பிரபல தொழிலதிபரும், முதலீட்டாளருமான நவால் ரவிகாந்த், வாழ்வின் மிக ஆழமான கேள்விகளில் கூர்மையான ஆர்வத்துடன், ஒரு விழிப்புணர்வான உலகை உருவாக்குவது குறித்து சத்குருவுடன் உரையாடுகிறார். இந்த கலந்துரையாடல் தனிப்பட்ட முறையில் முழுமையடைவது குறித்தது மட்டுமல்ல; அதிக விழிப்புணர்வான ஒரு அணுகுமுறையானது, மேம்பட்ட வாழ்வின் உணர்தலுக்கு எப்படி வழி நடத்தமுடியும் என்பதற்கான ஆழமான ஒரு பார்வையாக உள்ளது.
நவால் ரவிகாந்த்: சத்குரு, வணக்கம். இன்றைய தேவை விழிப்புணர்வான உலகம். ஆகவே, உலகத்தை அதிக விழிப்புணர்வடையச் செய்வது குறித்து நாம் பேசவிருக்கிறோம். அதற்கான அர்த்தம், உலகைக் காப்பதா அல்லது தனிமனிதரைக் காப்பதா?
சத்குரு: உலகம் தொலைந்துவிட்டது என்பதும், நீங்களோ அல்லது நானோதான் அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் நைந்துபோன சிந்தனைகள். உலகம் தொலையவில்லை; அது இங்குமங்கும் தடம் மாறி நகர்கிறது, ஆனாலும் தனது வழியைக் கண்டுகொள்கிறது. ஒரு குறிப்பிட்ட தலைமுறையால் எவ்வளவு நகர்வைத் தாக்குப்பிடிக்க முடியும்? நீங்கள் அதிக தூரம் சென்றால், அது குளறுபடியாகிவிடும். நீங்கள் குறைவாக விலகிச் சென்றால், உங்கள் வாழ்வின் அனுபவம் மேலானதாக இருக்கும். நாம் செய்வது எதுவாக இருப்பினும் – அது வியாபாரமாக, ஆன்மீகமாக, விளையாட்டாக, கலையாக, இசையாக, அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம் – அதை நாம் விழிப்புடன் செய்தால், அது மேலான தரத்தில் இருக்கும். நாம் அதை விழிப்புணர்வில்லாமலோ அல்லது தற்செயலாகவோ செய்தால், நாம் தேவையற்ற பதற்றத்தில் இருப்பதுடன், அதன் காரணமாக அடையும் வெற்றியைக்கூட நாம் அனுபவிக்கமாட்டோம்.
வாழ்க்கையில் நாம் செய்யும் விஷயங்கள் எவ்வளவு சிறிதாக அல்லது பெரிதாக இருந்தாலும், செயலின் நோக்கம், வெற்றியடைவதுதான். ஆனால், துரதிருஷ்டவசமாக, வெற்றிகரமானவர்கள் எப்போதும் இறுக்கமும், துயரமுமான முகங்களைச் சுமந்திருப்பதால், இது அடுத்த தலைமுறைக்கு தவறான ஒரு செய்தியைக் கடத்திக்கொண்டுள்ளது. உதாரணமாக, வெற்றிகரமான பெற்றோர்கள்தான், ஆனால் அவர்கள் எப்போதும் இறுக்கமாகவும், பதற்றமாகவும் இருக்கும் ஒரு குடும்பத்தில், குழந்தைகள் அந்த விதமான வெற்றியை விரும்பாமல் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அதற்கு மாறாக அவர்களது குழந்தைகள் போதைப்பொருள் புகைப்பழக்கத்தை நாடுவார்கள். இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்துவருகிறது, ஏனென்றால் பெற்றோரின் இந்த வெற்றிகளால் என்ன பயன் இருக்கிறது என்று குழந்தைகள் வியப்படைகின்றனர்.
