உணர்ச்சிகள்

குழப்பத்தில் உங்களுக்குள் அமைதி காத்தல்: கோபத்தை வெல்வது குறித்து சத்குரு

மனித உணர்ச்சிகளின் அடர்ந்த படிமங்களுக்குள் ஆழமாகப் பயணிக்கும் ஒரு உரையாடலில், முன்னாள் தடகள வீரராக இருந்து தொழில்முனைவோராக மாறிய பிரபல போட்காஸ்ட் “த ஸ்கூல் ஆஃப் க்ரேட்னெஸ்”இன் நெறியாளர் லெவிஸ் ஹாவ்ஸ், கோபம் குறித்த தலைப்பை விவாதிக்க சத்குருவை வரவேற்கிறார். ஒளிவுமறைவற்ற நேர்மையும், ஆழமும் கொண்டு, அநீதிகளின் உணர்தல்களால் கொழுந்துவிட்டெறிந்த அடங்கா கோபத்திலிருந்து, விழிப்புணர்வாக பதிலாற்றும் கலையின் பிரதிநிதியானது வரை, அவரது இளமைக்காலம் தொட்டு பிற்கால தனிப்பட்ட பரிணாமம் வரை நினைவுகூர்கிறார். ஆர்ப்பாட்டமான உலகத்தில் விழிப்புணர்வுடன் வாழ்வது என்றால் என்ன என்பதை ஆராய்வது மட்டுமல்லாமல், எதிர்மறை உணர்ச்சிககளின் பிடியில் சிக்காமல் வாழ்வதன் ஆற்றலையும் அறியத் தயாராகுங்கள்.

லெவிஸ் ஹாவ்ஸ்: நீங்கள் கடைசியாக கோபம் அல்லது மனக்கசப்பை உணர்ந்து, அதை வெளிப்படுத்தியது எப்போது?

சத்குரு: இப்போதுதான் உங்கள் மீது கோபப்படுவதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். (இருவரும் சிரிக்கின்றனர்)

லெவிஸ் ஹாவ்ஸ்: மிகவும் சரி, கோபப்படுங்கள்.  நான் அதனை விரும்புகிறேன்.

சத்குரு: இதில் என்ன ஒரு விஷயம் என்றால், யாரோ ஒருவர் என்னை மகிழ்ச்சிப்படுத்தவோ, மகிழ்ச்சியில்லாமல் செய்யவோ, கோபப்படுத்தவோ அல்லது துன்புறுத்தவோ முடியும் என்ற உரிமையை நான் யாருக்கும் கொடுத்ததில்லை. இந்த விஷயங்களிலெல்லாம் எனக்குத் திறனில்லை என்பதல்ல இது – எனக்கு வேண்டுமென்றால், அந்த எல்லாமாகவும் என்னால் இருக்கமுடியும் – ஆனால் அந்த உரிமையை நான் எவருக்கும் கொடுத்திருக்கவில்லை. யாரும், எதையும் எனக்கு செய்து, என்னைக் கோபப்படுத்த முடியாது.  

லெவிஸ் ஹாவ்ஸ்: நீங்கள் இளமையில் இருந்தபோது அந்த அனுபவம் உங்களுக்கு இருந்ததுண்டா அல்லது யாருக்காவது அந்த உரிமையைக் கொடுத்ததுண்டா? நீங்கள் மாற்றமடைந்த ஒரு குறிப்பிட்ட கணத்தில் அதைக் கற்றுக்கொண்டீர்களா?

என்னை மகிழ்ச்சியாகவோ துயரமாகவோ கோபமாகவோ கவலையாகவோ மாற்றும் சக்தியை நான் எவருக்கும் கொடுத்ததில்லை.

சத்குரு: எனது 11 அல்லது 12 வயதிலிருந்து 24 வயது வரையில்,  எப்போதும் ஏறக்குறை 24 மணி நேரமும் நான் கோபமாகவே இருந்தேன், ஏனென்றால் நீதி, அநீதியாக நான் உணர்ந்த விஷயங்களைப்பற்றியும், அநீதியைத் தடுப்பதுபற்றியும் சிந்தித்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் நீதி மற்றும் அநீதிகளைப் பார்க்கத்தொடங்கிவிட்டால், பிறகு சிறிய விஷயங்களில்கூட, உலகத்தில் எல்லாமே அநீதியாகத் தோன்றுகிறது. அநீதியான எதுவும் என்னைக் கோபப்படுத்தியது. நான் பார்த்த எல்லா இடங்களிலும் – வீடு, பள்ளி, வீதி, சமூகம், தேசம், மற்றும் உலகம் என்ற எங்கெங்கும் – அவ்வளவு அ நீதியாக இருந்தது; அதனால் நான் எப்போதும் கோபமாக இருந்தேன்.

