சத்குரு எக்ஸ்குளூசிவ்

சத்குருவுக்குப் பிறகு:
ஒரு நீடித்த மரபுக்கான திட்டம்

செப்டம்பர் 3, 2012 அன்று, சத்குருவின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில் ஒரு சத்சங்கத்தின்போது, ஈஷாவின் எதிர்காலத்துக்காக, அவர் தனது உடலை நீங்கியதற்குப் பிறகான அவருடைய சில திட்டங்களை சத்குரு வெளிப்படுத்தினார். தியானலிங்கத்தை சக்தியின் ஆதாரமூலமாக பாதுகாப்பதற்கும், வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கு அவர் வழங்கும் ஆன்மீக சாத்தியம் கிடைப்பதை உறுதிசெய்வதற்குமான திட்டவரைவுகளை கோடிட்டுக் காட்டுகிறார். இன்றைய ஈஷா தியான அன்பர்களுக்கு குறிப்பாகப் பொருந்தும்வகையில், சத்குருவின் பொருள்உடலின் மறைவுக்குப் பிறகான அவருடைய இருப்பின் இயல்பு, மற்றும் காலவரையறையை வெளியிட்டார்.

கேள்வியாளர்: புத்தமத பாரம்பரியத்தில், குருமார்கள் தமது சீடர்களுக்கு உதவும்பொருட்டு, பல முறைகள் அவதாரம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. யோகக் கலாச்சாரத்தில் அப்படி ஒரு பாரம்பரியம் ஏன் இருப்பதில்லை? மேலும், நீங்கள் ஏன் மீண்டும் திரும்பி வரமாட்டீர்கள் என்று கூறியுள்ளீர்கள்?

இறுதி அத்தியாயமும் பிரதிஷ்டைக்கான உறுதியும்

சத்குரு: அதை என்னால் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியும், நான் திரும்பி வரப்போவதில்லை, ஏனென்றால் எனது காலாவதி தேதி மிக முன்னதாக முடிந்துவிட்டது. எந்த அளவுக்கு என்றால், உணர்திறன் மிகுந்த மக்கள் நான் இருப்பில்கூட இல்லை என்றே பார்க்கின்றனர். மனிதகுலத்தின் வரவு செலவு கணக்குப் புத்தகத்தில் நான் இல்லை – அதுதான் எனக்கு அளவுகடந்த சுதந்திரம் அளிக்கிறது. அதை மேலும் ஒரு பிறவி நீட்டிப்பது நிகழப்போவதில்லை. இந்தப் பிறவிகூட தியானலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் திட்டத்தில் நான் பிணைக்கப்பட்டதுதான் காரணமாக இருந்தது. இல்லையென்றால், இப்போது நான் இருந்திருக்கமாட்டேன்.

புத்தரின் அமைப்பாகிய நீடித்த ஆன்மீக பயிற்சிகள்

புத்த மரபில், இந்த மாதிரி இருக்கிறது: கௌதம புத்தர் எப்போதும் பயணித்துக்கொண்டு, அரசர்களை மாற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். “சாமான்ய” மக்களுடன் செயல்படுவதற்கு அவர் முயற்சி செய்வதைவிட, அரசர்களை மாற்றத்துக்கு உள்ளாக்கினால், சமூக மாற்றம் மிகமிக வேகமாக நிகழும் என்பது அவருக்குத் தெரியும். அவரது வாழும் காலத்திலேயே 40,000 க்கும் அதிகமாக அவருடன் இருந்த துறவிகளுக்கு, அவர் ஆன்மீக செயல்முறைகள் வழங்கினார்.

புத்தத் துறவிகள் மணிக்கணக்காக உச்சாடணம் செய்துகொண்டிருக்கலாம். கௌதமர் கற்றுக்கொடுத்த மற்றொரு பயிற்சி, விபாசனா என்பது. இந்தப் பயிற்சியில், மிக நீண்ட நேரங்களுக்கு உடல் உணர்வுகளையும், எண்ணங்களையும் கவனித்துக்கொண்டே இருப்பது. இவைகள் மிகக் கடினமான செயல்முறைகள், ஆனால் இந்த செயல்முறையின் அழகு என்னவென்றால் இவற்றை நீங்கள் எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் கற்றுக்கொடுக்கலாம்.