நம்முடைய வெற்றியானது விழிப்புணர்வான ஒரு செயல்முறையாக இருப்பது மிக முக்கியமானது. நாம் சிந்திக்கும் விதம், உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம், நாம் எப்படி இருக்கிறோம், எப்படிப் பேசுகிறோம், மற்றும் நாம் என்ன செய்கிறோம் என்பது அனைத்தும் ஒரு விழிப்புணர்வான செயல்முறையாக இருக்கவேண்டும். அது விழிப்புணர்வாக இருந்துவிட்டால், உங்கள் வாழ்வின் அனுபவத்தை நீங்கள் விழிப்புணர்வாக உருவாக்குகிறீர்கள் என்றால், உங்களையே நீங்கள் ஆனந்தம் நிறைந்தவராக உருவாக்கிக்கொள்வீர்களா அல்லது துன்பமானவராக உருவாக்குவீர்களா? உங்கள் விருப்பம் என்னவாக இருக்கும்? ஆனந்தம் நிறைந்திருப்பதுதானே?
நவால் ரவிகாந்த்: நிச்சயமாக.
சத்குரு: அனைவருக்கும் இதுதான் ஒரே விருப்பமாக உள்ளது. அவர்களுக்குள் அதிகளவு இனிமையை அனைவரும் விரும்புகின்றனர். அவ்வளவு எளிய விஷயத்தை பிறகு ஏன் அவர்களால் நிகழ்த்திக்கொள்ள இயலாமல் போகிறது? பிரச்சனை என்னவென்றால், மக்கள் தங்களுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் எப்படி நிர்வகிப்பது என்று கற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இது மிகவும் அடிப்படையானது. உங்களது கைகளே உங்களுடைய முகத்தில் அறைந்தால், அது ஒரு ஆபத்தான நோயாக கருதப்படும். அதேபோல், உங்களது எண்ணங்கள் அல்லது உணர்ச்சிகளே உள்ளிருந்து உங்களை அறைந்தால், அது எந்தவிதத்திலும் மேலானதல்ல.
அதை நீங்கள் அழுத்தம், பதற்றம், அல்லது ஏதோ விதமான மனநோய் என்று எப்படி அழைத்தாலும், முக்கியமாக உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது என்பதுதான் அதன் அர்த்தம். மகத்தான அதிசயமாக இருக்கும் மனம் என்பது, பலருக்கும் துன்பத்தை உற்பத்தி செய்யும் இயந்திரமாக மாறியுள்ளது. உங்கள் மனதிலிருந்து நீங்கள் அதிசயத்தை உருவாக்குகிறீர்களா அல்லது துன்பத்தை உருவாக்குகிறீர்களா என்பது, உங்களை நீங்கள் விழிப்புணர்வுடன் நடத்திக்கொள்கிறீர்களா அல்லது விழிப்புணர்வில்லாமல் நடத்துகிறீர்களா என்பதைச் சார்ந்திருக்கிறது.
நவால் ரவிகாந்த்: எப்படி ஒருவர் தனது மனதை விழிப்புணர்வுடன் கட்டுப்படுத்துவது?
சத்குரு: மனதைக் கட்டுப்படுத்துவதைப் பற்றி நான் பேசவில்லை. மனதை நீங்கள் ஏன் கட்டுப்படுத்த வேண்டும். மனதை நீங்கள் விடுவிக்க வேண்டும். தற்போது, துன்பத்தின் பயம், மக்களை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தச் செய்கிறது. ஆனால் துன்பம் எங்கே உற்பத்தியாகிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?
நவால் ரவிகாந்த்: மனதில்தான் துன்பம் உற்பத்தியாகிறது.