லெவிஸ் ஹாவ்ஸ்: நிச்சயமாக. பல விஷயங்கள் குறித்தும், பல விதமான அநீதிகள் குறித்தும் கோபம் கொள்ளும் பலரை நான் அமெரிக்காவிலும், உலகமெங்கிலும் பார்த்துள்ளேன். அப்படியாயின், நீங்கள் எப்போது அதிலிருந்து மாறினீர்கள்? இந்தக் கோபம் பலன் தருவதில்லை என்று எப்போது உணர்ந்தீர்கள்?

சத்குரு: இது எனக்கு மட்டுமல்ல – இது யாருக்கும் பலன் தருவதில்லை.

லெவிஸ் ஹாவ்ஸ்: அது உண்மைதான். ஆனால் அதை எப்போது உணர்ந்தீர்கள்?

சத்குரு: கோபத்தை மக்கள், “அறச்சீற்றம்” என்று அழைத்து அது ஏதோ ஒருவிதமான நற்குணம் என்று எண்ணுகின்றனர். அவர்களை செயலில் தூண்டுவதற்கு ஏதோ மோசமான விஷயம் ஒன்று தேவைப்படுகிறது. அவர்களை செயல்படச் செய்வதற்கு, அவர்களது இதயங்களில் போதுமான அன்பு இல்லை. கோபத்திலிருந்து வெளிக்கிளம்பும் செயலின் தன்மை சில நேரங்களில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் அனைவருக்கும் நியாயமான விளைவுகள் ஏற்படுவதை நாம் விரும்பினால், அனைத்தும் சரியாக இருக்கும்போது நாம் செயல்படவேண்டும். ஆனால் விஷயங்கள் சௌகரியமாக இருக்குபோது, மக்கள் செயலற்று இருப்பதையே விரும்புகின்றனர். கோபத்துடன் உங்களை நீங்கள் செயல்பாட்டுக்குள் இயக்கும்போது, அதை நீண்ட காலம் உங்களால் தக்கவைத்திருக்க முடியாது.

அதனை நீண்ட காலத்திற்கு நீங்கள் தக்கவைத்தால், நீங்கள் உங்களையே அழித்துக்கொள்வதுடன், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் அழித்துவிடுவீர்கள். நீங்கள் எப்போதாவது கோபமடைந்தால், நீங்கள் வல்லமை பெற்றதாக உணர்ந்து, அரிதாக, சரியான விஷயங்களைச் செய்வதாகத் தோன்றும். அந்த சரியான விஷயங்களை நீங்கள் உங்களது வாழ்க்கை முழுவதும் செய்துகொண்டிருக்கவேண்டும். அப்போது, உங்கள் வாழ்க்கை முடிவதற்குள், அனைத்துமே மாற்றமடையாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பீர்கள்.

கோபத்தின் வேகத்தால் உங்களை நீங்கள் செயல்பாட்டுக்குள் இயக்கும்போது, அதை நீண்ட காலம் உங்களால் தக்கவைத்திருக்க முடியாது.

லெவிஸ் ஹாவ்ஸ்: மக்கள் அன்பினால் உந்தப்பட்டு இயங்குவதால், அவர்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், விஷயங்கள் சுமுகமாக இருக்கும்போதே, அவர்களைத் தட்டி எழுப்புவது எப்படி?

சத்குரு: இன்னர் எஞ்ஜினியரிங் என்று நீங்கள் பார்ப்பது, ஒரு விதத்தில் மதத்திலிருந்து பொறுப்புணர்வுக்கான ஒரு நகர்வாக உள்ளது. அடிப்படையில், மதம் என்ற பொருளில், பொறுப்பு என்பது வேறு எங்கேயோ மேலே இருப்பதாக மக்கள் எண்ணுகின்றனர். அந்த “மேலே” எங்கே உள்ளது, ஒருவருக்கும் தெரியாது – நீங்கள் அதை நம்பத்தான் வேண்டும். நீங்கள் கலிஃபோர்னியாவிலும், நான் தமிழ் நாட்டிலும் இருக்கும்போது, நீங்களும், நானும் மேலே பார்த்தால், நம் இருவரின் “மேல்” என்பது வித்தியாசமான திசைகளில் உள்ளது. பூமி, உருண்டையாகவும், சுழன்றுகொண்டும் இருக்கும்போது, இந்த பிரபஞ்சத்தில் “மேல்” என்பது எது? “இது மேல்புறம்” என்று அண்டவெளியில் எங்கேயாவது குறிக்கப்பட்டுள்ளதா? அப்படி ஒரு விஷயம் இல்லை.

