மனமும் படைப்பாற்றலும்

படைப்பாற்றலின் திறவுகோல் குறித்தும், ஏன் அது வெறும் யோசனைகள் அல்ல என்பது பற்றியும் சத்குரு விளக்குகிறார்.

Forget what you’ve been told about creativity. Sadhguru suஉங்களிடம் படைப்பாற்றல் பற்றி என்ன சொல்லப்பட்டிருந்தாலும் அதை மறந்துவிடுங்கள். புதுமையின் உண்மையான ஆதாரம் ஏதோ புதிய ஒன்றை உருவாக்குவது அல்ல, மாறாக மிகவும் அடிப்படையான ஒன்றைப் பற்றியது. இந்தக் கட்டுரை, உங்கள் பார்வையில் மாற்றம் ஏற்பட்டால், அது எப்படி உங்களின் படைப்பாற்றல் செயல்முறையை மாற்றியமைக்கும் என விளக்குகிறது.

கேள்வியாளர்: படைப்பாற்றல் சார்ந்த தொழில்களில், தொடர்ந்து புதியவற்றைக் கொண்டுவந்துகொண்டே இருக்கவேண்டும், அது என்னை இந்த படைப்பாற்றல் உண்மையில் எங்கிருந்து வருகிறது என்று வியக்க வைக்கிறது. அது நாம் தானா, அல்லது அதற்கு மேலும் ஏதாவது உள்ளதா? மேலும் நாம் அதைத் திறக்க எண்ணும்போது, அதை எப்படி கண்டுபிடிப்பது?

படைப்பாற்றலும் கவனமும்

சத்குரு: நான் சொல்லப்போவது உங்களைத் திடுக்கிடச் செய்யலாம்: உண்மையில் படைப்பாற்றல் என்று ஒன்றும் இல்லை. மனிதர்கள் இதுவரை செய்த எல்லாமே வெறும் நகல்கள் தான், மேலும் ஏற்கனவே இருப்பதன் திரிபு தான். நீங்கள் எந்த விதமான இயந்திரத்தை உருவாக்கினாலும், சிறந்த உயரிய இயக்கவியல் ஏற்கனவே நம் உடம்பினுள்ளேயே உள்ளது. மிக நுட்பமான மின் மற்றும் இரசாயன அமைப்புகளும் நம் உடம்பில் உள்ளன.

நீங்கள் கலையின் வாயிலாகப் படைப்பாற்றலை பார்த்தால், உதாரணத்திற்கு, மனிதர்கள் செய்யும் எல்லாமே இயற்கையின் பிரதிபிம்பம் தான். இந்த செயல்முறையை நகல் என்று சொல்வது ஒரு எதிர்மறை உணர்வை ஏற்படுத்தினால், அதை மாறாக நீங்கள் படைப்பாற்றல் என்று சொல்லிக் கொள்ள முடியும்.

மனிதர்கள் இதுவரை செய்த எல்லாமே வெறும் நகல்கள் தான், மேலும் ஏற்கனவே இருப்பதன் திரிபு தான்.

எந்த துறையிலும் படைப்பாளியாக வேண்டும் என்றால், நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். ஆழ்ந்த கவனம் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உள்ள சாத்தியக்கூறு பற்றிய பெரும் பார்வையைக் கொண்டுவரும். நீங்கள் உங்கள் செயலில் உள்ள ஒவ்வொரு நுணுக்கத்தையும் அதன் சூழலையும் கவனிக்கும் திறனை வளர்த்துக்கொண்டால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் மகத்தான படைப்பாற்றலுடன் திகழ முடியும்.

படைப்பாற்றல் என்பது ஏதோ அற்புதமான ஒன்றை கண்டுபிடிப்பது என்று அர்த்தம் இல்லை. பார்ப்பதற்கு அற்பமாக இருக்கும் தரையை கூட்டுவதிலும் கூட, நீங்கள் படைப்பாற்றலுடன் இருக்கலாம். ஒவ்வொரு எளிய செயலிலும், நீங்கள் உங்களுக்குள்ளும் உங்களை சுற்றியும் என்ன நடக்கிறது என்று கவனித்தால், படைப்பாற்றலுடன் இருக்கலாம்.

