
ட்ரீம்ஃபோர்ஸ் 2024 நிகழ்வில், வெளிப்பார்வைக்கு சாத்தியமில்லாத மூவர் கூட்டணியாக, அகாடமி அவார்ட் வின்னர் மாத்யூ மெக்கனாகெ, பாதுகாப்பு சின்னம் Dr. ஜேன் கூடால் DBE, மற்றும் ஆன்மீகத் தலைவர் சத்குரு ஆகியோர் மேடையில் சங்கமித்தனர். இந்த மூவரும் பொதுவாக என்னதான் பகிர்ந்துகொள்ள முடியும்? ஆனால் இது உண்மையில், மாற்றம் ஏற்படுத்தவல்ல மாறுதல் மற்றும் ஒரு நீடித்த தாக்கத்துக்கான அர்ப்பணிப்பு நோக்கிய ஒரு திட்டமாக உருவெடுக்கிறது.
Salesforce’s-ன் முதன்மையான செயற்கை நுண்ணறிவு நிகழ்வில், தொழிற்நுட்பம், சுற்றுச்சூழல் செயல்பாடு, மற்றும் இளம் வல்லமையாளர்கள் எப்படி ஒரு பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பது என்பது பற்றிய ஆழ்ந்த அறிவைப் பகிர்ந்துகொண்டனர். இதோ, அவர்களது உரையாடலின் ஒரு பகுதி.
நெறியாளர்: இந்த சந்திப்பை நெறியாள்கை செய்யும் பணி எனக்கு முதலில் கிடைத்தபொழுது, நான் நினைத்தேன், “ஒரு முதனிலை விலங்கியல் ஆய்வாளர், ஒரு விருது வென்ற ஹாலிவுட் நடிகர், மற்றும் ஒரு புகழ்பெற்ற குரு இவர்களுக்கு இடையில் பொதுவாக என்ன இருக்கிறது?” ஆனால் நிதர்சனத்தில், இது ஒரு பெருநிகழ்வாக இருக்கிறது!
இவர்கள் அனைவரும் அதிகம் விற்பனையாகும் நூலாசிரியர்கள். இவர்கள் அனைவரும் பெருமளவு காட்சி ஊடகங்களில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வருடத்தில் குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் அவர்களது பணிக்காக நீளும் சாலைகளில் ஓய்வறியாமல் பயணிக்கிறார்கள். இது ஒரு வேடிக்கையான உரையாடலாக இருக்கப்போகிறது
நெறியாளர்: இந்த அமர்வின் தலைப்பு, “நோக்கத்துடன் வழி நடத்துதல்”. ஒரு நோக்கத்திலிருந்து வழிநடத்துவது என்றால் உங்களைப் பொறுத்தவரை என்ன அர்த்தம் என்று உங்கள் அனைவரிடமிருந்தும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
Dr. ஜேன் கூடால்: நல்லது, உண்மையாகக் கூறவேண்டுமென்றால், உங்களுக்கு ஒரு நோக்கமில்லை என்றால், உங்களால் வழிநடத்த முடியும் என்று நான் நம்பவில்லை.
நெறியாளர்: ஏற்றுக்கொள்கிறேன்
மேத்யூ மெக்கனாகெ: ஆம், உண்மைதான்!
சந்தோஷம் என்று நாம் எதை வரையறுத்தாலும், காலையில் படுக்கையிலிருந்து எழுவதற்கான காரணம் இருப்பது ஒரு பொதுப்படையானது. நமக்கு ஒரு நோக்கம் இருக்கும்பொழுது, நாம் கட்டமைக்கும் ஒரு விஷயம் வளர்வதை நாம் உணரமுடிகிறது. நமது வாழ்நாளில் முன்னோக்கிச் சென்றுகொண்டே, நம்மைத் தொடர்ந்து வரும் மக்களுக்காக ஏதோவொன்றை விட்டுச் செல்லும் நம்பிக்கை எழுகிறது.
சத்குரு: ஒவ்வொரு உயிரும் அதனதன் நிறைவைக் காண்பதே நோக்கமாக உள்ளது. ஒவ்வொருவரும் நமது சொந்த நோக்கத்தை வளர்த்துக்கொள்வதைக் குறித்ததல்ல இது. ஒவ்வொரு உயிரின் விருப்பமாக இருக்கும் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் ஒரு செயலை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று பார்க்கவேண்டும். ஆகவே நோக்கத்துடன் நீங்கள் வழிநடத்தாதீர்கள். செயலின் போக்கை நீங்கள் அடையாளம் கண்டுவிட்டால், நோக்கம் தானாகவே உங்களை வழிநடத்துகிறது.
