நடப்புகள்

ஞானத்தின் தீப்பொறிகள்: மிலன் நகரத்தில் சத்குரு

மிலன் நகரில் நடைபெற்ற Meet, Mingle & Meditate with Sadhguru என்ற நிகழ்ச்சி, தன்னார்வமிக்க மக்கள் தங்களை அர்ப்பணித்தால், கலாச்சாரம் மற்றும் சமூக வேறுபாடுகள் இன்றி அனைவரையும் ஆன்மீக நெருப்பு தீண்டமுடியும் என்பதை நினைவூட்டுவதாக அமைந்தது.

சத்குருவின் உற்சாகமிக்க அழைப்பைத் தொடர்ந்து, இத்தாலி மற்றும் ஐரோப்பா முழுவதிலும் இருந்து சுமார் 300 தன்னார்வத் தொண்டர்கள் இந்நிகழ்ச்சிக்காக செயல்பட்டனர்: ஒரு புதிய கூடு கட்டுவதற்கு இயங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட தேனீக் கூட்டத்தைப் போல, நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன், ஒன்றுகூடி, ஒருங்கிணைத்து, ஆயத்தப் பணிகளைத் தொடங்கினோம்.

நிகழ்வு எங்கு நடக்க வேண்டும், பங்கேற்பாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை எவ்வாறு வழங்குவது, என்னென்ன பொருட்கள் தேவை, அவற்றை எங்கே பெறமுடியும், மேலும் பல விவரங்களை பட்டியலிட்டு முறைப்படுத்தத் தேவையிருந்ததால், அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திப் பரிமாற்றங்களால் நிகழ்வுக்கு முந்தைய வாரங்கள் மிக வேகமாக ஓடின. எங்களில் பெரும்பாலோருக்கு, தீவிரமும் எதிர்பாராத நிகழ்வுகளும் நிறைந்ததாக இந்த காலகட்டம் இருந்தது: எங்களுடன் தன்னார்வத் தொண்டு செய்த ஹடயோகா ஆசிரியை சார்லோட் கூறியபோது, "மிகவும் குழப்பமானதாகத் தோன்றிய ஒரு புதிர், பெரும் அருட்தன்மையுடன் உருவம் பெறுவதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது" என்றார்.

நிகழ்ச்சி தேதிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பரபரப்பு படிப்படியாக அதிகரித்தது. இருக்கைகளை அமைப்பது, உணவு தயாரிப்பது, மேடையை அலங்கரிப்பது, வழிகாட்டும் பலகைகளைச் செய்வது என பல செயல்களுக்கும் தங்களின் முழு ஆற்றலையும் கொடுத்து, ஒவ்வொருவரும் எங்கள் எல்லைகளைத் தாண்டி செயலாற்றியபோது, நாங்கள் அனைவரும் ஒரே பார்வையுடன் ஒரே நபராக செயல்படுவதை உணர்ந்தேன்.

சத்குருவின் இருப்பு ஆர்வமுள்ள மனிதர்களையும் புதிய தியான அன்பர்களையும் ஈர்த்த அதேவேளையில், இந்த நிகழ்ச்சி ஒரு விழிப்புணர்வான வாழ்க்கையின் சாத்தியக்கூறு பற்றிய நுண்ணறிவையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு அறிமுகமாக அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை, 4200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், அரங்கிற்கு வெளியே நேர்த்தியாக வரிசையில் நின்றனர்: அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள சாதகர்கள் முதல் இத்தாலிய இசை மற்றும் பொழுதுபோக்கு ஆளுமைகள் வரை, the Allianz Cloudல் வரிசைப்படி நுழைந்தனர். இந்த வண்ணமயமான மக்களை, தன்னார்வலர்கள் தங்கள் உயிரோட்டமிக்க புன்னகையாலும் அர்ப்பணிப்புமிக்க பார்வைகளாலும் வரவேற்றனர்.