அப்படிப்பட்ட பயிற்சிகளை – ஈஷாவில், ஈஷா கிரியா போல - நீங்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கலாம். ஏனென்றால் அவைகள் குறிப்பிடத்தக்க அளவில் உடலியல் மாற்றங்களைத் தூண்டுவதில்லை. நாம் கற்றுக்கொடுக்கும் மற்ற எல்லா பயிற்சிகளும் குறிப்பிடத்தக்கவாறு, அளவிடக்கூடிய மருத்துவ அளவுருக்கள் (parameters) உள்ளிட்ட உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குட்பட்ட பயிற்சியிலேயே, ஒருவரது உடலியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். அப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும்போது, முன்னேற்பாட்டுப் படிகள் மிகவும் முக்கியம்.

அப்படிப்பட்ட எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாமல், விழிப்புணர்வு மட்டும் தேவைப்படும் பயிற்சிகளுக்கு, முன்னேற்பாடு தேவையில்லை. ஈஷா கிரியாவை நீங்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கலாம்; அவர்கள் அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், மெல்லமெல்ல அவர்கள் பரிணாமம் அடைவார்கள். கௌதமர் கற்றுக்கொடுத்த பெரும்பாலான செயல்முறைகள் இந்தமாதிரி இருந்தன. நெருக்கமான மிகச் சில சீடர்களுடன் மட்டும், அவர் பல்வேறு செயல்முறைகள் செய்தார். துரதிருஷ்டவசமாக அவைகள் இன்றைக்கு அரிதாகவே உயிருடன் உள்ளன.

நான் திரும்பி வருவதென்பது, ஒரு ஆரம்பகட்ட தொழில்நுட்பமாக இருக்கும். மேலான வழியில் செயல்படும் விஷயங்களை நாம் நிறுவிக்கொண்டிருக்கிறோம்

பெருந்திரளான மக்களுக்கு கௌதமர் கற்றுக்கொடுத்த ஆன்மீக செயல்முறைகள், முன்னேற்பாடு தேவைப்படாத அளவுக்கு நுணுக்கம் இல்லாதவை. அவைகள் அனைவராலும் செய்யக்கூடியவாறு எளிமையான முறைகளாக இருந்தன. 2500 வருடங்களுக்குப் பிறகும், அப்படிப்பட்ட செயல்முறைகள் நீடித்து வாழ்ந்துள்ளன, அவ்வளவு நீண்ட நெடிய காலத்துக்குப் பிறகு, அவைகள் இன்னமும் உயிர்த்திருப்பது அற்புதமானது.

இந்தப் பயிற்சிகளுடைய இயல்பின் காரணமாக, முன்னேற்பாடு, உணர்தல்கள், மற்றும் எட்டு நிலைகளிலான சமாதிக்கு பெரும்பாலான மக்களும் பல பிறவிக் காலங்களுக்கு முயற்சி செய்யவேண்டியிருக்கும் என்று கௌதமரே கூறினார். சமாதியின் எட்டு பரிணாமங்கள் அல்லது கட்டங்களைப் பற்றி யோக அறிவியலும்கூட கூறுகிறது. ஒருவர், ஒரு பிறவிக்காலத்தில் சமாதியின் ஒரு நிலையில் நனையவேண்டும், மற்றும் பிறகு அடுத்த நிலையில் என்று நீண்டுகொண்டே சென்று, முடிவில் நீங்கள் கரைவீர்கள் என்று கௌதமர் கூறினார். இன்றைய மனதுக்கு பல பிறவிக்காலங்கள் என்பது நினைத்துப்பார்க்க முடியாதது. ஒரு வகுப்பில் அத்தனை நாட்கள் செலவழிப்பதுகூட சாத்தியமில்லாததாகத் தோன்றுகிறது. ஆனால், புத்த பாரம்பரியம் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டது என்ற காரணத்தால், அவர்கள் மீண்டும் திரும்பி வந்து, மெதுவாக பரிணமிக்கின்றனர்.

