
தொழில்நுட்பம் முன்னேறுகையில், உண்மையான மனிதத் தொடர்பு ஏன் பின்னடைவு காண்கிறது? சர்ஜன் ஜெனரல், Dr. விவேக் மூர்த்தியும் சத்குருவும், 2024 செப். 28 அன்று, ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில், “தனிமை: உள்முகமாகத் திரும்புவதுதான் தீர்வுக்கான ஒரே வழி” என்ற தலைப்பில் மேற்கொண்ட, எண்ணத்தைத் தூண்டும் உரையாடலில், இந்த நவீன முரண்பாட்டினை எதிர்கொண்டனர். மேம்போக்கான வாழ்க்கையும், உண்மையான நிறைவின்மையும் அதிகரித்துவரும் ஒரு உலகத்தில், தனிமையை எதிர்த்து நிற்பது மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை வளர்த்தெடுப்பது குறித்த அவர்களது ஆழ்ந்த அறிதல்களை இந்தத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது.
Dr. விவேக் மூர்த்தி: ஒரு மருத்துவராகவும், சர்ஜன் ஜெனரலாகவும் பணிபுரியும் நிலையில், எங்களது தேசமெங்கும், முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடையே, இந்த தனிமையும், தனித்திருக்கும் உணர்வும் மிக மிகச் சாதாரணமாக உள்ளது. குறிப்பாக, இள வயதினர் அதிகமாகப் போராடுகின்றனர், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தனிமையை உணர்வதாக அறிக்கை விடுக்கின்றனர்.
மக்கள் தங்களிடம் இருந்தும், ஒருவர் மற்றவரிடம் இருந்தும் தொடர்பில்லாமல் இருக்கும் இந்த உணர்வுடன் போராடும்போது, அவர்களது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அபாயத்துடன், உடலியல் நோய்களையும் அது அதிகரிக்கிறது. இதன் காரணமாக, 29 சதவிகிதம் இதய நோய் அபாயத்தின் அதிகரிப்பு, 31 சதவிகிதம் பக்கவாத நோய் அபாயத்தின் அதிகரிப்பு, 50 சதவிகிதம் மறதி நோய் அபாயத்தின் அதிகரிப்பு, மற்றும் அகால மரண அபாயத்தின் அதிகரிப்பு குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
சமூகத் தொடர்பின்மையினால் நிகழும் இறப்பின் பாதிப்பு, புகைத்தல் மற்றும் உடற்பருமனால் நிகழும் இறப்பின் பாதிப்புடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது. நமது வாழ்வில் ஒரு சமுதாய உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது.
தனிமையுணர்வில் காணாமல்போகும் ஒரு மிக முக்கியமான கருத்து என்னவென்றால், மற்றவர்களுடன் ஆழமாக தொடர்புகொள்வதற்கு, ஒருவர் தன்னுடனேயே தொடர்பில் இருக்கவும் தேவைப்படுகிறது.
எனது கண்ணோட்டத்தில், அதனை மறுகட்டமைப்பு செய்வது என்பது நம்முடைய தனிப்பட்ட ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல், நமது குடும்பத்தின், நமது சமுதாயங்களின், மற்றும் உலகத்தின் ஆரோக்கியத்துக்காகவும் நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களுள் ஒன்று.
சத்குரு: நல்லது, நாம் 820 கோடி மக்களாக இருந்துகொண்டு, தனிமையாக இருக்கிறோம்! ஜன நெருக்கடியான ஒரு உலகில், மக்கள் தனிமையை உணர்கின்றனர். மருத்துவர் கூறியதைப்போல், அதற்கு ஒரு சமூகவியல் அல்லது சமூகப் பழக்கவழக்கங்கள் சார்ந்த அம்சம் உள்ளது. சமூக சூழ்நிலைகளையும், சர்வதேச சூழ்நிலைகளையும், மற்றும் குடும்ப சூழ்நிலைகளையும் நாம் எப்போதும் கையாளவில்லை என்றால், அனைத்தும் தடம்மாறிவிடும்.
சமூகக் கட்டமைப்பில் இருக்கும் இடைவெளிகளைக் குறைக்க, நிர்வாகம் முயற்சிப்பதை நான் நம்புகிறேன், ஆனால் உள்ளபடியே தனிமையுணர்வு ஒரு சமூக செயல்முறை அல்ல; அது ஒரு மனரீதியான செயல்முறை. ஒரு மக்கள் கூட்டத்தினரிடையே அமர்ந்துகொண்டிருக்கும்போதும், நீங்கள் தனிமையாக உணரமுடியும். நீங்கள் நேசிக்கப்பட்டு, அக்கறையுடன் கவனிக்கப்பட்டு இருந்தாலும்கூட, அப்போதும் நீங்கள் தனிமையாக உணரக்கூடும், ஏனென்றால் அது ஒரு மனரீதியான செயல்முறை. எந்த இடத்தில் இருந்தாலும் உங்களையே நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள முடியும்.