நெறியாளர்: அது மிக அழகானது.
Dr. ஜேன் கூடால்: நாம் மிக இளம் வயதிலேயே, ஆப்பிரிக்கா சென்று, வன விலங்குகளுடன் வாழ்ந்து, அவைகளைப்பற்றி புத்தகங்கள் எழுதுவதற்கு விரும்பினேன். அனைவரும் என்னைக்கண்டு சிரித்தனர். அப்படிப்பட்ட விஷயங்களை பெண்கள் செய்யமுடியாது என்று என்னிடம் கூறப்பட்டது.
ஒரு வழியாக, நான் ஆப்பிரிக்கா சென்றுவிட்டேன். ஏதோ ஒரு விலங்குடன் அல்ல, பெரும்பாலும் நம்மைப்போல் இருக்கும் சிம்பன்ஸியுடன் வாழவும், அதனிடமிருந்து கற்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நமக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களைப் பற்றி கற்றுக்கொள்வதில் நான் அற்புதமான பல வருடங்களைக் கழித்தேன்.
நான் கல்லூரிக்குச் சென்றதில்லை, ஏனென்றால் எங்களிடம் செலவு செய்ய பணமில்லை. ஆனால் நான் ஒரு பட்டம் பெற்றாகவேண்டும் என்று எனது வழிகாட்டி கூறியதால், நான் ஒரு PhD. பட்டம் பெறவேண்டியிருந்தது. மேலும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் எனக்கு ஒரு இடம் வாங்கிக்கொடுத்தார். அங்கே, “சிம்பன்ஸிகள் வெறும் விலங்குகள். அவைகளுக்கு தனி ஆளுமைகள், மனங்கள், மற்றும் உணர்ச்சிகள் இருப்பதாக நீங்கள் கூறமுடியாது. இவையெல்லாம் மனிதருக்கு உரித்தானவை”, என்று என்னிடம் கூறப்பட்டபோது, நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்போது அறிவியல் அப்படித்தான் கற்பித்தது.
சிம்பன்ஸிகள் அதிகமாக நம்மைப் போன்றவை. ஏனென்றால் அவைகள் முத்தமிடுகின்றன, தழுவுகின்றன, கைகளைப் பிடிக்கின்றன; ஆண் சிம்பன்ஸிகள் ஆதிக்கம் செலுத்துவதற்காக போட்டியிடுகின்றன. அவற்றுக்கு ஒரு இருண்ட, மூர்க்கமான, கொடூரமான பக்கம் உண்டு. ஆனால் நம்மைப்போல், அவைகளுக்கு காதல், கருணை, மற்றும் உண்மையான பரோபகாரம் போன்ற மென்மையான ஒரு பக்கமும் உண்டு. படிப்படியாக, அறிவியல் மாறியுள்ளது.
நான் கள ஆய்வுக்கான இடங்களுக்குச் சென்றதில், சிம்பன்ஸி வாழிடங்களுக்கு அருகாமையில் வாழும் மக்களின் துயரங்களைப் பற்றி அறிந்தேன்: அதிகமான வறுமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் கல்வி வசதிகள் இல்லாமை, காலங்காலமாக இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு, மலடாகிப்போன விவசாய நிலங்கள். இவற்றைக் கருத்தில்கொண்டு, நாங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு மறுமலர்ச்சித் திட்டத்தை, TACARE என்ற பெயரில் தொடங்கினோம்.
வனப் பகுதிகளில், வறுமையில் வாழும் மக்கள் அவர்களது சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நகரங்களில், மக்கள் மலிவு விலை ஜங்க் உணவை வாங்குகின்றனர். ஏனென்றால் அதைத்தான் அவர்களால் வாங்கமுடியும். மேலும் அந்த உணவு ஏறக்குறைய எப்போதும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்கிறது – அதனால்தான் அது மலிவாக இருக்கிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அவசியத்தை இளைஞர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், நாமும் கைவிடக்கூடும் என்பதை நாம் உணர்ந்துகொண்டோம். பிறகு நாம், கீழிருந்து மேலாக என்ற பொருளில் “வேர்களும் துளிர்களும்” என்ற நமது திட்டத்தைத் தொடங்கினோம். இன்றைக்கு இளைஞர்கள் இணைந்து வந்து, மக்களுக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக உலகை உருவாக்குவதற்கு திட்டங்களைத் தேர்வு செய்கின்றனர்.
