சிறப்புக் கட்டுரை

நந்தியும், மகாசூலமும் ஒரே நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காக இங்கே உள்ளன.

சத்குரு சன்னிதி பெங்களூரூவில், ஜனவரி 15 2024 அன்று நிகழ்ந்த சமீபத்திய சிவாபரணத்தில், சத்குரு மகாசூலம் மற்றும் நந்தியை பிரதிஷ்டை செய்தார். அந்தத் திருவாபரணங்களின் ஆழமான முக்கியத்துவம், அவைகள் உள்ளடக்கியுள்ள தன்மைகள், மற்றும் நம் அனைவருக்கும் சாத்தியமான நன்மைகள் என்ன என்று அவர் பகிர்ந்துகொண்டதை அறிந்துகொள்ளுங்கள்.

ஆதியோகியின் புதிய அலங்காரங்கள்

சத்குரு: ஒரு வருடத்துக்கு முன்பு, யோகேஷ்வர லிங்க பிரதிஷ்டைக்காக உங்களில் பலர் இங்கே இருந்தனர். இப்போது ஆதியோகிக்கு நாம் சில ஆபரணங்களைக் கூடுதலாக அணிவிக்கிறோம். ஏனென்றால் நீங்கள் எவ்வளவுதான் அற்புதமாக இருந்தாலும்,  நீங்கள் வைத்திருக்கும் சில விஷயங்கள் இல்லையென்றால் – ஒரு வண்டி, ஒரு கைப்பேசி, அல்லது ஒரு கணிணியாக இருக்கலாம் – நீங்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவீர்கள். ஆகவே, இதனை ஆதியோகிக்கு பொருத்துவதென்று நாம் தீர்மானித்தோம்.

நந்தியின் இரண்டு கொம்புகளிலும், மகாசூலத்தின் நடுப்பகுதியிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களுடன், நாம் நந்தியையும், மகாசூலத்தையும் சக்தியூட்டியுள்ளோம்.

பிரதிஷ்டைக்கு முந்தைய நாற்பது நாட்களாக நிகழ்ந்துகொண்டிருந்த மிகத் தீவிரமான ஒரு செயல்முறையாக, அது மிக நன்றாக முடிவடைந்திருந்தது. நந்தியின் இரண்டு கொம்புகளிலும், மகாசூலத்தின் நடுப்பகுதியிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களுடன், நாம் நந்தியையும், மகாசூலத்தையும் சக்தியூட்டியுள்ளோம்.

நாம் இங்கே நந்தி மலைகளின் வட்டத்துக்குள் இருக்கிறோம். சோழ சகாப்தத்தின்போது, இந்த மலை அனந்தகிரி என்று அழைக்கப்பட்டது. நாட்டின் இந்தப் பகுதியில், பொதுவாக கர்நாடகத்தில் பசவா என்று அறியப்படுகின்ற நந்தியானது, ஆன்மீகக் கலாச்சாரத்தில் ஒரு முக்கியத்துவமான இடத்தை வகிக்கிறது. நந்தி மலைகளின் உச்சியில் யோக நந்தேஸ்வரரும், மலையடிவாரத்தில் போக நந்தேஸ்வரரும் உள்ளனர். இந்தப் பகுதியானது, நந்தியின் செயல்முறையில் காலம் மற்றும் சக்தியை முதலீடு செய்துள்ளது.

நந்தியின் மௌனப் பரவசம்

நந்தி என்ற வார்த்தைகூட, ஆனந்தம் என்ற வேர்ச் சொல்லிலிருந்து வருகிறது. நந்தி என்றால் ஆனந்தமான, மகிழ்ச்சி நிரம்பிய என்பது பொருள். உண்மையில் நந்தி ஒரு பூதகணமாக, எப்போதும் ஆதியோகியின் கூட்டாளியாக இருந்திருப்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம். ஆதியோகியுடனான அவரது உறவைப்பற்றி எண்ணற்ற கதைகள் உள்ளன. நந்திக்கு ஆதியோகியிடம் ஒரு விதமான நெருக்கத்தின் உரிமை உள்ளதாக புராணம் கூறுகிறது.

