இன்னும், இன்னும், இன்னும் என்னும் நவீன மந்திரம், ஒரு நிறைவான வாழ்க்கைக்கான உள்நிலை ஏக்கத்துடன் அடிக்கடி முரண்படுகிறது. சத்குரு இந்த இருக்கத்தை ஆராய்கிறார்: பொருள்களை சேகரிப்பதற்கும் ஒரு நிறைவைத் தேடும் ஆழ்ந்த ஆசைக்கும் இடையேயான இழு பரி நிலை. சத்குரு, பணத்தை ஒரு முடிவான இலக்காகத் தேடி அலைதல், உள்நிலையில் தீராத வறுமையைப் புகுத்திவிடும் ஆபத்து நிறைந்தது என்கிறார்.
கேள்வியாளர்: எனக்கு எவ்வளவு இருந்தால் போதும் என்று தெரிய வேண்டும். என்னிடம் என் முழு வாழ்க்கைக்குமான போதுமான அளவு பணம் உள்ளது. நான் கூடுதல் பணத்திற்காக உழைத்து, என்னுடைய நேரம், மகிழ்ச்சி, என் பொழுதுபோக்குகள் மற்றும் ஆரோக்கியத்தைப் பலியிட வேண்டுமா? நான் தொடர்ந்து பணம் சம்பாதிக்கவேண்டுமா அல்லது இது போதுமா?
சத்குரு: இப்போதெல்லாம் இது ஒரு பொதுவான கருத்தாக இருந்தாலும், வணிகத்தின் இலக்கு பணம் இல்லை. பணம் ஒரு பொருள் அல்ல; அது ஒரு கரன்ஸி. பணம் சேர்ப்பதை எப்போதும் நீங்கள் ஒரு இலக்காக கொள்ளக்கூடாது. பலவற்றை நடைமுறைப்படுத்த உங்களுக்குப் பணம் தேவை. பணம் இல்லாமல் உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் வணிகம் செய்தாலும், ஒரு யோக மையத்தை நிர்வகித்தாலும் அதை பணமின்றி நடத்த முடியாது.
“இவர்கள் இவ்வளவு கட்டணம் கேட்கிறார்கள்" என்று சொல்லும் ஒரு முட்டாள் கூட்டம் இருக்கிறது. இல்லை என்றால், உங்களை ஒரு மரத்தின் கீழ் உட்கார வைத்து, நாய்க்கு வழங்கும் உணவை அளித்து இதே பாடங்களைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அது உங்களுக்கு வேலை செய்யுமா? நீங்கள் ஒரு நல்ல இடத்தில் அமரவும், உண்ணவும் விரும்புகிறீர்கள் - இவை அனைத்திற்கு பணம் செலவாகிறது. நாம் செய்யும் ஒவ்வொன்றையும் பணம் இலகுவாக்குகிறது. அதுவே ஒரு இலக்கு அல்ல.
நன்றாக வாழ, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் தேவைப்படுகிறது. உங்களுக்கு எவ்வகை ஆடம்பரம் தேவை என்று நிர்ணயித்து நீங்கள் நினைப்பதை செய்யும் சூழலை அமையுங்கள். வறுமை ஒரு சுமையாக வறுத்தும். நீங்கள் உங்களின் அடுத்த வேளை உணவு எங்கிருந்து வருகிறது என்ற கவலையில் இருந்தால், நிச்சயம், நீங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை செய்ய முடியாது. உங்கள் கவனம் பிழைப்பை நோக்கியே இருக்கும்.
நீங்கள் அதிக பணம் சம்பாதித்தால், அதுவும் ஒரு சுமையாகும். உங்கள் எண்ணங்களை நிறைவேற்ற உங்களுக்கு பணம் தேவை. நீங்கள் எதையாவது உருவாக்கத் தேவையான அளவு பணம் உங்களுக்கு இருக்கட்டும் என்பது என்னுடைய ஆசி. வீட்டில் தரையிலிருந்து கூரைவரை பணத்தை அடுக்கி வைத்திருப்பவர்களைப்போல ஆகிவிடாதீர்கள்.
