2024 நவம்பர் 11 முதல் 22 வரை அஸர்பைஜானில் உள்ள பாகுவில் நடைபெற்ற COP29 மாநாட்டில், முக்கிய குழு விவாதங்களில் தீவிரமாகப் பங்கேற்றதன் மூலமும் தாக்கம் ஏற்படுத்தும் விளக்கக்காட்சிகளை முன்வைத்ததன் மூலமும் மண் காப்போம் இயக்கமும் சத்குருவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களின் ஈடுபாடும் பங்கேற்பும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பயனுள்ள நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாக மண்வளம் இருப்பதை வலியுறுத்தியது.
“மண் காப்போம் இயக்கத்தின் மூன்று வருட இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு, உலகளாவிய பருவநிலை மாநாடு இறுதியாக ‘ஒரு பசுமை உலகம்’ என்பதில் கவனம் செலுத்துகிறது, இது இயற்கை சார்ந்த தீர்வுகளின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது" என சத்குரு கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “COP29 மாநாடு என்பது செயல்பாடுகளுக்குச் செல்வதற்கான ஒரு வாய்ப்பாகும், அதன் பொருள் உறுதியான தீர்வுகளை செயல்படுத்துதல் மற்றும் மண்ணுக்கு புத்துயிர் அளித்தல். இது பருவநிலை மாற்றத்திற்கான இயற்கையான நடவடிக்கையாகும். மேலும், நீர் வளத்தை மீட்டெடுத்தல் என்பது, உலகின் ஏழை நாடுகளுக்கும் மற்றும் பலருக்கும் சிறந்த வாழ்வாதாரமாக மாறும்" என்றார்.
மேலும் "ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் முன்னாள் தலைவர் எரிக் சோல்ஹெய்ம், கஜகஸ்தானின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்கான அமைச்சர் யெர்லான் நிசான்பயேவ், குளோபல் என்விரானில் பருவநிலை மாற்றத்திற்கான மூத்த நிபுணர் ஜேசன் ஸ்பென்ஸ்லி, மற்றும் ஷாவ்லின் கோவிலின் மடாதிபதி ஷி யோங்சின் போன்ற பலதரப்பட்ட செல்வாக்கு மிக்க நபர்களுடன் சத்குரு கலந்துரையாடினார்.
பல ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கிய சத்குரு, மண்வளத்தை மீட்டெடுத்தல் என்ற முக்கியமான மையக்கருவில் தனது பரப்புரையைச் செய்தார். சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வாக மண்வளத்தின்மீது கவனம் செலுத்துவது ஊக்கமளிப்பதாகவும் மற்றும் சரியான திசையில் ஒரு பெரிய படி என்றும் அவர் எடுத்துரைத்தார்.
மாநாட்டிற்கு அப்பாற்பட்டு Reutersக்கு அளித்த பேட்டியில், மண்ணுக்கும் பருவநிலைக்கும் இடையிலான உறவை சத்குரு விளக்கினார். குறிப்பாக, அனைத்து உயிர் வடிவங்களுக்கும் அடித்தளமாக உள்ள நுண்ணுயிரிகள் உட்பட, இதில் பல உயிரினங்களின் அழிவுக்கான ஆபத்து இருப்பதை அவர் எடுத்துரைத்தார்.
உயிரினங்களின் வாழ்க்கை ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் குறிப்பிட்டு, பூமியின் ஆரோக்கியம் என்பது மனித வாழ்வாதாரத்தைப் பற்றியது மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் உயிர்பிழைத்திருக்கும் தன்மையைப் பொறுத்தது என அவர் சுட்டிக்காட்டினார். நுண்ணுயிர்கள், பூச்சிகள் மற்றும் பிற சிறிய உயிரினங்கள் செழிக்கவில்லை என்றால், மனித உயிரும் செழிப்படையாது என்று அவர் கூறினார்.
மனித உயிர்களையும் உலகளாவிய பொருளாதாரங்களையும் அச்சுறுத்தும் மோசமான பருவநிலை தாக்கங்களுடன் மண்வளம் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதை உணர்ந்து, மண் காப்போம் இயக்கம் மண் அழிவை சரிசெய்வதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்துகிறது. பல்வேறு நிகழ்வுகள் மூலம், இயக்கம் உறுதியான முன்னேற்றத்திற்காக குரல்கொடுத்ததோடு, புவி வெப்பமடைதலின் விளைவுகளைச் சமாளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பையும் மேம்படுத்த முன்னின்றது.
பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதில் மண்வளத்தை மீட்டெடுப்பதன் பங்கை எடுத்துரைக்கும் விதமாக, மாநாட்டில் நடந்த கலந்துரையாடல்களில் மண் காப்போம் பெவிலியன் பிரதானமாக இருந்தது. இந்நிகழ்வில் நிபுணர்கள், இளைஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தீர்வுகளைக் காண்பதில் ஒன்றாக இணைந்து ஒத்துழைத்தனர்.
இயற்கை சார்ந்த விவசாயம், விவசாயிகளின் இழப்பீடுகளைப் பெறுதல், கார்பன் வேளாண்மை மற்றும் மண் புத்துயிர் பெறுவதற்கான பல்வேறு அரசாங்க அணுகுமுறைகளுக்கு நிதியளிப்பது ஆகியவை குறித்து நிபுணர் குழு ஆராய்ந்தது. மல்டிமீடியாவின் தகவல் தொடர்பு சக்தி மற்றும் மறுசுழற்சி செய்யும் இயற்கை விவசாயத்தின் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துவதாக Fireside chats அமைந்தன. "Planet Soil" போன்ற ஆவணப்படத் திரையிடல்கள் மண்ணின் முக்கியத்துவத்தை காட்சிகளாக வலியுறுத்தின.
பருவநிலை மாற்றத்திற்கான தீர்வாக இயற்கை சார்ந்த விவசாயம், பயிர் ஊட்டச்சத்தில் பருவநிலையின் தாக்கம் மற்றும் இயற்கை சார்ந்த சுழல் பொருளாதார மாதிரிகள் பற்றிய குழு விவாதங்களிலும் மண் காப்போம் தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்றனர். இளம் குரல்கள் தங்கள் அர்ப்பணிப்பையும் புதுமையான மண்வளத் தீர்வுகளையும் பகிர்ந்தது, முக்கிய அம்சமாக இருந்தது.
#SaveSoilSecureFuture என்ற ஹேஷ்டேக் பருவநிலை சவாலுக்கு ஒரு முக்கிய தீர்வாக மண்வளம் இருப்பது குறித்த உலகளாவிய விழிப்புணர்வை வெற்றிகரமாக ஏற்படுத்தியது.
சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில், பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐநா மாநாட்டில் (UNCCD COP16) பங்கேற்ற சத்குரு தனது செய்தியை அங்கே பதிவுசெய்தார். பாலைவனமாக்கலை மாற்றியமைக்க வேண்டிய அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார். வளங்களை அதிகரிக்கவும், சீரழிந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் அவர் அழைப்பு விடுத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு விவசாயிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
உலகளாவிய வேளாண்மையில் ஆசியா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களின் குறிப்பிடத்தக்க பங்கைக் கருத்தில் கொண்டு, அந்த தேசங்கள் அனைத்திலும் சமமான கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்தினார். 2024 டிசம்பர் 2-13 வரை நடைபெற்ற COP16 மாநாடு, மாநாட்டின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக அமைந்தது.