இந்த தொடரில், ஈஷா பிரம்மச்சாரிகள் அல்லது சந்நியாசிகளில் ஒருவர் தனது சொந்த பின்புலம், பார்வைகள் மற்றும் இந்த புனிதமான “தெய்வீகப் பாதை"யில் பயணிப்பதன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.”
அமைதியான கோவில்
நான் அறியாத ஒன்றைப் பற்றிய ஆர்வம் எனக்கு முதன்முதலில் வந்தது எனக்கு 14 வயதாக இருந்தபோதுதான். என்னோடு படித்த மாணவன் அப்போதுதான் பழனி பாதயாத்திரை சென்று திரும்பியிருந்தான், விரதத்தில் இருந்தான். நானும் அதை உணரவேண்டும் என்ற தீவிரமான ஏக்கம் என்னுள் உதித்தது, அதுதான் என் பயணத்தின் துவக்கமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த 10 ஆண்டுகளுக்கு நான் பழனி பாதயாத்திரையும் அதைப்போன்ற வேறு பல பாரம்பரியங்களிலும் ஈடுபட்டேன். அப்போதுதான் நான் ஒரு அமைதியான கோவிலைப் பற்றி கேள்விப்பட்டேன்.
நான் சபரிமலைக்கு என் நண்பர்கள் சிலருடன் 1999ல் நடந்து சென்றுகொண்டு இருந்தேன். நாங்கள் வழியில் பல கோவில்களுக்கு சென்றிருந்தோம், அது குறித்த எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு இருந்தோம். என் நண்பரின் சகோதரர், உயரமான லிங்கத்துடன் இருந்த குகை போன்ற அமைதியான கோவிலைப் பற்றி சொன்னான். மேலும், “கோவில் கருவறையில் அமர்ந்து தியானம் செய்ய பல சிறு குகைகள் இருந்தன,” என்றான். பொதுவாக இந்தியக் கோவில்களில் சப்தம் என்பது இன்றியமையாத அங்கமாக இருக்கும். எனவே இந்த அமைதியான கோவிலைக் காணும் ஆர்வம் மேலோங்கியது. என் ஆர்வத்தைப் பார்த்து, “அந்நிறுவனம் 3-4 மாதங்களுக்கு ஒருமுறை மதுரையில் 13-நாள் யோகா வகுப்பும் வழங்குகிறது,” என்று அவன் கூறினான். அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு உதவுமாறு அவனை வேண்டினேன். நான் அதிககாலம் காத்திருக்கத் தேவையில்லாமல் போனது.
ஜனவரி 17, 2000 அன்று நான் 13-நாள் ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொண்டேன். நிகழ்ச்சியின்போது குறிப்பாக தன்னார்வத் தொண்டர்கள் எங்களை கவனித்துக்கொண்ட விதம் என்னைக் கவர்ந்தது. ஈஷா யோகாவின் அனுபவம் அவர்களைத் தொட்டிருந்ததால், அனைத்து விதமான வாழ்க்கை முறைகளிலிருந்து வந்தவர்களும் தங்களை அர்ப்பணித்தனர். நிறைவு நாளில், சத்குருவுடன் பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை ஈஷா யோக மையத்திற்கு நான் சென்றேன். பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சிக்குப் பிறகு, ஈஷாவுடன் இணைய வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் இன்னும் ஆழமாகியது. அதே ஆண்டில், நான் குருபூஜை மற்றும் ஹடயோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். பிறகு சம்யமாவிற்கு தயார்செய்வதற்கான ப்ரீ-மீட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவுசெய்தேன்.
அந்த சமயத்தில், கைவல்ய குடிரில் சம்யமா நடந்துகொண்டு இருந்தது, அதுதான் அப்போது ஈஷா யோக மையத்தில் இருந்த ஒரே ஹால். அங்கு வெறும் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும், எனவே தீவிரமான தேடுதல் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நான் பயிற்சி செய்யத் துவங்கி ஓராண்டு கூட நிறைவடையவில்லை என்பதால், என்னை அடுத்த ஆண்டு கலந்துகொள்ளச் சொன்னார்கள். எனக்குள் எதிர்பாராத ஏமாற்றத்தை உணர்ந்தேன், ஆனால் நான் கலந்துகொள்ள வேண்டும் என்று அதற்குப் பிறகு வலியுறுத்திக் கேட்கவில்லை. ஆனால் மதுரை ஒருங்கிணைப்பாளர் நான் ஏக்கத்துடன் இருந்ததை கவனித்துள்ளார், எனவே எப்படியோ நான் சம்யமாவில் கலந்துகொள்ள உதவினார். சம்யமாவிற்குப் பிறகு, “இனி இதுதான்!” என்று எனக்குத் தெரிந்தது, நான் ஆசிரமத்தில் இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன்.
வீட்டில் நான் குடும்ப நண்பர் ஒருவரின் தொழிலில் சேர்ந்திருந்தேன், அவருக்கு ஒரு புதிய யூனிட் அமைத்துத் தரும் வேலையில் இருந்தேன். என் சகோதரிக்கு திருமணமாகும் வரை தொழில் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். என் முடிவை என் பெற்றோரை ஏற்றுக்கொள்ள வைக்கவும் இதுதான் வழி என்று தோன்றியது.