சத்குரு: துன்பம் உங்கள் மனதில் உற்பத்தியாகிறது என்றால், உங்கள் மனம் உங்களுக்கு ஏன் துன்பத்தை உருவாக்குகிறது. உங்களுக்கு ஒரு மூளை இருக்கிறது ஆனால் அதை இயக்குவதற்கான கீ போர்ட் உங்களிடம் இல்லை என்பது தெளிவாகிறது. ஏதோ ஒன்று தற்செயலாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. உள்நிலையின் அனுபவத்தை உருவாக்குவதற்காக, நாம் ஒட்டுமொத்த வெளிச்சூழ்நிலையை நிர்வகிக்க முயற்சி செய்துகொண்டுள்ளோம். இதனை இந்த முறையில் விளக்குகிறேன்: அதாவது, உங்களது உடல் இனிமையாக இருந்தால், இதனை நாம் ஆரோக்கியம் என்று அழைக்கிறோம். பெரும்பாலான மக்களும், அவர்கள் உடல் நலமில்லாதபோது, மருத்துவரிடம் சென்று, சில சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் தினசரி வாழ்க்கையில், அவர்கள் எப்படி அமர்வது, எப்படி சுவாசிப்பது, எப்படி சாப்பிடுவது மற்றும் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதில்லை.
மற்றவை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்தையே சார்ந்திருக்கின்றது. உங்கள் உடல் மிகவும் இனிமையானால், இதை நாம் இன்பம் என்று அழைக்கிறோம். உங்கள் மனம் இனிமையாக இருந்தால், அதை நாம் அமைதி என்று அழைக்கிறோம். மனம் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் ஆனந்தம் என்று அழைக்கிறோம். உங்கள் உணர்ச்சிகள் இனிமையானால், இதை நாம் அன்பு என்று அழைக்கிறோம். உணர்ச்சிகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் கருணை என்று அழைக்கிறோம். உங்களது உயிர்சக்திகளே இனிமையாக இருந்தால், இதை நாம் பரவசம் என்று அழைக்கிறோம். உயிர்சக்திகள் மிகவும் இனிமையாக இருந்தால், அதை நாம் பேரானந்தம் என்று அழைக்கிறோம்.
உங்களுடைய சுற்றுப்புறங்கள் இனிமை அடைந்தால், அதை நாம் வெற்றி என்று அழைக்கிறோம். உங்களுடைய சுற்றுப்புறங்களை இனிமையாக்குவதற்கு மட்டும்தான், உங்களைச் சுற்றியிருக்கும் மக்கள் மற்றும் சக்திகளின் ஒத்துழைப்பு உங்களுக்குத் தேவை. உங்களது உடல், மனம், உணர்ச்சிகள், மற்றும் சக்திகளை இனிமையாக்குவது, நூறு சதவிகிதம் உங்கள் பொறுப்பாகவே உள்ளது. அவ்வாறு இருப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியாது என்றால், பிறகு நீங்கள் உலகத்தில் எது செய்தாலும் பலனில்லை, எப்போதும் நீங்கள் நம்பிக்கை இழந்தவராகத்தான் இருப்பீர்கள்.
மனிதர்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் தேடுதலில், உலகம் அழிக்கப்பட்டு வருகிறது. பூமியை அழிப்பது ஏதோ தீயவர்கள் அல்ல. மகிழ்ச்சியின் தேடுதலில் நாம் அனைவரும்தான் அதைச்செய்கிறோம். நான் உங்களிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன்: நீங்கள் உணர்ந்தது ஆனந்தமாக அல்லது துன்பமாக இருந்தாலும், அது உங்களுக்குள் நிகழ்ந்ததா அல்லது உங்களுக்கு வெளியில் நிகழ்ந்ததா?
நவால் ரவிகாந்த்: உள்ளேதான்.
சத்குரு: உள்ளேதானே. ஆகவே, இதுதான் விஷயம்.
ஒருநாள், உருளைக்கிழங்கு விவசாயி ஒருவர் ஆப்பிள்களைச் சாப்பிடுவதற்கு விரும்பினார். அவர் ஒரு உருளைக்கிழங்கு விவசாயியாக இருந்ததால், பழக்கத்தின் காரணமாக, அவர் ஆப்பிள்களைத் தேடி மண்ணைத் தோண்டத் தொடங்கிவிட்டார், ஆனால் அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஆவேசமடைந்தவராக, மேலும் மேலும் தோண்டினார். அங்கு வளர்ந்து நின்றிருந்த ஆப்பிள் மரமே அவர் மீது சாய்ந்து கீழே விழும்வரைக்கும் அவர் தோண்டினார்.