ஒரு சிம்பொனி இசைபோல செக்-இன் செயல்முறை நடந்தது: சில தன்னார்வலர்கள் வழிகாட்டும் பலகைகளைப் பிடித்து வரிசையில் வந்தவர்களை வழிநடத்தினர், இன்னும் சிலர் wristbandகளை விநியோகித்து, மக்களை வாழ்த்தினர், சிலர் பங்கேற்பாளர்களை இருக்கைகளுக்கு அழைத்துச் சென்றனர். நான் முழு செயல்முறையையும் ஒருங்கிணைத்தேன், அங்கிருந்த 10 வாயில்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நடந்து சென்றபோது, மக்கள் கதகதப்பான சூரிய ஒளியில் ஒரு நேர்த்தியான நடனத்தை ஆடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. புன்னகையுடன் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசினார்கள்; எவ்வித உராய்வுகளும் உரசல்களும் அங்கில்லை. அந்த செக்-இன் நடனம் முடிந்ததும், இறுதியாக சத்குரு எனும் தெய்வீக நெருப்பைச் சுற்றி ஒன்றாக அமர்ந்து, என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்கலைஞர்களின் திறமையும், ஈஷா சம்ஸ்கிருதி நடனக் கலைஞர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளின் நேர்த்தியும் நிகழ்வை உற்சாகத்துடனும் வண்ணமயமாகவும் தொடங்கிவைத்தன. சத்குரு ஆரம்பத்தில் சில பங்கேற்பாளர்களுக்கு அடுத்ததாக, முன் வரிசையில் அமர்ந்தார். அவருக்கு முன்னால் அரங்கேறிய கலைநிகழ்ச்சிகளில் மூழ்கித் திளைத்தார். அவரது மகள் ராதே, மேடையில் நளினத்துடன் சுழன்று அபிநயத்துடன் நாட்டியத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

மின்னல் வேகத்தில் துடிப்புடன் படிகளில் ஏறி சத்குரு மேடைக்குச் சென்றார். அந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி, உற்சாகத்தை அளித்தது. அந்த தருணத்தில் எங்களுக்காக காத்திருக்கும் மிகப்பெரிய சாத்தியத்தை அனைவராலும் உணரமுடிந்தது. அவர் பேசத் தொடங்கியவுடன், அந்த இடத்தின் சக்தியதிர்வுகள் உடனடியாக மேலும் தீவிரமானது. சுற்றிப் பார்த்தபோது, காதுகளைத் திறந்து ஆர்வத்துடனும் கூர்மையான கவனத்துடனும் இருந்த முகங்களையும், திறந்திருந்த இதயங்களையும் அங்கே என்னால் பார்க்க முடிந்தது.

சத்குரு பேசிய வார்த்தைகள் எளிமையானவை, புரிந்துகொள்ளக்கூடியவை, தர்க்கரீதியாக ஏற்புடையவை, அதேசமயம் அவை விலைமதிப்பற்றவை, சக்திவாய்ந்தவை, ஆழமானவை. அவ்வப்போது, அவரது உரையில் இடம்பெற்ற நகைச்சுவைகள் பார்வையாளர்களை ரசித்து சிரிக்கவைத்தது. ஒவ்வொருமுறையும், பங்கேற்பாளர்களும் தன்னார்வலர்களும் இதயப்பூர்வமாக சிரித்து கைதட்டினர். காலையில் எழுந்ததும் இன்னும் நாம் உயிருடன் இருப்பது நாம் புன்னகைப்பதற்கான ஒரு நல்ல காரணம் அது – உண்மையில் அது ஒரு அதிசயம்! என்று அவர் அனைவருக்கும் நினைவூட்டியபோது, அது உண்மையில் நம்மைத் தொடுவதாக இருந்தது.

அவர் மேலும் கூறுகையில், “இங்கு நகர்ந்து செல்வது கடிகார முள் அல்ல. வாழ்க்கை கடந்து செல்கிறது. நாம் எவ்வளவு அற்புதமான உயிராக மாறுவோம், நம்மோடும் நம்மைச் சுற்றியுள்ள உயிர்களோடும் என்ன அற்புதமான விஷயங்களைச் செய்வோம்; அவ்வளவுதான் இருக்கிறது."

சத்குரு ஆங்கிலத்தில் பேசுகையில், தன்னார்வலர்களில் ஒருவரான கிறிஸ்டினா, சவாலான மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டார். நேரலை மொழிபெயர்ப்பை வழங்கிய அவர் தனது ஆழமான மொழியறிவால் இத்தாலிய மொழி பேசும் பார்வையாளர்கள் சிக்கலின்றி புரிந்துகொள்வதை உறுதிசெய்தார். அத்தகைய பணி பொதுவாக ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் சுழற்சிமுறையில் செய்யப்படும் என்றாலும், அங்கே கிறிஸ்டினா தொடர்ந்து 5 மணிநேர மொழிபெயர்ப்பை வழங்கினார்.