சுய வழிகாட்டுதல் பயணங்கள் மற்றும் உலகளாவிய ஆன்மீகக் கருவிகள்

அநேகமாக அடுத்த சில வருடங்களில், மக்கள் எந்த விதமான உதவியும் இல்லாமலோ அல்லது உதவியுடனோ பயிற்சி செய்யக்கூடிய வழிமுறைகளை நாம் வெளிக்கொண்டு வருவோம். அதற்காக அவர்களுக்கு ஒரு சக்தி சூழலோ அல்லது எந்த விதமான உறுதுணையோ தேவைப்படாது – அவர்கள் தாங்களாகவே அதைச் செய்துகொள்ள முடியும். முதல்படியாக, நாம் ஈஷா கிரியாவை வெளியிட்டுள்ளோம். எந்த இடத்திலும் தொலைந்துபோகக்கூடிய அபாயம் இல்லாமல், ஏனென்றால் அது ஒரு மெதுவான செயல்முறை என்ற வகையில், ஒட்டுமொத்த மக்கள்தொகையும் செய்யமுடிந்த மற்ற பல பயிற்சிகளுடன் நாம் வெளிப்படுவோம்.

உதாரணத்துக்கு, ஒரு இலக்கை நோக்கி, ஜிபிஎஸ் உதவி இல்லாமல் நீங்கள் பயணம் செய்வதாக வைத்துக்கொள்வோம்; நீங்கள் நடந்து செல்கிறீர்கள் என்றால், தொலைந்துபோகும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது, ஏனென்றால் நீங்கள் மெதுவாக நடந்து இடம் பெயர்கிறீர்கள். தேவைப்பட்டால் அந்த வழியாக வருபவர்களிடம் சரியான வழி கேட்டுத் திருத்திக்கொண்டு, செல்லக்கூடும். நீங்கள் ஒரு மிதிவண்டியை ஓட்டிச் சென்றால், ஓட்டிக்கொண்டிருக்கும்போது யாரிடமும் பேசுவதென்பது சற்றுக் கடினம்தான்; நீங்கள் உரத்தகுரலில் சத்தமிடவேண்டியிருக்கலாம். நீங்கள் ஒரு மோட்டார் வண்டியை ஓட்டினால், நீங்கள் தொலைந்துபோகக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாகிறது, ஏனென்றால் நீங்கள் யாரிடமும் பேசமுடியாது. நீங்கள் விமானத்தில் பறக்கிறீர்கள் என்றால், உங்களிடம் ஜிபிஎஸ் இல்லாதபட்சத்தில், மிகப்பெரும்பாலான நேரம் நீங்கள் தொலைந்துபோவீர்கள்.

நான் விடைபெறும் தருணத்திலிருந்து, எண்பது வருட காலங்களுக்கு, என் இருப்பானது தற்போது இருப்பதைக் காட்டிலும் மிக வலிமையாக இருக்கும்.

திரும்பி வரும் இந்த செயல்முறைக்கு மிக மெதுவான, கடுமையான செயல்முறைகள் காரணமாக இருப்பதுடன், மற்றும் எந்த முன்னேற்பாடும் தேவையில்லை என்பது அதன்பின் இருக்கும் விவேகம் என்பதால் இந்த செயல்முறையை நீங்கள் மக்களுக்குப் பரிமாறலாம். அப்போதும்கூட அது ஒரு தூய்மையான வழிமுறையாக இருக்கும். அந்த மாதிரி பல பயிற்சிகளை நாம் வெளிப்படுத்துவோம். நான் இங்கு இருந்துகொண்டிருக்கும்போதே, நுணுக்கமாக மக்கள் கூட்டத்தை மாற்றமடையச் செய்யமுடியும். அதேநேரம், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினருக்கு மிக நுணுக்கமான ஒரு செயல்முறையையும் வழங்குவேன். மெதுவாக, நாம் திரளான மக்களுக்கான செயல்முறைகளை வெளிப்படுத்துவோம், ஏனென்றால் அது ஒரு நீண்டகால காப்பீடாக இருக்கும்.

நாடகம் இல்லை, கடப்பது மட்டுமே…

நான் ஏன் வரமாட்டேன்? ஒரு உயிரின் இருத்தலுக்கென்று ஒரு குறிப்பிட்ட கால அளவு இருக்கிறது என்று நான் கூறியுள்ளேன். இப்போதுகூட, என்னைச் சுற்றி இருப்பவர்களின் உறுதுணை இல்லாமல், என் உடலை என்னால் ஒருங்கிணைத்து வைத்திருக்க முடியாது. இப்போதைக்கு நான் நலமாக உள்ளேன், ஆனால் என்னைச் சுற்றிலும் ஒரு சிறிதளவும் உறுதுணை இல்லாமல், எனது உடலின் உறுதியைத் தக்கவைத்திருப்பது சாத்தியமற்றதாகவே இருந்திருக்கும், ஏனென்றால் அதனுடைய காலவரையறை கடந்து வெகுகாலமாகிவிட்டது.