தற்போதைய மனிதகுலத்தின் கதைதான் இது. மகிழ்ச்சித் தேடலில், நாம் உலகத்தைத் தோண்டிக்கொண்டே செல்கிறோம். நீங்கள் விரும்புவது ஆனந்தமாக அல்லது துன்பமாக இருந்தாலும், அதை உங்களால் உங்களுக்கு உள்ளே மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். அது ஒரு கண்டுபிடிப்புகூட அல்ல: ஆனந்தமோ அல்லது துன்பமோ உங்களுக்கு உள்ளேதான் நீங்கள் உற்பத்தி செய்கிறீர்கள். நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், கட்டாயமாக நீங்கள் ஆனந்தத்தைத்தான் உற்பத்தி செய்வீர்கள்; ஆனால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் தற்செயலாக நடத்திச் செல்லும் காரணத்தால், அது மற்ற எல்லாவிதமான விஷயங்களுக்கும் வழிநடத்திச் செல்கிறது.
நவால் ரவிகாந்த்: நீங்கள் பேசும் இந்த உள்நிலை ஆனந்தம் மற்றும் அமைதியை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? அதுதான் யோக அறிவியலா?
சத்குரு: நீங்கள் ஒரு எஞ்சிய நூடுல்ஸ் போலத் தோன்றுவதுதான் யோகா என்று துரதிருஷ்டவசமாக, இன்றைக்கு மக்கள் எண்ணுகின்றனர். யோகா என்றால், உடலை முறுக்குவது மற்றும் வளைப்பதைப் பற்றியது அல்ல. யோகா என்ற சொல்லுக்கு ஒருமை என்பது பொருள். ஒருமை என்பது எதைக் குறிக்கிறது? இன்றைக்கு நவீன விஞ்ஞானம் உங்களிடம் கூறுவது என்னவென்றால், ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இலட்சக்கணக்கான வெவ்வேறு வழிகளில் உருப்பெற்றிருக்கும் ஒரே சக்தியாக இருக்கிறது. உலகத்தின் எல்லா மதங்களும், “கடவுள் எங்கும் இருக்கிறார்”, என்றுதான் உங்களிடம் கூற முயன்று வந்திருக்கின்றன. இவைகள் இரண்டு வித்தியாசமான நிதர்சனங்கள் அல்ல. முதலாவது கூற்று, அதை காரண அறிவுரீதியாக அணுகுகிறது, மற்றொன்று அதை உணர்ச்சிரீதியாக அணுகுகிறது. இவைகள் ஒரே நிதர்சனத்தை இருவேறு வழிகளில் பார்ப்பதாக உள்ளது. முக்கியமாக, இங்கு இருப்பதும், அங்கு இருப்பதும் வெவ்வேறானவை அல்ல என்பதுதான் பொருள். இது உங்களுக்கு வாழும் அனுபவமானால், அப்போது நீங்கள் யோகாவில் இருப்பதாக நாம் கூறுகிறோம்.
உதாரணத்துக்கு, நீங்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றை, மரம் உள்ளிழுக்கிறது; மரம் வெளிவிடும் காற்றை, நீங்கள் உள்ளிழுக்கிறீர்கள். இதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்தால், உங்களின் ஒரு பகுதி நுரையீரல் மரத்தில் தொங்கிக்கொண்டிக்கும் நிதர்சனத்தை உணர்வீர்கள். இதை நாம் அனைவரும் உணர்ந்தால், என்ன தேவையோ அதை நாம் செய்திருப்போம். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. ஒவ்வொருவரும் தாமே ஒரு உலகமாக இருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர்.
ஒரு அறைக்குள் மக்கள் எவ்வளவு எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரிய உலகத்தில் வாழ்கின்றனர். ஒரு விஷயத்தை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணரவேண்டும், அதாவது இங்கே நீங்கள் உட்கார்ந்தால், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் உங்களின் ஒரு பகுதியாகவே பார்ப்பது – மனதளவில் அல்ல, காரண அறிவுரீதியாக அல்ல, அல்லது உணர்ச்சியளவிலும் அல்ல, அனுபவப்பூர்வமாக உணர்வது….
