாற்று மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய கொள்கைகள் தான், புறக்கணிக்கப்பட்டுள்ள கோவில்களின் நிலைக்குக் காரணம் என்று கூறினார். மேலும், கடந்த காலத்தை சிறப்பாக பதிவுசெய்யும் விதமாக, வரலாற்று நிகழ்வுகளுடன் தனிமனித கதைகளைச் சேர்த்து பின்னிப்பிணைக்கும் இந்திய பாரம்பரியத்தைப் பற்றியும் அவர்கள் பேசினர்.
டாக்டர். விக்ரம் சம்பத் அவர்களும் சத்குருவும், புனிதமான இடங்களை மீட்டெடுப்பது என்ற உணர்வுப்பூர்வமான தலைப்பில் பேசுகையில், சமூக நல்லிணக்கத்திற்கும் மறுசீரமைப்பிற்கும் இடையே ஒரு கோட்டை வரையறுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முடிவற்ற வழக்குகளை விடுத்து, கணிசமான சான்றுகள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் விதமாக, செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக ஒரு தீர்ப்பாயத்தை உருவாக்கிட சத்குரு முன்மொழிந்தார். மறுசீரமைப்பு என்பது நாகரிகத்தின் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். எந்த சமூகத்திற்கும் எதிரான செயலாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்திய அவர், வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டும் சட்டவிரோத தலைவர்களைச் சாடினார்.
கோவிலுக்கும் மசூதிக்கும் இடையே உள்ள இறையியல் வேறுபாடுகளை டாக்டர். சம்பத் பேசுகையில், ஞானமும் பக்தியும் மிக்க அந்தந்த சமூக உறுப்பினர்கள் கலந்துரையாடினால் அமைதியான தீர்மானங்களுக்கு வழிவகுக்கும் என்று சத்குரு ஒப்புக்கொண்டார். மேலும், இந்துக் கோயில்களுக்கு கீழே உள்ள பௌத்த தலங்களின் வரலாற்றுப் பின்னணி பற்றியும் அவர்கள் விவாதித்தனர். அதற்கு பதிலளித்த சத்குரு, ஆதாரம் இருந்தால், சம்பந்தப்பட்ட மதம் எதுவாக இருந்தாலும் பாரபட்சமின்றி கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
சத்குருவும் டாக்டர் விக்ரம் சம்பத் அவர்களும் காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றியுள்ள வரலாற்றுப் பின்ணனி பற்றியும் சமகால பிரச்சனைகள் பற்றியும் மற்றும் இந்திய கோவில்களின் உரிமை மீட்பு பற்றியும் மேலும் விரிவாக பேசினர். அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், அவற்றின் புனிதத்தை காப்பதற்குத் தேவையான பக்தி பெரும்பாலும் குறைவதால், அரசு கட்டுப்பாட்டில் இருந்து பல கோவில்களை மீட்டு, புத்துயிர் அளிப்பதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்தினார்.
விஸ்வநாதர் கோவிலின் வரலாற்றைப் பற்றியும், பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அதைப் பாதுகாக்க பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற போராட்டத்தைப் பற்றியும் விரிவான விபரங்களைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் சம்பத் அவர்கள், அதன் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை முன்வைத்தார்.
மா சிருங்க்கார் கௌரி அவர்களின் சார்பாக வழக்கறிஞர் ஹரி ஷங்கர் ஜெயின் தாக்கல் செய்த 2021 வழக்கை குறிப்பிட்டு, ஞானவாபி மசூதி வழக்குத் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.
கோவிலின் திருப்பணிக்கு அடித்தளமாக அமையும், அனைத்தையும் ஒன்றாக அரவணைத்தல் மற்றும் நீடித்த நித்திய தன்மை ஆகிய சனாதன விழுமியங்களை இருவரும் சுட்டிக்காட்டினர். இடங்களின் பெயர்கள் மூலம் அடக்குமுறையாளர்களை உயர்த்திக்காட்டுவதில் உள்ள பாசாங்குத்தனத்தை விமர்சித்த சத்குரு, இந்த விஷயங்களில் இந்துக்களின் தெளிவான, உரத்த குரல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் புராதன பாரம்பரியத்தைப் போற்றுவதுடன் மதச்சார்பற்ற கட்டமைப்பை நிலைநிறுத்தி, மத எல்லைகளைக் கடந்துநிற்கும் தேசிய உணர்வின் எதிர்பார்ப்புடன் இந்த கலந்துரையாடல் நிறைவுற்றது.
