சிறப்புக் கட்டுரை

விடுபடுதல்: நீங்கள் உருவாக்கிய சிறையில் நீங்கள் கைதியாக உள்ளீர்களா?

சத்குருவின் வழிகாட்டுதலுடன், புரிதலுணர்வில் வாழ்வை மாற்றும் ஆற்றல் வாய்ந்த ஒரு நகர்வுக்குத் தயாராகுங்கள். எல்லைகளை உடைத்து, ஆழமான நிதர்சனங்களை காண்பதற்கான உந்துதலை உணர்பவராக நீங்கள் இருந்தால், இந்தப் பதிவு உங்களுக்கானது. மனிதகுலம் வாழ்ந்துவரும் உருவகக் கூண்டு, விடுதலையின் சாரம், மற்றும் வாழ்வை உணர்வதற்கான மிக ஆழமானதொரு வழியை நோக்கி உங்கள் பயணத்தை எப்படித் தொடங்குவது என்பதை அறிந்திடுங்கள். வாழ்க்கை உங்களைக் கடந்து செல்லவிடாதீர்கள் – ஆழமாக வாழ்வதற்குத் துணியுங்கள்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. என் வாழ்க்கையில் ஆழமான ஒன்றை உணர்வதற்கு நான் விரும்புகிறேன். நான் எங்கிருந்தாலும், சில அற்புதமான அனுபவங்கள் எனக்குக் கிடைத்துள்ளன, ஆனால் ஆழமானதாக எதுவும் இல்லை. நேரம் கடந்துகொண்டிருப்பதை நான் உணர்கிறேன், என்ன செய்வது?

விழிப்பின் ஆசிர்வாதத்திலிருந்து ஆழமான நிதர்சனங்களுக்கு

சத்குரு: எல்லாவற்றுக்கும் முதலில், ஒரு தனிமனிதர் தற்போது அவர்கள் இருப்பதைவிட அதிக ஆழமான ஏதோ ஒன்று இருக்கிறது என்று உணர்வதே, அவருக்கு ஒரு மகத்தான ஆசிர்வாதமாக இருக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வுகூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் சாப்பிடுவதும், அருந்துவதும், ஏதேதோ செய்துகொண்டிருப்பதும்தான் வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். மிக ஆழமான ஏதோ ஒன்று இருப்பதாக விழிப்புணர்வு அடைவது ஒரு ஆசிர்வாதம். அதே நேரத்தில், ஆழமானதை ஒரு வேட்டைக்காரனின் மனோபாவத்தில் அணுகாதீர்கள்.

இங்கே மிகவும் ஆழமானது மற்றும் மிகவும் அபச்சாரமானது இரண்டுமே உள்ளது. ஆழமானதை அடைவதற்கு உங்களுக்குக் கருவிகள் தேவைப்படுகிறது. இன்னர் இஞ்ஜினியரிங் என்பது, தேவையான கருவிகளை வழங்குவதைக் குறித்தது. ஒரு நாற்காலியின் பாகத்திலிருந்து ஒரு திருகாணியை வெறும் கைகளை மட்டும் பயன்படுத்திக் கழற்றுமாறு உங்களிடம் நான் கூறினால், திருகாணிகள் வெளியில் வருவதற்குள் உங்கள் விரல் நகங்களை நீங்கள் இழக்கவேண்டியிருக்கலாம். மாறாக, நான் உங்களிடம் ஒரு திருகு இயக்கி கருவியைக் கொடுத்தால், ஒரு நிமிடத்தில் உங்களால் திருகாணியைக் கழற்றிவிட முடியும். ஆனால் நான் உங்களுக்கு ஒரு திருகு இயக்கி கருவியைக் கொடுக்க, அதை நீங்கள் உங்கள் காதுகளுக்குள் வைத்துத் திருகினால், வேறு ஏதாவதுதான் நிகழும்.

ஆழமானதை அடைவதற்கு உங்களுக்குக் கருவிகள் தேவைப்படுகிறது. இன்னர் இஞ்ஜினியரிங் அல்லது ஈஷா யோகா என்பது, தேவையான கருவிகளை வழங்குவதைக் குறித்தது.

உங்களது வாழ்க்கை முழுவதும் நீங்கள் ஒரு அறையில் வாழ்ந்ததாக வைத்துக்கொள்வோம். அப்போது, அந்த அறையைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதே உங்களுக்குத் தெரியாது. பெரும்பாலான மனிதர்கள் இருப்பது இந்த நிலையில்தான் – அவர்கள் தம்முடைய சொந்த சிறிய அறையிலேயே, அவர்களது சொந்த மனதுடனேயே, இதனைத் தாண்டி ஒன்று இருக்கிறது என்ற கவனம் இல்லாமலேயே வாழ்கின்றனர்.

