கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. இப்போதெல்லாம், பல மருத்துவர்கள், குடல் – மூளை குறித்தும், தலையிலிருக்கும் மூளைக்கு தாக்கம் ஏற்படுத்துவதற்கு அது எப்படி சமிக்ஞைகளை அனுப்புகிறது என்றும் பேசுகின்றனர். நாம் எந்த விதமான உணவைச் சாப்பிடுகிறோம் என்பதும், நமது உணவுப் பழக்கங்களும்கூட நம்முடைய உணர்ச்சியின் சமநிலை, மன ஆரோக்கியம், மற்றும் வேறு பல அம்சங்களின் மீது தாக்கம் ஏற்படுத்த முடியுமா?
சத்குரு: இன்றைய உலகில் நிறைய மக்கள் "பன்றியைப் போல" அவர்கள் வழிக்கு என்ன வந்தாலும் பாகுபாடின்றி உண்ணும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். பல புத்தகங்களும் மனிதர்களை அனைத்துண்ணிகள் என்று குறிப்பிடுகின்றன. அப்படியானால் கிட்டத்தட்ட எதையுமே நம்மால் உண்ணமுடியும், அது ஒருவிதத்தில் உண்மைதான். ஆனால் கேள்வி இதுதான், உங்களை நீங்கள் எந்தவிதமாக செய்துகொள்ள விரும்புகிறீர்கள்? இது குறித்து உங்களுக்கு அக்கறை இருந்தால், நீங்க எதை, எப்படி, எப்போது, எவ்வளவு உண்கிறீர்கள் என்பதை கவனித்து உண்ணவேண்டும்.
மனிதரின் ஒரு முக்கியமான குணாதிசயம் என்னவென்றால், அது உணவாக இருந்தாலும் வேறெதுவாக இருந்தாலும், விழிப்புணர்வுடன் எதைச் சாப்பிடுவது என்று பகுத்துப்பார்த்து, விழிப்புணர்வாக தேர்ந்தெடுக்கும் திறன் கொண்டிருப்பது. ஆனால் உணவுத் தொழிற்சாலை அடங்கலாக, வர்த்தகத்தின் இயல்பு எப்படி உள்ளதென்றால், அவர்கள் உங்களைக் கவர்ந்திழுக்க விரும்புகின்றனர். நீங்கள் பாகுபாடின்றி அதிகம் சாப்பிட்டால், அவர்களது வர்த்தகத்துக்கு அது மிகவும் சிறப்பாக இருக்கிறது.
அது ஒருபக்கம் இருக்கும் நிலையில், உங்களது குடலுக்கு மட்டும்தான் மூளை இருக்கிறது என்பதில்லை. உங்கள் இதயமும்கூட ஒரு சிறிய மூளையைக் கொண்டிருப்பதாக அறிவியல் முடிவுகள் தெரிவிக்கின்றன. உண்மையில், உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் அதற்கே உரிய சிறியதொரு மூளையைக் கொண்டுள்ளது. அவை அனைத்தையும் ஒன்றுதிரட்டினால், அது உங்கள் தலையின் மூளையைவிட மிகப் பெரியதாகவும், அதிக திறனுடனும் இருக்கிறது.
மனநலன் என்று வரும்போது, இன்றைய உலகில் கவனம் செலுத்தவேண்டிய இரண்டு பெரிய விஷயங்கள் உள்ளன. மக்கள் நீண்டகாலம் வாழ்வதால் – இது ஒரு நல்ல விஷயம்; மக்கள் முழு அளவிலான வாழ்க்கை வாழ்கின்றனர் – இதில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் மனரீதியான வீழ்ச்சி, மறதி, மற்றும் அல்சீமெர்ஸ் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட தனிமனிதர்கள், சாஃப்ட்வேர் இல்லாத ஹார்ட்வேர் போலாகின்றனர். சாஃப்ட்வேர் இல்லாமல், அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரிவதில்லை.