பணத்தையே இலக்காக நினைப்பது ஒரு குற்றம், ஏனென்றால் சட்டப்பூர்வமாகவோ அல்லது சட்டத்திற்குப் புறம்பாகவோ, நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் உலகத்திலிருந்து திருடுகிறீர்கள். உங்கள் வாழ்கையை இந்த விதமாக நினைத்து அதை அசிங்கமாக்காதீர்கள். நீங்கள் எதை உருவாக்க நினைக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.
அதை உருவாக்க, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சுகமான, இலகுவான சூழல் தேவை. உங்களுக்கு ஒரு வீடு, சௌகரியம், உணவு - அந்த பொருட்கள் உங்களுக்கு என்னவாக இருந்தாலும், அதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் கணக்கிடுங்கள்.
அந்த அளவு பணம் கிடைத்தவுடன், அதை பற்றி நினைக்கவும் வேண்டாம், ஏனென்றால் அடிப்படையில், உங்கள் வாழ்வில் இரண்டு அம்சங்களே உள்ளன. நீங்கள் இங்கு அமர்ந்தால், உங்கள் வாழ்க்கை அனுபவம் எவ்வளவு ஆழமானது? நீங்கள் செயல் செய்யும்போது, உங்கள் செயல் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
வாழ்க்கை என்பது இவ்வளவுதான்: அனுபவங்களின் ஆழம் மற்றும் செயலின் தாக்கம். ஆழமான அனுபவத்திற்கு உங்களுக்குப் பணம் தேவையில்லை. செயல் தாக்கத்தை ஏற்படுத்த நமக்குப் பணம் தேவை.
இந்த உலகத்தில் பல செயல்களைச் செய்யப் பணம் உங்களுக்கு அதிகாரமளித்தால், நீங்கள் விரும்பிய அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பது என் ஆசி. ஆனால் நீங்கள் பணத்தை ஒரு இலக்காக நினைத்து, ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைச் சேர்க்க உங்களையே நோயாளியாக்கி, உங்கள் வாழ்கையை அதில் செலவிட்டால், அது உங்கள் வாழ்கையை வீணாக்குவதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக அது ஒரு குற்றம்.
இப்படித்தான் ஒரு குற்றவாளியும் நினைப்பான்: “ எப்படியோ, எனக்கு இவ்வளவு பணம் கிடக்க வேண்டும்?” எப்படி? நீங்கள் விதிமுறைகளின்படி செல்ல நினைக்கிறீர்கள், ஏனென்றால் அதை மீறுவதால் வரும் விளைவுகளை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஒரு குற்றவாளி விதிகளுக்கு அப்பால் போகும் துணிச்சல் கொண்டவன், அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் எப்படிப் பார்த்தாலும், பணம் ஒரு இலக்கு. உங்கள் வாழ்க்கையை இப்படி ஆக்கிவிடாதீர்கள்.
நீங்கள் எதனை உருவாக்க விரும்புகிறீர்கள்? அதை உருவாக்க உங்கள் உயிரையும் சக்திகளையும் விழிப்புணர்வையும் அதில் செலுத்தினால் என்ன தேவையோ அது உங்களை நோக்கி வரும் அல்லது உங்களுக்குத் தேவையானதை உருவாக்க அதற்குத் தேவையானதை சேகரித்து உங்களுக்கு நீங்களே அதிகாரம் அளித்துக்கொள்ள வேண்டும். ஒரு வீடு கட்ட உங்களுக்குச் செங்கற்கள் தேவை, அதே போல உலகத்தில் செயல் செய்ய, உங்களுக்கு பணம் தேவை.
பணத்தை உங்கள் வாழ்க்கையின் இலக்காக ஆக்காதீர்கள்; அது ஒரு கரன்ஸி. பணம் பாய்ந்தோட வேண்டும், ஒரு இடத்தில் அடுக்கிவைக்கப்படக்கூடாது. உங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேநேரத்தில், முக்கியமானது என்னவென்றால் பணம் நாம் செய்ய நினைப்பதை செய்ய நமக்கு அதிகாரமளிக்கும் ஒரு கரன்ஸி, அதுவே ஒரு இலக்கு அல்ல.