சத்குருவுடன் பிரபல மருத்துவர் மற்றும் போட்காஸ்டர் Dr.ரங்கன் சாட்டர்ஜி மேற்கொண்ட நமது கண்களைத் திறக்கும் இந்த உரையாடலில், உறக்கம் என்ற தலைப்பில் பேசப்படுகிறது. ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி குறித்த விஷயங்களில், யோக மரபு சொல்லும் நுட்பமான மதிப்புமிக்க விஷயங்களையும், உள்நிலை மாற்றம் குறித்த புதிய கண்ணோட்டங்களையும் சத்குரு வெளிப்படுத்துகிறார்.
Dr. Rangan Chatterjee - Ali Rogers
யோகா மூலமாக விழிப்புடன் இருப்பதால் மேம்படும் உறக்கத்தின் தரம்
ரங்கன் சாட்டர்ஜி: எல்லாவற்றுக்கும் முதலில், தங்களிடம் பேசுவது எனக்கான பெரும் கௌரவமாக இருக்கிறது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மேலும் இன்றைக்கு எனக்கு நேரம் ஒதுக்கியமைக்கு தங்களுக்கு மிகவும் நன்றி. உறக்கம் குறித்து கலந்துரையாடுவதன் மூலம் நாம் தொடங்கலாம் என்று நினைத்தேன். நான் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறேன். நான் பார்த்தவரையில் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் மிகச் சாதாரணமான பிரச்சனைகளுள் ஒன்று, பலரும், “என்னால் உறங்கமுடியவில்லை, டாக்டர்; எனக்கு உங்களால் உதவமுடியுமா?” என்று கேட்கின்றனர். உங்களது கண்ணோட்டத்தில் இருந்து, என்ன நிகழ்ந்துகொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
சத்குரு: தற்போது மக்கள் இருப்பதைவிட அவர்களை மேலும் விழிப்புடன் இருக்கும்படி செய்வதைப் பற்றியதாகவே எனது வாழ்க்கையும், வேலையும் இருக்கிறது. இப்போது மக்களுக்கு உறங்குவதில் பிரச்சனை இருப்பதாக நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். பெரும்பாலான மக்கள் பகற்பொழுதில் பாதியளவு மட்டும் விழிப்புடன் இருப்பதுதான் மிகப்பெரிய பிரச்சனை என்று நான் நினைக்கிறேன். ஒருவர் வாழ்க்கைக்கு அதிக விழிப்பானவராவது முக்கியமானது. நீங்கள் வாழ்க்கைக்கு அதிக விழிப்பானவராக ஆகிவிட்டால், உறக்கம் உடலுக்கு மட்டுமே தேவையாக இருக்கிறது. ஏனென்றால் அது உடல் தன்னைத்தானே புத்துணர்வூட்டி கொள்வதற்கான, செயலற்ற நேரமாக இருக்கிறது.
நான் ஒரு மருத்துவரல்ல. இதனை நான் யோகக் கண்ணோட்டத்தில் இருந்தும், என் வாழ்க்கை எப்படி நிகழ்கிறது என்பதில் இருந்தும் கூறுகிறேன்: உறக்கம் ஒருவிதமான செயலற்ற நிலை. நமது ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் இரண்டும், ஒரு குறிப்பிட்ட அளவு சோர்வடைந்து, அதிலிருந்து மீளத் தேவைப்படுகிறது. உறக்கம் என்பது உடல் மீண்டெழுவதற்கான நேரமாகவும், ஒரு புதிய வடிவத்தில் வெளிவரக்கூடியதாகவும் உள்ளது.
உங்களுக்குப் புத்துணர்வூட்டவும், உங்களையே மாற்றத்துக்கு உள்ளாக்கவும், முழுமையான ஒரு புதிய சாத்தியமாக்கவும், உறக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும்.
இது, ஒரே செடியிலிருந்து இரண்டு மலர்கள் பூத்தாலும், அவைகள் ஒரே மாதிரி இல்லாததைப் போன்றது. இதுதான் உறக்கத்தின் இயல்பு. தினமும் உறக்கத்திற்குப் பிறகு, அதே நபராக அல்லது அதே சாஃப்ட்வேருடன் நீங்கள் எழுந்திருக்க வேண்டியதில்லை. துரதிருஷ்டவசமாக, அதேபோன்று இருப்பது மிக நல்ல குணாதிசயம் என்று பலரும் நினைக்கின்றனர், ஆனால் நீங்கள் புதிய சாத்தியங்களுக்குள் மலர்ச்சியடைய வேண்டும்.
