சத்குருவின் ஆழமான நுண்ணறிவின் துணையுடன் வாழ்க்கையின் போராட்டங்களைக் கடந்து, உங்கள் திசையைக் கண்டுகொள்ளுங்கள். குழப்பம் மற்றும் துன்பத்தை மீறி எழுவதற்கு உங்கள் உயிர்சக்திகளை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொண்டு, நீங்கள் விரும்பியவாறு உங்கள் வாழ்க்கையை உருவாக்குங்கள்.
கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. பல வருடங்களாக எனக்கு அதிக மனரீதியான, உணர்வுரீதியான துன்பத்தை ஏற்படுத்திவரும் ஒரு தனிப்பட்ட பிரச்சனையுடன் போராடிக்கொண்டுள்ளேன். இதனை வென்று, வாழ்க்கையில் சரியான திசையைக் கண்டுபிடிப்பதற்கு நான் என்ன செய்வது?
சத்குரு: “ஏதோ ஒரு விஷயம் என்னவென்று எனக்குத் தெரியாதபோது, அதை நான் எப்படி அடைவது?” பெரும்பாலான நேரங்களில், நீங்கள் தேடிக்கொண்டிருப்பது என்ன என்பதே உங்களுக்குத் தெரிவதில்லை, ஆனால் தற்போது உங்களிடம் இருப்பது என்னவாக இருந்தாலும், அது நீங்கள் தேடுவது அல்ல என்பது உங்களுக்குத் தெரிகிறது. ஆகவே, கைக்கெட்டாமல் நழுவும் அந்த ஒன்று என்ன? அது பரவாயில்லை. உங்கள் தற்போதைய நிலையைத் தாண்டி இருப்பது என்ன என்று நீங்கள் பார்க்க விரும்பினால், நீங்கள் சிறிதளவு உயரவேண்டும். ஒரு பரந்த கண்ணோட்டத்தைப் பெறுவதற்கு நீங்கள் உயரமான இடத்துக்கு ஏறவேண்டும். இப்போது, அதைத்தான் நீங்கள் செய்யவேண்டும்.
உங்கள் கண்ணோட்டத்தை மேம்படுத்தி, உங்களது தற்போதைய எல்லைகளைத் தாண்டிப் பார்ப்பதற்கு, நீங்கள் உயர வேண்டியுள்ளது. நீங்கள் உயர்வதற்கு, உங்களது உயிர்சக்திகளை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும். உங்களது உயிர்சக்திகள் அதிக தீவிரமாகிவிட்டால், நீங்கள் இயற்கையாகவே உயர்வீர்கள். அது உங்களுக்கு ஒரு மேலான கண்ணோட்டத்தைக் கொடுப்பதுடன், நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், உங்களது சக்திகள் உயர்ந்துவிட்டால், நீங்கள் இயற்கையாகவே சரியான திசையில் செல்வீர்கள். அடிப்படையில், உங்களுக்கு நான்கு தளங்கள் உள்ளன: உங்களது உடல், மனம், உணர்ச்சிகள், மற்றும் உங்களது சக்திகள். உடலின் தேவைகள் மற்றும் உந்துதல்களை மட்டும் நீங்கள் பின்பற்றினால், நீங்கள் சாப்பிடவும், உறங்கவும், இனப்பெருக்கம் செய்யவும், மற்றும் இறந்துபோவதுமாக மட்டும் இருப்பீர்கள். ஏனென்றால், உடலின் ஆர்வமெல்லாம் இதில் மட்டும்தான்.
உங்களது எண்ணப்போக்கை நீங்கள் பின்பற்றினால், தினசரி அளவில் நீங்கள் குழப்பமடைவீர்கள், ஏனென்றால் உங்கள் மனம்கூட வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு விஷயங்களைக் கூறுகிறது. உதாரணத்துக்கு, உங்கள் மனம் ஒரு திசையைக்குறித்து ஆலோசனை செய்யக்கூடும், ஆனால் நீங்கள் அந்த வழியில் நடக்கத் தொடங்குகையில், சட்டென்று வேறொரு வழி மேலானதாக இருக்கலாம் என்று மனம் கூறலாம். நீங்கள் கொண்ட கொள்கையில் பிடிவாதமானவராக இருந்தால்தவிர, நீங்கள் எப்போதும் குழப்பத்தையே உணர்கிறீர்கள். இது நல்ல விஷயம்தான். “இதுதான்” என்று தீர்மானிப்பதைவிட, குழப்பமாக இருப்பது மிகவும் மேலானது. குழப்பமாக இருப்பது என்றால், நீங்கள் இன்னமும் தேடுதல் மற்றும் கண்டுபிடிக்கும் செயல்முறையில் இருக்கிறீர்கள்.