இப்போது அதிகரித்துவரும் மற்றொரு பிரச்சனை என்னவென்றால், 20 வருடங்களுக்கு முன்புகூட நம் கற்பனையில் எட்டாதிருந்த ஒரு விஷயம், அதாவது அபாயகரமான அளவில் குழந்தைகள் மனரீதியாக உறுதியிழந்து போயிருக்கின்றனர். அட்லாண்டாவை அடிப்படையாகக் கொண்ட, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention) கூறுவதைப்போல், அமெரிக்காவில் ஒவ்வொரு மூன்று பதின்பருவ பெண்களில் ஒருவர் மன அழுத்த அறிகுறிகளுடன் உள்ளனர். முந்தைய தலைமுறைகளில், குறிப்பாக பதின்பருவத்து பெண்கள் காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டும், உற்சாகத் துள்ளலுடனும் இருப்பது வழக்கம். ஆனால் இப்போது, அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையானது, அதனுடைய உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கவேண்டிய ஒரு வயதில், மன அழுத்தம் பொதுவாக அதிகரித்துவருகிறது. இதை நோக்கித்தான் நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதுடன் அதற்குப் பல காரணங்களும் இருக்கின்றன.
கடந்த சில பத்தாண்டுகளில் நாம் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்தும் – மரங்கள், ஆறுகள், நீரின் தரம், மண்ணின் தரம், மற்றும் உங்கள் மன ஆரோக்கியம் – மிகவும் நேரடித் தொடர்புடையவை. தற்போது, சுமார் 27,000 நுண்ணுயிரினங்கள் ஒவ்வொரு வருடமும் மறைந்துகொண்டிருக்கின்றன. நுண்ணுயிர்கள் மறையும்போது, நம்மையும் மற்ற ஒவ்வொரு உயிரையும் உருவாக்கும் உயிரினங்களின் அடிப்படையான தன்மையில் மாபெரும் ஓட்டைகள் அல்லது வெற்றிடங்கள் எழுகிறது என்பதுதான் அதன் அர்த்தம்.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கான நுண்ணுயிரினங்கள் மறைந்துவிட்டதென்றால், மனிதர்களும், மற்ற பல உயிரினங்களும் பிழைத்திருக்க முடியாது. மண்ணில் நுண்ணுயிரினங்களின் மறைவு, எல்லா விதமான ஆரோக்கியப் பிரச்சனைகளையும் விளைவிக்கும். நீங்கள் முதலில் மனரீதியான உறுதியின்மையைப் பார்ப்பீர்கள், ஏனென்றால் மனக் கட்டமைப்பானது சாஃப்ட்வேர் போல இருப்பதால், வழக்கமாக அதுதான் முதலில் தொந்தரவுக்கு உள்ளாகி, நொறுங்குகிறது. ஹார்ட்வேராக இருக்கும் உங்கள் உடல், குறைந்த சிக்கலான இயக்கங்களுடன், வித்தியாசமான விதத்தில் கட்டமைக்கப்பட்டு இருப்பதால், அது நொறுங்குவதற்கு சற்று காலதாமதம் ஆகிறது.
மனநலமும், குடல் ஆரோக்கியமும் முழுமையான தொடர்புடையவை. உங்களுக்குள் என்ன விதமான உணவு செல்கிறது, அது எவ்வாறு உங்களுக்குள் செல்கிறது மற்றும் ஒரு நாளில் எத்தனை முறைகள் அது உங்களுக்குள் சென்று சேர்கிறது என்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க தாக்கம் உண்டு.
பல வெவ்வேறு அம்சங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான விஷயம் இது: உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட நிலையில் நீங்கள் விழிப்புணர்வாக, சமநிலையாக, மற்றும் உறுதியாக இருக்கவேண்டும் என்றால், ஒரு நாளில் எப்போது, எத்தனை முறை சாப்பிடவேண்டும் என்பதை தீர்மானிப்பது மிகவும் முக்கியமானது. ஒரு நாளின் எட்டிலிருந்து பத்து மணி நேரங்களுக்குள் சாப்பிடுவதைத் தேர்வு செய்வது உங்கள் மன நலத்துக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்த விஷயமாக இருக்கிறது. அந்த எட்டு முதல் பத்து மணி நேரங்களுக்குள் நீங்கள் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ சாப்பிட்டால், உங்களது குடல் ஆரோக்கியம் பெருமளவு சீராக இருக்கும். அடுத்த பதினாறு மணி நேரங்களுக்கு, நீங்கள் ஒரு இடைவெளியை அனுமதிக்க வேண்டும்.
உங்கள் இதயத்திலும்கூட ஒரு “மூளை” இருக்கும் காரணத்தால், அதை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒரு கணம் கூட படபடப்பு, கோபம், பொறாமை, வெறுப்பு, துவேஷம், எரிச்சல் அல்லது வேறு எந்த இனிமையற்ற உணர்ச்சியும் இல்லாமல் 24 மணி நேரங்களைக் கழித்தால், உங்களுடைய காரண அறிவு இரண்டு மடங்கு கூர்மையாக இருக்கமுடியும் என்பதைக் காட்டும் ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன.