இது எப்படியென்றால், உதாரணமாக, இன்றைக்கு மதிய உணவுக்கு நீங்கள் சாப்பிட்ட எந்த உணவும் உங்களைப்போல் தோன்றவில்லை, வாசம் வீசவில்லை அல்லது உங்களைப்போல் உணரவில்லை, ஆனால் ஒரு சில மணி நேரங்களில் அந்த உணவு நீங்களாக உருமாறிவிட்டது.
நவால் ரவிகாந்த்: ஆமாம்.
சத்குரு: நீங்கள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டிருந்தால், அது இப்போது ஒரு மனிதராக ஆகியுள்ளது. நீங்கள் அல்லாத ஒன்று நீங்களாக மாறியுள்ளது. எல்லாநேரமும் இதுதான் நிதர்சனம். ஆனால் தற்போது, இந்த உடலும், மனமும் நீங்கள்தான் என்று தனிப்பட்ட முறையில் நினைக்கிறீர்கள். படைப்பின் பெருந்தன்மையால் தனித்தன்மையின் அனுபவம், ஒரு சிறப்பு உரிமையாக நம்மீது பொழியப்பட்டுள்ளது. ஆனால் மனிதர்கள் அதை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளனர். உங்களுடைய தனித்தன்மையே முழுமையானது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். அநேகமாக, பெரும்பாலான மக்கள் நீங்கள் அவர்களை எரியூட்டும் தருணம் வரும்வரை, ஒருமையைப் புரிந்துகொள்வதில்லை. தற்போது, நீங்களும், நீங்கள் பாதம் பதித்து நடக்கும் இந்த மண்ணும், வேறுவேறு என்று நீங்கள் எண்ணிக்கொள்ள முடியும். ஆனால் ஒருநாள் நாம் புதைக்கப்படும்போது, நாம் மிக எளிதாக மண்ணின் ஒரு பகுதியாகிவிடுவோம். இப்போதுகூட நாம் அதன் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறோம், ஆனால் அது நமது வாழ்க்கை அனுபவத்தில் இல்லை. இதுதான் மனிதரின் பிரச்சனை.
விழிப்புணர்வு என்றால், உங்களது படைப்பின் இயல்பு குறித்து நீங்கள் விழிப்புணர்வு கொள்வது. உங்கள் படைப்பின் இயல்பு குறித்து நீங்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டால், எப்படி இருப்பது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பூமி மீது மனித இருப்பு என்று குறிக்கப்படும் ஒரே உயிரினங்களாக நாம் மட்டுமே இருக்கிறோம். நாம் ஒரு புலியை புலி இருப்பு என்று கூறுவதில்லை, ஒரு ஒட்டகத்தை ஒட்டக இருப்பு என்றோ அல்லது வேறு எந்த விலங்கையோ ஒரு இருப்பு என்று அழைக்கப்படுவதில்லை. அவைகள் வெறுமனே உயிரினங்கள் ஏனென்றால், இயற்கை அவைகளுக்குள் அமைத்திருக்கும் இரண்டு கோடுகளுக்கு இடையில் அவைகள் வாழ்ந்து, மடிகின்றன. மனித இருப்புகளாக, நாம் விரும்பும் விதத்தில் இருப்பதற்கு நமக்கு திறன் உள்ளது.
ஆனால் எவ்வளவு மனிதர்கள் “எப்படி இருப்பது” என்பதை அறிந்துள்ளனர்?