நீங்கள் உங்களுக்குள் எல்லா நிலைகளிலும் என்ன நடக்கிறது என்பதை கவனித்தால், நீங்கள் பெரும் படைப்பாற்றலுடன் இருப்பீர்கள். அதேபோல நீங்கள் தொடர்ந்து உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கவனித்தால், எப்போதும் செய்வதற்கு இன்னொரு புதுமையான வழி இருக்கிறது என்று உணர்வீர்கள்.

மனமும் தெளிவும்

படைப்பாற்றல் நம்மில் எழ நீங்கள் உங்கள் மனத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தெளிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வாழ்க்கைச் சுமையை உங்களுடன் எப்போதும் தூக்கிச்சென்றால், நீங்கள் எதையும் அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்க்க முடியாது.

யோகத்தில் நாம் மனத்தைக் கண்ணாடி என்று வர்ணிக்கிறோம். ஒரு கண்ணாடி தூய்மையாகவும், வெறுமையாகவும் இருந்தால்தான் அது பயனுள்ளதாக இருக்கும். அது ஏற்ற இறக்கங்களுடனோ அல்லது எதையாவது சேகரித்திருந்தாலோ அது உங்களுக்கு உள்ளதை உள்ளபடிக் காட்டாது. கண்ணாடியின் தன்மை என்னவென்றால் நீங்கள் அதன் முன் நின்றால், அது உங்களை உங்களின் முழு மகிமையுடன் பிரதிபலிக்கிறது.

நீங்கள் விலகிச்சென்றால், கண்ணாடி உங்களின் எந்த மிச்சத்தையும் தக்கவைத்துக்கொள்வதில்லை. அடுத்த நபர் வந்து கண்ணாடியின் முன் நிற்கும்போது , அது அவரை அவரின் முழு மகிமையுடன் பிரதிபலிக்கிறது. மில்லியன் மக்கள் தங்களைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டாலும், அவர்களின் குணங்களில் ஒரு சிறு துளியைக்கூட அதில் விட்டுச் செல்ல முடியாது.

உங்கள் மனத்தை இப்படி வைத்துக்கொள்ள முடிந்தால் - வாழ்க்கையின் அனுபவங்களும், வாழ்க்கையில் நீங்கள் சந்தித்தவைகளும் உங்கள் மனத்தில் எந்த மிச்சத்தையும் விட்டுச்செல்லாமல் இருந்தால் - அப்போது நீங்கள், இருப்பதை இருப்பது போலவே பார்ப்பீர்கள். அப்போது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் புதுமையைச் செய்யவும், உருவாக்கவும் இடம் இருக்கும்.

என்னுடைய வாழ்கையில், நான் ஒரு குருவாக இருக்கவேண்டும், ஆனால் மக்கள் என்னிடம் பல விஷயங்களுக்காகவும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு கட்டிடத்தை எப்படிக் கட்டுவது என்பது குறித்து வழிகாட்டுவதாக இருக்கலாம், பூக்களை அடுக்குவதற்கு, ஆடைகளை வடிவமைப்பதற்காகவும் இருக்கலாம், ஒரு தோட்டம் அமைக்க அல்லது வேறு ஏதோ ஒன்றிற்காக இருக்கலாம். இவை குறித்த பெரும் அறிவு எனக்கு இருப்பதால் அல்ல, நான் எதையாவது பார்க்கும்போது, அது உள்ளபடியே, அதைத் தெளிவாகப் பார்க்கிறேன்.

ஈடுபாடு மற்றும் செயல்பாடு

நீங்கள் அனைத்தையும் உள்ளபடி பார்த்தால், உங்களுக்கு வேண்டியபடி அது எளிமையாகவும் தெளிவாகவும் ஆகிவிடும். இது நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு ஈடுபாட்டை வளர்ப்பதால் வருகிறது. எதையும் முக்கியம் அல்லது முக்கியமில்லை என்று முத்திரை குத்தாமலும் உங்களுக்குப் பிடித்தது மற்றும் பிடிக்காதது, அல்லது உங்களுடையது மற்றும் உங்களுடையதல்லாதது என்று சொல்லாமல் இருந்தால், நீங்கள் அனைத்தையும் அவை உள்ளபடியே பார்ப்பீர்கள்.