முழுமையான கொள்கைப்பிடிப்பாளர்கள் தான், தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மற்ற அனைவரும், இயன்ற அளவு சிறப்பாக என்ன செய்வது என்று எப்போதும் தேடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். அதுதான் இருப்பதற்கான ஒரு நல்ல வழி. அதற்காக நீங்கள் எதையும் சாதிக்கமாட்டீர்கள் என்பது அர்த்தமல்ல. எப்போதும் தங்களது கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு, அடுத்ததாக என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளாமல் இருப்பவர்கள், இந்த உலகத்தில் சிறப்பான விஷயங்களைச் செய்வார்கள். கொள்கைப்பிடிப்பாளர்கள் ஏதோ ஒன்றை ஊடுறுவிச் செல்லக்கூடும், ஆனால் உடனடியாகவோ அல்லது சிறிது காலம் கழித்தோ, அவர்கள் கடுமையாக ஒரு பாறையில் மோதுவார்கள். அவர்கள் தங்களுடன் பலரையும் அழைத்துச்செல்லமாட்டார்கள் என்று மட்டும் நாம் நம்புகிறோம். துரதிருஷ்டவசமாக, வரலாறு முழுக்க பல நேரங்களில் நாம் கண்டுள்ள செயல்வடிவம் இதுவாகவே இருந்துள்ளது.
நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைச் சார்ந்திருந்தால், அது அதிகமான வலியின் பாதையில் அழைத்துச்செல்ல முடியும். உணர்ச்சி நிலையில் நீங்கள் யாரிடம் அதிக நெருக்கமாக உள்ளீர்களோ, அவர்கள் எப்போதும் உங்களை அதிகமாக காயப்படுத்த முடியும். யாரோ வீதியில் இருப்பவர்களின் அர்த்தமற்ற செயல் என்னவாக இருந்தாலும், அதை நீங்கள் ஒதுக்கிவிட முடியும். ஆனால் உங்களுக்கு இனிமையானவரும், மிக நெருக்கமான நபருமான ஒருவர் என்று வரும்போது, அங்கே எப்போதும் வலி ஏற்படும் பயம் இருந்துகொண்டுதான் உள்ளது.
உங்களது கண்ணோட்டம் உயருமளவுக்கு உங்கள் உயிர்சக்திகளைத் தீவிரப்படுத்துவது மிகவும் முக்கியமானது. மின்னோட்டத்தை அதிகரித்துவிட்டால், மின்விளக்கு பிரகாசமாக ஒளிர்கிறது, அந்த ஒளியில் நீங்கள் அதிகம் காண்கிறீர்கள்.
உங்களது உடலை, மனதை, அல்லது உங்களின் உணர்ச்சிகளை நீங்கள் நம்பமுடியாது. ஆனால் உங்களது உயிர்சக்திகளை நீங்கள் நம்பமுடியும். அவை ஒருபோதும் உங்களுக்கெதிராக செயல்படுவதில்லை. நீங்கள் விழித்திருந்தாலும் அல்லது உறக்கத்தில் இருந்தாலும், விழிப்புணர்வில் இருந்தாலும் அல்லது விழிப்புணர்வு இல்லாமல் இருந்தாலும், உங்களுடைய உயிர்சக்திகள் எப்போதும் உங்களது நல்வாழ்வுக்காக செயல்படுகிறது. நீங்கள் எனப்படுகின்ற இந்த நான்கு அம்சங்களுள், உங்கள் வாழ்க்கையின் முன்னணி முனையாக இருப்பதற்கு எது சிறந்த தேர்வாக உள்ளது? அதுதான் உங்களது உயிர்சக்திகள். மற்றும் அதுவேதான் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா என்றால் என்ன என்பதைக் குறித்தது. இங்கு நீங்கள் அமரும்போது, உங்கள் உடல், மனம், மற்றும் உணர்ச்சிகள் சிறிது தூரத்தில் விலகி உள்ளன, உங்கள் உயிர்சக்திகள் இங்கே மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக உள்ளன. இதனை நீங்கள் உறுதிப்படுத்தாவிட்டால், நீங்கள் எப்போதும் தவறாகவே வழி நடத்தப்படுவீர்கள்.
உங்கள் உடல் அதற்கான எல்லைகளைக் கொண்டுள்ளது; அது உங்களை அந்த எல்லை வரை மட்டுமே எடுத்துச் செல்லும். மாறாக, உங்களது மனம் உங்களை எண்ணற்ற திசைகளில் எடுத்துச் செல்லமுடியும். உங்களது உணர்ச்சிகள் உங்களை ஒரு ராட்டின சவாரி மீது எடுத்துச் செல்லக்கூடும். ஆனால் உங்களது உயிர்சக்திகள் எப்போதும் உங்கள் நல்வாழ்வுக்காக செயல்படுகிறது, ஒருபோதும் உங்களுக்கு எதிராக அல்ல. உங்களின் அந்த நம்பகமான அம்சத்தை நீங்கள் உங்கள் வாழ்வின் முன்னணி முனையாக்கவேண்டும். நீங்கள் இங்கு அமர்ந்திருந்தால், உங்களது சக்திகளே நீங்கள் யார் என்பதன் மிக ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக இருக்கவேண்டும்
நீங்கள் யார் என்பதன் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக உங்களது சக்திகள் இருக்குமேயானால், உங்கள் வாழ்க்கையை முற்றிலும் வித்தியாசமானதொரு வழியில் நீங்கள் நடத்துவீர்கள். நீங்கள் எங்கு சென்றடைவீர்கள் என்பதைப் பற்றிய குழப்பமே இருக்காது. நீங்கள் எங்கு சென்றாலும், அதை அழகானதாக்குவீர்கள்.