மேத்யூ மெக்கனாகெ: இளைய தலைமுறையினர் தங்களது தலைக்கும், இதயத்துக்கும் இடையில் வித்தியாசமாக சிந்தித்து, புரிந்துகொண்டால், நாம் தற்போது எப்படி வாழ்கிறோம் என்பதை அது மாற்றும்.
அமெரிக்காவின் Title I பள்ளிகளின் பாடத்திட்டமாக Just Keep Livin’Foundation என்ற அமைப்பை காமிலாவும், நானும் தொடங்கினோம். அங்கே 50 சதவிகிதம் பள்ளியில் இடை நிற்றல் விகிதமும், துணை உணவுத் திட்டமும் உள்ளன. இந்தக் குழந்தைகள் பள்ளி நேரம் முடிந்தபிறகு செல்வதற்காக, நாங்கள் ஒரு திட்டத்தைத் துவங்கினோம். ஊட்டச்சத்து இலக்குகளும்கூட இருக்கின்றன.
சத்குரு: அடிப்படையான கவனம், மனிதர் என்பதுதான் காரணம். மனிதர்கள் தங்களுடனேயே நன்றாக இணக்கமுடன் இருந்தால், அவர்கள் மகத்தான தீர்வாக உள்ளனர். அவர்கள் தங்களுக்குள் சரிவர இணக்கமில்லாமல் இருந்தால், அவர்களது வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், மற்ற ஒவ்வொரு உயிருக்கும் மாபெரும் பிரச்சனையாக இருக்கின்றனர்.
இந்த பூமியின் மற்ற அனைத்து உயிர்களும் நம்மால் துன்பப்படுகின்றன. இது ஒரு சுற்றுச்சூழல் பாடம் அல்ல – இது ஒரு ஆன்மீக செயல்முறை. ஆன்மீக செயல்முறை என்றால் நாம் குறிப்பிடுவது என்னவென்றால், உங்களுடைய பொருள்தன்மையான அனுபவம் மற்றும் அடையாளத்தின் எல்லைகளை நீங்கள் கடப்பது. இதுமட்டும் நிகழவில்லை என்றால், பின்னாளில் நாம் பெரிய பெரிய பிரச்சனைகளை உருவாக்குவோம், ஏனென்றால் நமது அடையாளங்கள் மற்றும் அனுபவங்களைச் சார்ந்துதான் புத்திசாலித்தனம் செயல்படுகிறது.
சுவாசித்தலின் வழியாக நாம் பரிமாற்றம் நிகழ்த்தவில்லை என்றால், இங்கு இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கமாட்டோம் என்பதை நமது அனுபவத்திலிருந்து நாம் அறிந்திருக்கிறோம். 1998ல் சில ஐநா முகவர்கள் வெளியிட்ட அறிக்கையில், 2025 ஆண்டுக்குள், 60 சதவிகித தென்னிந்தியா பாலைவனமாதலை எதிர்கொள்ளும் என்று கணித்தனர்.
மனித இதயத்தில் துடித்துக்கொண்டிருப்பது என்ன என்பதை கணிப்புகள் கருத்தில் கொள்வதில்லை. ஆகவே நாம் பசுமைக்கரங்கள் திட்டம் தொடங்கினோம். இந்த மாநிலத்தின் சராசரி பசுமைப் போர்வை 16 சதவிகிதமாக இருந்தது, ஆனால் தேசிய இலக்கு 33 சதவிகிதமாக இருந்தது. ஒரு அடிப்படையான கணக்கீட்டின்படி, இந்த மாநிலத்தில் 11.4 கோடி மரங்களை நட்டால், நமக்கு 33 சதவிகிதம் பசுமைப்போர்வை இருக்கும் என்று முடிவெடுத்தேன்.