நான் இப்போது சமூகம் குறித்து ஒரு விஷயம் கூறப்போகிறேன், ஆனால் தனிமனிதர்கள் மீதுதான் முக்கியமாக எனது கவனம் உள்ளது. சமூகத்தில் நிகழ்ந்துவரும் ஒரு விஷயம் என்னவென்றால், தனிமையின் மதிப்பீடு மறைந்துவிட்டது. தனிமை என்பது, உங்களது வாழ்வின் மிக ஆழமான தருணம். இதுதான் நீங்கள் உயிரில் நனைவதற்கான நேரம்.
யோகக் கலாச்சாரங்களில் கவனம் செலுத்தப்படும் ஒரு விஷயம்: உள்வாங்குதல் அல்லது விஷயங்களைப் புலனுணர்தல் மற்றும் விஷயங்களை வெளிப்படுத்துதலில் நீங்கள் செலவழிக்கும் நேரம் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதமாக உள்ளது. உள்வாங்குவதில் உங்கள் நேரத்தின் மூன்றில் இரண்டு பங்கையும், மற்றும் வெளிப்படுத்துவதில் மூன்றில் ஒரு பங்கையும் நீங்கள் செலவழித்தால், உங்களது வெளிப்பாடு ஆழமாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
ஆனால் இன்றைக்கு, மிகவும் இளம் வயதினர் – ஒரு ஆறு வயது குழந்தைக்குக்கூட முகநூலில் ஏதோ ஒன்றைக் கூறி, வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குறைந்தபட்சம் அதனை நீங்கள் தடைசெய்துவிட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்த மனிதப்பிறப்பு ஒரு அற்புதமான படைப்பு. நீங்கள் குழந்தையாக இருக்கும்போது, உங்களால் முடிந்த அளவுக்கு அற்புதமான உலகத்தைப் பார்த்து, அதற்கான வார்த்தைகள் உங்களுக்குக் கிடைக்கும்வரை, வியந்து, உள்வாங்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும், பலவும் அருவெறுப்பாக மாறக்கூடிய விதத்தில், நம்மிடம் ஒரு வார்த்தை உள்ளது, இந்த வெளிப்பாட்டில் வாழ்வை உணர்வதற்கான வாய்ப்பு இல்லை; அது வெறுமனே தெளிவற்ற இரைச்சலாக இருக்கிறது.
Dr. விவேக் மூர்த்தி: சத்குரு, நீங்கள் கூறியதைப்போல, ஆயிரம் நபர்களுடன் இருக்கும்போதோ அல்லது தனியாக இருக்கும்போதோ தனிமை நிகழமுடியும் என்பது ஒரு தனிப்பட்ட உணர்வு சார்ந்தது. அது மற்றவர்களுடன் எவ்வளவு ஆழமான தொடர்புடையவராக நாம் உணர்கிறோம் என்பதைக் குறித்தது.
நான் பயணித்துக்கொண்டும், வெவ்வேறு விதமான மக்களிடம் பேசிக்கொண்டும் நிறைய நேரங்கள் செலவழித்தேன். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களுடன் ஆயிரக்கணக்கான மற்ற மாணவர்கள் இருக்கும்போதிலும், அவர்கள் தனிமையாக உணர்ந்ததை என்னிடம் கூறியுள்ளனர்.
யாரேனும் அவர்களை அறிந்திருப்பதாக அவர்கள் உணரவில்லை. அவர்களாகவே இருக்கமுடியும் என்பதை அவர்கள் உணரவில்லை. தாம் யாராக இருக்கிறோம் என்பதை அவர்கள் நல்லவிதத்தில் உணரவில்லை. தங்களைச் சுற்றிலும் ஒருவர் அல்லது இரண்டு பேரை மட்டும் வைத்துக்கொண்டிருந்த மக்களிடம்கூட நான் பேசியுள்ளேன், ஆனால் அவர்கள் திருப்தியாகவும், தொடர்பில் இருப்பதாகவும், உள்நிலை அமைதி மற்றும் நிறைவான தன்மையின் உணர்வுடன் இருக்கின்றனர்.
