ஆசைகளும், நிர்ப்பந்தங்களும் ஒரு சிக்கலான வலையைப் பின்னும், தினசரி வாழ்க்கையின் சதிராட்டத்தில், நவீன வாழ்க்கையின் பரவலான சிக்கவைக்கும் பொறிகளிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளை சத்குரு வழங்குகிறார். ஞானமடைதல், ஒரு தொலைதூர இலக்கு அல்ல, ஆனால் அது நமது மூலத்துக்குத் திரும்புவது என்று பரிந்துரைக்கிறார். இந்தக் கண்ணோட்டமானது, நமது உயிரியல் மற்றும் சமூகவியல் கட்டுப்பாடுகளைக் கடந்து உண்மையான வல்லமை மற்றும் விழிப்புணர்வை நோக்கி நகர்த்தி ஆன்மீகரீதியாக உயர்வதற்கு, பெண்களுக்கான ஒரு பாதையை திறந்துவைக்கிறது.
கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. பல்வேறு நிலைகளிலான தன்னையுணர்தல் மற்றும் ஞானமடைதல் குறித்துப் பேசினீர்கள். என்னைப் போன்ற ஒரு சாதாரணமான மனிதன் எவ்வளவு தூரம் செல்லமுடியும், இந்தப் பிறவிக்காலத்தில் எங்களால் எவ்வளவு வளர்ச்சியடைய முடியும் என்பதைப் போன்ற தனிப்பட்ட எல்லை எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறதா? நாங்கள் ஏன் இயற்கையாகவே ஞானமடைந்தவர்களாகப் பிறக்காமல் இருக்கிறோம்?
சத்குரு: ஞானமடைதல் என்பது ஒரு சாதனை அல்ல. அது வீடு திரும்புதல். உங்கள் ஆசைகளை வெளியில் வீசிக்கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் விலகி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதை நீங்கள் நிறுத்தினால், உயிர் வீட்டுக்குத் திரும்பும். ஞானமடைதல் என்றால் எங்கோ ஒரு இடத்துக்கு செல்வதைப் பற்றியது அல்ல. அது, எங்கோ ஒரு இடத்தைச் சென்று அடைவதற்கான அவசியம் இல்லாமை குறித்தது.
எங்கும் செல்வதற்கோ அல்லது ஏதோ ஒன்றாக ஆவதற்கோ உங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. இங்கேயே அமர்ந்திருங்கள். அனைத்தும் மிக நன்றாக உள்ளது. அதேநேரத்தில், நீங்கள் ஈடுபாட்டுடனும், செயலூக்கத்துடனும் இருக்கிறீர்கள். நீங்கள் சாவகாசமாக இருக்கிறீர்கள் என்பதால் இது ஒரு தத்துவம் அல்ல. நீங்கள் உயிரோட்டம் நிரம்பி இருக்கிறீர்கள். நீங்கள் தொலைதூரத்துக்கோ அல்லது வேறொரு கிரகத்துக்கோ செல்லவேண்டும் என்றால், அங்கு ஏதோ ஒன்று செய்வதற்கு இருந்தால், நீங்கள் அங்கே செல்வீர்கள். ஆனால் எந்த இடத்துக்கும் செல்வதற்கான தனிப்பட்ட அவசியம் உங்களுக்கு இல்லை.
நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது நீங்கள் ஈடுபட்டிருக்கும் செயல்பாடு எதுவாக இருந்தாலும், நிறைவில்லாத தன்மையில் இருக்கும் கவலை எப்போதும் உங்களுடன் ஒட்டியிருக்கிறது. உங்களுக்கு ஒரு புதிய வேலை கிடைத்தால், ஆரம்பத்தில் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். திருமணம் செய்யும்போது, நீங்கள் ஆனந்தத்தில் நாட்டியமாடுகிறீர்கள். எல்லாவற்றையும் எதிர்மறையாக்குவதற்கு நான் முயற்சிக்கவில்லை, ஆனால் பொதுவாக, நீங்கள் ஏதோ ஒன்று புதிதாகக் கிடைக்கப்பெற்றால், “இதுதான் நான் விரும்புவது”, என்று நினைக்கிறீர்கள், ஆனால் சிறிது காலத்துக்குப் பிறகு, நிறைவடைதலைக் குறித்த கவலைகள் இன்னமும் நீடித்திருப்பதைப் பார்க்கிறீர்கள்.