பல விஷயங்களை நந்தி அடையாளப்படுத்துகிறார்; ஆதியோகி அல்லது சிவனுடன் அவரது அணுக்கம் ஒரு அம்சமாக உள்ளது. எப்போதும் அவர் அருகே இருக்கிறார், ஒரு காவலாளியாக, மற்றும் அவரது வாகனமாகவும் காத்துகொண்டு இருக்கிறார். இந்த ஒரு காரணத்தினால்தான், குறிப்பாக தென்னிந்தியாவில், இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியமும், கலாச்சாரமும் உள்ளது. மக்கள் சிவன் கோவிலுக்குச் செல்லும்போது, சிவனிடம் அவர்கள் கூறவேண்டிய அனைத்தையும் நந்தியின் இடது காதுக்குள் பேசுகின்றனர். ஏனென்றால் நந்தி, ஒரு அணுகக்கூடிய வழியாகக் கருதப்படுகிறார்.

முக்கியமாக, தியானத்தன்மையுடன் இருப்பது என்றால், உங்களது உடல்ரீதியான மற்றும் மனரீதியான செயல்முறைகளைக் கடந்து நீங்கள் எழுகிறீர்கள்.

அறிவியல், குறியீடு, கலாச்சாரம், மனித உணர்ச்சி, அனைத்தும் ஒன்றாகப் பின்னிப்பிணைந்திருக்கும் ஒரு நாகரீகம் இது. ஒரு காளை ஏன் அணுகும் வழியாக இருக்கப்போகிறது? நீங்கள் அவரது அமர்ந்த நிலையைப் பார்த்தால், அவர் கூர்கவனத்துடன், ஆனால் காத்துக்கொண்டு இருக்கிறார். மக்கள் கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்வார்கள், ஆனால் அவர் ஒருபோதும் வேண்டுகோள் எதுவும் இல்லாமல் காத்துக்கொண்டுமட்டும் இருக்கிறார். ஆனால் உறங்கிக்கொண்டு இல்லாமல், சோம்பலாக இல்லாமல் – கூர்கவனத்துடனும், காத்துக்கொண்டும் இருக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், இங்கே கூர்கவனத்துடன் உங்களால் உட்காரமுடிந்தால், காத்துக்கொண்டு, குறிப்பாக எதற்காகவும் இல்லாமல், எதுவும் நிகழத் தேவையில்லாமல், எப்படிக் காத்திருப்பது என்பதுமட்டும் உங்களுக்குத் தெரிந்தால், அப்போது நீங்கள் தியானத்தன்மை அடைந்துவிட்டீர்கள்.

ஒரு உயிரானது ஒரே நேரம் தீவிரமாகவும், தளர் நிலையாகவும் இருந்தால், அது இயற்கையாகவே தியானத்தன்மையாக இருக்கிறது. முக்கியமாக, தியானத்தன்மையுடன் இருப்பது என்றால், உங்களது உடல்ரீதியான மற்றும் மனரீதியான செயல்முறைகளைக் கடந்து நீங்கள் எழுகிறீர்கள். உடல் மற்றும் மனதின் வடிவில் நாம் சேகரித்தது என்னவோ, அதன் விளைவுதான் உடல்ரீதியான மற்றும் மனரீதியான செயல்முறைகள். இந்த இரண்டு செயல்முறைகளும் ஞாபகத்தின் அடிப்படையிலானவை. ஞாபகம் இல்லையென்றால், இந்த உடல் இயங்கமுடியாது. ஞாபகம் இல்லையென்றால், இந்த மனம் இயங்கமுடியாது. இந்த உடல், இந்த வடிவத்தை எடுத்திருப்பது ஏனென்றால் அதற்கு பரிணாமவியல் ஞாபகம், மரபியல் ஞாபகம், மற்றும் வேறு வடிவிலான விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வில்லா ஞாபகமும் உள்ளது. நாம் சுமந்திருக்கும்  ஒரு விதமான ஞாபகத்தின் காரணமாகத்தான், ஒவ்வொரு உடலும் அதற்கே உரிய தனிப்பட்ட இயல்பைக் கொண்டுள்ளது. இந்த ஞாபத்திற்கு, கர்மவினை என்கிற மற்றொரு வார்த்தை உள்ளது.