அங்கே மேலே, எங்கேயும் பொறுப்பு இல்லை. பொறுப்பு இங்கே நமக்குள்ளே வரவேண்டும். நாம் ஒரு அற்புதமான உலகத்தில் வாழ்வதற்கு விரும்பினால், இதை நிகழ்த்தக்கூடியவர்களும் நாமேதான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வேறு எங்கிருந்தும், வேறெந்த சக்தியும் அதைச் செய்யப்போவது கிடையாது. மதத்திலிருந்து, பொறுப்புக்கு நம்மை நாமே மாற்றிக்கொண்டு உணர்ந்துகொள்வதுதான் ஒரே வழியாக உள்ளது. படைத்தல் என்பதற்கு நம்மிடம் விளக்கம் இல்லாத காரணத்தால்தான் கடவுள் என்ற கருத்து வளர்ந்துள்ளது.

நீங்களும், நானும் இருத்தலுக்கு வருவதற்கு முன்பே, எண்ணிலடங்காத அளவிடற்கரிய படைப்பு ஏற்கெனவே நிகழ்ந்திருந்தது. அவை அனைத்தும் எப்படி இருத்தலுக்கு வந்தன? அவ்வளவு சிக்கலான, அற்புதமான விஷயம் – யார் அதைப் படைத்தது? ஒரு பெரிய ஆண்மகன் அதைச் செய்திருக்கவேண்டும் என்பது எளிமையான, சிறுபிள்ளையின் புரிதலைப் போன்று இருக்கக்கூடும். அவரை இங்கு உங்களால் பார்க்கமுடியாத காரணத்தால், அவர் “அங்கே மேலே” இருக்கவேண்டும் என்று மக்கள் எப்போதும் முடிவுக்கு வருகின்றனர். இப்போது, அது ஏன் ஒரு பெண்ணாக இருக்கக்கூடாது என்று சில விவாதத்துடன் பட்டிமன்றம் இடம்பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில், நாம் இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்துவைத்துள்ளோம். நமக்கு ஆண் கடவுள்கள், பெண் கடவுள்கள், பாம்பு கடவுள்கள், பசு கடவுள்கள், யானை கடவுள்கள், மற்றும் மனதில் எழக்கூடிய எந்த வடிவத்திலும் கடவுள்களும் உண்டு. எதிர்காலத்தில் யார், என்ன உரிமை கோருவார்கள் என்பது நமக்குத் தெரியாது – ஆகவே எல்லாமே கடவுள்தான் என்று நாம் கூறினோம்.

கடவுள் என்ற கருத்து உருவாகியிருப்பதன் காரணம், படைப்பிற்கு நம்மிடம் எந்த விளக்கமும் இல்லாததுதான்.

உங்களுக்குள் சில விஷயங்களை அமைதிப்படுத்தும் மனரீதியான ஒரு செயல்முறையாக, நீங்கள் கடவுள் என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்தினால் – அது நல்லது. ஆறுதல் என்பது ஒரு விஷயம்; வாழ்க்கைக்கான தீர்வுகள் என்பது வேறொரு விஷயம். திணிக்கப்பட்ட வறுமை, போர், மற்றும் பல விதமான துயரங்களின் தீவிரமான சூழல்களில் இருப்பவர்களுக்கு, நீங்கள் ஆறுதல் அளிக்கவேண்டும். எஞ்சியிருக்கும் நம்மில், நல்ல நிலைமையில் உள்ளவர்கள் ஒரு தீர்வைப்பற்றிப் பேசவேண்டும்.