கிறிஸ்டினா பகிர்ந்துகொண்டபோது, "சூழ்நிலை என்னிடம் என்ன கேட்டாலும், நான் எப்போதும் சொல்வேன்: 'Yes and Yes' - அதாவது 5 மணிநேரம் நேரடி மொழிபெயர்ப்பை செய்யத் தேவைப்பட்டாலும் கூட. எனது திறமையை முழுமையாய் வழங்க நான் என்னை தயார்படுத்திக் கொள்கிறேன்; பின்னர், தயவுசெய்து என்னை தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று நான் சத்குருவை அழைக்கிறேன், அப்போது எனது வார்த்தைகள் அவருடைய வார்த்தைகளாக ஆகமுடியும். மேலும் நான் அவருடன் முழுமையாக நடக்க முடியும். இது எப்படி சாத்தியமாகிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு வித்தியாசமான பரிமாணம் அப்போது திறக்கிறது, அது சாத்தியமற்ற விஷயங்களைச் சாத்தியமாக்கும். மிகவும் சக்திவாய்ந்த ஒன்று சிரமமின்றி கொண்டுசெல்வதைப் போல உணர்கிறேன். இது தர்க்கரீதியாகப் பார்த்தால் அர்த்தமில்லாமல் இருக்கும், ஆனால் நான் இதை மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறேன். இந்த எளிய மற்றும் வாழ்வை மாற்றும் கருவிகளை அனைவரும் பெறவேண்டும். மேலும் இந்த இலக்கை அடைய என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்!"

சத்குருவுடனான தனது தனிப்பட்ட சந்திப்பைப் பற்றி கிறிஸ்டினா விவரித்தார்: “ஒரு நடைபாதையில் நான் கூச்சத்துடன் சத்குருவின் பின்னால் சில படிகளுக்குப் பின் நடந்து வருகிறேன், அப்போது அவர் திடீரென நின்றார். நான் அந்த இடத்திலேயே உறைந்து நின்றேன், மிக அருகில் செல்ல விரும்பவில்லை. எதிர்பாராத விதமாக, அவர் திரும்பி, நான் திகைத்துப்போய் நிற்பதைப் பார்த்ததும், அவரது தனிச்சிறப்புமிக்க வெடிச்சிரிப்பை வெளிப்படுத்தினார்.

இடைவேளைக்குப் பிறகு, சத்குரு விரைவில் ஒரு எளிய தியானத்தை வழங்கப்போவதாக அறிவித்தார். இந்த செயல்முறையின் தாக்கம் நமது திறந்தநிலையையும் ஈடுபாட்டையும் ஆழப்படுத்துவதாக இருக்கும் என்பதைக் குறிப்பிட்டார்: “வாழ்க்கை ஈடுபாட்டினால் மட்டுமே நடக்கிறது. ஈடுபாடு இல்லாத இடத்தில் வாழ்க்கை இல்லை. ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில், அவர் எங்களை 30 வினாடிகளுக்கு கண்களை மூடும்படி சொல்லி, நாம் மிகவும் விரும்பும் நபரைச் சந்தித்தால் நம் முகத்தில் என்ன வகையான புன்னகை தோன்றும் என்று கற்பனைசெய்து பாருங்கள் என்றார். அதன் பிறகு, “அந்தப் புன்னகையை உங்கள் முகத்தில் கொண்டு வந்தாலே போதும்; நான் பார்த்துக்கொள்கிறேன். இப்போது உங்கள் பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து, தொடர்ந்து புன்னகையுங்கள்."

நான் என் கண்களைத் திறந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே ஒருவரையொருவர் பார்த்து எந்தக் காரணமுமின்றி, உண்மையான அன்புடன் புன்னகைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். சிலர் தங்கள் முகங்களில் தோன்றிய அற்புதமான புன்னகையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்: இது மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்கள் நம்பமுடியாமல் கண்களை விரித்து வியந்தபடி ஆனந்தமும் குழப்பமும் ஒருசேர அடைந்தனர்! தியான செயல்முறை தொடங்கியபோது, நான் கண்களை மூடிக்கொண்டேன். என் உடல் சக்தியால் நிரப்பப்பட்டதை உணர்ந்தேன், எனக்குள் அதைக் கட்டுப்படுத்தி வைத்திட நான் போராடினேன் - நான் விரைவில் ஆயிரம் துண்டுகளாக வெடித்துவிடுவேன் என்று எனக்குத் தோன்றியது.

அந்த அனுபவம் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் மிகவும் நெருக்கமானதாகவும் வித்தியாசமாகவும் இருந்தது என்று நான் நம்புகிறேன். அதேசமயம் சத்குரு வழங்கிய தீவிரத்தன்மை அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. நான் மட்டுமல்ல, என்னைச் சுற்றியுள்ள பலரால் கண்ணீரையும், அழுகையையும் அடக்க முடியவில்லை. நமக்குள் நடக்கும் அற்புதமான மற்றும் அறியப்படாத ஏதோவொன்றின் சக்தியால் மூழ்கடிப்பதாக அது இருந்தது. நாங்கள் கண்களைத் திறந்தபோது, அந்த இடம் பிரகாசமான மனிதர்களால் நிரம்பியிருப்பதைக் கண்டோம். அனுபவத்தின் தீவிர அதிர்வினால் ஆட்கொள்ளப்பட்ட சிலர் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தனர்; மற்றவர்களின் முகங்கள் ஆனந்தம், அமைதி மற்றும் தளர்வுநிலை ஆகியவற்றால் பிரகாசித்தன.