ஆகவே, குறைந்தபட்சம் நீங்களாவது இதைத் தாண்டி ஏதோ இருப்பதை அறிந்து, அங்கே செல்வதற்குத் துணிவு கொள்கிறீர்கள். நான் உங்களிடம் ஒரு திறவுகோலைக் கொடுத்தால், இந்த எல்லா சுவர்கள் மற்றும் கதவுகளுக்கு நடுவில், இந்தத் திறவுகோல் மிகச் சரியாக பொருந்தக்கூடிய அந்த மிகச் சிறிய பூட்டை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் திறவுகோலை அங்கே பொருத்தி, சரியானபடி திருகினால், பிறகு அது உங்களுக்காக ஒட்டுமொத்தமான ஒரு புதிய உலகத்தைத் திறக்கும். அந்த திறவுகோலைக்கொண்டு, நீங்கள் கதவுகளில், சுவர்களில் அல்லது உங்கள் தலையில்கூட, வேறெந்த இடத்தில் குத்திக்குடைந்தாலும், அது எதையும் திறந்து வெளிப்படுத்தாது. இதுதான் வாழ்வின் இயல்பு.

கூண்டின் வசதியும், வரையறையும்

மனிதகுலத்தின் சூழ்நிலை இதுவே: யோகாவில், ஒரு உருவகம் கூறும் கூற்றுப்படி, நெடுங்காலமாக ஒரு கூண்டுக்குள் வாழ்ந்திருந்த பறவையைப் போன்று மனிதர்கள் உள்ளனர். ஏதோ ஒரு கட்டத்தில் கதவு காற்றில் அடித்துச் செல்லப்பட்டாலும்கூட, கூண்டின் வசதி, மற்றும் நேரம் தவறாத உணவின் வருகையின் காரணத்தால், பறவையானது கூண்டை விட்டுச் செல்லாது. பறப்பதன் சுதந்திரத்தை நீங்கள் அனுபவித்தால், உங்களுக்கான உணவை நீங்கள் தேடிக் காணவேண்டும். ஆனால் இந்த சுதந்திரம் சில அபாயங்களுடன்தான் வருகிறது. வேட்டைக்காரர்கள் உங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடும், வேட்டை விலங்குகள் பிடித்து உங்களைச் சாப்பிடக்கூடும், அல்லது நீங்கள் ஒரு கட்டிடத்தின் மீது மோதிவிடக்கூடும். எதுவும் நிகழலாம்.

ஒரு கூண்டுக்குள் அமர்ந்திருப்பதில் ஒருவிதமான சௌகரியம் உள்ளது. கதவு திறந்திருந்தாலும்கூட, கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் ஒரு நெடிய கர்மவினை மனிதர்களுக்கு உள்ளது. இதுதான் பெரும்பாலான மனிதர்களின் இயல்பாக உள்ளது. பரிணாம செயல்முறை, உங்களுக்குக் திறந்தகதவு இருக்கும் ஒரு இடத்தைக் கொடுத்துள்ளது, ஆனாலும் கூண்டில் இருக்கும் சௌகரியம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது.

உங்களுக்கு நீங்களே அமைத்துக்கொள்ளும் எல்லைகள் சௌகரியமாக உள்ளன. ஒரு சிறையின் அறைக்குள் வாழ்வது பாதுகாப்பானது.

இந்தியாவில், நிழல் உலக தாதா குழுக்களிடையே சண்டை நிகழும்போது, சில குற்றவாளிகள், வேண்டுமென்றே சிறிய குற்றங்களைச் செய்துவிட்டு, சிறைக்குச் சென்றுவிடுவார்கள். அங்கு மாநில ஆயுதக் காவல்படை பாதுகாக்கிறது; அவர்கள் மாநில பாதுகாப்பின் கீழ் இருப்பதால், பத்திரமாக இருப்பார்கள். வெளியிடங்களில் வீதிகளில் இருந்தால், அவர்கள் கொல்லப்படலாம்.

அதைப்போலவேதான் இது – கூண்டின் வசதிக்கு நீங்கள் பழக்கப்பட்டுவிட்டீர்கள். உங்களுக்கு நீங்களே அமைத்துக்கொள்ளும் எல்லைகள் சௌகரியமாக உள்ளன. ஒரு சிறையின் அறைக்குள் வாழ்வது பாதுகாப்பானது. தென்னிந்தியாவின் சிறைகளிலும், சில அமெரிக்க சிறைகளிலும் சிறைப்பட்டவர்களுக்கான உள்நிலை சுதந்திரம் (Inner Freedom for the Imprisoned) என்று அழைக்கப்படும் வகுப்புகளை நாம் நடத்தியுள்ளோம். சிறையில் இருந்தாலும், உங்களுக்குள் நீங்கள் சுதந்திரமாக இருக்கமுடியும் என்பதை உணர்த்துவதே அதன் நோக்கம்.