நாம் அனைவரும் நுகர்கிறோம், ஆனால் அதற்கு ஈடுசெய்யும் செயல்பாட்டைச் செய்வதற்கு நாம் விரும்புவதில்லை. மக்களை ஒரு மரத்தினடியில் நான் அமரவைத்து, சுவாசிக்கச் செய்தேன். அவர்கள், “எனது வெளிமூச்சு என்னவோ, அதை மரம் உள்ளிழுக்கிறது. மரத்தின் வெளிமூச்சு என்னவோ, அதை நான் உள்ளிழுக்கிறேன்”, என்பதைத் தெளிவாகப் பார்த்தனர். இதனை அவர்கள் ஒருமுறை உணர்ந்துவிட்டால், பிறகு அவர்கள் மரங்கள் நடுவதை யாராலும் தடுக்கமுடியாது. கடந்த வாரம், அந்த நிலப்பரப்பில் எங்களது இலக்கான 11.4 கோடி மரங்கள் நடுவதை நாங்கள் நிறைவு செய்துவிட்டோம்.
காவேரி கூக்குரல் இயக்கத்தில், 83,000 சதுர கிலோமீட்டர் பரப்பு நதிப்படுகை கொண்ட ஒரு நதியை நாங்கள் எடுத்துக்கொண்டோம். நதியில் மீண்டும் நீரோட்டம் பாய்வதற்கு 242 கோடி மரங்கள் தேவைப்படுகின்றன.
ஒளிச்சேர்க்கை என்றழைக்கப்படும் அற்புதமான ஒரு நிகழ்வினால் இந்த பூமியின் மீதான உயிர் நிலைத்திருக்கிறது. 1000 வருடங்களுக்கு முந்தைய ஒளிச்சேர்க்கையுடன் ஒப்பிடுகையில், இன்றைக்கு 15 சதவிகித பசுமைப்போர்வை மட்டுமே மீதமாக உள்ளது. அதன் பொருள், 15 சதவிகித ஒளிச்சேர்க்கை மட்டுமே நிகழ்கிறது.
இந்தக் கணத்திலிருந்து, பூமியின் மீது நீங்கள் வளர்த்தெடுக்கும் கூடுதலான ஒவ்வொரு பச்சை இலையும், பருவநிலை தணிப்பினை நோக்கிய ஒரு சிறு படியாக இருக்கிறது.
நெறியாளர்: இங்கு நாம் தேசத்தின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இருக்கிறோம். உங்களது பணியில் செயற்கை நுண்ணறிவு குறித்தும், மற்றும் உலகத்தில் மனிதர்களும், இயந்திரங்களும் எப்படி இணைந்து வாழமுடியும் என்பதைக் குறித்தும் நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். சிறிதளவுக்கு, அதுகுறித்த உங்களது கவலை என்ன, மற்றும் அதன் எந்த அம்சம் குறித்து நாம் நம்பிக்கைகொள்ள முடியும் என்றும் அறிய விரும்புகிறேன்.
Dr. ஜேன் கூடால்: செயற்கை நுண்ணறிவு பல்வேறு வழிகளில் உலகத்தை ஒரு மேலான இடமாக மாற்றமுடியும் என்று என்னால் சிந்திக்கமுடிகிறது. இருப்பினும், என் கவலை என்னவென்றால், அது தவறான கரங்களில் சிக்கிவிடக்கூடாது என்பதுதான். அதுதான் அச்சுறுத்தலாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு, மற்ற அனைத்தையும் போல, அது ஒரு கருவி என்பதுடன், கருவி பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட முடியும். அது நல்லவர் கரங்களில் இருக்கும்போது, அற்புதமானது. ஆனால் அது எப்போதும் நல்லவர் கரங்களில் இருப்பதில்லை. தீயவர் கரங்களிலிருந்து அதை எப்படி விலக்குவது என்ற கேள்விக்கு செயற்கை நுண்ணறிவால் பதில் அளிக்கமுடியுமா?
சத்குரு: செயற்கை நுண்ணறிவு, அற்புதமான ஆற்றல் அளிப்பதாக உள்ளது. மனிதர்கள் தங்களையே சூப்பர் மனிதராக்கிக்கொள்ளக்கூடிய அந்தக் குறிப்பிட்ட ஆரம்பப்புள்ளியில் நாம் இருக்கிறோம். நமது நோக்கமும், அடையாளங்களும் இணைத்துக்கொள்ளும் தன்மையில் இருக்கும்போது மட்டும்தான் எதனுடனும் உச்சம் தொடுவது நன்மையாக உள்ளது. தேசங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் இவற்றுக்கு இடையில், நாம் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல் இருக்கும்போது, ஏற்றத்தாழ்வுகள் இருப்பது தவிர்க்கமுடியாதது. ஆனால் நீங்கள் தொழில்நுட்பத்தைத் தடுக்கமுடியாது.