சில மாதங்களுக்குப் பிறகு, சத்குரு மதுரைக்கு வந்தார், சத்சங்கம் நடக்கிறது என்று அறிவித்தார்கள். சத்சங்கம் நடக்கும்போது, நான் அலுவலகத்தில் இருந்து ஒரு அவசரகால சூழ்நிலையை கவனித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அலுவலகப் பணிக்காக நான் சத்குருவுடனான சத்சங்கத்தை தவறவிடுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, எனவே அந்த வேலையை விட்டுவிட்டேன். அப்படியே அந்த தொழிலை விட்டுவிட்டேன். என் சகோதரியின் திருமணத்திற்கு காத்திருந்த சமயத்திலேயே, நான் மதுரையில் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு செய்தேன்.
சிங்காநல்லூரில் சமையல்
ஜூலை 2001ல், நான் ஆசிரமத்திற்குள் குடியேறினேன். ஆசிரமத்தில் நான் இருந்த முதலாம் ஆண்டில், நடைபாதைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்தேன், யோகா நிகழ்ச்சிகளில் தன்னார்வத் தொண்டு செய்தேன். மஹாசிவராத்திரி 2002ல் நடைபெற்ற பிரம்மச்சரிய தீட்சைக்கு என்னைத் தயார்செய்யும் சாதனாவைத் துவங்கினேன், ஆனால் அம்மை வந்ததால் அப்போது தீட்சைபெற முடியாமல் போனது. எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது பிரம்மச்சாரிகள் என்னை கவனித்துக்கொண்ட விதத்தை நினைத்துப் பார்த்தால் இன்றும் என் நெஞ்சம் நெகிழ்கிறது. 2003ல் நான் தீட்சைப் பெற்றேன், அதுதான் சத்குரு மஹாசிவராத்திரி அன்று மேடையில் பிரம்மச்சரிய தீட்சை வழங்கிய கடைசி முறை.
2002 மஹாசிவராத்திரிக்குப் பிறகு என்னை சிங்காநல்லூர் அலுவலத்திற்கு அனுப்பி ‘சமையல்’ வேலைக்கு பொறுப்பாக நியமித்தார்கள். நான் வீட்டில் அவ்வப்போது அம்மா சமைப்பதற்கு உதவியதுண்டு, ஆனால் நானாக 4-20 பேருக்கு முழுமையான உணவு சமைப்பதைப் பற்றி நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. சமையல் என்பது உங்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டிய ஒரு செயல், ஏனென்றால் அது தினமும் நிகழவேண்டும், சரியான நேரத்திற்கு நிகழவேண்டும். அதை நான் ரசித்துச் செய்தேன், பலவிதமான உணவுப் பதார்த்தங்களை புதிது புதிதாக சமைத்தேன், குறிப்பாக வகை வகையாக ரசம் செய்தேன். நான் செய்த ரசம் அனைவருக்கும் பிடிக்கும். ஒருமுறை சுவாமி அபிபாதா, “உண்மையாகவே நீதான் இந்த அரைத்த குழம்பை சமைத்தாயா?” என்று அதன் பாரம்பரியம் மாறாத சுவையைக் கண்டு ஆச்சரியமாக என்னிடம் கேட்டார்.
அற்புதமான சென்னை தன்னார்வத் தொண்டர்கள்
நான்கு மாதங்களுக்குப் பிறகு, சென்னை மக்களுக்காக அயராது உழைத்துக்கொண்டிருந்த சுவாமி சுயக்னாவிற்கு உதவச்சொல்லி என்னை சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். அப்பகுதியில் சுவாமி சுயக்னா அற்புதமாக பணியாற்றிக்கொண்டு இருந்தார், ஓராண்டிற்குள் தன்னார்வத் தொண்டர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருந்தது. நானும் ஈஷா யோகா ஆசிரியராவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், அவரது களப்பணிக்கு நானும் உதவ ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் மும்முரமாக செயல் செய்துகொண்டு இருந்ததால், எங்களுக்கு தன்னார்வத் தொண்டர்கள் உணவு சமைத்து எடுத்துவருவார்கள். முதல் வேளை உணவை மதியம் 1 மணிக்கும், இரவு உணவை இரவு 11 மணிக்கும் உண்போம். ஆனால் எங்கள் கடுமையான உழைப்பிற்கு பலன் கிடைக்கத் துவங்கியது, சென்னையில் ஈஷாவின் செயல்பாடுகள் வளர்ந்தன. ஓராண்டு காலத்தில், சத்குருவை சென்னை மக்களுக்கு சேர்ப்பதற்கு எதையும் செய்யும் ஆர்வத்துடன் இருந்த 60 தன்னார்வத் தொண்டர்கள் இருந்தார்கள். அவர்களின் பக்தியும் உறுதியும் எங்கள் உள்ளத்தை உருகச்செய்தது.
ஒருமுறை, பஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட ஒரு பார்செலை எடுப்பதற்கு உதவும்படி இரவு 9 மணிக்கு ஒரு தன்னார்வத் தொண்டரை அழைத்தேன். அவர் பஸ் ஸ்டாண்டு செல்வதற்கே ஒரு மணி நேரமாவது ஆகும். “நான் ஒரு வேலைக்கு நடுவில்…,” என்று சொல்லத் துவங்கியவர், அந்த பார்செல் எதற்காக என்று நான் விளக்கியதும் தயங்கி நிறுத்திவிட்டார். திடீரென அவர் பேசும் தோணியே மாறிப்போனது, “நான் கொண்டுவருகிறேன் சுவாமி,” என்றார்.