அடுத்த விஷயம் உங்களை நிறைவு செய்யும் என்று எப்போதும் மக்கள் உங்களுக்குக் கூறுகின்றனர், ஆனால் அது முடிவில்லாமல் செல்கிறது. நீங்கள் ஒரு ஆசையை வெளிப்படுத்தினால், அது ஒரு வலைப்பொறி போன்று, எல்லாப் பக்கங்களிலிருந்தும் விஷயங்களை இணைத்துக்கொள்கிறது. அதை நீங்கள் சந்தைப்படுத்தல் என்று அழைக்கலாம், உங்கள் பெற்றோர், உங்கள் நண்பர்கள், உங்கள் மனைவி, உங்கள் கணவன், உங்கள் குழந்தைகள்; இந்தவிதமான, எல்லாத் தரப்பு மக்களும் உங்களை மேலும் மேலும் அதிகமான விஷயங்களுக்குள் இழுக்கின்றனர். நீங்கள் அதிகதிகமாகச் செய்வதையும், அதிகதிகமாக வாங்குவதையும், அதிகதிகமாக கடன் பெறுவதையும் சந்தைப் பொருளாதாரம் சார்ந்திருக்கிறது.
இது இதைப் போன்றது: இரண்டு பள்ளிச் சிறுவர்கள் கேம்ப்புக்குச் சென்றனர். அவர்களிடம் தேவையான எல்லாப் பொருட்களும் இல்லாமையால், இரவில் கொசுக்கடியினால் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் தங்களை நன்றாக மூடிக்கொண்டு, உறங்க முயற்சித்தனர், ஆனால் கொசுக்கள் எல்லா இடங்களிலும் அவர்களைக் கடித்துக்கொண்டே இருந்தன. கொசுக்கள் எப்படி கடிக்கும் என்று உங்களுக்கே தெரியும்: நீங்கள் பாதங்களை மூடிக்கொண்டால், அவை உங்கள் கன்னத்தைக் கடிக்கும்; உங்கள் கன்னங்களை நீங்கள் மூடினால், அவைகள் உங்கள் பாதங்களைக் கடிக்கும்.
அவர்கள் சிறிது நேரம் போராடினார்கள். சற்றுப் பொறுத்த அவர்கள், மேலும் தாங்க இயலாமல், கண்களைத் திறந்து, சுற்றுமுற்றும் பார்த்தனர். அங்கே சில மின்மினிப்பூச்சிகளைக் கண்டனர். ஒருவன் கூறினான், “நாம் முயற்சியைக் கைவிடுவது நல்லது. இப்போது அவைகள் நம்மைத் தேடிக்கொண்டு டார்ச்லைட் சகிதம் வந்துள்ளன.”
இது ஒரு கடன் மதிப்பீடு போன்றது. நீங்கள் ஒரு விஷயம் செய்துவிட்டால், அவைகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்களைக் குறிவைக்கும். இந்த விஷயங்களில் எவ்வளவு நேரத்தை, சக்தியை மற்றும் ஆர்வத்தை நீங்கள் செலவு செய்யவேண்டும் என்று அறிவுபூர்வமாக முடிவெடுப்பது முக்கியம். எவ்வளவு என்று நான் உங்களுக்குக் கூறவில்லை, ஆனால் உங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு நீங்கள் ஒரு முடிவெடுக்க வேண்டும்.