நீங்கள் கவனம் அல்லது தீவிரமடைந்து, அதே நேரத்தில் இளைப்பாறலாக இருந்தால், நீங்கள் தியானத்தன்மை அடைந்து, அடிப்படையில் கர்மவினையாகிய சேகரிக்கப்பட்ட குவியலைக் கடந்து மேலெழுகிறீர்கள். அதன்பிறகு, கர்மப்பிணைப்பு என்பது இன்னமும் இருந்துகொண்டிருந்தாலும், உங்கள் மீது ஆட்சி செலுத்துவதில்லை.

ஒரு புத்தம்புது சாத்தியமாக மலர்தல்

இதனை நீங்கள் பல வழிகளிலும் உணர்கிறீர்கள். மது மற்றும் போதைப்பொருள்கள் மீது அதிகமான ஈர்ப்பு இருப்பது ஏனென்றால், ஏதோ ஒரு வழியில், ஒரு குறுகிய காலத்துக்கு அவைகளை அருந்துபவர்களை கர்மவினை பாதிப்பதாக தோன்றுவதில்லை. தங்களது சொந்த எண்ணம் மற்றும் உணர்ச்சியைக் கையாளமுடியாமல், தங்களுடைய ஞாபகங்களுடனேயே போராடிக்கொண்டிருப்பவர்கள், மது அருந்தியதும், சட்டென்று, அவர்கள் குறைந்தபட்சம் ஒரு சில மணி நேரங்களுக்காவது எதையும் உணர்வதில்லை.

நீங்கள் விழிப்பாகவும் ஓய்வாகவும் இருந்தால், நோக்கம் ஏதும் இல்லாமல் காத்திருந்தால், நீங்கள் இயல்பாகவே ஆனந்தமான உயிராக மாறுவீர்கள்.

அடிப்படையான பேராவல் ஒன்றுதான்; வழிமுறைதான் அழிவுகரமானது. ஒரு போதைமருந்து அடிமையாக இருக்கலாம், ஒரு மது அடிமையாக, ஒரு ஆன்மீக தேடல் உடையவராக, அல்லது யாரோ ஒருவராக இருக்கலாம், அனைவரும் ஒரே விஷயத்தைத்தான் தேடுகின்றனர்: எப்படியாவது உடல் மற்றும் மனதின் செயல்முறைகளுக்கு மேல் உயரவேண்டும். அதனை நீங்கள் சாதனை, வெற்றி, இலட்சியத்தின் நிறைவு, மதுபோதை, அல்லது தியானத்தன்மை என்று அழைக்கலாம். அடிப்படையில், வாழ்வின் ஒட்டுமொத்த தாக்கத்துக்கு மேல் எழுச்சியடைந்து, ஒரு புத்தம்புதிய சாத்தியமாக மலர்வதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வழியைக்காட்டிலும், மேம்படுத்தும்விதமாக எந்த வழிமுறை இதைச் செய்யும் என்பது மட்டும்தான் கேள்வி.

தியானத்தன்மையாக இருப்பதென்றால் நந்தியைப் போல இருப்பது. நீங்கள் விழிப்பாகவும் ஓய்வாகவும் இருந்தால், நோக்கம் ஏதும் இல்லாமல் காத்திருந்தால், நீங்கள் இயல்பாகவே ஆனந்தமான உயிராக மாறுவீர்கள்.

மகாசூலத்தின் மூன்று முனைக் கோட்பாடு

நம் வாழ்வின் எல்லையை உருவாக்கும் காலத்தின் மூன்று அடிப்படையான அம்சங்களாகிய, கடந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை மகாசூலம் குறிக்கிறது. அனுபவத்தின் அடிப்படையில், உங்களுக்கு விழிப்பு நிலை, உறக்கம், மற்றும் கனவு நிலைகள் உள்ளன. மேலும், ஈடா அதாவது மனித உடலமைப்பின் இடது அடிப்படை சக்தி ஓட்டம் அல்லது பெண்தன்மையைக் குறிக்கும் நாடி, பிங்களா அதாவது மனித உடலமைப்பின் வலது அடிப்படை சக்தி ஓட்டப்பாதை அல்லது ஆண்தன்மையைக் குறிக்கும் நாடி, மற்றும் சுஷும்னா அதாவது மைய சக்தி ஓட்டப்பாதை ஆகியவை உள்ளன.