நீங்கள் கோபம்கொள்ளும் சில பொழுதுகள் இருக்கலாம், ஆனால் பெரும்பாலான மக்களுக்கு எல்லா நேரமும் கோபமாக இருப்பதற்கான சக்தி இருப்பதில்லை. 24 மணி நேரமும் கோபமாக இருப்பதற்கு, நீங்கள் ஒரு யோகியாக இருக்கத் தேவைப்படுகிறது. ஆனால் உங்கள் காழ்ப்புணர்வை 24 மணி நேரங்களும் நீங்கள் சுமந்திருக்க முடியும். காழ்ப்பு என்றால், வேறொரு நபரை இலக்காக வைத்துக்கொண்டு, உங்களை நீங்கள் காயப்படுத்திக்கொள்வீர்கள்.
காழ்ப்பு, பொறாமை, மற்றும் அது தொடர்பான உணர்ச்சிகளை நான் விவாதிப்பது ஏனென்றால், அவற்றை நீங்கள் 24 மணி நேரங்களுக்கு புழுக்கத்திலேயே வைத்திருக்க முடியும். கோபத்தையோ அல்லது வெறுப்பையோ ஒரு நீண்டகால அளவுக்கு உங்களால் நீடித்து வைத்திருக்க முடியாது. சிறிது நேரத்திற்குப் பிறகு நீங்கள் களைப்பாகிவிடுவீர்கள். ஆனால் காழ்ப்பு போன்ற இனிமையற்ற உணர்ச்சிகளில் நீங்கள் புழுங்கிக்கொண்டே இருந்தால், 10 வருட காலங்களில், உங்களது அறிவுத்திறன் குறைந்தபட்சம் 50 விழுக்காடு குறைந்துவிடும்.
உங்கள் உடலமைப்பில் இனிமையான உணர்வைத் தக்கவைத்திருப்பது, ஒருவரது மூளை ஆரோக்கியத்துக்கு மிக அவசியமானது. மூளையின் பல்வேறு நிலைகள் உள்ளன: ஒன்று குடலில், ஒன்று உங்கள் தலையில், மற்றும் ஒன்று உடலின் ஒவ்வொரு அணுவிலும் உள்ளது. நீங்கள் அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டியுள்ளது.
நீங்கள் மேம்பட்டு, உங்களுக்குள் ஒரு குறிப்பிடத்தக்க உயிராக இருக்க விரும்பினால், உங்கள் மூளையின் ஒவ்வொரு துளியும் அதற்காக செயல்படவேண்டிய தேவையுள்ளது. ஒரு குறிப்பிட்ட விதமாக நீங்கள் அதிர்வுறும்போதுதான் இது நிகழமுடியும். அது நிகழ்வதற்கு, நீங்கள் ஒரு இனிமையான உயிர்த்துளியாக இருக்கவேண்டியது தேவை.
மனரீதியாக ஆரோக்கியமில்லாமல் இருப்பதென்றால், உங்களுக்கு மருந்துகள் தேவைப்படும் அளவுக்கு நீங்கள் நலமில்லாமல் இருக்கவேண்டியதில்லை. நீங்கள் எரிச்சலாக அல்லது துன்பமாக இருந்தால், நீங்கள் மனரீதியான ஆரோக்கியமில்லாமல் இருக்கக்கூடும். உங்களது ஆனந்தம் என்பது, உங்களைச் சுற்றியிருப்பவர்கள், நீங்கள் விரும்பியவாறு இருக்கிறார்களா, இல்லையா என்பதைச் சார்ந்திருந்தால், அப்போதும் அது மனரீதியான ஆரோக்கியமின்மைதான். மருத்துவர்கள் அவர்களுக்கான தர நிர்ணயங்களை வைத்திருக்கட்டும். உங்களுக்கென்று, உங்களுக்கே உரித்தான மன ஆரோக்கியத்தின் தர நிர்ணயத்தை நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.
24 மணி நேரங்களுக்குள், உங்களிடம் எரிச்சல், குழப்பம், வெறுப்பு, அல்லது காழ்ப்புணர்வின் ஒரு கணம்கூட இருக்கக்கூடாது. இதுதான் மன ஆரோக்கியமாகத் தோன்றவேண்டும். உங்களது மனித அமைப்பில் நீங்கள் இனிமையை உருவாக்கினால், வாழ்க்கை இயற்கையாகவே செழிப்படையும்.