நீங்கள் தெளிவு பெறுவதற்கு, சிறிது காலம் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருங்கள். நீங்கள் இங்கு வந்தால், உங்களுக்கு நாம் ஒரு சிறப்பு சாதனாவை வழங்குவோம்; ஒரு வாரத்துக்கு மௌனத்தில் அமர்ந்திருங்கள். நீங்கள் மிகுந்த நிச்சலனமும், தெளிவான சிந்தனையும் கொண்டு, கட்டாயங்களில் இருந்து விடுபடும்போது, வாழ்க்கையில் உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்று தீர்மானியுங்கள். அதன்படி செயல்படுங்கள். நீங்கள் என் வழியில் செல்லவேண்டியதில்லை – உங்கள் வழியில் செல்லுங்கள். தற்போது, வர்த்தக முகமைகள்(agencies) உள்ளிட்ட மற்றவர்கள் உங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றனர், அது நியாயமல்ல.
இந்த முகமைகள், நீங்கள் என்ன செய்யவேண்டும், நீங்கள் எவ்வளவு கடன் பெறவேண்டும் என்று பலவற்றை முடிவு செய்கிறது. உங்களுக்கு உண்மையில் எவ்வளவு தேவைப்படுகிறது என்று நீங்களாகவே முடிவெடுங்கள். மற்றவர்களுடன் போட்டியிடாதீர்கள், ஏனென்றால் வாழ்க்கை அந்த விதத்தில் செயல்படுவதில்லை. வாழ்க்கை என்பது விழிப்புணர்வைப் பற்றியது, கவலைகள் அல்ல, மற்றும் போட்டி, அல்லது உங்களையே அல்லது மற்றவர்களை வற்புறுத்துவதும் அல்ல. வாழ்க்கை விழிப்புணர்வுடன் இருத்தல் குறித்தது. நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் மட்டுமே, நீங்கள் உண்மையிலேயே ஒரு மனிதராக இருப்பதாகக் கருதப்பட முடியும். இல்லையென்றால், நீங்கள் கட்டாயங்களால் இயக்கப்படும் ஒரு மனித உயிரினம், அவ்வளவே.
ஞானமடைதல் மற்றும் உங்களது தனிப்பட்ட வளர்ச்சி குறித்த கேள்வியைப் பொறுத்தவரை… உயிர் செயல்முறையில், ஆண்களைவிட பெண்கள் அவர்களது உடல்தன்மையுடன் அதிகமாக நங்கூரமிடப்படுகின்றனர். அந்தக் காரணத்தினால்தான், நாம் என்ன செய்தாலும் பொருட்படுத்தாமல், நமது தாய்மார்கள் நம்மைக் கவனமாகப் பராமரித்தனர். அதுதான் உயிரின் கட்டமைப்பு. ஆனால் குறிப்பாக ஒரு பெண் என்ற நிலையில், அந்த வடிவமைப்பிலிருந்து உங்களையே எப்போது விலக்கிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும், அல்லது உங்கள் இறுதி மூச்சு வரைக்கும், முடிவில்லாமல் அது தொடர்பான விஷயங்களுடனேயே நீங்கள் சென்றுகொண்டிருப்பீர்கள்.
துரதிருஷ்டவசமாக, இதுதான் பல பெண்களுக்கும் நிதர்சனமாக உள்ளது. எல்லா ஆண்களும் ஞானமடைந்தவர்கள் என்பது கிடையாது. ஆனால் பெண்களுக்கு உங்களது உடல் மற்றும் உடல்தன்மை குறித்து சற்று அதிகமான ஈடுபாடு கொள்ளச்செய்யும் ஒரு உயிரியல் காரணி உள்ளது. ஆண்களைவிட நீங்கள் சற்றுக் கூடுதலாக சாதனா செய்யவேண்டும், ஏனென்றால் உயிரியல் உங்கள் மீது ஒரு குறிப்பிட்ட பிடிமானம் கொண்டுள்ளது. அது உங்கள் தவறல்ல; அது இனத்தை நிலைத்திருக்கச் செய்வதற்கான ஒரு இயற்கை செயல்முறை.
