சத்குரு எக்ஸ்குளூசிவ்

பூமியுடன் தொடர்பு: வெற்றுப் பாதங்களுடன் நடப்பதன் வாயிலாக உங்கள் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஊக்கப்படுத்துங்கள்

வெறுங்காலுடன் நடப்பதன் மிகத்தெளிவான நன்மைகள் குறித்து சத்குரு அளிக்கும் விளக்கத்துடனும், அதனுடன் இணைந்துபோகும் M.F.ஹூசைனின் குறிப்புடனும் ஆரோக்கியத்தின் பாதையில் நடையிடுங்கள். இவ்வாறு நடப்பது பூமியின் சக்தியுடன் உங்களை இணைப்பதைக் காட்டிலும் அதிகமான பலனைத் தரமுடிகிறது; சிவராத்திரி மற்றும் அமாவாசை போன்ற தினங்களில் சக்திகளின் கூடுதலான எழுச்சியுடன் அது உங்கள் உயிர்சக்தியை நீட்டித்து, பூமியுடன் உங்களைத் தொடர்புகொள்ளச் செய்கிறது. உங்கள் காலணிகளை உதறிவிட்டு, ஆற்றல் வழங்கும் நடைமுறைக்குரிய ஒரு பயிற்சியை உங்களுக்கு உரியதாக்கிக்கொள்ளுங்கள்.

கேள்வி: நமஸ்காரம் சத்குரு. வெறுங்காலுடன் நடப்பதன் முக்கியத்துவம் என்ன? மேலும், அமாவாசை மற்றும் சிவராத்திரி தினங்களில் வெறுங்காலுடன் நடப்பதால் கூடுதல் உடலியல் மற்றும் ஆன்மீக நன்மைகள் உள்ளனவா?

வெறுங்காலுடன் நடப்பதன் வாயிலான ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள்

சத்குரு: கலைஞர் M.F. ஹூசைன் லண்டனில் தனது 95வது வயதில் மரணமடைவதற்கு முன்பு, அவருடன் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் நேர்காண்பவர் அவரது நீண்ட ஆயுள், ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்று கேட்டார். அவர் தனது இறுதி நாள் வரை மிகவும் சுறுசுறுப்பும், சக்தி நிரம்பியவராகவும் வலம் வந்தார்.

அவர் இரண்டு விஷயங்கள் மட்டும் கூறினார்: “குறைவாக சாப்பிடுங்கள். வெறுங்காலுடன் நடந்து செல்லுங்கள்.”

சில உயர்மட்ட க்ளப்களுக்குள் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட பல சர்ச்சைகளை அவர் சந்தித்தாலும், அவர் எப்போதும் வெறுங்காலுடன் நடப்பதை வலியுறுத்தினார். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கான இந்த வழிமுறையை அவர் கொடுத்துள்ளார்: “குறைவாக சாப்பிடுங்கள், வெறுங்காலுடன் நடந்திடுங்கள்.” அவர் இதைக் கூறுவதைக் கேட்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

வெறுங்காலுடன் இருப்பதன் முக்கியத்துவம் என்ன? அமெரிக்காவில் “வெறுங்கால்” என்றழைக்கப்படும் விதவிதமான காலணிகள் பிரபலமடைந்துள்ளன. இந்த ஷூக்கள் மிக மெல்லிய, தனிச்சிறப்பான சிந்தெடிக் பொருளால் செய்யப்பட்டு, ஏறக்குறைய நீங்கள் வெறுங்காலுடன் நடப்பதைப் போன்ற உணர்வை அளிக்கின்றன. இவைகள் ஓட்டத்துக்கும், மலை ஏற்றத்துக்கும், தினசரி நடைப்பயிற்சிக்கும் பயன்படுகின்றன.

ஆன்மீக சாதனையில் இருப்பவருக்கு, குறிப்பாக சிவராத்திரி, அமாவாசை மற்றும் அடுத்த நாளில், இந்த பூமியின் மீதிருந்து கிடைப்பவை தனிச்சிறப்பு வாய்ந்தது

நீங்கள் சொர்க்கத்துடன் அல்லது பூமியுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தால், நீங்கள் தொந்தரவை நோக்கிச் செல்கிறீர்கள். குறைந்தபட்சம் இரண்டில் ஒன்றுடன் நீங்கள் தொடர்பில் இருந்தால், சில விஷயங்கள் உங்களுக்காக கவனித்துக்கொள்ளப்படும். இரண்டுடனும் நீங்கள் தொடர்பில்லாமல் இருந்தால், நீங்கள் தொந்தரவை விலைக்கு வாங்குகிறீர்கள்.