நம்முடனும், மற்றவர்களுடனும் இருக்கும் ஆழமான தொடர்பிலிருந்து ஏற்படும் ஒரு ஆழ்ந்த நிறைவில் கவனம் செலுத்துவதற்கு சமூகத்தை எப்படி மறு-சீரமைப்பு செய்வது என்பது, நான் ஒரு சர்ஜன் ஜெனரலாக மட்டுமல்லாமல், இரண்டு சிறு குழந்தைகளின் தந்தை என்ற நிலையிலும் நின்று நான் சிந்திக்கும் விஷயங்களுள் ஒன்றாக உள்ளது.
நமது சமுதாயத்துக்கும், பூமிக்கும் நாம் ஏதாவது ஒரு விஷயம் செய்யும்போது, மற்றவர்களுக்கு நாம் அளிக்கும் சேவை என்பது, தனிமையுணர்வுக்கு நான் கண்டுள்ள மிகப்பெரிய மாற்று மருந்துகளுள் ஒன்று. ஒரு அமைதி உணர்வையும், நமக்கு இருக்கும் மதிப்பின் அங்கீகாரத்தையும் காண்பதற்கு நமக்கு அது உதவுகிறது. ஆனால் நான் கவலைகொள்வது எதைப்பற்றி என்றால், இப்போதெல்லாம் நான் இளைஞர்களுடன் பேசும்போது, புகழ், அதிர்ஷ்டம் அல்லது அதிகாரம் இவற்றின் ஏதோ ஒரு கலவையாக வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி நினைப்பதற்கு, அவர்களைத் தள்ளும்படியான சக்திகளால் அவர்கள் தெளிவாகச் சூழப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த எல்லா மூன்று விஷயங்களும் உள்ள பலரை நாம் அறிந்திருக்கிறோம். இருப்பினும் அவர்கள் உண்மையில் நிறைவடைந்தவர்களாக இல்லை. பிரபலமாகவும், அதிகாரம் நிறைந்தும், செல்வந்தராகவும் இருப்பதில் தவறேதுமில்லை. ஆனால், இதைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று நாம் இளம் வயதினருக்குக் கூறும்போதுதான், இத்தகைய சவால் எழுகிறது. ஒருவர் தன்னுடனும், மற்றவர்களுடனும் கொள்ளும் ஆழமான ஒரு தொடர்பின் உணர்விலிருந்து எழும், நிறைவடைதலுக்கான ஒரு ஆழமான தேடுதல் இருந்துகொண்டிருக்கிறது.
நமக்குத் தேவையான நிறைவைக் கொண்டுவராமல், வலைத்தளத்தில் க்ளிக்குகளையும், நிதியையும் அதிகரிக்கக்கூடிய விதமான பழக்கங்களையும், நடத்தைகளையும், செயல்பாடுகளையும் தேடும் அடிமைத்தனத்தை எதிர்த்து, நிறைவைக் காண்பதற்கான நமது நோக்கத்துக்காக, நமது வாழ்க்கையில் கலாச்சார சக்திகள் மற்றும் தொழில்நுட்பத்தை எப்படி சமரசம் செய்வது என்று நாம் முடிவு செய்யவேண்டும்.
அடுத்த தலைமுறையைப் பற்றி அக்கறைகொள்ளும் மனிதர்களாக, தனித்திருப்பதற்கான இடங்களையும், நேரத்தையும் செதுக்குவதில் நாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை நாம் உறுதிசெய்துகொள்ள முடியும். மேலும் மற்றவர்களுக்கு சேவை செய்வது உயர்ந்தது என்று அவர்களுக்கு வலியுறுத்துவதும், ஒவ்வொரு நாளும் யாரையாவது சந்திப்பதை அவர்களுடன் பகிர்ந்துகொண்டும், ஒரு உதாரணமாக இருந்து வழிகாட்டவும் முடியும். இது ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காகவோ அல்லது எந்த இரண்டாம் நிலை ஆதாயத்துக்காகவோ இல்லாமல், யாரோ ஒருவருடன் உண்மையான மனித நேயத்துடன் இணைந்திருப்பதே மதிப்பீடு மிகுந்தது என்பதற்கானது.
சத்குரு: தனிமையுணர்வு என்றால், உங்களைச் சுற்றிலும் மக்கள் யாரும் இல்லை என்ற கட்டாயமில்லை. அது முக்கியமல்ல. சுற்றிலும் மக்கள் இருப்பது என்பது, ஒரு சிறிய மாற்று மருந்து. அதனால் ஒருவேளை நீங்கள் தனிமையிலிருந்து சற்றே விடுபடலாம், ஆனால் அந்த விடுபடல் ஒரு முகமூடியாக இருக்கிறது அல்லது அது ஒரு சிறிய அளவிலான ஏற்பாடு மட்டுமே.