“உறுதியாகச் சொல்கிறீர்களா?” என்று கேட்டேன், அவர் சிந்தித்து முடிவெடுக்க சற்று அவகாசம் கொடுத்தேன்.
“நான் 100% உறுதியாகச் சொல்கிறேன், கொண்டுவருகிறேன்,” என்று தயக்கமின்றி கூறினார். அவர் அந்த பார்செலை நள்ளிரவு 12:30 மணியளவில் கொண்டுவந்து கொடுத்துச் சென்றார். அவருக்கு நன்றி வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை, ஆனால் இப்படித்தான் தன்னார்வத் தொண்டர்கள் இருந்தார்கள் - முழுத் தீவிரமாக, தீயாக இருந்தார்கள்!
சென்னையில் நாங்கள் 12-14 மையங்கள் அமைத்தோம், ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒருங்கிணைப்பாளரும் இருந்தார். அத்தனை மையங்கள் துவங்கப்பட்டதால் எங்கள் பணிகளும் அதிகரித்தன, எங்கள் போன் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஒருமுறை நான் போனை எடுத்தபோது சற்றே பரிச்சயமான ஒரு குரல் “நமஸ்காரம்,” என்றதும் யாரென்று சிந்திப்பதற்குள், “நான் சத்குரு பேசுகிறேன்,” என்றார். எனக்கு சற்று பதற்றமாக இருந்தது, முடிந்த அளவு அவர் சொல்வதை கவனமாக கேட்க முயன்றேன். “கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் அச்சுப் பிரசுரங்கள் சிலவற்றை விஸ்வநாத்தின் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்,” என்று சொல்லி அவர் அழைத்ததன் காரணத்தை விளக்கினார்.
“சத்குரு, எங்களிடம் கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் அச்சுப் பிரசுரங்கள் இல்லையே,” என்று வருத்தத்துடன் சொன்னேன்.
அவரோ, “அந்த அச்சுப் பிரசுரங்கள் நிச்சயமாக உங்களிடம் உள்ளது,” என்று அதன் டிசைன் எப்படி இருக்கும் என்றும் எனக்கு விளக்கமாகச் சொன்னார்.
விரைவில் அதை கண்டுபிடித்து எடுத்து, “கண்டுபிடித்துவிட்டேன் சத்குரு, அனுப்பி வைக்கிறேன்,” என்றேன்.
“விஸ்வநாத்தின் முகவரி தெரியுமா?” என்று அவர் கேட்டார்.
“கண்டுபிடித்து அனுப்பி வைக்கிறேன், சத்குரு,” என்றேன்.
அந்த டிசைனை அவர் எந்த அளவு நுட்பமாக ஞாபகம் வைத்திருந்தார் என்பதும், அவர் பொறுமையாக எனக்கு விளக்கிய விதமும் மிகுந்த ஊக்கமளித்தது. அவர் வேறு தன்னார்வத் தொண்டரை அழைத்து என்னிடம் விளக்குமாறு கூறியிருக்கலாம், அல்லது சுவாமி சுயக்னாவிடம் சொல்லி தனக்கு அழைக்கும்படி கூறியிருக்கலாம், ஆனால் பொறுமையாக நான் அதைச் செய்வதற்கு வழிநடத்தினார். சத்குருவுடனான என் முதல் போன் உரையாடல் என்னை நெகிழச்செய்தது.
சாதனாவை தீவிரப்படுத்திய சமயம்
இன்னொரு முறை, ஒரு யோகா நிகழ்ச்சிக்காக சத்குரு சென்னைக்கு வந்திருந்தார். என்னிடம், “சாதனா எவ்வாறு நடக்கிறது?” என்று ஒருநாள் நிகழ்ச்சி முடிந்தபிறகு கேட்டார்.
“நன்றாக நடக்கிறது, சத்குரு” என்றேன்.
அவர், “இன்னும் அதிகமாகச் செய்!” என்று என் கண்களைப் பார்த்துச் சொன்னார். அந்த எளிய வார்த்தைகளின் தாக்கமோ விவரிக்கமுடியாதது. அந்த நாள் முதல் நான் என் காலை குருபூஜையையும் சாதனாவையும் தவறவிட்டதே இல்லை. பெரும்பாலான நாட்கள் நான் பிரம்ம முகூர்த்தத்திற்கு விழித்துக்கொள்வேன், இரவில் தாமதமாக தூங்கினாலும் விழித்துவிடுவேன். சொல்லப்போனால், என் தற்போதைய பணி எப்படி இருக்கிறது என்றால், பெரும்பாலான நாட்கள் நான் 11 மணிக்குப் பிறகுதான் தூங்குகிறேன். அவர் நம்மிடம் ஏதோவொன்றைச் செய்யச்சொன்னால், நம்மை அதற்கு முழுமையாகக் கொடுத்தால், அதைச் செய்வதற்கான வல்லமையையும் அவர் நமக்கு வழங்குகிறார்.