சிறை வாழ்க்கை: மனித நிலையின் ஒரு சிறு மாதிரி

கோவை மத்தியச் சிறைச்சாலையில் எப்படி நான் முதன்முதலாக ஒரு வகுப்பு நடத்தினேன் என்பதை இங்கு கூறுகிறேன்: ஒருமுறை, உள்ளூர் லேடீஸ் க்ளப் என்னை காலைநேர சிற்றுண்டி உரைக்காக அழைத்திருந்தனர். அந்த க்ளப்பின் காம்பவுண்ட் சுவர் வழக்கத்துக்கு மாறான உயரத்துடன் இருந்ததை நான் கவனித்தேன்; அது 20 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்தது. இந்த நகரத்துக்குப் புதிய நபராகிய எனக்கு, நகரத்தின் மையத்தில் இருந்த அந்தப் பெரும் சுவர் ஆர்வத்தை ஊட்டியது. ஆகவே நான் அதைப்பற்றி விசாரித்தேன். அப்போது, அது மத்தியச் சிறைச்சாலை என்று யாரோ கூறினார்கள்.

இந்த சுவருக்குப் பின்னால் யார் இருக்கின்றனர் என்று பார்ப்பதற்கு நான் விரும்பினேன். அந்த சிறைச்சாலையின் கண்காணிப்பாளர், தியான அன்பர்களுள் ஒருவர் என்பதைக் கண்டுபிடித்தேன். சிறைச்சாலையில் ஒரு யோகா வகுப்பு நடத்த விரும்புவதாக நாம் அவரிடம் கூறியபோது, அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. அதற்கு அவர்கள் சம்மதிப்பதற்கு இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டன.

பாதுகாப்புக் காரணங்களால், பத்து நாள் வகுப்பின்போது, அங்கே நான் தங்குவதற்கு அவர்களால் எனக்கு அனுமதி அளிக்க இயலவில்லை. ஆகவே, நான் யோகா வகுப்புகளை நடத்துவதற்கு தினமும் காலையில் அங்கே சென்றேன். அப்போது முதல், சிறைச்சாலையில் யோகா வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில அம்சங்களில், இந்த சிறைச்சாலை குறிப்பிடத்தக்க ஒரு இடமாக உள்ளது. 160 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலை, கோவை மாநகரத்தின் சில மிகப் பெரும் மரங்களைக் கொண்டுள்ளது. பிரம்மாண்டமான, 100 ஆண்டுகள் பழமையான மழைக்காடுகளின் மரங்கள் ஒவ்வொன்றும், அரை ஏக்கருக்கும் அதிகமாக நிழல் தருவதை நீங்கள் அங்கே காணமுடியும்.

இதுதான் மனித நிலைப்பாடு – சுதந்திரம் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.

சிறைச்சாலையில், சரியான நேரத்திற்கு உணவு வருவதை நான் கண்டேன். உங்களுக்காக யாரோ ஒருவர் கதவுகளைத் திறக்கிறார், மற்றும் மூடுகிறார். அது தன்னளவில் ஒரு சமூகமாக உள்ளது - மக்கள் வேலை செய்கின்றனர்; அவர்களுக்கு நண்பர்கள் உண்டு; அவர்களுக்கு அனைத்து விஷயங்களும் நிகழ்கின்றன. ஒரே பிரச்சனை என்னவென்றால், சாவியை வேறொருவர் வைத்திருக்கிறார். அனைத்தும் சாதாரணமாக இருப்பதாகத் தோன்றியபோதும், அங்கிருக்கும் காற்றில் மிக ஆழமானதொரு வலியின் உணர்வு நிலவுகிறது.

காற்றில் மிக ஆழமானதொரு வலியின் உணர்வு இருக்கும் காரணத்தால், ஒரு சிறைக்குள் சென்றுவிட்டு என் கண்களில் கண்ணீரில்லாமல் ஒருபோதும் என்னால், வெளிவர முடிந்ததில்லை. பெரும்பாலான சிறைவாசிகள் வெளியிலிருக்கும் மக்களைவிட உண்மையிலேயே ஆரோக்கியமாக உள்ளனர்; அவர்கள் அதிக பாதுகாப்புடன் உள்ளனர், மற்றும் அங்கே சிறைக்கு உள்ளே உடல்ரீதியான சுகவீனங்களும், நோய்களும், தொற்றுக்களும் குறைவாக இருக்கின்றன. எல்லாமே நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் அங்கே வலி உள்ளது, ஏனென்றால் இதுதான் மனித நிலைப்பாடு – சுதந்திரம் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.