மையத்தில், சத்வம், அதாவது அளப்பரியதன்மை மற்றும் சமநிலையைக் குறிக்கிறது.

மகாசூலத்தின் மற்றொரு அம்சமாக, தாமஸம், ராஜஸம், மற்றும் சத்வம் உள்ளன. தாமஸத்தில் இருப்பவர்கள், எதிர்மறையான எல்லாவற்றையும் நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். ராஜஸத்தில் இருப்பவர்கள் நேர்மறையான எல்லாவற்றை நோக்கியும் ஈர்க்கப்படுவதுடன், தாங்கள் நேர்மையாளர்களாக இருப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், தாங்கள் குற்றம் இழைப்பவர்கள் என்று அறிந்திருப்பவர்களைக் காட்டிலும், தாங்கள் சரியான விஷயத்தைச் செய்வதாக எண்ணுபவர்கள் சில நேரங்களில் யுத்தங்களை ஏற்படுத்துவதும், நாகரீகங்களைத் துடைதெறிவதுமாக மாபெரும் கொடூரங்களை இழைக்கின்றனர்.

ஆகவே, மகாசூலத்தின் இரு முனைகளும் தமஸ் மற்றும் ரஜஸ் என்பதுடன், மையத்தில், சத்வம், அதாவது அளப்பரியதன்மை மற்றும் சமநிலையைக் குறிக்கிறது. இன்றைக்கு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வடிவில் நம்மிடத்தில் இருக்கும் வல்லமையுடன், சத்வமாகிய சமநிலைதான் மிக முக்கியமான தன்மையாக உள்ளதே தவிர, தாமஸமும் அல்ல, ராஜஸமும் அல்ல.

மகாசூலத்தின் ஒரு முனைப்பட்ட கூர்கவனம்

நாம் திரிசூலத்தை, அதன் மைய அம்சத்துக்காக மட்டும் பிரதிஷ்டை செய்கிறோம். அதனால்தான் அது மகாசூலம் என்று அழைக்கப்படுகிறது. நந்தி எல்லாவற்றையும் வழங்குகிறது, ஆனால் மகாசூலம் ஒரு முனைப்பட்ட அணுகுமுறை உடையது. பெரும்பாலான மக்களுக்கு எப்போதும் பிழைப்பு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை என்ற காரணத்தால், மகாசூலம் ஒரே விஷயத்தின் மீது கவனம் குவிக்கிறது: அதுதான் ஆன்மீக பரிணாமம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆன்மீக நெருப்பை நாம் ஏற்படுத்திவிட்டால், அற்புதமான விஷயங்களைச் செய்யும் மக்களின் சதவிகிதத்தை நாம் அதிகரிப்போம்.

மகாசூலம் ஒரே விஷயத்தின் மீது கவனம் குவிக்கிறது: அதுதான் ஆன்மீக பரிணாமம்.

மனிதர்கள் உணவைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லாதபோது, அவர்களுக்கான மிகச்சிறந்த சாத்தியங்கள் வெளிப்படுகின்றன. ஆனால் இன்னமும், அவர்கள் நந்தியின் காதுகளில் பேசும்போது, ஒரு புதிய கார், புதிய வீடு, திருமணம், அல்லது விவாகரத்து போன்ற எல்லா விதமான விஷயங்களையும் கேட்பார்கள். நீங்கள் ஆசைப்படுவது, இன்றைக்கு மிக முக்கியமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால், உங்களது எத்தனை ஆசைகள் நிறைவேறாமல் போயுள்ளன? ஒருவேளை அவைகள் எல்லாமே பூர்த்தியாகி இருந்தால், நீங்கள் என்ன மாதிரி ஒரு குளறுபடியாக இருந்திருப்பீர்கள்? இதன் அடிப்படையில் பார்த்தால், உங்களுடைய தற்போதைய ஆசைகள் மிகச் சரியானவை என்று எது உங்களை நினைக்கச் செய்கிறது?

