
ஒரு சாதகர் அவரது ஆன்மீகப் பயணத்தில் எதிர்பாராத உடல்ரீதியான மற்றும் உணர்ச்சிரீதியான ஏற்றத்தாழ்வுகளுடன் போராடும் தருணத்தில், தனது தேவைக்கேற்ப மாற்று வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளுக்காக சத்குருவை நாடுகிறார். பரிந்துரைக்கத்தக்க தீர்வுகளைக் கடந்திருக்கும் வளர்ச்சியில், உள்நிலையின் அடைப்புகளைத் தகர்த்து, விடுதலையை அனுபவிப்பதற்கு தனிமனிதருக்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவதில் நகைச்சுவையும், ஆழமான ஞானமும் மிளிர்வதை சத்குரு வழங்கும் பதிலில் காணலாம்
கேள்வி: தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி கோவிலில் நேரம் செலவழித்தபிறகு, மற்றும் எங்கள் வீட்டிற்கு தேவியை அழைத்துவந்ததில் இருந்து, எனது உணர்தல்கள் தீவிரமடைவதையும், உடலியல்ரீதியான அறிகுறிகள் தோன்றுவதையும் நான் கவனித்து வருகிறேன். நான் தொழில்முறையில் ஒரு மருத்துவர் என்றாலும், நான் மேலும் ஒரு நோயாளியாகிவிட்டேன். என் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், இந்த வலிமையான எதிர்மறை விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் எனக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வழிகாட்டல் வழங்கமுடியுமா?
சத்குரு: நோயாளிகள் உங்களிடம் ஒரு குறிப்பிட்ட மருந்தை பரிந்துரைக்கும்படி கேட்கின்றார்களா? “நோயாளி” சொன்னபடி கேட்கும் விதமான “மருத்துவர்” நானல்ல.
தியானலிங்கமும், லிங்கபைரவியும் வெவ்வேறு வழிகளில் உருவாக்கப்பட்டவை. பைரவி ஒரு விதம் – உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள் அங்கே செல்லத் தேவையில்லை. தியானலிங்கம் முற்றிலும் வித்தியாசமானது; அது மிகவும் சீரான ஒரேவிதமான வெளியாக (space) இருக்கிறது. தியானலிங்கம் அனைவருக்குமானது. பைரவி “பித்துத்தன்மை” கொண்ட மக்களுக்கானது.
உங்களுக்கு ஏற்படும் “அறிகுறிகள்” பற்றிக் கூறவேண்டுமென்றால், நீங்கள் ஒரு மருத்துவத்துறை நபர் என்பதால், இந்த விதத்தில் விளக்கமளிக்கிறேன்: உடலின் இரத்தக்குழாய்கள் அடைபட்டு, இதயம் கடினமாக பம்ப் செய்யவேண்டியிருந்தால், அது பிரச்சனைகளை ஏற்படுத்தமுடியும். உடலுக்கு அதிகமான பிராணவாயு தேவைப்படும்போது, இதயம் கடினமாக பம்ப் செய்யவேண்டும். ஆனால் “குழாய்கள்” குறுகியதால் இதயம் வலுக்கட்டாயமாக பம்ப் செய்தால், அது பிரச்சனைகளை உருவாக்கும். இப்படிக் குறுகிப்போய் அடைபட்டுவிடும் குழாய்கள் இரத்தக் குழாய்களை மட்டும் பாதிப்பதில்லை – உடலுக்குள் பல நிலைகளில் பாதிப்பு நிகழமுடியும். சக்திரீதியாக, பல மக்களுக்கும் இது உண்மையாக இருக்கிறது. ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் பல தனிநபர்கள், ஒரே பயிற்சியை செய்யும்போது, வெவ்வேறு நிலைகளில் வித்தியாசமாக ஏன் உணர்கின்றனர்? சிலர் வலியில் இருக்கின்றனர், சிலர் பரவசத்தில் இருக்கின்றனர், மற்றும் சிலர் அந்த இடமெங்கிலும் உருள்கின்றனர். ஒரு வழியில் பார்த்தால், இவைகள் உங்கள் தனிப்பட்ட நிலையின் அறிகுறிகள்.