உங்களுக்குப் புத்துணர்வூட்டவும், உங்களையே மாற்றத்துக்கு உள்ளாக்கவும், முழுமையான ஒரு புதிய சாத்தியமாக்கவும், உறக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது, பலரும் உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் மந்தமான நிலையில் இருக்கின்றனர், மற்றும் மனதின் நிலையில், இரவும் பகலும் ஒருவித “மன பேதி” நடந்துகொண்டே இருக்கிறது, அவர்களால் அதை நிறுத்த முடியவில்லை.
நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், உடலளவிலான செயல்பாட்டை அதிகரித்து, மனரீதியான செயல்பாட்டைக் குறைக்கவேண்டும். மனரீதியான செயல்பாட்டைக் குறைப்பதற்கு, நீங்கள் புலனுணர்தலில் அதிகமாகவும், வெளிப்படுத்தலில் குறைவாகவும் முதலீடு செய்யத் தேவைப்படுகிறது. இந்தத் தலைமுறை, எந்தவிதத்திலும் புலனுணர்தல் இல்லாமல், மிக அதிகமான வெளிப்படுத்தலில் கவனம் செலுத்த முனைகிறது.
மருந்து முறைகளைக் கடந்த வாழ்க்கை: உறக்கத்துடனான நமது தொடர்பை மறுவரையறை செய்வது
ரங்கன் சாட்டர்ஜி: சத்குரு, உறக்கமில்லாமல் போராடிக்கொண்டு, இரவில் பரபரப்பாக உணரும் ஒருவருக்கு, சில விஷயங்களை நீங்கள் பரிந்துரைப்பதை நான் பார்த்துள்ளேன், அதாவது படுக்கைக்குச் செல்வதற்கு மூன்றிலிருந்து நான்கு மணி நேரங்கள் முன்னதாக சாப்பிடுவது, மாலை நேரத்தில் நீராடுவது, ஒரு மெழுகுவர்த்தியை ஒளிரச் செய்யலாம், சிறிது யோகா அல்லது தியானப் பயிற்சி செய்யலாம் என்று கூறுகிறீர்கள். இறுதியாக, நீங்கள் கூறுவதைப்போல், அது வெளிப்பாடு மற்றும் புலனுணர்தலுடன் தொடர்புடையதாக இருக்கும்போது, அந்தப் பயிற்சிகள் எங்கே பொருந்துகிறது?
சத்குரு: இது எதைப்போன்றது என்றால், யாரோ ஒருவர் வலி என்ற பிரச்சனையுடன் ஒரு மருத்துவரிடம் வந்தால், மருத்துவர் ஒரு வலி நிவாரணியை பரிந்துரை செய்யலாம். இது வலியிலிருந்து விடுபடுவதற்கான ஒரு தற்காலிகத் தீர்வுதானே தவிர, இது ஒரு வாழ்நாளுக்கான தீர்வு அல்ல. இந்த விஷயங்கள் அப்படிப்பட்டவைதான். மிக முக்கியத்துவமான கேள்வி என்னவென்றால், உங்களுக்கு விழிப்புடன் இருப்பது மிக முக்கியமானதா அல்லது உறக்கத்தில் இருப்பதா என்பது. உறக்கத்துக்கும், விழித்திருத்தலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் வாழ்வு மற்றும் மரணம் போன்றது. நீங்கள் உறக்கத்தில் இருக்கும்பொழுது, அது நீங்கள் இறந்துவிட்டதைப் போன்று உள்ளது.
மக்கள் உறக்கத்துடன் போராடுவது ஏனென்றால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் உறங்கவேண்டும், இல்லையென்றால் அவர்கள் ஆரோக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட படிகளை வெறுமனே பின்பற்றுவதைவிட வாழ்க்கை அதிக ஆழமானது என்பதை மக்கள் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. யாரோ ஒருவர் உடல்நலமில்லாமல் இருக்கும்பொழுது, நாம் தற்காலிகமான வழிகளை வழங்கலாம், ஆனால் முதலில் அவர்கள் ஏன் நலமில்லாமல் இருக்கின்றனர் என்று பார்ப்பதும் முக்கியம்.