விளம்பர பேனர்கள்
2003-2004ம் ஆண்டில், வகுப்புகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நாங்கள் சத்குருவின் புகைப்படத்தை பேனரில் அச்சிடுவது வழக்கம். ஃபிளக்ஸ் பேனரில், சத்குருவின் முடி நீலப்பச்சையான நிறத்தில் (cyan colour) அச்சிடப்படுவதை நான் கவனித்தேன். அதே டிசைனை ஆஃப்செட் பிரிண்டரில் பேப்பரில் அச்சிட்டால் அதில் இந்த நிறம் இருக்காது. ஃபிளக்ஸ் பேனரில் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன், அவை நன்றாகவே இருந்தன. சத்குருவின் படமும் அந்த அளவு தத்ரூபமாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். பிரிண்டரிடம் இதைப் பற்றி விசாரித்தபோது, அது புகைப்படத்தின் தரத்திலோ கேமராவிலோ இருந்த பிரச்சனை, அச்சிடுவதில் உள்ள பிரச்சனை இல்லை என்றார்கள். எனக்கு சமாதானமாகவில்லை.
ஒருமுறை நான் ஒரு பிரிண்ட் செய்யும் டெக்னீசியனிடம் நட்பாகப் பேசினேன். அவருடன் அமர்ந்து அவர் செய்துகொண்டிருப்பதை கவனித்துப் பார்த்தேன். அவர் அச்சிடுவதற்கு முன் ‘ஃபோட்டோஷாப்’பில் அந்த படத்தில் சில மாற்றங்கள் செய்தார். அவரிடம் நான் அந்த நீலப்பச்சை நிறத்தை நீக்குவதற்கு அந்த மாற்றங்களை ரீசெட் செய்யச் சொன்னேன். நாங்கள் பல விதங்களில் சோதித்துப் பார்த்தோம், ஏதோவொன்றை ரீசெட் செய்தால் வேறு ஏதோ சொதப்பிவிடும். இரவு முழுவதும் சோதனைகள் செய்தோம். அதற்குள் நானும் எதையெல்லாம் மாற்றினால் என்னென்ன விதமாக அது அச்சில் வெளிப்படும் என்று சிறிது கற்றுக்கொண்டேன். பிறகு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வைத்து அச்சிட்டுப் பார்த்தோம், அது வேலைசெய்துவிட்டது! முதல்முறையாக அந்த நீலப்பச்சை நிறம் இல்லாமல் நாங்கள் ஒரு பேனர் பிரிண்ட் செய்தோம். அன்றுமுதல் சத்குரு ஃபிளக்ஸ் அனைத்தையும் நாங்கள் சென்னையில் பிரிண்ட் செய்யத் துவங்கினோம். அத்தகைய பிரிண்டிங் வேலைக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.
நீச்சல் கற்க நீருக்குள் தள்ளப்பட்டபோது
2007ல், சத்குரு சென்னையில் கிராமோத்சவம் நிகழ்ச்சி நடக்கவிருப்பதாக அறிவித்தார். எங்கள் அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஒப்புக்கொண்டிருந்தார். 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன், ஒரு பிரம்மச்சாரி ஆசிரியரின் கீழ் ஈஷா யோகா ஆசிரியர்களின் குழு ஒன்று சென்னையில் முகாமிட்டிருந்தது. இந்த மாபெரும் நிகழ்ச்சியில், அந்த பிரம்மச்சாரிக்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்ய நான் உதவினேன். தலைமை ஏற்றிருந்த பிரம்மச்சாரிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது, உடனே அச்சிடுவதற்கு வியாபாரிகளை தேர்வுசெய்யும் வேலை, ஆடியோ, மின் இணைப்பு, விளம்பர ஃபிளக்ஸ் வைப்பது, என்று அனைத்து பொறுப்புகளும் என்மீது விழுந்துவிட்டது. எனக்கு இவை எதிலும் முன் அனுபவம் இருக்கவில்லை, ஆனால் சிறந்த முறையில் நாங்கள் உரிய வியாபாரிகளை தேர்வு செய்தோம். உதாரணத்திற்கு அச்சிடுவதற்கு 50% குறைவான செலவு, மின் விளக்குகளுக்கு 30% குறைவான செலவு, விளம்பர ஃபிளக்ஸ் வைக்க 50% குறைவான செலவு. சத்குரு பிரபலமடைந்திருந்தது வியாபாரிகளை கலந்துகொள்ள ஊக்குவித்தது, நிகழ்ச்சி பிரம்மாண்டமானதாக இருந்த காரணத்தால் வியாபாரிகளுக்கு பெரியளவில் ஆர்டர் கிடைத்ததால், மலிவான கட்டணத்தில் செய்து கொடுத்தனர். நாங்கள் அந்த வியாபாரிகளுடன் உருவாக்கிய புரிந்துணர்வின் காரணத்தால், அதில் சிலர் இன்றுவரை எங்களுடன் பணிபுரிகின்றனர், ஆண்டுதோறும் மஹாசிவராத்திரிக்கு உதவுகின்றனர்.