ஆகவே, இவைகள் எதிர்மறையான அறிகுறிகளா அல்லது நேர்மறையானவையா என்பதைக் குறித்த தீர்மானங்களுக்குள் செல்லாதீர்கள். அவைகள் வெறுமனே அறிகுறிகள். தவிர, ஒரு தனிப்பட்ட பார்வையாளர்கள் குழு மற்றும் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட பயிற்சி அதிக நன்மையளிக்கும் என்ற கருத்து தவறானது. இந்த அறிகுறிகள் தோன்றுவது ஏனென்றால் அடிப்படைத் தன்மைகள் இன்னமும் அமைதியடையவில்லை. சற்று அதிக நேரம் அர்ப்பணியுங்கள் – சாதனா பாதையில் இணைந்துகொள்ளுங்கள். ஆறுமாத கால கடுமையான பயிற்சியில் மெல்லமெல்ல, பலரது அறிகுறிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
இப்போதைக்கு, இரண்டு தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்: முதலாவது, உங்களுக்கு விருப்பமான உணவைத் தவிர்த்திடுங்கள். இரண்டாவது, நீங்கள் மிகவும் விரும்பாத நபருடன் ஆனந்தமாக பணிபுரிந்திடுங்கள். இந்த இரண்டு விஷயங்களைச் செய்தால், உங்களது பல அறிகுறிகள் மறைந்துபோகும். காலப்போக்கில் நீங்கள் வளர்த்துக்கொண்டிருக்கும் விருப்பு, வெறுப்புகளில் இருந்துதான் எப்போதும் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. படைப்பின் எந்தப் பகுதிகள் சரியானவை மற்றும் எவை சரியில்லாதவை என்று தீர்ப்பு கூறுவது உங்களுக்கானதல்ல; அவைகள் வித்தியாசமானவை மட்டுமே. நீங்கள் அப்படிப்பட்ட மதிப்பீடுகளைச் செய்யும்போது, உங்களுக்குள் எல்லாவிதமான அடைப்புகளையும் வளர்த்துக்கொள்கிறீர்கள். நீங்கள் உருவாக்கும் அடைப்புகளுக்கு சரிநிகராக உங்களது துன்பத்தின் அளவு உள்ளது.
வலியைத் துன்பமாக நீங்கள் எண்ணலாம், ஆனால் வாழ்க்கை நிகழாததுதான் மிகப்பெரும் துன்பமாக இருக்கிறது. குறைந்தபட்சம் வலி இருக்கும்போது, ஏதோ ஒன்று அப்போதும் நிகழ்ந்தவாறு உள்ளது; எதுவுமே நிகழாதிருப்பது தான் மிக மோசமானது.
ஆகவே, இந்த அறிகுறிகள் நல்லது. உங்களுக்கு சிறிதளவு கூர்தீட்டல் தேவைப்படுகிறது என்று அவை சுட்டிக்காட்டுகின்றன. ஈஷா யோக மையத்தில் உங்களால் தங்கமுடியவில்லை என்றால், குறைந்தபட்சம், இந்த இரண்டு தீர்மானங்களையும் வீட்டில் செயல்படுத்தி, அவற்றைத் தீவிரமாக பயிற்சி செய்யுங்கள். ஒருவேளை ஆறு மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் அடுத்த சாதனா பாதைக்கு வந்துகொள்ளலாம்.
நீங்கள் உங்களுக்குத் தனிப்பட்ட பயிற்சிகளைக் கேட்டிருந்தீர்கள். ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் ஒரே ஷாம்பவி தீட்சையைப் பெறுகின்றனர், ஆனால் அதற்குப்பிறகு அவர்களை நீங்கள் கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை விவரிக்கின்றனர். இது ஏனென்றால் எப்போதுமே அந்த செயல்முறை தனிப்பட்டது, ஆன்லைன் தீட்சை என்றாலும்கூட தனிப்பட்டதுதான். மேலும், அந்த விதமாக அதைச் செய்வதற்கு அளவற்ற சக்தி தேவைப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானவர்கள் தீட்சை பெறும் நிலையில், ஒவ்வொரு தனிமனிதருக்குமான தனிப்பட்ட தீட்சை வழங்குவதற்கு எவ்வளவு உயிர்சக்தி செலவழிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. அதற்கு நிறைய உயிர்சக்தி தேவைப்படுகிறது, ஆனால் அது தனிப்பட்டதாக இருக்கும் நிஜம், அதனை முக்கியத்துவம் பெறச் செய்கிறது. அது தனிப்பட்டதாக இருக்கிறது என்றால் நீங்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் அமர்வது என்று அர்த்தமல்ல; நீங்கள் அதைச் செய்தால், ஒருவேளை நீங்கள் அனைத்தையும் இழக்க நேரிடலாம். நீங்கள் ஒரு கூட்டத்தில் அமர்வதே மேலானது.