சின்னச்சின்ன அறிவுரைகளில் கவனம் செலுத்துவதைவிட, வாழ்க்கையை நுட்பமான ஆழத்துடன் பார்த்து, நமது பிரச்சனைகளின் வேர்க்காரணிகளைப் புரிந்துகொள்வது அவசியம். உதாரணமாக, நிரம்பிய வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வது உடலுக்குக் கேடு நிறைந்ததாக இருக்க முடியும். உடல் நலக்குறைவு ஏன் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், அதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதும் அத்தியாவசியமானது. ஆனால் நிச்சயமாக, தாமதமாகச் சாப்பிடுவது அதிகமான மந்தநிலையை உருவாக்கும் காரணத்தினால், நீங்கள் உறக்கத்தில் வீழ்ந்துவிடுவீர்கள்.
சின்னச்சின்ன அறிவுரைகளில் கவனம் செலுத்துவதைவிட, வாழ்க்கையை நுட்பமான ஆழத்துடன் பார்த்து, நமது பிரச்சனைகளின் வேர்க்காரணிகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
உறக்கத்தின்போது, வளர்சிதைமாற்ற செயல்பாடு குறைந்துவிடுவதால், செரிமான செயல்முறை நன்றாக இயங்குவதில்லை. இது நன்கு அறியப்பட்ட ஒரு உண்மை. இப்போது, இந்த கனமான பையானது, மற்ற வெவ்வேறு உறுப்புகள் மீது சரிந்திருப்பதாக கற்பனை செய்யுங்கள். உங்களது உறக்கத்தில் நீங்கள் புரண்டுபடுக்கும் நிலையில், செரிமான உறுப்பு உங்களது கல்லீரல், மண்ணீரலை அழுத்தி, உங்கள் உடலுக்குள் ஒரு ரோட் ரோலர் போல செயல்பட்டு, மற்ற பிரச்சனைகளை உருவாக்கமுடியும். இந்த மாதிரி நீங்கள் உறங்கினால், உங்களது உடல் கட்டமைப்பைப் பொறுத்து, நீங்கள் உடல் நலிவடைவது எந்த நேரத்திலும் கட்டாயம் நிகழும்.
உங்களுக்கு ஒரு வலிமையான உடல் கட்டமைப்பு இருந்தால், நீங்கள் நோய்வாய்ப்படுவதற்கு சில வருடங்கள் எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு பலவீனமான உடலமைப்பு இருக்கும் நிலையில், இதனை நீங்கள் தினசரி செய்தால், சில மாதங்களுக்குள் நீங்கள் நலிவடையக்கூடும். ஆகவே, சாப்பிடுவதற்கும், உறங்குவதற்கும் இடையே குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு மணி நேரங்கள் இடைவெளி இருக்கவேண்டும். அதனுடன், இரவு நேரங்களில் நீங்கள் இலேசான உணவு சாப்பிடவேண்டும்.
யாரோ ஒருவருக்கு, ஒன்பது மணிக்கு உறங்கச்சென்று 12:30 மணிக்குக் கண்விழிக்கும் பிரச்சனை இருந்தால், அவர்கள் பன்னிரண்டு மணிக்கு உறங்கச்சென்று, காலை நான்கு மணிக்கு எழுந்துகொள்வது மேலானதாக இருக்கக்கூடும். நீங்கள் எட்டு மணி நேரங்கள் உறங்கவேண்டும் என்று உங்களுக்குக் கூறியது யாராக இருந்தாலும், அவர்கள் உங்களது உடலின் தனிப்பட்ட தேவைகளை கிட்டத்தட்ட கருத்தில் கொள்ளவில்லை. உறக்கத்துக்கு என்று பொதுவான பரிந்துரை கிடையாது. ஒருநாள், உங்களது உடலுக்கு ஐந்து மணி நேரங்கள் உறக்கம் தேவைப்படக்கூடும், மற்றொரு நாள், அதற்கு இரண்டு மணி நேரங்கள் மட்டும் தேவைப்படக்கூடும்.