நான் எப்போது உடலை விட்டுச் செல்வதற்கு முடிவெடுத்தாலும், அது ஒரு குறிப்பிட்ட நாளாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகு எந்த நேரமாகவும் இருக்கலாம். எப்படிச் செல்வது – கார் அல்லது ஹெலிகாப்டர் நொறுங்குவதா, அல்லது ஒரு மலையிலிருந்து குதிப்பதா அல்லது ஒரு நதியினுள் மூழ்குவதா – நாம் அதை இயற்கையிடம் விட்டுவிடலாம். நான் எதைப் பற்றியும் வேடிக்கை செய்வதற்கு முயற்சிக்கவில்லை, ஆனால், “சத்குரு இன்றைக்கு விட்டுச்செல்லப் போகிறார்”, என்று அனைவரும் நினைத்து, ஒரு பெரிய நாடகத்தை உருவாக்கும் அளவுக்கு அது ஒரு சீரியஸான கணமாக இருப்பதை நான் விரும்பவில்லை. செய்தித்தாள்களில், இணையத்தில் நீங்கள் அறிந்துகொள்வது மேலானது.

நான் விட்டுசெல்லும் தருணத்திலிருந்து, எண்பது வருட காலங்களுக்கு, என் இருப்பானது தற்போது இருப்பதைக் காட்டிலும் மிக வலிமையாக இருக்கும். அதாவது, எனது இருப்பை நான் திரும்பப்பெறும் முன்பாக, நீங்கள் அனைவரும் இறப்பதை நான் உறுதிசெய்ய விரும்புகிறேன். எண்பது வருடங்கள் என்பது ஏறக்குறைய மற்றொரு பிறவி போன்றது. எனது இருப்பு, தற்போது இருக்கும் விதத்தைக்காட்டிலும் மிகவும் வலிமையானதாக இருக்கும், ஏனென்றால் ஒரு பொருள் உடலைத் தூக்கிச் சுமக்கும் பாரம் எனக்கு இருக்காது. உடல்தன்மையான இருப்புக்காக, நாம் பல்வேறு அமைப்புகளை நிறுவுவோம்.

சக்தியின் மூலத்தை பாதுகாப்பது

தியானலிங்கம் நமக்கான மூலஸ்தானம் அல்லது சக்தியின் மூலமாக இருப்பதால், இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கும், முக்கியமாக தியானலிங்கத்தைக் கையாள்வதற்கும் நாம் குழுக்களை நிறுவுவோம். தியானலிங்கம் அதிர்வுகளைப் பரப்பும்போதுதான், ஆன்மீக இயக்கம் செயல்பாட்டில் இருக்கும். இல்லையென்றால், அது வெறுமனே பேச்சளவு ஆன்மீகமாக மாறிவிடும். மக்கள் புத்தகங்களைப் படித்துவிட்டு, அறிதல் இல்லாமலேயே, அவர்கள் அறிந்துகொண்டதாக எண்ணுவார்கள். இது அபாயகரமானது. புத்தகங்கள் தூண்டுகோலாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, ஒருபோதும் ஒரு ஆன்மீக செயல்முறையாக அல்ல.

மூலஸ்தானத்தை முழுமை குறையாமலும், புனிதத்துடனும் பாதுகாப்பது முக்கியமானது. அதனால்தான் நான் க்ஷேத்ர சன்னியாசம் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன், அதாவது மக்கள் புனித வளாகத்தை விட்டுச் செல்லாதவாறு சன்னியாசம் எடுத்துக்கொள்வது. மேலும், புனிதத்தலத்தின் நீண்ட கால பாதுகாப்பாளர்களாக, க்ஷேத்ரபாலகர்களை உருவாக்கவும் விரும்புகிறோம்.

தியானலிங்கம் அதிர்வுகளைப் பரப்பும்போதுதான், ஆன்மீக இயக்கம் செயல்பாட்டில் இருக்கும்.