வாழ்க்கை குறுகியது. ஆரோக்கியம், சமநிலை, மற்றும் ஆனந்தமாக இருப்பது சாதாரணமானது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் ஐந்து வயதாக இருந்தபோது, நீங்கள் துன்பமாக இருந்தீர்களா அல்லது ஆனந்தமாக இருந்தீர்களா? அந்த வயதில் உங்கள் ஆனந்தத்தை உங்களிடமிருந்து பறிப்பதற்கு யாராவது உங்களை ஏதோ ஒன்றைக்கொண்டு குத்தவேண்டியிருந்தது; இல்லையென்றால், நீங்கள் ஆனந்தத்தால் துள்ளிக்கொண்டிருப்பீர்கள். அப்போது உங்களைத் துன்பப்படுத்துவதற்கு யாராவது கடும் செயல் செய்யவேண்டியிருந்தது. இன்றைக்கு, உங்களை சந்தோஷப்படுத்துவதற்கு யாராவது கடும் முயற்சி செய்யவேண்டியுள்ளது. ஒட்டுமொத்த சூழலும் தலைகீழாகிவிட்டது. என்ன நிகழ்ந்துள்ளது என்றால், நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள். நீங்கள் வளர்ந்துவிட்டபோது, வாழ்க்கை மேலானதாக மாறி இருக்கவேண்டும்.

மற்ற எல்லா உயிர்களும் – உதாரணத்துக்கு ஒரு சிறிய தாவரம், ஒரு பெருமரமாக வளரும்போது – அது வளர்கையில் மேலான நிலையடைகிறது. மனிதர்கள் மட்டும்தான், குழந்தைப்பருவம் அதி அற்புதமாக இருந்ததாகவும், மற்றும் வளர்ந்தபிறகு துன்பமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். முதிர்பருவம் சிறந்த காலமாக இருக்கவேண்டும். உங்களது முதுமைப்பருவம் மிக அற்புதமான காலமாக இருக்கவேண்டும்.

உங்கள் மனதின் இயல்பு இதுதான்: நீங்கள் குறிப்பிட்ட எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு முயற்சித்தால், அவை மட்டும்தான் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.

ஒரு சமூகமாக, ஒரு கலாச்சாரமாக, ஒரு தலைமுறையாக, ‘நான்’ என்னும் இந்த உயிருக்கு இன்னமும் நாம் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. தூரத்து பால்வெளிகளைப்பற்றி எந்த ஒரு பள்ளிக்குழந்தையும் ஏதோ சில விஷயத்தை உங்களுக்குக் கூறமுடியும் ஏனென்றால் அவர்களது கைப்பேசியிலிருந்து அவர்களால் தகவல் பெற்றுக்கொள்ளமுடிகிறது. ஆனால் அவர்களைப்பற்றியே அவர்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் எப்படி இயங்குகிறீர்கள் என்பதன் அடிப்படை இயங்குநுட்பம் உங்களுக்குத் தெரியாது. உதாரணத்துக்கு, ஒரு எளிய பயிற்சியை நான் தருகிறேன்: அடுத்த பத்து நொடிகளுக்கு, நீங்கள் குரங்கு பற்றி யோசனை செய்யாதீர்கள். நீங்கள் குரங்கு பற்றி யோசிக்கக்கூடாது என்று முயற்சிக்கும்போது, உங்கள் மனதில் குரங்குகள் மட்டும்தான் வரும்.

உங்கள் மனதின் இயல்பு இதுதான்: நீங்கள் குறிப்பிட்ட எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு முயற்சித்தால், அவைகள் மட்டும்தான் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த மனதுடன், யாராவது உங்களுக்கு நல்லது எது மற்றும் கெட்டது எது என்று கூறுவதுடன், நீங்கள் கெட்ட விஷயங்கள் பற்றி சிந்திக்கக்கூடாது என்றும் கூறினால், பிறகு அப்படிப்பட்ட எண்ணங்களைத் தவிர்க்க முயற்சிப்பதே ஒரு . முழு நேர வேலையாகிறது. பெரும்பாலான மனிதர்களும் மனதின் அடிப்படையான இயங்கு நுட்பங்களைப்பற்றி புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களது மனதில், கழித்தலும், பகுத்தலும் இல்லை, கூட்டலும், பெருக்கலும் மட்டுமே உள்ளது. அதன்மீது வேகத்தடைகள் இல்லை; எல்லா மூன்று பெடல்களும் வேகமாக இயங்குகின்றன. ஆனால் மனதிலிருந்து உங்களையே நீங்கள் இடைவெளிப்படுத்திக்கொள்ள முடியும். உங்களுக்கும், மனரீதியான செயல்முறைகளுக்கும் இடையே நீங்கள் ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கிவிட்டால், உடலின் இரசாயனம் அதிசயிக்கத்தக்க அளவு மாறுகிறது.