சத்குரு ஞானோதயமடைந்த நாளான செப்டம்பர் 23ம் தேதி கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சி, அற்புதமாக நடந்தேறியது. முதல்முறையாக கிராமியக் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், கிராமிய ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கிராமிய உணவுத் திருவிழா ஆகியவை நகரவாழ் மக்களுக்கு வழங்கப்பட்டன. மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் மு.கருணாநிதியின் சொற்பொழிவு ஊக்கம் தருவதாக இருந்தது. குறிப்பாக மரங்களுக்கும் நமக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி சத்குரு சொல்லும் விஷயங்களுக்கு அவர் வலுசேர்த்த விதம் ஆச்சரியமாக இருந்தது. சத்குரு சொல்லும்போது, “நாம் உள்மூச்சாக எடுப்பதை மரங்கள் வெளிமூச்சாக விடுகின்றன,” என்றார். கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறும்போது, “மரத்தை நாம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும்,” என்று அதை எளிமையாக சொன்னார். பிறகு அன்றைய மாலை வேளையில், பசுமைக்கரங்கள் இயக்கத்தின் 2.5 கோடி மரங்கள் நடும் திட்டத்தைத் துவக்கிவைத்தார். இப்படி மொத்தத்தில் 2007ம் ஆண்டு கிராமோத்சவம், ஈஷாவுடனான என் பயணத்தில் மறக்க முடியாததாக அமைந்தது.
ஈஷா கிராமோத்சவத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் இருபது ஆண்டுப் பணி, பலன் கொடுக்கத் துவங்கியிருந்தது. 2008ல், “ஆனந்த அலை” எனும் இன்னொரு இயக்கத்தை சத்குரு துவங்கி வைத்தார். இதில் 7-நாள் ஈஷா யோகா நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பல இடங்களில் ஆசிரியர்கள் நடத்தினர், அதன் நிறைவாக பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு நகரத்திலும் சத்குருவுடனான ஒரு சத்சங்கத்தில் கலந்துகொண்டனர். இது மொத்தமாக ஒரு லட்சம் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தியது. இதன் பிரம்மாண்டம், எங்களது நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யும் திறனையும் முயற்சிகளையும், ஈஷா யோகா வகுப்பிற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கான எங்கள் உறுதியையும் சோதித்துப் பார்த்தது. ஒரு சுவாரஸ்யமான சவால், “30,000 பங்கேற்பாளர்களின் காலணிகளை, நிறைவில் நிகழ்ந்த சத்குருவுடனான சத்சங்கத்தின் போது எப்படி முறையாக அடுக்கி வைப்பது?” முதல் நிகழ்ச்சியில், காலணிகளுக்கு ஆறு பிரிவுகளை வகுத்தோம், ஆனால் 5,000 பேர் ஒரு இடத்திற்கு வந்து தங்கள் காலணிகளைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. எனவே அடுத்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரிவையும் பல வரிசைகளாக பிரித்தோம், அது அற்புதமாக வேலைசெய்தது. இப்படி நகரத்திற்கு நகரம், ஈஷாவின் தனிச்சிறப்பு மாறாமல் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை வழங்க கற்றுக்கொண்டோம்.
தொழில்நுட்பத்தின் வரம்
சென்னை மையம் அசுரவேகத்தில் வளரவளர, அனைவருடனும் தொடர்பில் இருப்பதும் சத்குரு வழங்கும் கருவிகளை அனைவருக்கும் எட்டும்விதமாகச் செய்வதும் சிக்கலாகிக்கொண்டே சென்றது. உதாரணத்திற்கு, சென்னையில் அனைத்து மையங்களிலும் மாதாந்திர சத்சங்கம் நடத்துவதற்கு, அந்த பகுதியில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அனைவரையும் தொடர்புகொண்டு தகவல்சொல்ல வேண்டியிருக்கும். சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது, ஆனால் அப்போது அது அவ்வளவு எளிமையாக இல்லை. சத்குருவுடன் சஹஜ ஸ்திதி யோகா வகுப்பில் கலந்துகொண்வர்களின் தகவல்களைக் கூட நாங்கள் பதிந்து வைத்திருந்தோம் என்பது ஆச்சரியமான ஒரு உண்மை. சிங்காநல்லூரில் நான் இருந்தபோது அந்த படிவங்கள் அனைத்தையும் சரிபார்த்துப் பதிவுசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பின்னர் அவற்றை எக்செல் ஷீட்களில் பதிந்தோம், ஆனாலும் பங்கேற்பாளர்களை அவர்களுக்குரிய மையத்துடன் சேர்ப்பது சிரமமான வேலையாகவே இருந்தது. நாங்கள் பல படிவங்களை கையில் வைத்து சல்லடை போட்டு சலிப்பது போல் தேடிக்கொண்டு இருந்தோம்.
ஒருமுறை ஒரு தன்னார்வத் தொண்டர் ஒரு எளிமையான மென்பொருள் எழுதினார், அது பங்கேற்பாளரைப் பற்றிய சில தகவல்களை உள்ளீடு செய்தால் அவர் எந்த மையத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று சில கணிப்புகளை வழங்கியது. அது பெரும் சாதனையாக இருந்தது. இப்போது ஈஷா யோக மையத்தில் நாங்கள் ஒரு முழுமையான CRM மென்பொருளை பயன்படுத்துகிறோம், ஆனால் சில வார்த்தைகளை உள்ளீடு செய்தால் ஒரு பங்கேற்பாளரின் மையத்தை அந்த மென்பொருள் சொன்னதைக் கண்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று முதல் நான் தொழில்நுட்பத்தின் ரசிகனாக மாறிவிட்டேன். நான் செய்யும் எந்தவொரு செயலிலும், தொழில்நுட்பத்தைக் கொண்டு அதை எப்படி மேம்படுத்துவது என்று என் மனம் தானாகவே சிந்திக்கத் துவங்கிவிடுகிறது. ஈஷா யாத்ரா குழுவுடன் நான் இருந்த காலத்தில், கோவையில் இருந்த ஒரு தன்னார்வத் தொண்டரின் உதவியுடன், நாங்கள் ஆன்லைன் மூலமாக பதிவுசெய்வதை துவங்கி வைத்தோம். முதல்முறையாக, ஃபினான்ஸ் குழுவுடன் சேர்ந்து ஈ-ரசீது முறையை அறிமுகம் செய்தோம். அந்த சமயத்தில் ஈ-ரசீது என்பது கார்ப்பரேட் வட்டாரங்களில் கூட அதிக புழக்கத்தில் இல்லை.