மேலும், நீண்ட நெடுங்காலங்களுக்கு, இந்த இடம் தன்னைத்தானே தக்கவைத்துக்கொள்வதை உறுதி செய்யும்விதமாக, ஒரு நிதிய உள்கட்டமைப்பு ஒன்றையும் நிறுவுவதற்கு விரும்புகிறேன். இந்தக் கலாச்சாரத்தில், அவர்கள் கட்டிய ஒவ்வொரு கோவிலுக்கும், வருவாய்க்காக சில ஆயிரம் ஏக்கர்கள் இருப்பதை அவர்கள் எப்போதுமே உறுதிசெய்திருந்தனர். துரதிருஷ்டவசமாக, இந்தத் தலைமுறையில், அவைகள் அனைத்தும் அரசாங்கம் அல்லது குத்தகைக்காரர்களால் எடுத்தாளப்படுகின்றன. பெரும்பாலான கோவில்களுக்கு எதுவுமில்லை.

நாம் கட்டிட அமைப்புகளை மூன்றிலிருந்து ஐந்தாயிரம் வருடங்களுக்கு நிலைத்திருக்குமாறு கட்டமைக்கிறோம். ஆகவே கட்டிட அமைப்புகள் நிலைத்திருக்கும்போது, அவற்றைப் பராமரிப்பதற்கு இன்றியமையாத மனித உள்கட்டமைப்பும் அதேவிதமாக அல்லது குறைந்தபட்சம் ஓரளவுக்கு நீண்ட ஆயுட்காலத்துடன் இருப்பது மிகவும் முக்கியமானது. குறைந்தபட்சம் ஏழு, எட்டு நூற்றாண்டுகளுக்கு இந்த விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். நான் இந்த சக்தியின்மீது மிக அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன், அது அற்புதமான உயிர்களை உருவாக்கும் என்பதில் நான் நிச்சயமாக உள்ளேன்; அடுத்த தலைமுறையில் இருக்கலாம், அல்லது அடுத்த சில தலைமுறைகளில், இது உறுதியாக நிகழும்.

சத்குருவின் மரபு: அடுத்த தலைமுறை

நான் திரும்பி வருவதென்பது, ஒரு பக்குவமற்ற தொழில்நுட்பமாக இருக்கும். மேலான வழியில் செயல்படும் விஷயங்களை நாம் நிறுவிக்கொண்டிருக்கிறோம். சத்குரு இல்லையென்றால், என்ன நிகழுமோ என்று எண்ணுவது தவறு.

சிலர் என்னால் நடத்தப்படும் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்புவதாகக் கூறுகின்றனர். அவர்களிடம் நான் கூறுவது, “ஆசிரியர்களின் வகுப்புக்கு செல்லுங்கள். என்னைக்காட்டிலும், நிச்சயமாக அவர்கள் நன்றாகப் பயிற்சி பெற்றவர்கள்.” நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், எனக்கு யாரும் பயிற்சி அளிக்கவில்லை. பிறகு, பலரும் என்னிடம் வந்து கூறுகின்றனர், “சத்குரு, எனது ஆசிரியர்தான் சிறந்தவர்.” சிலர் கூறுகின்றனர், “சத்குரு, இந்த ஆசிரியர், எங்கள் ஆசிரியர், உங்களைவிடவும் நன்றாக உள்ளார்.” இதைதான் நான் கேட்க விரும்புகிறேன், அதாவது, நமது ஆசிரியர்கள், நமது தன்னார்வலர்கள், மற்றும் ஆசிரமத்தில் உள்ள நமது மக்கள் என்னைக்காட்டிலும் மேலானவர்கள் என்ற அளவில் இருக்கவேண்டும். அதன் அர்த்தம், நான் நன்றாக செயல்பட்டுள்ளேன்.

ஆகவே, “தயவுசெய்து திரும்பி வாருங்கள் சத்குரு!” என்ற இந்த நிலைக்குள் செல்லாதீர்கள். அது தேவையற்றது. நாம் உருவாக்கும் அடுத்த தலைமுறை நம்மைவிட மேலாக இருக்கவேண்டும். இளைய சமுதாயத்தை நான் கேட்கிறேன், நாம் செய்திருப்பதைவிட நீங்கள் சிறப்பாக செய்வீர்களா, அல்லது நாம் செய்திருப்பதைவிட நீங்கள் மோசமாக்கிவிடுவீர்களா?