1996 நவம்பர்/டிசம்பரில், விஜி தனக்காகத் திட்டமிட்டிருந்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், நான் பெண்ணின் பாத்திரமேற்க முயற்சித்து, அவளிடம் எடுத்துக்கூறினேன், “பார், இப்போதும் உனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதை நீ தள்ளிப்போடலாம். நான் உனக்கு உறுதுணையாக இருப்பேன்; இதை நீ வேறொரு நேரம் செய்துகொள்ளலாம். இப்போது வேண்டாம். குழந்தைக்கு இன்னமும் ஏழு வயதுகூட நிறையவில்லை.”
விஜி அவளது வழக்கமான விவேகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு விதத்தில் பதில் அளித்தாள், “ஒரு தாயாக, ஒரு சிறுமி என்ற நிலையில் அவளுக்காக நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன். ஆனால் இப்போது ஏறக்குறைய அவளது ஏழு வயதில், அவள் இருக்கும் விதம், அவளது புத்திசாலித்தனம், மற்றும் உங்களுடன் அவள் எப்படி, எல்லா இடங்களிலும் பழகுகிறாள் என்பதைப் பார்க்கும்போது, மேலும் அதிகமாக எதையும் என்னால் கொடுத்துவிட முடியாது. நான் அவளுக்கு அன்பையும், ஆறுதலையும் வழங்கியுள்ளேன். நான் அவளை முழுமையாக நேசிக்கிறேன், ஆனால் அவளது வாழ்க்கைக்கு இனியும் அதிகமாக எதையும் என்னால் வழங்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை. இதற்குமேல் வேறெதுவும், அவளை என்னுடன் பிணைக்கத்தான் செய்யும்.”
நான் அவளுக்குத் தலைவணங்கிவிட்டுக் கூறினேன், “இது அதீத ஞானம்.” ஒரு ஏழு வயது பெண் குழந்தை உள்ள ஒரு பெண்ணுக்கு அது அசாதாரணமானது. பிறகு நான் தொடர்ந்து, “இதற்கு எதிராக என்னிடம் எந்த விவாதமும் இல்லை.”
கடந்த காலங்களில், குறிப்பாக கிழக்கில், துறவிகளாகவும், அருட்தொண்டர்களாகவும் உயர்ந்த பல மகத்தான பெண்கள் இருந்துள்ளனர். அவர்கள் அவரவர் வழிகளில் வித்தியாசமாக இருந்தனர், ஆனால் அவர்களை ஒருவராலும் தடுக்க முடிந்ததில்லை, ஏனென்றால் கலாச்சாரமும், சமூகமும் அதனை அனுமதித்தது.
இன்றைக்கு, ஏறக்குறைய உலகத்தின் எல்லா சமூகங்களும் இதனை அனுமதிக்கிறது. இந்த வழியில் உயர்வதற்கு, பெண்களுக்கான நேரம் இது. அவர்களை நாம் ஆண்களுடன் போட்டியாளராக்கிவிட்டது துரதிருஷ்டவசமானது. பௌதிகரீதியான உடல்கள் வேறு. உடலில், ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாடு உண்டு. ஆனால் ஆன்மீகத்தில் ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாடு கிடையாது. இந்த இடத்தில்தான் நீங்கள் உயர்ந்து, உங்களது நிறைவை அடையவேண்டும்.
உங்களுக்குள் ஞானம் எழுச்சியடைந்தால், இன்றைய உலகில் நீங்கள் கண்களுக்குப் புலப்படுவீர்கள்; இனிமேலும் உங்களை யாராலும் நிறுத்தமுடியாது – அந்த நாட்கள் மறைந்துவிட்டன. நீங்கள் அந்த உரிமைபெற்ற பெண்களின் தலைமுறையில் இருக்கிறீர்கள் – அநேகமாக அதற்கான முதல் தலைமுறையாக இருக்கிறீர்கள். நீங்கள் விழிப்புணர்வில் உயர்ந்தால், உடனடியாக நீங்கள் அங்கீகரிக்கப்படுவீர்கள். இது ஆயிரக்கணக்கான வருடங்களாக இப்படி இருந்ததில்லை. அதனை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.