எப்படி இருப்பது என்பதை நீங்கள் அறிந்தால் மட்டுமே, நீங்கள் செய்வது, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன் ஒரு விழிப்புணர்வான வெளிப்பாடாக மாறுகிறது. “எப்படி இருப்பது” என்பதை நாம் அறியாத காரணத்தினால், செயல்பாடு நிர்ப்பந்தமானதாக உள்ளது. இந்த நிர்ப்பந்தத்தன்மையில் - உங்கள் இருத்தல் போதிய முக்கியத்துவம் அடையாத காரணத்தால் – உலகத்தில் நீங்கள் ஒரு கால்தடத்தை விட்டுச்செல்வதற்கு விரும்புகிறீர்கள். ஆனால், கால்தடத்தை விட்டுச்செல்ல விரும்புபவர்கள், அவர்களது வாழ்க்கையில் ஒருபோதும் பறக்கமாட்டார்கள்.
நவால் ரவிகாந்த்: நீங்கள் விழிப்புணர்வுத்தன்மை பற்றிப் பேசினீர்கள், இருத்தல் பற்றிப் பேசினீர்கள். ஒரு தனிமனிதர் செய்வதற்கு என்ன இருக்கிறது? இங்கே ஒவ்வொருவரும் மன அழுத்தத்தில், அவசரத்தில் உள்ளனர்; அவர்கள் செய்யவேண்டியதும், சாதிக்கவேண்டியதும் நிறைய உள்ளது…. எந்தச் சிறிய மாற்றத்தையாவது அவர்களால் செய்யமுடியுமா?
சத்குரு: அவர்களுக்கு செய்வதற்கு எதுவும் இல்லையென்றால், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களா? இல்லை.
நவால் ரவிகாந்த்: நீங்கள் என்ன செய்தாலும் நன்றாக இருக்கிறது என்ற அங்கீகாரம் மட்டும்தானா அது?
சத்குரு: இல்லை. நான் கூறுவது என்னவென்றால், எப்படி இருப்பது என்று உங்களுக்குத் தெரிந்தால், என்ன தேவையோ அதை நீங்கள் செய்வீர்கள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்வீர்கள். அவரவர் திறமைக்குத் தகுந்தாற்போல, வெவ்வேறு மக்களும் வெவ்வேறு நிலைகளிலான செயல்பாட்டைச் செய்வார்கள், மற்றும் அது நல்லதும்கூட. ஆனால் தற்போது, நீங்கள் யாரோ ஒருவராக இருப்பதற்கு, எல்லா விதமான விஷயங்களையும் செய்வது மட்டுமே வழியாக உள்ளது. எப்படி இருப்பது என்று உங்களுக்குத் தெரியாத காரணத்தால், நீங்கள் சிறியதாக ஒரு விஷயம் செய்தாலும், நீங்கள் மன அழுத்தம் அடைகிறீர்கள். நீங்கள் பெரிதாக ஏதோ செய்தாலும், நீங்கள் மன அழுத்தம் கொள்கிறீர்கள். எந்த வழியிலும், நீங்கள் அழுத்தத்துக்கு ஆளாகிறீர்கள்.
மக்கள் எந்த விஷயமாக இருந்தாலும் அழுத்தம் அடைகிறார்கள். அவர்கள் ஏழையாக இருந்தால், அவர்களது வறுமை குறித்து அழுத்தம். அவர்களை பணக்காரராக்கினால், வருமானவரிகளைக் குறித்து அவர்கள் அழுத்தமாக இருக்கின்றனர். அவர்கள் கல்வி கற்கவில்லை என்றால், அதைக் குறித்து அழுத்தமாக உணர்கின்றனர். அவர்களை பள்ளியில் சேர்த்தால், அவர்கள் அழுத்தமாக உணர்கின்றனர். அவர்களுக்கு மணமாகவில்லை என்றால், அதைக் குறித்து அவர்கள் அழுத்தமாக உணர்கின்றனர். அவர்களுக்கு திருமணம் செய்தால், அதற்கும் அவர்கள் அழுத்தமாக உணர்கின்றனர். இது இப்படியே முடிவில்லாமல் செல்கிறது. பிரச்சனை என்னவென்றால், மக்கள் அவர்களது புலன்களை எப்படி வைத்திருப்பது என்பதைக் கற்றுக்கொள்ளவில்லை.