அந்த செயல்முறையில், நாம் ஏதோவொன்றை மாற்ற விரும்பினால், சின்னஞ்சிறு படிகளாக எடுத்து அனைவரையும் உடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்று தெரிந்துகொண்டேன். உதாரணத்திற்கு, யாத்திரை செல்வதற்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் முறைக்கு மாறியபோது, ஆன்லைன் பதிவுப்படிவத்தின் தோற்றத்தை கையில் கொடுக்கும் படிவத்தைப் போலவே காட்சியளிக்கும்படி வடிவமைக்கச் செய்தேன். இதனால் வேறு பல துறைகளும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர். அதேபோல ஈ-ரசீதுக்கும், கையில் கொடுக்கும் ரசீதைப் போலவே மின் ரசீதும் இருக்கும்படி செய்தோம். ஈ-ரசீது வழங்கும் முறை, நன்கொடைகளைக் கையாளும் முறையைப் பெரிதும் மாற்றியது. நன்கொடையாளர் நன்கொடை வழங்கியதும் ஒரு ரசீதை எழுதி கூரியர் மூலமாக அனுப்பிவைப்பதற்கு நேரமும் பணமும் செலவானதால், அதைச் செய்வது பெரும் சிரமமாகவே இருந்தது. பல நன்கொடையாளர்கள் ரசீதைப் பெறவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுப்பினர். இப்போது தனிநபர்களிடம் இருந்து பெறும் எத்தகைய நன்கொடைக்கும் கட்டணத்திற்கும் ஈ-ரசீது வழங்கப்படுகிறது.
நாடோடியாக…
2009ம் ஆண்டில், நான் புனித யாத்திரைகளுக்கு கூட்டிச்செல்லும் துறைக்கு மாறினேன். எனக்கு இருந்த பொறுப்புகளில், குறிப்பாக கைலாய யாத்திரை செல்வதிலுள்ள மகிழ்ச்சியையும் சவால்களையும் நான் மிகவும் ரசித்தேன். யாத்திரைக் குழுவில் நான் முறையாக இணைவதற்கு ஓராண்டு முன்பாக, கைலாய யாத்திரைக்கான ஏற்பாடுகளைச் செய்ய உதவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த ஆண்டு, எங்கள் யாத்திரை நிகழ்ந்த சமயத்தில் நடந்த ஒரு தேசிய நிகழ்ச்சியின் காரணமாக, அங்கு பயணமாவதற்கு வழங்கப்பட்ட வீசா எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் இருந்தது. சத்குருவின் குழுவில் இருந்த பங்கேற்பாளர்களில் பாதி பேருக்குத்தான் வீசா கிடைத்தது, அதிலும் 40 பேருக்கு இரண்டு நாள் தாமதமாகக் கிடைத்தது. முதல் குழு ஏற்கனவே சத்குருவுடன் கிளம்பிவிட்டது, நேபாளத்தில் அடுத்த குழுவை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாங்கள் நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையிலுள்ள “Friendship Bridge”-ஐ கடந்தோம். அதற்கான குடிவரவு செயல்முறைகளை முடித்தபோது ஏற்கனவே நண்பகல் 12 மணியாகி இருந்தது. சாகாவிற்கு செல்வதற்கு எடுக்கும் நேரத்தையும் பயணப் பாதையையும் கணக்கில் கொண்ட உள்ளூர் திபெத்திய டூர் கைடு, அன்று ‘சாங்க்மு’ என்ற இடத்திலேயே தங்கிவிட்டு அடுத்தநாள் செல்வோம் என்றார்.