மேலோட்டமாகப் பார்த்தால், வாழ்க்கை வெவ்வேறு மக்களுக்கும் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுவது போலத் தோற்றமளிக்கக்கூடும். ஆனால் நீங்கள் சற்றுத் தொலைவில் நிற்கும்போது, அடிப்படையில் வாழ்க்கை அனைவருக்கும் ஒரே விதத்தில் வெளிப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். நீங்கள் மேற்பரப்பிலேயே நின்றால், பல்வேறு காரணிகளைப் பொறுத்து, அது கரடுமுரடான அல்லது சுமுகமான பயணமாக இருக்கக்கூடும். ஆனால் நீங்கள் சற்று ஆழமாக மூழ்கினால், ஒவ்வொருவருக்கும், அது அற்புதமாக உள்ளது.

ஒரு ஒற்றைத் தீர்மானம்: நிறைவடைதல்

அது என்னவென்றால், நீங்கள் மேற்பரப்பிலேயே நின்றுவிடக்கூடாது. நீங்கள் இந்த ஒரு விஷயத்தைத் தீர்மானித்துவிட்டால், மற்ற எல்லா விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு பிரச்சனைதான் உள்ளது: அது நீங்கள்தான். நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள், மற்றும் உங்கள் மனைவி அல்லது கணவர்தான் உண்மையான பிரச்சனை என்பது, அதைத் தந்திரமான முறையில் பார்ப்பதாக இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால், பிரபஞ்சத்திலேயே நீங்கள்தான் ஒரே பிரச்சனையாக இருக்கிறீர்கள். இந்த ஒரு பிரச்சனையை நீங்கள் தீர்த்துவிட்டால், வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஒரே ஒரு ஆசைதான் இருக்கவேண்டும்: உங்கள் உயிர்த்தன்மை நிறைவை அடையவேண்டும்.

நந்தி தீர்மானிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் தீர்க்கப்பட்டால் மட்டும்தான் உங்களால் இங்கே வெறுமனே அமரமுடியும். நீங்கள் தீர்க்கப்படாமல், உங்களது கண்களை மூடினால், நீங்கள் காணாமல் போய்விடுவீர்களோ என்ற பயம் உங்களுக்கு ஏற்படும். எல்லா நேரமும் ஏதோ ஒன்று அரித்துக்கொண்டே உள்ளது. இப்படித்தான் தொந்தரவுக்குள்ளான மனிதகுலம் இருந்துகொண்டிருக்கிறது. நீங்களாகவே இருக்கமுடியாத காரணத்தால் எத்தனை விஷயங்களை நீங்கள் செய்துள்ளீர்கள் – எத்தனை நிலைகளிலான பிணைப்பு மற்றும் குழப்பம்? ஒருவேளை உங்களால் இங்கே வெறுமனே உட்கார்ந்து, பரவசத்தில் வெடிக்கமுடியுமென்றால், உங்களுக்குள்ளும், உலகம் அனைத்திலும் ஏராளமான பிரச்சனைகளை தவிர்க்கக்கூடும்.

நந்தியின் காதுக்குள் நீங்கள் பேசும்போது, நிறைவான வாழ்வை மட்டும் கேளுங்கள். ஒரே ஒரு ஆசைதான் இருக்கவேண்டும்: உங்கள் உயிர்த்தன்மை நிறைவை அடையவேண்டும்.

வறுமையில் உங்களால் நிறைவடைய முடியுமென்றால், அது அப்படியே இருக்கட்டும். செழிப்பில் உங்களால் நிறைவடைய முடியுமென்றால், அது அப்படியே இருக்கட்டும். தனியாக இருப்பதில் நீங்கள் நிறைவு காணமுடியுமென்றால், அது அப்படியே இருக்கட்டும். திருமணம் செய்துகொள்வதால், உங்களால் நிறைவடைய முடியுமென்றால், அது அப்படியே இருக்கட்டும். நிறைவடைதல் எப்படி நிகழவேண்டும் என்று தீர்மானிக்காதீர்கள். நீங்கள் எதையும் செய்யாமல் இருந்தாலும் அல்லது எல்லாவற்றையும் செய்தாலும், நீங்கள் நிறைவடைகிறீர்கள். அனைத்தும் பலனளித்தாலும் அல்லது எதுவுமே பலனளிக்கவில்லை என்றாலும், நீங்கள் நிறைவடைகிறீர்கள்.