இந்தக் குறிப்பிட்ட தொழில்நுட்பம் செல்கின்ற வேகத்தில், அதனுடன் பயணிக்கவேண்டிய மக்களின் மாற்றத்துக்கான நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் பெருங்குழப்பம் இருக்கும், ஆனால் அனைத்துடனும் சற்று கருணையான இதயம் கொண்டு, இணைத்துக்கொள்ளும் அணுகுமுறையுடன் நாம் அதனைக் குறைக்கலாம். நாம் சிந்திக்கும் எந்த விஷயமும் ஒருமையின் நோக்கில் இருக்கவேண்டும். இல்லையென்றால், நாம் மிகுந்த அழிவு ஏற்படுத்தும் சக்தியாக இருப்போம்.
மேத்யூ மெக்கனாகெ: செயற்கை நுண்ணறிவு இரண்டு வழிகளிலும் விளைவை ஏற்படுத்தப்போகிறது. சர்வாதிகாரிகளின் கரங்கள் மற்றும் தீயவர்களின் கரங்களிலிருந்து விலக்கி வைப்பதற்கான வழியே இல்லை. நல்லவர்களின் கரங்களில் அது இருக்குமென்று நம்புகிறேன்
ஆனால் ஒட்டுமொத்தமாக, நான் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறேன். காலந்தோறும் சமூகத்தில் பெரிய மாற்றங்களை நாம் சந்தித்திருக்கிறோம். நாம் என்ன உருவாக்குவோம் என்று பார்ப்போம், ஏனென்றால் நாமே நம்மைக் குறித்த கனவை உருவாக்குகிறோம்.
சத்குரு: பரிணாம செயல்முறை உருவாக்கியுள்ள மிக அழகான விஷயங்களுள் ஒன்றுதான் மனித மனம். ஆனால் இன்றைக்கு, மனிதர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களுக்கு, மனித மனம்தான் அடிப்படையாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு, நமது மனதின் ஒரு சூப்பர் விரிவாக்கமாக இருக்கப்போகிறது. இதனை நாம் கவனமாகக் கண்காணிப்பது அவசியம். இதனை நீங்கள் அழுத்தம், இறுக்கம், பதற்றம் என்று எதுவாகவும் அழைக்கமுடியும். ஆனால் முக்கியமாக, நமது புத்திசாலித்தனமே நம்மைக் குத்துகிறது. எந்தவொரு விஷயம், ஒரு அதிசயமாக உள்ளதோ, அதுவே துன்பமாகிவிட்டது. ஆகவே, மீண்டும் ஒருமுறை, இதிலிருந்து எப்படி ஒரு அதிசயத்தை உருவாக்குவது என்று மனிதர்கள் கற்றுக்கொள்வது முக்கியமானது.
பெரும் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் வெளிப்படுகையில், நாம் தனிப்பட்ட மனிதர்களின் தன்னிலைமாற்றத்தின் மீது கவனம் செலுத்துவது மிக மிக முக்கியமானது. அதை நாம் செய்யவில்லை என்றால், நாம் உருவாக்குவது என்னவோ, அது நமக்கு எதிராகத் திரும்பும், அதற்குக் காரணம் தொழில்நுட்பம் மோசமானது என்பதால் அல்ல – ஏனென்றால் அதை எப்படிக் கையாள்வது என்று நமக்குத் தெரியவில்லை.
நெறியாளர்: ஆமாம், நான் ஏற்றுக்கொள்கிறேன். செயற்கை நுண்ணறிவு ஒரு கருவி, ஒரு கண்ணாடி, மற்றும் அது, நாம் என்பதன் விரிவாக்கம் என்று கேள்வியுற்றோம். அது அழகாக இருக்கும் என்று பெரிதும் நம்புகிறேன். அந்தப் புதிய தொழில்நுட்பத்திற்குள் நாம் ஒரு நோக்கத்துடன், இணைத்துக்கொள்ளுதலுடன், மற்றும் ஒருமைத்தன்மையுடன் அடியெடுத்து வைக்கவேண்டும். உங்களுக்கு மிக்க நன்றி.