அமெரிக்காவின் பிரபலமான ரிதம் & ப்ளூஸ் பாடகர் கேப்ரியெல்லா வில்சனும், சத்குருவும் மேற்கொண்ட உரையாடலில், இசைத்துறையில் கலைஞர்கள் எதிர்கொள்ளும் மனநல சவால்களைக் குறித்து, சிந்தனையைத் தூண்டும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். எதிர்பார்ப்புகள் மற்றும் வர்த்தகத்தன்மையின் சுமைகளுக்கு நடுவில், அவர்களுக்கு இருக்கவேண்டிய சமநிலை மற்றும் ஆனந்தத்தின் முக்கியத்துவம் குறித்து சத்குரு வலியுறுத்துகிறார். முக்கியமாக, ஒருவர் தனது உடலமைப்பை எப்படி கையாளுவது என்று விளக்கும் பயனர் கையேட்டைப் பற்றி அறியாமல் இருப்பதன் விளைவாக எழும் உள்நிலைப் போராட்டம்தான் மனநலப் பிரச்சனைகள் என்பதை சத்குரு அழுத்தமாக பதிவுசெய்கிறார். மனநலனுக்கான முக்கியமான கூறுகளாக அசைவின்மை, மௌனம் மற்றும் ஈஷா யோகா போன்ற ஆற்றல்மிகுந்த செயல்முறைகளின் சக்தியை கோடிட்டுக் காட்டுகிறார்.
சத்குரு: நமஸ்காரம். நீங்கள் பத்து வயதிலிருந்து இசை உருவாக்கத்தில் இருப்பதும், மற்றும் ஐந்து விதமான கருவிகளை இசைப்பதும் அற்புதமானது.
கேப்ரியெல்லா: உங்களுடன் பேசுவது பெருமையாக இருக்கிறது.
சத்குரு: தயவுசெய்து கூறுங்கள், நாம் எதைப்பற்றி பேசலாம்?
கேப்ரியெல்லா: நாம் மனநலம் குறித்துப் பேசலாம். எமது மனரீதியான ஆரோக்கியத்தை எப்படி கவனித்துக்கொள்வது?
சத்குரு: துரதிருஷ்டவசமாக, கலைஞர்களுக்கு, குறிப்பாக இசைக்கலைஞர்களுக்கு வழக்கத்தைவிட மிக அதிகமான மனநலப் பிரச்சனைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, நேர்காணல் செய்யப்பட்ட 1500 கலைஞர்களில், கிட்டத்தட்ட 73 சதவிகிதத்தினருக்கு மன அழுத்தமும், மனநிலை மாறுபடும் பிரச்சனைகளும் (bipolar) இருப்பதாகக் கூறுகிறது. இசை என்பது மனித வாழ்க்கையில் ஓர் அற்புதமாக இருக்கும் காரணத்தால், இசைக்கலைஞர்களின் இந்த நிலைமை மிகவும் துரதிருஷ்டவசமானது. இசைத் தொழில்துறை தான் இதற்கெல்லாம் காரணம் என்று நான் எண்ணுகிறேன். இசைமீதான காதலுக்காக மட்டும் மக்கள் தங்களை இசையில் ஈடுபடுத்திக்கொண்டால், அவர்கள் மிக அற்புதமாக செயல்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.
இசை என்பது குணப்படுத்தும் மகத்தான ஒரு ஹீலர். அது ஒருவரது வாழ்க்கையில் சமநிலை, அமைதி, ஆனந்தம் மற்றும் அன்பைக் கொண்டுவரக்கூடியது. ஆனால், துரதிருஷ்டவசமாக, இன்றைக்கு அது மனநிலையில் சமனற்ற தன்மைகளைக் கொண்டுவருகிறது. இது எல்லா இசைக்கலைஞர்களும் கவனித்துப் பார்க்கவேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன். தாங்கள் மிகவும் நேசிப்பதைச் செய்யும் மக்களே மனரீதியாக நோயுற்றால், பிழைப்புக்காக மட்டும் எதையோ செய்துகொண்டிருக்கும் மற்ற அனைத்து மக்கள் குறித்து என்ன கூறுவது?
கேப்ரியெல்லா: ஆமாம், இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு இசைக்கலைஞராக இருப்பது என்பது மிகவும் உணர்வுபூர்வமான தன்மை. இசையானது அதிக தாக்கம் ஏற்படுத்தும் விஷயங்களுள் ஒன்று, ஏனென்றால் ஒவ்வொருவரும் அதை நேசிக்கின்றனர். நீங்கள் எந்த மொழி பேசினாலும், ஒரு இசைக்கோர்வையைக் கேட்டு, அதனால் தாக்கத்துக்கு உள்ளாகமுடியும். தொழிலுக்காக மட்டும் இந்தத் துறையில் இருக்கும் மக்கள், சிலநேரங்களில் இந்த பலவீனத்தை அவர்களது சொந்த நலனுக்காக பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு கலைஞர் என்ற வகையில், உங்களுக்குள் இருப்பதை உலகத்துக்கு வெளிப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை.