உங்களுக்குத் தேவைப்படும் உறக்கமானது, பகற்பொழுதில் நீங்கள் செய்துள்ள செயல்பாட்டின் விதம் மற்றும் அளவினைச் சார்ந்திருக்கிறது. உறக்கம் குறித்த மற்ற பரிந்துரைகளை பின்பற்றுவதைவிட, உடலின் தேவையைச் சார்ந்து நடந்துகொள்ளுங்கள். “எட்டு மணி நேரங்கள் நீங்கள் உறங்கக் கடவது”, என்று கூறும் கட்டளைகள் எதுவுமில்லை.
தற்போது பிரச்சனை என்னவென்றால், நீங்கள் விழித்திருக்க விரும்பும்போது, உங்களால் விழித்திருக்க இயலவில்லை, மற்றும் நீங்கள் உறங்குவதற்கு விரும்பும்பொழுது, உங்களால் உறங்க இயலவில்லை. அடிப்படையான வடிவமைப்பு நன்றாக இருக்கிறது என்றாலும், நாம் உள்ளே என்ன செய்கிறோம் என்பதும், தினசரி அளவில் நாம் உருவாக்கும் சாஃப்ட்வேரும் நன்றாக இயக்கப்படவில்லை. நீங்கள் அவற்றை சரியானமுறையில் இயக்கினால், அழுத்தம் இல்லாமல் வாழ்வது சாத்தியமாகிறது. ஏனென்றால் நன்கு இயக்கப்படும் ஒரு கட்டமைப்பு என்றால், நீங்கள் குறைந்தபட்ச அளவுக்கான உராய்வுடன் வாழ்கிறீர்கள் என்று பொருள்.
உங்களுக்குத் தேவைப்படும் உறக்கமானது, பகற்பொழுதில் நீங்கள் செய்துள்ள செயல்பாட்டின் விதம் மற்றும் அளவினைச் சார்ந்திருக்கிறது.
எப்படி உறங்குவது என்று மக்களுக்குக் கூறுவதைக்காட்டிலும், எப்படிக் கண்விழிப்பது என்று நான் கூறுகிறேன். நாளை காலையில் கண்விழிக்கும்பொழுது, நீங்கள் இதனை அறிந்திருக்க வேண்டும், அதாவது இயற்கை மரணத்தின் காரணமாக பல இலட்சக்கணக்கானவர்கள் கண்விழிப்பதில்லை. நீங்கள் காலையில் எழுந்திருக்கும்போது, உங்களையே கிள்ளிப் பார்த்துக்கொள்ளுங்கள், நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா என்று பாருங்கள், பிறகு உங்களுக்கு நீங்களே புன்னகை செய்துகொள்ளுங்கள். எதைப் பார்த்து புன்னகைப்பது என்று வியந்தால், உங்களது படுக்கையறையின் விட்டத்தில் சுழலும் மின்விசிறியே போதுமானதுதான். நீங்கள் உயிருடன் இருப்பதுதான் முக்கியமான விஷயம்.
உண்மையில், உங்களிடம் இருக்கும் ஒரே விஷயம் உயிர் மட்டும்தான். உங்களிடம் ஒரு வேலை, பணம், சொத்து மற்றும் ஒரு குடும்பம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்களிடமிருந்து உயிர் விலக்கப்பட்டால், உங்களிடம் எதுவும் இல்லை. நீங்கள் நீண்ட நெடுங்காலமாக மரணமடைந்திருந்தீர்கள், மற்றும் ஒரு சிறிதளவு காலம் மட்டும்தான் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே, இன்றைக்கு நீங்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு நீங்களே புன்னகைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கைக்கடிகாரத்தை நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும், நீங்கள் இன்னமும் உயிருடன் இருப்பதை உணர்ந்திடுங்கள். நீங்கள் கடைசியாக கடிகாரத்தில் நேரம் பார்த்ததிலிருந்து பலரும் இறந்துபோயிருக்கலாம்.
இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் மகத்தான பிரம்மாண்டம், உயிர். அது உங்களுக்குள் துடித்துக்கொண்டு இருக்கிறது. மென்மேலும் விழிப்புடன் இருப்பதில் நீங்கள் கவனம் செலுத்தினால், உறக்கம் தானாக கவனித்துக்கொள்ளப்படும்.