டெல்லியில் நடந்த இந்தியா டுடே மாநாட்டில், சத்குருவுடன் மூத்த பத்திரிகையாளர் ஷிவ் அரூர் ஒரு சுவாரஸ்ய கலந்துரையாடலில் ஈடுபட்டார். “கலியுகத்தில் ராம ராஜ்ஜியம்” என்ற தலைப்பில் பேசிய சத்குரு, நாம் கலியுகத்தில்தான் இருக்கிறோம் என்ற பொதுவான நம்பிக்கையை தகர்த்தார். நாம் தற்போது துவாபர யுகத்தின் இறுதியை நெருங்கிவிட்டோம் என்றும், “ராம ராஜ்ஜியம்” நிறுவப்பட்ட திரேதா யுகத்தை நோக்கி செல்கிறோம் என்றும் கூறினார். நாம் ஒரு பரிபூரண சமுதாயத்தை அடைவது சாத்தியமற்றது என்றாலும், முன்னேற்றத்திற்காக தொடர்ச்சியாக முயற்சிப்பதே வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் (CAA) பற்றி பேசும்போது, அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் மீதான இரக்கத்தின் காரணமாக தாமதமான ஒரு நடவடிக்கை என்று சத்குரு கூறினார். தொடர்ந்து தேசத்தின் பல இடங்களில் நடைபெறும் தேர்தல்களை விமர்சித்த அவர், சிறந்த நிர்வாகத்திற்கான ஒரு படியாக "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற கருத்தை வரவேற்றார். மேலும் அவர் மண் பாதுகாப்பு, நிகழ்வுகளில் ஊடகங்களின் பங்களிப்பு, இந்திய கலாச்சாரத்தில் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு உண்மைக்கான தேடலாக இருக்கும் ஆன்மீகத் தன்மை ஆகியவற்றைப் பற்றி உரையாற்றினார்.
சந்தேகம்கொள்வதின் ஆரோக்கியமான விளைவு, துரிதமாக மாற்றமடையும் இருப்பின் தன்மை மற்றும் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதன் சாராம்சம் போன்ற அம்சங்கள் குறித்து சத்குருவின் நுண்ணறிவை ஷிவ் அரூர் அவர்களும் கேட்டறிந்தார். வாழ்க்கையின் தருணங்களை நல்லது, கெட்டது என வகைப்படுத்தக்கூடாது, ஏனெனில் அவை நமது நிலையற்ற இருப்பில், விரைவாக மாறும் நிகழ்வுகள் என்று சத்குரு குறிப்பிட்டார். ஆன்மீகத்தில் நம்பகத்தன்மை பற்றிக் கூறும்போது, ஆன்மீக ஆசிரியரின் நம்பகத்தன்மை குறித்து சிந்திப்பதைவிடுத்து, ஆன்மீக போதனைகள் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு உதவியாக உள்ளதா என்பதில் அக்கறை கொள்ளுமாறு சத்குரு மக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆன்லைனில் வசைபாடுபவர்கள் தொடர்பாக பேசிய சத்குரு, அத்தகைய நடத்தைகளை கண்டுகொள்ளாமல் செல்லும் தனது புறக்கணிப்பை வெளிப்படுத்தினார். தனது செயல்பாடுகளைத் தடுக்காதவரை, மற்றவர்களின் மனதில் உருவாகும் எதிர்மறையைப் பற்றி தான் கவலைப்படுவதில்லை என்பதை அவர் எடுத்துக்காட்டினார். விமர்சனம் என்று வரும்போது, சத்குரு அதை அவதூறு பேசுவதிலிருந்து வேறுபடுத்தினார். அவர் அடிக்கடி சந்திக்கும் அடிப்படையற்ற அவதூறுகளுக்கு மாறாக, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைத் தான் வரவேற்பதாக பதிவுசெய்தார். மதிப்புமிக்க சத்குருவின் பங்களிப்பை பாராட்டி எழுந்த கரகோஷத்துடன் இந்நிகழ்வு முடிந்தது.
இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயல்பான முட்டாள்தனம் என பத்திரிகையாளர் பிரேர்னா கவுல் மிஸ்ரா அவர்கள் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார். தனது பணிகளை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கியமான கருவியாக தனது அலைபேசியை குறிப்பிட்ட அவர், முட்டாள்தனம் என்பது எல்லா இடங்களிலும் பரவலாக இருப்பதால் அவர் அதற்காக கோபப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.
நடனம் மற்றும் பாடல் மூலம் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்திய கடந்த காலத்தின் மதிப்பிற்குரிய யோகிகளையும் முனிவர்களையும் குறிப்பிட்டு, ஆன்மீகத் தலைவர்கள் உற்சாகத்தை நடனம் மூலம் வெளிப்படுத்தக்கூடாது என்ற கருத்தை அவர் நகைச்சுவையாக பகடி செய்தார். வாழ்க்கையின் இத்தகைய உற்சாக வெளிப்பாடுகள் ஆன்மீகத்திற்கு முரணானவை அல்ல என்பதை அவர் எடுத்துரைத்தார்.