சத்குருவுடன் சென்ற முதல் குழு ஏற்கனவே சாகாவை அடைந்திருந்தது. எங்கள் குழுவில் இருந்தவர்கள் எப்படியாவது சத்குருவுடன் இணையவேண்டும் என்று ஆவலாக இருந்தனர். இதை உணர்ந்த சத்குரு, மா கம்பீரி மூலமாக, முடிந்தால் உடனே சாகாவிற்கு புறப்படுமாறு சொல்லியிருந்தார். அந்த திபெத்திய கைடு தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். 10 டொயோட்டா லேண்ட் க்ரூசர் வண்டிகளில் ஏறி பயணமானோம், மாலை 6 மணிவரை பயணம் சுமூகமாகவே இருந்தது. பிறகு திடீரென எங்கள் கார்கள் எல்லாம் நின்றுவிட்டன. எங்கள் டிரைவர்கள் எங்களை கார்களை விட்டு இறங்கச்சொன்னார்கள். ஒரு சிறு நீரோடையில் மாட்டியிருந்த வேறு இரண்டு கார்களுக்கு உதவ செல்வதாகச் சொன்னார்கள். அந்த திபெத்திய கைடும் அவர்களுடன் சென்றார். நாங்கள் முகவரியில்லாத இடத்தில் திறந்த வெளியில் நின்றுகொண்டு இருந்தோம். சூரியன் மறையத் துவங்கியபோது பங்கேற்பாளர்கள் சற்றே பதற்றமடையத் தொடங்கினார்கள். அப்பகுதியில் அலைபேசிகள் வேலைசெய்யவில்லை, எனவே அந்த திபெத்திய கைடு அல்லது மா கம்பீரியை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. நான் பங்கேற்பாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயன்றேன். இறுதியில் 9 மணிக்கு கார்கள் திரும்பிவந்தன, நாங்கள் சாகாவிற்குக் கிளம்பினோம்.
நள்ளிரவைக் கடந்து சாகாவை அடைந்தோம். தன்னார்வத் தொண்டர்கள் சூடான பாணங்களுடனும் உணவுடனும் முகத்தில் புன்னகையுடன் எங்களுக்காக காத்திருப்பதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தோம். அவர்கள் நின்று எங்களை வரவேற்ற இடத்திற்குப் பின்னால், “ஹேப்பி பர்த்டே சத்குரு” என்று ஒரு பேனர் இருந்ததைப் பார்த்தேன். பயண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்த நான், சத்குருவை அவரது பிறந்தநாளன்று சந்திக்க இருக்கிறோம் என்பதை மறந்தேவிட்டேன். பங்கேற்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சிலமணிநேர ஓய்வுக்குப் பின்னர், சத்குருவுடன் ஒரு சத்சங்கம் நடைபெற்றது. என்னை குருபூஜை செய்யச் சொன்னார்கள். முதல்முறையாக சத்குரு நேரில் இருந்தபோது நான் செய்த குருபூஜை அது. இன்றுகூட அந்த தருணத்தை நினைத்தால் மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. அது என் வாழ்வில் மறக்கமுடியாத சில தருணங்களுள் ஒன்று.
நாங்கள் மானசரோவர் ஏரியை அடைந்தபோது, சத்குரு தீட்சை வழங்கி சில நிமிடங்களுக்குப் பிறகு பங்கேற்பாளர்கள் அனைவரையும் ஏரியில் இறங்கி நீராடிவிட்டு வரச்சொன்னார். பங்கேற்பாளர்கள் ஏரிக்குள் 3-5 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று அவர் கூறியிருந்தார். ஏனென்றால் ஏரியின் நீர் மைனஸ் டிகிரியில் இருந்தது. திடீரென சத்குரு என்னை அழைத்து ஏரிக்குள் தூரமாக ஒரு இடத்தில் என்னை நிற்கச்சொன்னார், பங்கேற்பாளர்கள் என்னைத் தாண்டாமல் இருப்பதையும் நீராடிவிட்டு விரைவாக வெளியேறுவதையும் உறுதிசெய்யச் சொன்னார். எனவே நான் அங்கே இடுப்பளவு நீரில் ஒரு மணி நேரத்திற்கு நின்றேன், ஆனால் குளிர் தெரியவில்லை. கைலாய யாத்திரையின் போது சத்குருவைச் சுற்றி இப்படி பல ஜாலங்கள் நிகழ்வது வழக்கம்.
2015ல், நான் ஈஷா நிர்வாகத் துறைக்கு மாறினேன். சலிப்பான வேலை என்ற பொதுவான புரிதலுக்கு மாறாக, ஈஷாவில் நிர்வாகத் துறை என்பது மிகவும் துடிப்பான ஒன்று. ஆசிரமத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நாங்கள் பங்காற்றுவோம். கோவிட் சமயத்தில் ஆசிரமவாசிகளைப் பாதுகாப்பதில் துவங்கி, விருந்தினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் சேவாதாரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது வரை, அனைத்துமே எங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. தினமும் தீர்வுகாண புதிய பிரச்சனைகள் காத்திருக்கின்றன, இது என்னை எப்போதும் துடிப்பாக வைத்திருக்கிறது.