பிழைத்திருத்தல் மற்றும் வளர்ச்சியின் இருவேறு தன்மைகள்

உங்களை ஒருவர் பூட்டி வைத்திருந்தாலும், அல்லது உங்களை நீங்களை பூட்டிக்கொண்டாலும், சுதந்திரம் இல்லாமை வலியை ஏற்படுத்துகிறது. மக்கள் எப்போதும் தங்களை பிஸியாக வைத்திருப்பது ஏனென்றால், அவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தால், தாங்கள் சிறைப்பட்டதைப்போல உண்மையாகவே உணர்வார்கள்.

இந்த சோதனையை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரே இடத்தில், எதுவும் செய்யாமல் வெறுமனே அமர்ந்திருங்கள். கைபேசி இல்லை, தொலைக்காட்சி இல்லை, புத்தகம் இல்லை, எந்த கவனச் சிதறலும் இல்லை, யாரிடமும் பேச்சில்லை. விழிப்புடன் இருங்கள், நன்றாக சாப்பிடுங்கள், அப்படியே அமர்ந்திருங்கள். அப்போது உங்கள் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

அதைக் கடந்து செல்ல ஆர்வம் கொள்வது முதல் படி. ஒரு இடத்தைச் சென்றடையும் ஆர்வம் அவர்களுக்கு இல்லையென்றால், யாரும், எங்கும் செல்வதில்லை. நமது உடல்தன்மையான இயல்புகள் அமைத்திருக்கும் எல்லைகளைக் கடந்து செல்வதற்கான ஆர்வத்தைப்பற்றி இப்போது நாம் பேசிக்கொண்டுள்ளோம். நமது உடல்ரீதியான இயல்பில், இயற்கையாகவே எல்லைகள் இருக்கின்றன. எல்லைகளுக்கான இந்த ஆசை, ஒரு முஷ்டி அளவு இருக்கும் நமது ஊர்வன மூளையிலிருந்து எழுகிறது. மூளையின் இந்த பாகம்தான், பிழைத்திருத்தலின் உந்துதலை இயக்குகிறது. நமது மூளையின் மற்றொரு பாகமாகிய பெருமூளை மேலுறை (cerebral cortex) எப்போதும் விரிவடைதலைத் தேடுகிறது.

உங்களை ஒருவர் பூட்டி வைத்திருந்தாலும், அல்லது உங்களை நீங்களே பூட்டிக்கொண்டாலும், சுதந்திரம் இல்லாமை வலியை ஏற்படுத்துகிறது.

இந்த இரண்டு அம்சங்களும் முரண்படுவதாகத் தோன்றக்கூடும், ஆனால் அவைகள் முரண்படவில்லை. அவைகள் வாழ்வின் இரண்டு வித்தியாசமான பரிமாணங்கள். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, பௌதிக உடலுக்கு எல்லைகள் தேவைப்படுகிறது. உங்களது பௌதிக உடல் மீது எந்த விதமான தலையீட்டையும் நீங்கள் விரும்புவதில்லை. உங்களுக்குள் இருக்கும் மற்ற அனைத்தும் விரிவடைதலைத் தேடுகிறது. பௌதிக உடல்தன்மை என்பது என்ன மற்றும் அதை கடந்திருப்பது என்ன என்பதற்கு இடையே உங்களால் வித்தியாசப்படுத்த முடியவில்லை என்றால், பிறகு ஒரு பக்கம் விடுதலையடையும் விருப்பத்துக்கும், மறுபக்கம் உடலின் எல்லைகளைப் பாதுகாக்கும் விருப்பத்துக்கும் இடையே ஒரு போராட்டம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

விடுதலை அடைவதற்கான ஒருவரது எல்லைகளைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் உடல்தன்மையில் இருந்து விழிப்புணர்வுடன் உங்களை அடையாளப்படுத்தாமல் இருப்பதுதான் உங்களுக்கு நிகழவேண்டிய அடிப்படையான மாற்றமாக இருக்கிறது. இந்த பௌதிக உடல் உங்களுக்கு சொந்தமானது, ஆனால் நீங்கள் என்பது, அது அல்ல. உங்களுக்கு சொந்தமான ஒரு நாற்காலியைப் போல, ஆனால் நீங்கள் அது அல்ல. தற்போது அதை நீங்கள் பயன்படுத்துவது நல்லது. அதைப்போன்று, இந்த உடல் உங்களுக்கு சொந்தமானதுதான், ஆனால் அது நீங்கள் அல்ல – இது உறுதியாக நிலைநிறுத்தப்பட வேண்டும்.

விடுதலையைத் தேடாதீர்கள். உங்களைப் பிணைத்திருப்பது எது என்பதை மட்டும் அடையாளம் காணுங்கள். அதை நீங்கள் உடைத்தெறிந்தால், நீங்கள் விடுதலை அடைகிறீர்கள்.