மரணம் மற்றும் அதன் தவிர்க்க இயலாத தன்மையைப் பற்றியும் பேசிய சத்குரு, வாழ்க்கையை ஒரு அளவிற்கு தீர்மானிக்க முடியும், ஆனால் மரணம் என்பது தவிர்க்கக் கூடியது அல்ல என்று குறிப்பிட்டார்.
சத்குரு தனது கணுக்காலில் அணிந்திருக்கும் உலோக வளையத்தைப் பற்றி ஊடகவியலாளர் பிரேர்னா கேட்டபோது, தனது சக்திகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு பிடிமானமாக அது இருப்பதாக சத்குரு விளக்கினார். மேலும், அது அகற்றப்படுவது, அடுத்த 40 நாட்களில் தான் உடலைவிட்டு செல்வதன் அடையாளம் என்று கூறினார்.
Content creators உடனான ஒரு அன்பான கலந்துரையாடலில், அறிவார்ந்த கேள்விகளை முன்வைப்பதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்தினார். தென்னிந்தியாவுடனான அவரது தொடர்பு முதல் கான்சியஸ் பிளானட் இயக்கத்தின் ஓர் அங்கமாக 32 சதுர மைல் நிலப்பரப்பைக் கொண்ட ஒரு யோக நகரத்தை அமெரிக்காவில் உருவாக்கும் முயற்சி வரை உரையாடல்கள் தொடர்ந்தன. சத்குருவின் உலகளாவிய பார்வையையும் மனித நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் விதமாக, அவரது ஆழமிக்க நுண்ணறிவும், நகைச்சுவை உணர்வும் கலந்துரையாடல்கள் முழுவதும் பிரகாசித்தன.
ஈஷா யோக மையத்தில் யக்ஷா 2024 இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் உற்சாகக் கொண்டாட்டத்தின் திருவிழாவாக அரங்கேறியது. இவ்விழாவில் உலகத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் வளமான கலைப் பாரம்பரியத்தை கௌரவிக்கும் விதமாக, கலைத்திறனையும் பாரம்பரிய கலைகளின் மீதான பக்தியையும் பறைசாற்றும் ஒரு விழாவாக அமைந்த இந்நிகழ்வில், கலைஞர்கள் தங்கள் ஒப்பற்ற கலைகளால் பார்வையாளர்களை ஈர்த்தனர்.
நாள் 1: பண்டிட் சஞ்சீவ் அபியங்கர் அவர்களின் பாரம்பரிய இசையின் ராகங்களும் நிர்வாண ஷடகமும் இந்த ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்களுக்கு சரியான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தன. பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசையிலும் பக்தி இசையிலும் தேர்ச்சி பெற்றதன்மூலம் புகழ்பெற்ற அபியங்கர், பார்வையாளர்களை இசையின் ஆன்மீக சாரத்திற்குள் மூழ்கடித்து, அவரது இசை வல்லமையால் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
நாள் 2: வித்வான் R. குமரேஷ் அவர்கள், தனது வயலின் கம்பிகளின் வழியாக சிறப்பான இசையதிர்வுகளையும், ராகங்கள் குறித்த உணர்ச்சிப்பூர்வமான விளக்கங்களையும் வழங்கி, இரண்டாவது நாளில் பார்வையாளர்களை கவர்ந்தார்.
நாள் 3: திருமதி. ஆனந்த ஷங்கர் ஜெயந்த் மற்றும் சங்கரானந்த கலாக்ஷேத்ரா குழுவினர், யக்ஷா 2024ன் இறுதி நாளில் அற்புதமான பரதநாட்டிய நிகழ்ச்சியை வழங்கினர் “Tales from the Bull and the Tiger,” என்ற தலைப்பில் வழங்கிய அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பங்கேற்பாளர்கள், இந்தியாவின் மகத்தான வளமான கலாச்சாரத்தை வரையறுக்கும் பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து பாராட்டிச் சென்றனர்.
ஈஷா யோக மையத்தில் வசிக்கும் பூர்ணாங்காக்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பிரம்மச்சாரிகள் என அனைவரும் ஒன்றுகூடி 1,00,008 ருத்ராட்ச மணிகள் கொண்ட ருத்ராட்ச மாலையைத் தயாரித்து, ஒரு பெரிய ஊர்வலமாக கொண்டுசென்று ஆதியோகிக்கு அர்ப்பணித்தனர். 2025ம் ஆண்டு மஹாசிவராத்திரி வரை ஒரு வருடத்திற்கு இந்த மாலையானது ஆதியோகியை அலங்கரிக்கும்.