சம்ஸ்கிருதி குழந்தைகளுடன் இருக்கும் பேறு
நான் சம்ஸ்கிருதி குழந்தைகளுக்கும் பாடம் நடத்துவதோடு, சம்ஸ்கிருதியின் பல்வேறு செயல்பாடுகளிலும் பங்காற்றுகிறேன். சம்ஸ்கிருதி குழந்தைகளுடன் இருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட முறைப்படி, சம்ஸ்கிருதி குழந்தைகளுக்கு அவர்களின் உடலும் மனமும் முழுமையாக வளர்ந்து அவர்களது திறமைகள் முழுமையாக வெளிப்பட, சிறு வயதிலிருந்தே ஒருவித ஒழுங்குமுறையை கடைபிடிக்கின்றனர். எனவே அவர்களது வாழ்க்கை முறை, பள்ளிக்கூடம் செல்லும் ஒரு நகரவாழ் குழந்தையின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது. பல சம்ஸ்கிருதி குழந்தைகள் சம்ஸ்கிருதி முறைக்கு தங்களை விருப்பத்துடன் மாற்றிக்கொள்வதைக் காண்பது அற்புதமானது. கடந்த ஆண்டு, 7-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நுழைவுத் தேர்வுக்காக நேர்க்காணல் செய்தபோது, சத்குரு வழங்குவதை உள்வாங்கிக்கொள்ள அவர்கள் காட்டிய ஆர்வத்தைக் காண்பது ஆச்சரியமாக இருந்தது. “இங்கே உணவுமுறை மாறுபடும், விடியும் முன் விழிக்கவேண்டும், சத்குரு அவர்களை சந்திக்க முடியாமல் போகலாம்,” என்றெல்லாம் சொல்லி பொதுவாக அவர்களது ஆர்வத்தைக் குறைக்க முயற்சிப்போம். ஆனாலும், பெற்றோர்கள் அவர்களை நகரத்துப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கத் தயாராக இருக்கும்போதிலும், சில குழந்தைகள் இங்கு இருப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
என் அனுபவத்தில், சம்ஸ்கிருதி குழந்தைகள் நான் சந்தித்துள்ள பெரும்பாலான குழந்தைகளைவிட மிகவும் உயிரோட்டமாகவும் துடிப்பாகவும் இருப்பதைக் காண்கிறேன். பெரும்பாலானவர்கள் மிகவும் உடலுறுதியுடன் இருப்பதால், மலையேற்றம் சென்றால் அவர்களது வேகத்திற்கு ஈடு கொடுப்பது எங்களுக்கு சிரமமாக இருக்கும். ஒருமுறை பாரத் தர்ஷனின் போது, மலையேற்றத்தைத் துவங்கும் முன் நான் சாப்பிட்ட உணவு சேராமல் போனது. அப்போதுதான் அவர்கள் எவ்வளவு வேகமாக மலையேறுகிறார்கள் என்று கவனித்தேன். என் வயிற்றிலிருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது, ஆனாலும் அவர்களது சக்தி மிகவும் துடிப்பாக இருந்ததால், ஐந்து மணி நேரத்திற்கு நானும் அதிக இடைவேளைகள் எடுக்காமல் தொடர்ந்து நடந்து சென்றேன். நாங்கள் சென்றடைந்தவுடன் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிட்டது.
வகுப்பறையில் அவர்களுக்கு பாடம் நடத்துவது சவாலானதாக இருக்கும். அவர்கள் கவனிக்காதது போலத் தெரிந்தாலும் நான் சொல்லும் ஒவ்வொன்றையும் கவனித்துக் கேட்பார்கள், எனவே நான் எப்போதும் விழிப்புணர்வாக இருக்கவேண்டும். ஒருமுறை ஒரு இந்திய சிறுவன் விவசாயிகளுக்கு உதவிசெய்ய ஒரு விசேஷமான டுரோன் வடிவமைத்துள்ளதாக ஒரு கதை சொன்னேன். அன்று காலை வாட்ஸ்ஆப் மூலம் நான் பார்த்த அந்த கதை எனக்கு உத்வேகமளித்தது. கதையை சொல்லி முடித்ததும் ஒரு மாணவர், “அது உண்மைக் கதையா?” என்று கேட்டார். திடீரென்று அந்த கதையின் நம்பகத்தன்மை குறித்து எனக்கும் கேள்வி வர, “நான் சரிபார்த்துவிட்டுச் சொல்கிறேன்” என்றேன். அந்த மாணவர் உண்மையாகவே தெரிந்துகொள்வதற்காகக் கேட்டார். பிறகு நான் ஆராய்ந்ததில் அது உண்மையில்லை என்று தெரிந்துகொண்டேன், பணிவுடன் அடுத்தநாள் வகுப்பில் அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.
நான் ஏன் இங்கு இருக்கிறேன்?
நான் இங்கு சத்குருவுடன் இருப்பதற்காக வந்தேன், இன்றுவரை நான் சத்குருவுடன் இருப்பதற்காகவே இருக்கிறேன். இதை நினைத்துப் பார்க்கவே விசித்திரமாக இருக்கிறது, நான் என் வேலையை விட்டதே சத்குருவுடனான சத்சங்கத்தில் இருப்பதற்குத்தான், ஆனால் பொதுமக்களுக்காக சத்குரு வழங்கும் சத்சங்கத்தில் நான் முழுமையாக அமர்ந்து கலந்துகொண்டது அதுதான் கடைசி முறை… இப்போது ஏதோவொரு சத்சங்கம் நடந்தால், அது நல்லபடியாக நடைபெற நான் ஏதோவொரு இடத்தில் தன்னார்வத் தொண்டு செய்துகொண்டு இருக்கிறேன். ஆனால் என் அனுபவத்தில் நான் எப்போதும் சத்குருவுடன் இருக்கிறேன். இந்த 23 ஆண்டுகளில், “இங்கு எதற்காக இருக்கிறேன்?” என்ற சிந்தனை ஒருமுறை கூட என் மனதில் தோன்றியதில்லை. என் வாழ்க்கைப் பாதையைப் பற்றியும் அவர் எனக்கு வாரி வழங்குவதைப் பற்றியும் எனக்கு சந்தேகம் வந்ததேயில்லை. ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது, எனினும் அதே நாளாக இருக்கிறது. நான் ஆனந்தமாக இருக்கிறேன்.