மனித மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாகத்தான் இன்றைக்கு தினசரி அளவில் வெறுங்காலுடன் நடப்பது ஒரு பிரச்சனையாகிவிட்டது. இல்லையென்றால், அது நன்றாகவே இருந்திருக்கும். நாங்கள் ஒருமுறை காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மூன்று சிறுவர்களுடன் காட்டுக்குள் சென்றிருந்தோம். அந்த சிறுவர்கள் வெறுங்காலுடனே பாறைக்குப் பாறை தாவிக்கொண்டும், காட்டுக்குள் ஓடிக்கொண்டும் இருந்தனர். அவர்களுள் ஒரு சிறுவனுக்கு நான்கரை வயதே ஆகியிருந்தது, மற்ற இரண்டு சிறுவர்கள் ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்தனர். அவர்கள் காட்டைச் சுற்றிலும் உற்சாகத்துள்ளலுடன் ஓடிக்கொண்டும், தங்களது துணிச்சலை வெளிப்படுத்தியவாறும் இருந்தனர்.

அவர்களது ஆரோக்கியமான உணர்வு, முக்கியமாக பூமி மற்றும் காடு இவைகளுடன் அவர்கள் கொண்டுள்ள தொடர்பிலிருந்தே வருகிறது. சுற்றுச்சூழல், காற்று, மற்றும் மண்ணுடன் கொண்டுள்ள தொடர்புதான் அவர்களுக்கான எல்லா வித்தியாசத்துக்கும் காரணமாக உள்ளது.

குறிப்பாக, உங்களது உடல் போதுமான ஒருங்கிணைப்புடன் இல்லாமலும், எப்போதும் உங்களைத் தொந்தரவு செய்துகொண்டும் இருந்தால், நீங்கள் வெறுங்காலுடன் நடக்கவேண்டும். பூமியுடன் மேலும் அதிகமான தொடர்பு கொள்வதற்கு உங்களால் ஊர்ந்துசெல்ல முடிந்தால், அதுகூட நல்லதுதான். இதனால்தான் நீங்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறீர்கள். ஒரு கோவில் குளத்தில் முழ்கி எழுந்து, பிறகு உள்ளே சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதன் நோக்கம் என்னவென்றால், அதனால் உங்கள் முழு உடலும் பூமியுடன் தொடர்புக்கு வருகிறது. சாஷ்டாங்கம் என்பதன் பொருள் இதுதான் – உங்கள் உடலின் எட்டு முக்கிய புள்ளிகளும் பூமியைத் தொடவேண்டும்.

கோவில் பிரகாரத்தில் மக்கள் மண்ணில் உருளுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அங்கப்பிரதட்சணம் செய்வதன் காரணம் என்னவென்றால், கோவிலின் சக்தியூட்டப்பட்ட பூமியுடன் உங்கள் உடல் தொடர்பில் இருக்க வேண்டுகிறீர்கள். பூமியுடனான இந்தத் தொடர்பின் காரணத்தால் அந்தக் கோவில் சக்தி வாய்ந்ததாக இருந்தால், அது மக்களை அவர்களது நோயிலிருந்து வெளிவருவதற்கு உதவி செய்யும். ஆனால் ஈஷா யோக மையத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யத் தொடங்காதீர்கள். மக்கள் கூடுமானவரை நிதர்சனத்திலிருந்து விலகி, அவர்களது சொந்த இருத்தலின் மேகத்துக்குள் வாழ்ந்திருக்க விரும்பும் இன்றைய உலகத்தில், இங்கே அங்கப்பிரதட்சணம் செய்வது மிகுதியான எதிர்மறை தாக்கத்தை உருவாக்கிவிடும்.

குறிப்பிட்ட தினங்களில் வெறுங்காலுடன் நடப்பதன் ஆன்மீக முக்கியத்துவம்

ஆன்மீக சாதனாவில் இருக்கும் ஒருவருக்கு, குறிப்பாக சிவராத்திரி, அமாவாசை, மற்றும் அதற்கடுத்த நாளில், பூமியின் மீது கிடைக்கக்கூடியது அதிஅற்புதமானது. சிவராத்திரியன்று உங்கள் சாதனாவைத் தீவிரப்படுத்துவதற்கும், பூமியின் மீது கிடைப்பதைப் பெறும் வாய்ப்பைத் தவறவிடாமல் இருப்பதற்கும் உங்களுக்கான ஒரு நினைவூட்டலாகவும் அது உள்ளது. ஆகவே, அந்த நாளில், வெறுங்காலுடன் நடந்துசெல்லுங்கள்.

அதுமட்டுமின்றி, எந்த நாளிலும் வெறுங்காலுடன் நடப்பதற்கென்று அதற்கே உரிய நன்மைகள் இருக்கின்றன. ஆனால் சிவராத்திரியை ஒட்டிய மூன்று நாட்களில், அதற்குக் குறிப்பிட்ட நன்மைகள் உண்டு. உடல் ஆரோக்கியத்துக்காக மட்டுமல்ல, ஆனால் ஆன்மீக நல்வாழ்வுக்காகவும், மற்றும் உடலமைப்பில் சக்திகளின் மேல்நோக்கிய நகர்வுக்குத் தேவையான உந்துசக்தியை உருவாக்குவதற்கும் இது உதவி செய்கிறது. இந்த மூன்று நாட்களில் காலணிகள் பயன்படுத்தாமல் இருப்பது நன்மையளிப்பதாக இருக்கும்.