நீங்கள் இப்படி அனைத்தையும் பார்க்கும்போது, எதையாவது கட்டுவதோ உருவாக்குவதோ எளிமையானதாகிறது ஏனென்றால் கைவசம் என்ன இருக்கிறது என்பதும் அவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்பதும் தான் கேள்வி.

நீங்கள் அனைத்தையும் உள்ளபடி பார்த்தால், உங்களுக்கு வேண்டியபடி அது எளிமையாகவும் தெளிவாகவும் ஆகிவிடும்.

சிலர் அவர்கள் ஊரில் ஒரு பாலம் கட்டுவதற்காகவும் என்னை அணுகினார்கள். அவர்கள் என்னைக் கேட்ட நொடியில் என்னைச் சுற்றி இருப்பவர்கள் "இது என்ன சத்குரு? அவர்கள் ஒரு பாலம் கட்ட கேட்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினர். நான் சொன்னேன் "ஆமாம், நாம் ஒரு பாலம் கட்டப்போகிறோம்". நான் உடனே அதை ஏற்றுக்கொண்டேன்.

நான் ஒரு தேர்ச்சி பெற்ற பொறியாளர் அல்ல; பாலங்களை வடிவமைக்கும் பல கட்டிடக்கலை வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த மக்கள் என்னிடம் வரக் காரணம் நான் கட்டியிருக்கும் எளிமையான கட்டிடங்களில் புதுமையைக் கண்டதால் தான்.

நான் ஆசிரமத்திலும் பிற இடங்களிலும் உருவாக்கியுள்ளவற்றிற்காக அதிக நேரம் செலவிடவிட்டதில்லை. நான் அதைப் பற்றிக் கற்றுக்கொள்ள எந்த நேரத்தையும் செலவிடவில்லை, என் மனத்தில் அந்த எண்ணத்தை உருவாக்க அதிக நேரம் செலவிடவில்லை. நீங்கள் ஒரு க்ஷணத்திற்கு அதை வெறுமனே பார்த்தால், அது அங்கு இருக்கிறது.

முழுமையாக வாழ்தல்

இது ஏதோ ஆன்மீகத்தால் கிடைத்த பரிசையோ திறமையையோ கொண்டிருப்பது பற்றியது அல்ல. மக்கள் தங்கள் மனங்களை விருப்பு வெறுப்புகளைக் கொண்டு கலங்க வைத்திருக்கிறார்கள், தங்களுடையதாகவும் தங்களுடையதல்லாததாகவும் எண்ணுகிறார்கள், எதையோ முக்கியம் அல்லது முக்கியமல்ல என்று கருதுகிறார்கள். இது நடந்த உடன், நீங்கள் எது முக்கியமில்லை அல்லது உங்களுடையது இல்லை என்று கருதுகிறீர்களோ அவற்றுடன் ஈடுபட மாட்டீர்கள். ஈடுபாடு இல்லாமல் எதுவும் சிறப்பாக இயங்குவதில்லை.

நீங்கள் எந்த ஒரு க்ஷணத்திலும் நீங்கள் சந்திக்கும் எல்லாவற்றுடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருந்தால், நீங்கள் அனைத்தையும் தெளிவாக பார்ப்பீர்கள், அது எப்படிப் பார்க்கப் படவேண்டுமோ அப்படியே.

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் மனம் ஒரு குறிப்பிட்ட அளவு தெளிவு மற்றும் அனைத்துடனும் ஈடுபாட்டுடன் இல்லாவிட்டால், நீங்கள் சரியாக செயல்படாதது மட்டுமல்ல – வாழ்க்கையும் உங்களைக் கடந்து சென்றுவிடும். நீங்கள் அதை இந்த உலகத்தில், உண்மையில் அறிந்துகொள்ளாமலும் உணராமலும் வாழ்வீர்கள்.