ஆனால், முக்கியமாக தனிமையுணர்வு நிகழ்வது ஏனென்றால், உங்கள் எண்ணம் மற்றும் உணர்ச்சியளவிலான செயல்முறையைக் கடந்த வேறெதுவும் உங்களுக்குள் இல்லை. நீங்கள் உடலளவிலான, மற்றும் மனதளவிலான செயல்முறையாக மட்டும் உருவாகியுள்ளீர்கள். மனிதருக்குள் அதிக ஆழமானதாக எதுவும் இல்லை. உங்களது எண்ணங்கள் ஆழமானதாக ஆகிவிட்டால்கூட, நீங்கள் தனிமையாக இருப்பதாக உணரமாட்டீர்கள். நீங்கள் விரும்பும் விதமாக உங்களது எண்ணங்களும், உணர்ச்சிகளும் நிகழ்ந்தால், நீங்கள் உங்களை ஆனந்தமாக வைத்திருப்பீர்களா அல்லது துன்பமாக வைத்திருப்பீர்களா? ஆனந்தமாகத்தானே?
அதுகுறித்து நாம் எதையும் செய்யாமல் இருந்தால், அடுத்த பத்து வருடத்திலிருந்து பதினைந்து வருட காலத்தில், மனரீதியாக உடைந்த ஒரு நபராவது (குறைந்தபட்சமாக) இல்லாத ஒரு குடும்பம்கூட இருக்காது. நாம் ஏற்கனவே அதற்கான சில அடையாளங்களை எட்டியிருக்கிறோம். உடல்ரீதியான சுகவீனங்களுக்காக ஏதோ ஒருவித மருத்துவ பரிந்துரையின் பேரில் இருக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இல்லாத குடும்பம் ஏறக்குறைய இல்லை எனலாம். அதுவே மனரீதியான சுகவீனங்களுக்கும் பொதுவானதாக மாறிவிடும்.
உடல்ரீதியான சுகவீனங்கள் வலி மிகுந்தவை, ஆனால் மனரீதியான சுகவீனங்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வலி மிகுந்தவை. என் சொந்த புத்திசாலித்தனமே எனக்கு எதிராகத் திரும்பினால், பிரபஞ்சத்தில் இருக்கும் எந்த சக்தியாலும் என்னைக் காப்பாற்ற முடியாது. ஆகவே, தொழில்நுட்பத்தின் பொறுப்பற்ற பயன்பாடு உள்ளிட்ட, இத்தகைய விஷயங்களை மிக இளம் வயதில் அணுகுவது முக்கியமானதாக இருக்கிறது.
உங்களது உள்நிலை தொழில்நுட்பத்தை உயர்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது. நம்மையே உயர்த்திக்கொள்ளாமல், நமது செயல்பாட்டினை அதிகரித்தால், பிறகு நாம் துன்பப்படுவோம். மனிதர்கள் தங்களது உடலையும், தங்களது புத்திசாலித்தனத்தையும் தங்களது பொறுப்பில் எடுப்பது மிக முக்கியமான விஷயம். நமது பள்ளி அமைப்பு இதைக் கொண்டுவர வேண்டும். பள்ளி என்பது வெறும் அரிச்சுவடி கற்பதைப் பற்றியது மட்டுமல்ல.
தொழில்நுட்பத்தை நிறுத்துவதற்கு வழியில்லை. தொழில்நுட்பத்தின் வேகத்தில் கொள்கைவரைவு நகரமுடியாது. இந்த வேகத்தில் அது நகர்ந்துகொண்டிருக்கும்போது, மனித மாற்றத்தில் நாம் மூலதனம் செய்யவேண்டியது மிக மிக முக்கியமானது. இதன் ஒரு பகுதியாக, ‘மனதின் அதிசயம்’ என்பதை நாம் தொடங்குகிறோம். பூமியிலேயே மனிதமனம்தான் மகத்தான அதிசயம். நீங்கள் காணும் எல்லா மகத்தான தொழில்நுட்பங்களும் இதிலிருந்துதான் வருகின்றன.
மனித மனம் ஒரு அதிசயம், ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அதனை, துன்பத்தை உற்பத்தி செய்யும் ஒரு இயந்திரமாகப் பயன்படுத்துகின்றனர். பூமியில் தனிமனித துன்பம் எப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளது. ஆனால் இப்போது, அது மிகப்பெரிய அளவில் நிகழ்ந்துகொண்டுள்ளது. ஆகவே, அதற்கு முடிவு கட்டுவதற்கான நேரம் வந்துள்ளது. அரசாங்கங்களும், நிர்வாகத்தினரும், மற்றும் அமைப்புகளும் இதனை அர்த்தமுள்ள, முக்கியமான வெவ்வேறு நிலைகளில் கையாள்கின்றனர். ஆனால் தனிமனிதர்கள் தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்பதற்கு மாற்று கிடையாது.