எனது அனுபவத்தில், தூய்மையான இசை மற்றும் ஆனந்தத்தின் மீதான காதலால், அதிலிருந்து பலன் பெறுவதற்கும், நம்மைப் பயன்படுத்திக்கொள்வதற்கும், மக்களை அனுமதிக்கும்போது, அது நம்மை களைப்படையச் செய்வதுடன், உள்ளுணர்வின் குரலுக்கு செவிசாய்ப்பதும் கடினமாகிறது. ஏனென்றால் கலைஞர்களின் மனம் மற்றும் அவர்களது கற்பனைத் திறன் மீது தாக்கம் ஏற்படுத்துவதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். அதன் விளைவாக அதன் தூய்மை மாறிவிடுகிறது.
சத்குரு: வாழ்க்கையின் இப்படிப்பட்ட எளிய அம்சங்களை மிகவும் சிக்கலாக்குவது அவசியமற்றது. உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் நீங்கள் விரும்பும்படி பயன்படுத்தும் இந்த ஒரு எளிய அம்சம், பெரும்பாலான மனிதர்களின் முழுவாழ்நாளையும் ஆக்கிரமிப்பதாகத் தோன்றுகிறது. நீங்கள் ஆனந்தமும், அமைதியும் நிறைந்தவராக இருந்துகொண்டு, நீங்கள் செய்யும் எந்த செயலிலும் வெற்றிகரமாகவும் இருக்கவேண்டும் என்றால் உங்கள் உடலும், மனமும் உங்களிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெறுவது மிக முக்கியமான விஷயம்.
உங்கள் உடல், மனம், இரசாயனம், மற்றும் உயிர்சக்திகளும் உங்களிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெறாமல் இருப்பதைத்தான் நீங்கள் உடல் நலக்கேடு என்றழைக்கிறீர்கள். அதனால் நீங்கள் ஒரு தற்செயலான உந்துதலாக நிகழ்கிறீர்கள். நீங்கள் தற்செயலாக இருக்கும்போது, பதற்றம் என்பது இயல்பானது. நாம் வாழ்க்கையில் எந்த செயலைச் செய்தாலும். நமது உடலும் மனமும் நம்மிடமிருந்து அறிவுறுத்தல்களை எடுத்துக்கொள்ளும் ஒரு அமைப்பை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வதே தவிர, நம்மைச் சுற்றிலும் இருப்பவைகளுக்கு எதிர்செயலாக இயங்குவதல்ல. இந்த பூமியிலேயே, நாம் மட்டுமே “இருத்தல்கள்” (beings) என்று குறிப்பிடப்படும் உயிரினங்களாக இருக்கிறோம். நீங்கள் ஒரு மனிதராக இருக்கிறீர்கள். இதன் பொருள் என்னவென்றால், “எப்படி இருப்பது” என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அந்த மக்களிடமிருந்து எப்படி தொலைவில் இருப்பது என்பது மறைந்துவிட்டது.
முக்கியமாக, ஒவ்வொருவரும் அவர்களுக்கான உயர்ந்தபட்ச இனிமையை விரும்புகின்றனர். ஆனால் இது நிகழ்வதில்லை, ஏனென்றால் நீங்கள் மனித இயக்கவியலை புரிந்துகொள்வதில்லை. இந்த மனித அமைப்புதான் பூமியிலேயே மிகவும் சிக்கலான மற்றும் நவீனமான இயந்திரம், ஆனால் நீங்கள் இன்னமும் user’s manualஐ (பயனர் கையேடு) படிக்காமல் இருக்கிறீர்கள்.
கேப்ரியெல்லா: அப்படியென்றால், நமக்கான user’s manualஐ எப்படிப் பெறுவது?
சத்குரு: மனித உடலமைப்பு என்பது, சூட்சுமமான மற்றும் நவீனமான ஒரு இயந்திரம். நீங்கள் உட்காரும் விதத்திலிருந்து உங்களை எப்படி வைத்திருக்கிறீர்கள் என்பதுவரை ஒவ்வொரு விஷயமும், உடலின் ஒருங்கிணைப்பையும், இரசாயனத்தையும் பாதிக்கிறது. ஒரு பரவசம் நிரம்பிய இரசாயனத்தை நம்மால் எப்படி உருவாக்க முடியும் என்பதற்கு முழுமையான ஒரு அறிவியலும், தொழில்நுட்பமும் உள்ளது. ஒருவர் அதனுடன் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது.
யோகா என்றால் ஒருமை; உங்கள் உடலின் எல்லைகளைக் கடந்து, அனைத்துடனும் ஒருமித்து, உயிரை நீங்கள் உணர்கிறீர்கள். இது மனிதருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அதனால்தான் நாம் இருத்தலாக இருக்கிறோம் – நமது உடல் எல்லைகள் நமது உயிரின் கட்டுப்பாடுகளாக இல்லாதவிதத்தில் நாம் இருக்கமுடியும். நாம் இதை அறிந்துகொள்ளவில்லை என்றால், நாம் சிறைப்பட்டதாக உணர்கிறோம். இது மனித இயல்பு. தற்போது இருக்கும் நிலையில் மனிதர்கள் மகிழ்ச்சியாக இல்லை; நாம் எப்போதும் எல்லையில்லாமல் விரிவடையப் பார்க்கிறோம்.