தென்னிந்தியா முழுவதும் இருந்து 450க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈஷா யோக மையத்திற்கு வந்து, ஆதியோகி முன்னிலையில் சிவ யாத்திரையை நிறைவுசெய்தனர். சிவ யாத்திரை என்பது, பக்தர்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து "தென்கயிலாயம்" என்று அழைக்கப்படும் புனிதமான வெள்ளியங்கிரி மலைகளுக்கு, சிவனின் அருளைப் பெறுவதற்காக, பாத யாத்திரை அல்லது காளை வண்டி பயணம் அல்லது சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் செயல்முறையாகும்.
யாத்திரையின் போது, 1500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்த பக்தர்களின் அதிர்வுகளால் உண்டான பக்தி அலை, தமிழ்நாடு முழுக்க 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களையும் 300 கிராமங்களையும் கடந்து வந்தது.
சக்திவாய்ந்த மஹாசிவராத்திரி இரவைத் தொடர்ந்து, ஆதியோகி முன்னிலையில் தமிழ் கலாச்சாரத்தின் அற்புத கொண்டாட்டமாக 'தமிழ் தெம்பு' திருவிழா அரங்கேறியது. இந்த ஒன்பது நாள் திருவிழாவில், கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பாரம்பரிய கண்காட்சிகள் மூலமாக தமிழ்நாட்டின் பன்முக பாரம்பரியங்களிலும், வரலாற்றுப் பெருமைகளிலும் பார்வையாளர்கள் திளைத்தனர்.
குதூகலமிக்க ராட்டின சவாரிகள், உள்ளூர் உணவு வகைகளுடன் பாரம்பரிய உணவுக் கடைகள் மற்றும் நாட்டு மாடு கண்காட்சி ஆகியவை விழாவில் இடம்பெற்றன. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ரேக்ளா பந்தயம், நுட்பமான வடிவங்களை வெளிப்படுத்தும் கோலப் போட்டி, தற்காப்பு கலை திறன்களை காட்சிப்படுத்தும் சிலம்பம் போட்டி போன்ற போட்டிகளும் நிகழ்விற்கு உற்சாகத்தைக் கூட்டின.
தமிழ் தெம்பு திருவிழா, தமிழ்நாட்டின் பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரப் பெருமைகளைப் பறைசாற்றும் ஒரு கலாச்சாரப் பயணமாக அமைந்தது.
நதிகளுக்கான இயக்கங்களின் சர்வதேச தினத்தன்று, காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டது. இருபது ஆண்டுகளாக களநிலை அனுபவத்தின் அடிப்படையில், 10.8 கோடி மரக்கன்றுகளை நடுவதில் இவ்வியக்கம் துணைநிற்கிறது. மேலும், 1998 முதல் 1,96,000 விவசாயிகளை மரம்சார்ந்த விவசாயத்திற்கு இதன்மூலம் மாறியுள்ளனர். அதை நிகழச்செய்வதில் உறுதுணையாக இருக்கும் கர்நாடக வனத்துறைக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.
மார்ச் 25 அன்று, சிவனை எழுந்தருளச் செய்யும் ஒரு பழமையான மற்றும் சக்திவாய்ந்த செயல்முறையான சப்தரிஷி ஆவாஹனம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் ஏழு பூசாரிகளால் பெங்களூருவில் உள்ள சத்குரு சந்நிதியில் நடத்தப்பட்டது. சப்தரிஷிகள் என்று அழைக்கப்படும் சிவனின் ஏழு சீடர்களுக்கு சிவன் கற்பித்ததாகக் கூறப்படும் இந்த சடங்கு, சிவனின் அருளையும் பிரசன்னத்தையும் அழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சப்தரிஷி ஆவாஹனத்தின் தனித்தன்மையும் தூய்மையும் மாறாமல், காசி உபாசகர்கள் இந்த செயல்முறையை கவனமாக பாதுகாத்து வந்துள்ளனர். காசிக்கு வெளியே, குறிப்பிடத்தக்க விதமாக கோவை ஈஷா யோக மையத்தில் மற்றும் பெங்களூருவில் உள்ள சத்குரு சந்நிதியில் மட்டுமே இந்த செயல்முறை நடைபெறுகிறது. வாரணாசிக்கு வெளியே இந்த ஆழமான செயல்முறையை பக்தர்கள் அனுபவிப்பதற்கான வாய்ப்பாக இது அமைகிறது.