சத்குரு அப்போதும் புன்னகைத்தவாறே மேடையில்தான் இருந்தார், ஆனால் எனது அனுபவத்தில் - அவர் எல்லா இடங்களிலும் இருப்பது போல் இருந்தது. என்னைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களில் நான் அவரைப் பார்த்தேன், நான் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் நான் அவரைக் கேட்டேன், என் உடல் இனி எல்லைக்குட்பட்டதல்ல, எல்லாமே அவருடைய ஒரு பகுதி என்பது போல உணர்ந்தேன். அந்தத் தருணத்தில், அந்த செயல்முறைக்கு தங்களை முழுமையாகத் திறந்திருந்தவர்களுக்கு, இன்னும் முழு உயிர்ப்புடன் அந்த அனுபவம் எதிரொலிக்கிறது; நிகழ்விற்கு அடுத்த நாள் பங்கேற்பாளர்கள் எங்களுக்கு அனுப்பிய பல, மனதைத் தொடும் பகிர்வுகளில் ஒன்று: “ஓர் அழகான அனுபவம்! காதலில் இருக்கும் இளைஞனைப் போல நான் புன்னகைத்துக் கொண்டே இருக்கிறேன்... இன்று காலை, வீட்டின் முன் உள்ள புல்வெளியைப் பார்த்து, என் கண்கள் கண்ணீரால் நிரம்பியது: அது அழகாக இருக்கிறது!"

நிகழ்ந்தேறிய அற்புத தருணங்களால் மனம் நெகிழ்ந்து, புன்னகை பூத்த முகங்களுடன் சத்குருவிடம் சில கேள்விகளைக் கேட்கும் அருமையான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. தெளிவாகவும் விரிவாகவும் நகைச்சுவை உணர்வுடனும் பதிலளித்தவாறே சத்குரு எழுந்துநின்று மேடையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் செல்லத் தொடங்கினார். அந்த ஹாலின் சக்திநிலை மீண்டும் பிரமாதமாக மாறியது. நமது காலத்தின் எரிமலை புவிசார் சூழ்நிலையைப் பற்றி அக்கறைகொண்ட ஒருவர், கேள்வி எழுப்பியபோது, சத்குரு அளித்த தெளிவான பதில், ஒரு நீண்ட கரகோஷத்தைப் பெற்றது: “உங்களுக்கு ஒரு திட்டம் வேண்டுமா அல்லது கணிப்பு வேண்டுமா? நாம் ஒரு கணிப்பு செய்தால், நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று அர்த்தம், நடக்கப் போவது அதுதான். வாழ்க்கையின் உண்மை அதுவல்ல. மனித இனத்தின் தலைவிதி மனிதனின் கைகளில்தான் உள்ளது. என்னிடம் ஒரு திட்டம் உள்ளது."

நிகழ்வின் நிறைவுத் தருணத்தில், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் அற்புதமான இசை நிகழ்ச்சியுடன் சத்குரு மக்கள் மத்தியில் நடந்து சென்றார்: மக்கள் மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன் அவரைச் சுற்றி திரண்டனர்; கொண்டாட்டமும் அன்பும் நிறைந்த ஓர் உற்சாகச் சூழல் அங்கே சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் நிரம்பியிருந்தது. சத்குருவின் ஆழமிக்க கருணையினாலும், மகத்தான இருப்பாலும் ஆழமாகத் தொடப்பட்ட மக்கள் எழுந்துநின்றபடி "அலை அலை" பாடலின் தாளத்திற்கேற்ப தங்கள் கைகளைத் தட்டி நடனமாடினர்.

அந்த கொண்டாட்டத் தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒவ்வொருவரிடமும் எழுந்த உற்சாகம் உயிரோட்டமிக்க ஆற்றலாக எங்களை நிரப்பியது. சத்குரு விடைபெற்ற பிறகும் சிறிதுநேரத்திற்கு அந்த இசை தொடர்ந்தது. அந்நிகழ்வு முடிந்தும்கூட, இன்றும் அதிரும் தூய உயிரின் பரவசத் தீப்பொறி போல, அது என் உள்ளத்தின் ஆழத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. விவரிக்க இயலாத ஒன்றை விளக்க முயல்வதைப் போலத்தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன்.

- ஜியோர்ஜியோ ட்ரெபி, ஈஷா தன்னார்வலர், இத்தாலி