ஒரு தனிமனிதர், சமூகம், தேசம் அல்லது மனிதகுலம் வளம் பெறும்போது, மற்ற ஒவ்வொரு உயிரும், நுண்ணுயிரிலிருந்து மனிதர்கள் வரை, அதற்கான ஒரு விலையைத் தருகிறார்கள். ஆனால் அப்போதும், மனிதர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் தங்கள் மனதை இழந்துகொண்டிருக்கின்றனர். அடுத்த ஓரிரு வருடங்களில், மனநோய் பெருந்தொற்று ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. அமெரிக்காவின் பொது அறுவை சிகிச்சை மருத்துவரின்படி, இரண்டு அமெரிக்கர்களில் ஒருவர் தனிமையாக உணர்வதாகக் கூறுகிறார். தனிமையுணர்வு, மனநோயை அடைகாத்திருக்கும் ஒரு நிலை. நீங்கள் தனிமையாக உணர்ந்தால், அடுத்தபடியாக மனஅழுத்தம் ஏற்படக்கூடும்.
73 சதவிகிதம் இசைக்கலைஞர்கள் நோய்வாய்ப்படும்போது, அதற்கான முக்கியக்காரணம் என்னவென்றால், அவர்கள் மிக அதிக டெசிபெல் ஒலிகளை எதிர்கொள்கின்றனர். அதனால் அவர்களது உடலமைப்பில் கூடுதல் ஹார்மோன்கள் சுரப்பது தூண்டப்பட்டு, உடலெங்கும் அழுத்தம் ஏற்படக் காரணமாகிறது.
கேப்ரியெல்லா: அப்படியா, இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. நான் இதை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.
சத்குரு: இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் வெறுமனே அசைவில்லாமலும், மௌனமாகவும் உட்காரக்கூடிய பிரத்யேகமான இடங்களை உருவாக்குவதுடன், உங்களுக்கான நேரங்களையும் ஒதுக்கவேண்டும். அதில் அற்புதமான நன்மைகள் இருக்கின்றன. எல்லா ஒலிகளும், மௌனத்தின் பரப்பில் நிகழ்வதாகவே உள்ளன. இந்த மௌனம் ஏதோ ஒன்றை உருவாக்கவோ, ஒரு பாடலை எழுதவோ, அல்லது இசை அமைப்பதற்கோ அல்ல, இது வெறுமனே மௌனமாக இருப்பதற்கானது. இது உங்களது நரம்பியல் மண்டலத்தை மாற்றுவதுடன், உங்கள் மூளை கட்டமைப்பையும் மாற்றியமைக்கிறது. ஒரு சக்திமிக்க செயல்முறையை ஒரு நாளின் சில நிமிடங்களுக்குப் பயிற்சி செய்வது, உங்கள் உடல் இரசாயனத்திலும், சக்தி அமைப்புகளிலும் அளப்பரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டும்விதமாக, பல அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் நம்மிடம் உள்ளன.
கேப்ரியெல்லா: ஆச்சரியமாக உள்ளது, நான் அதைக் காண விரும்புகிறேன். நான் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதால், என்னிடம் நீங்கள் கூறும் விஷயங்களை நினைவில்கொள்வது எனக்கு மிக முக்கியமானது, ஏனென்றால் நான் தற்செயலாக வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
மௌனத்தில் அமர்ந்திருப்பது என்பது, வாழ்க்கையில் என் முடிவுகளிலும், நான் தேர்வுசெய்யும் விஷயங்களிலும், என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்களிலும் வித்தியாசம் நிகழ்த்தும் என்று நினைக்கிறீர்களா?
சத்குரு: துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மக்களும் துன்பத்திற்கான காரணம் வெளியில் இருப்பதாகத் தோன்றும்வகையில், விழிப்புணர்வில்லாமல் தங்களது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் உருவாக்குகின்றனர். ஆனால் உண்மையில், அது உள்ளிருந்து நிகழ்கிறது. நமது உள்தன்மைக்கு பொறுப்பேற்பது எப்படி என்பதற்கான வழிகளும், முறைகளும், முழுமையான ஒரு அறிவியலும் இருக்கிறது. 7 படிகளில் செயல்முறை ஒன்று உள்ளது. அது ஈஷா யோகா என்று அழைக்கப்படுகிறது. 7 படிகளையும் உணர்ந்துபாருங்கள். அது உங்களுக்கு உலகளவு வித்தியாசம் உருவாக்கும்.
கேப்ரியெல்லா: அற்புதம்! உங்களுடன் மேற்கொண்ட உரையாடலுக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே இது எனது சிந்திக்கும் விதத்தை மாற்றிவிட்டது.